Wednesday, December 3, 2014

நாலடியார் - நல்ல வழி இல்லை

நாலடியார் - நல்ல வழி இல்லை 


முதுமை நமக்கில்லை என்று நாம் இருக்கிறோம்.

அப்படியே வரும் என்று நினைத்தாலும், அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.

வேலை எல்லாம் முடித்துவிட்டு, பிள்ளைகளுக்கு ஒரு வழி பண்ணி வைத்து விட்டு, அப்புறம் அதையெல்லாம் செய்யலாம் என்று நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

அந்த நேரத்தில் இப்படியேவா இருக்கப் போகிறோம் ?

படிக்க வேண்டும் என்று நினைத்தால் - கண் சரியாக இருக்காது.

யாரிடமாவது பேசலாம் என்றால் பேச்சு குழறும்.

சரி, படித்தவர்கள் சொல்லிக் கேட்கலாம் என்றால் காது கேட்டால் தானே.

எனவே, இளமையிலேயே இது பற்றியெல்லாம் சிந்தித்து இப்போதே முடிவு எடுங்கள்.

பாடல்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

பொருள்

சொல்தளர்ந்து = நாக்கு குழறும். வார்த்தைகள் கோர்வையாய் வராது. வார்த்தைகளோடு எச்சிலும் வரும். பல் போன பின், சொல் தளரும். குரல் கம்மும்.

கோல்ஊன்றிச் = ஒரு இடத்திற்கு போக முடியாது. நடை எனபது பெரிய விஷயமாகப் போகும்.  கோல் துணையின்றி நடக்க முடியாது

சோர்ந்த நடையினராய்ப் = கொஞ்ச தூரம் நடந்தாலும் சோர்வு வரும்.

பல்கழன்று = பல் விழுந்து

பண்டம் பழிகாறும் = இந்த உடல் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமாகும். "கிழத்துக்கு காது கேட்க்காது...நம்ம உயிரை வாங்குது..."

இல்செறிந்து = இல்லத்தில் இருந்து

காம நெறிபடருங் = காம, ஆசையின் வழியில் செல்லும்

கண்ணினார்க் கில்லையே = கண்களைக் கொண்டவர்களுக்கு இல்லையே. கண் போன திசை எல்லாம் போனவர்களுக்கு 

ஏம நெறிபடரு மாறு.= மெய் வழியில் செல்லும் வகை

உடலில் வலிமை இருக்கும் போதே நல்லதை நினைத்து, நல்லதைச் செய்வோம்



No comments:

Post a Comment