Thursday, January 1, 2015

சிவ புராணம் - சொல்லற் கரியானைச் சொல்லி

சிவ புராணம் - சொல்லற் கரியானைச் சொல்லி




தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

சிவ புராணத்தின் கடைசிப் பகுதி.

தில்லையுள் கூத்தனே = இந்த உலகம் அலைந்து கொண்டே இருக்கிறது. கூத்தாடிக் கொண்டிருக்கிறது. சலனம் இல்லாத ஒன்று இல்லவே இல்லை. எலெக்ட்ரான், ப்ரோடான் என்று அனைத்து துகள்களும் சுழன்று கொண்டே இருக்கின்றன. கிரகங்கள், பால் வெளி, கலக்சி (galaxy ) என்று அனைத்தும் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.

சிவனின் வடிவைப் பார்த்தால்  தெரியும். சுழன்று ஆடும் போது ஒரு புகைப் படம் பிடித்த  மாதிரி இருக்கும். ஒரு frame அப்படியே உறைந்த மாதிரியான தோற்றம்.

ஏன் இந்த  உலகம் சுழன்று கொண்டே  இருக்கிறது ? ஏன் இந்த துகள்கள் சுழன்று கொண்டே  இருக்கின்றன. ஒரு இடத்தில் நிலையாய் நின்றால் என்ன ?

இதயம் துடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நுரையீரல் சுருங்கி விரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

நின்று போனால் உயிர்ப்பு நின்று போகும்.

உயிராய், இயக்கமாய் இருப்பவன் அவன்.

சுழற்சி, இயக்கம் இறை தத்துவம்.

தென் பாண்டி நாட்டானே .

தில்லையுள் கூத்தனே என்றார் முதலில். அடுத்து தென் பாண்டி நாட்டானே. பாண்டிய  நாட்டில் உள்ளவனே என்கிறார்.

அங்கும் இருப்பான். இங்கும் இருப்பான்.

அல்லல் பிறவி அறுப்பானே = இந்தப் பிறவி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது....துன்பம் நிறைந்த பிறவி இது.  சங்கிலித் தொடர் போல. அந்தத் தொடரை அறுப்பவன் அவன்.

ஓம் என்று சொல்லுவதற்கு அரியவன்.

சொல்லி = சொல்ல முடியாவிட்டாலும், எப்படியாவது சொல்லி.

திருவடிக்கீழ்ச் = அவனுடைய திருவடியின் கீழ்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் = இதுவரை  சொல்லிய பாட்டின் பொருள் அறிந்து சொல்லுவார் என்று சொல்ல வில்லை. பொருள் உணர்ந்து சொல்லுவார்.

செல்வர் = செல்வார்கள். பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் ஒரு இடத்திற்கு செல்வார்கள். அது எந்த இடம் தெரியுமா ?

சிவபுரத்தி னுள்ளார் = சிவ புரம் செல்வார்கள். சிவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். 

சிவனடிக்கீழ்ப் = அங்கே சென்று, அவனின் திருவடியின் கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. = எல்லோரும் போற்றும் படி இருப்பார்கள்.

எல்லோரும் போற்றும் படி, சிவபுரம் சென்று, சிவனின் அடியின் கீழ் இருப்பார்கள்.

சிவ புராணம்  முற்றும்....அதாவது என் உரை முற்றும். சிவ புராணத்திற்கு உரை சொல்லி  முடியாது.

திருவாசகத்திற்கு  பொருள் என்ன என்று மாணிக்க வாசகரிடமே கேட்டார்கள்.

இதுதான் பொருள் என்று இறைவனின் திருவடியைக் காட்டிவிட்டு  அதில் அவர் மறைந்து விட்டார்   என்று ஒரு வரலாறு உண்டு.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் .....உணர்ந்து பாருங்கள்....
நாவில் தித்திக்கும்  திருவாசகம்.

திருவாசகம் எனும் தேன் என்பார் வள்ளலார்.

நன்றி . வணக்கம்.

1 comment:

  1. இதுவரை எழுதிய மாணிக்கவாசகர் பாடல்கள் எல்லாம் நினைவுக்கு இல்லை. ஆனாலும், தேன் உண்டபின் அதன் இனிப்பு மட்டும் நாக்கில் இருப்பது போல, மனதில் ஒரு இனிமை மட்டும் தீட்டியது போல் இருக்கிறது.

    மீண்டும் ஒருமுறை திருவாதவூர் போக வேண்டும் போல இருக்கிறது. அங்கே போய், அந்தப் பழமையான கோவிலுக்குப் போய், அங்கே கோவில் சுவற்றில் வடித்துள்ள பாடல்களை படிக்க வேண்டும் போல இருக்கிறது!

    ReplyDelete