Thursday, February 12, 2015

ஆசாரக் கோவை - காலையில் செய்ய வேண்டியவை

ஆசாரக் கோவை - காலையில் செய்ய வேண்டியவை 


ஆசாரக் கோவை என்பது பெரியவர்கள், அறிஞர்கள் தங்கள் அனுபவத்தில் கண்ட நல்ல வாழ்கை முறைகளின் தொகுப்பு.

குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித் தர வேண்டும். நமக்கும் உதவும்.

அதிலிருந்து சில பாடல்கள்.

ஒரு நாளை எப்படி தொடங்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்கிறது கீழே வரும் பாடல்.

காலையில் எழ வேண்டும். காலை என்றால் ஏதோ ஆறு அல்லது ஏழு மணி அல்ல. நாலு அல்லது ஐந்து மணிக்கு எழ வேண்டும். வைகறையில் எழ வேண்டும்.

எழுந்தவுடன், அன்று செய்ய வேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். யாருக்கு உதவி செய்யலாம், என்ன தர்மம் செய்யலாம், என்ன படிக்கலாம் என்று நல்ல விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். நல்ல காரியம் செய்கிறோமோ இல்லையோ, மனம் கெட்ட வழியில் போகாது.

அடுத்தது, பொருள் தேடும் வழி பற்றி சிந்திக்க வேண்டும். இன்று அலுவலகத்தில், வேலையில் , பள்ளியில், கல்லூரியில் , தொழிலில், கடையில் என்ன செய்தால் நமக்கு பொருள் வரவு கூடும், உத்தியோக உயர்வு கூடும், நல்ல rating கிடைக்கும், இலாபம் பெருகும், அதிக மதிப்பெண் வரும், என்று சிந்தித்து அதற்கான வழிகளை காண வேண்டும்.

அடுத்து, பெற்றோரை தொழ வேண்டும்.

பாடல்

வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில்
தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.

பொருள்

வைகறை யாமந் துயிலெழுந்து = நள்ளிரவு தாண்டி வரும் அதிகாலையில் தூக்கத்தை விட்டு எழுந்து


தான்செய்யும் = தான் செய்ய வேண்டிய

நல்லறமு = நல்ல அறங்களையும்

மொண்பொருளுஞ் = ஒள்  பொருளும் = ஒளி பொருந்திய பொருள். அதாவது வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் பொருள்கள். வாழ்வை பிரகாசமாக்கும் பொருள்கள். கல்வி, செல்வம், போன்றவை.

சிந்தித்து = எப்படி பெறுவது என்று சிந்தித்து.  அதை எப்படி அடைவது என்று திட்டமிட்டு

வாய்வதில் = வாய்புடைய

தந்தையுந் தாயுந்  = தந்தையையும் தாயையும்

தொழுதெழுக = தொழுது எழுக

என்பதே = என்பதே

முந்தையோர் கண்ட முறை = நம் முன்னவர்கள் கண்ட முறை.

இதைவிடவும் வாழ்வில் வெற்றி பெற இன்னுமொரு வழி இருக்குமா  என்ன ?

புதையலின் மேல் அமர்ந்து வாழ் நாள் எல்லாம் பிச்சை எடுத்த பிச்சைக் காரனைப் போல  நமக்கு வாய்த்த செல்வங்களை எல்லாம் விட்டு விட்டு மேலை  நாடுகளில் இருந்து பாடம் பயில முயல்கிறோம்.

நம் பெருமை அறிவோம்




1 comment:

  1. நல்ல பாடல்தான்.

    அந்தக் காலத்தில் மின் விளக்கு இல்லாததால், இரவு ஆறு-ஏழு மணிக்கே தூங்கி, காலை நான்கு-ஐந்து மணிக்கு எழுந்தனர். இன்றோ, மின்சாரம் இருக்கிறதே! ஆனால், எழுந்ததும் எண்ணவேண்டிய விஷயங்கள் சரிதான்.

    ReplyDelete