Saturday, February 28, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பேசுவதில் பயனில்லை 


குள்ளச்சாமி மூன்று பொருள்களை பாரதிக்கு காட்டினான்.

குட்டிச் சுவர்
சூரியன்
கிணற்றில் சூரியனின் நிழல்
அவ்வளவுதான் உபதேசம். புரிந்ததா என்று  கேட்டார்,பாரதியும் புரிந்தது என்றார். குள்ளச் சாமி சந்தோஷமாக போய்  விட்டார்.

நாம் தான் மண்டை காய்கிறோம்.

நம் நிலை தெரிந்து பாரதி அதை  விளக்குகிறார்.

குரு சொன்னதை மற்றவர்களுக்குச் சொல்லக்  கூடாது என்று ஒரு விதி உண்டு. காரணம், சீடனின் தகுதி பார்த்து உபதேசம் செய்ய வேண்டும்.

தகுதி இல்லாதவனுக்கு உபதேசம் செய்தால் அவன் உபதேசத்தை கீழ்மை படுத்துவான்.

ஒரு ஆரம்ப பள்ளி மாணவனுக்கு இயற்பியலின் உயர் விதிகளை சொல்லிக் கொடுத்தால் அவன் அதைக் கேட்டுச் சிரிப்பான். தன் நண்பர்களிடம் சொல்லி சொல்லி அதை ஏளனம் செய்வான். அவனுக்குப் புரியவில்லை என்பது அவனுக்குப் புரியாது. ஏதோ நகைச்சுவை என்று நினைத்து ஏளனம் செய்வான்.

எனவேதான், தகுதி இல்லாதவர்களுக்கு உயர்ந்த விஷயங்களை  சொல்லித் கூடாது என்று வைத்தார்கள்.

இந்த நாட்டில் கம்ப இராமயணத்தை கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு. அதன் உயர்வு புரியாதவர்கள் நினைத்த தவறு அது.


முதன் முதலில் இராமானுஜர் அந்த விதியை  உடைத்தார்.தான் அறிந்த உண்மையை எல்லோரும் அடைய வேண்டும் என்று கோவில் கோபுரத்தில் ஏறி ஊருக்கே உபதேசம்  செய்தார்.   சீடன் யார் என்றே தெரியாமல் உபதேசம் செய்தார்.

அடுத்து பாரதியார், தான் பெற்ற உபதேசத்தை ஊருக்கே சொல்லிச்  செல்கிறார்.



தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;


தேசிகன் காட்டி எனக்கு உரைத்த செய்தியை செந்தமிழில் உலகத்தார் உணரும் படி சொல்கின்றேன்.

ஏன் சொல்ல வேண்டும் ? தனக்கு கிடைத்ததை தான் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டியது தானே ? அதுதான் அவரின் பெரிய உள்ளம்.



“வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;

அது என்ன வாசியை கும்பத்தால் வலியக் கட்டி ?  வாசி என்றால் சுவாசம்.

நாம் உயிர் வாழ்வது, சிந்தனை செய்வது, செயல் செய்வது எல்லாம் நம் மூச்சில் அடங்கி இருக்கிறது. மூச்சு நின்றால் எல்லாம் அடங்கி விடும்.

இந்த மூச்சு மூன்று விதமாக  வெளிப்படும்.

இடது நாசியின்  வழியே ஓடும் மூச் சந்திரக் கலை எனப்படும்.
வலது நாசியின் வழியே ஓடும் மூச்சு சூரியக் கலை எனப்படும்
இரண்டு நாசியிலும் ஓடினால் அது சுழுமுனை எனப்படும்.

சுவாசம் இடது நாடியில் ஓடும் போது என்ன செய்ய வேண்டும், வலது நாடியில் ஓடும்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பெரிய பட்டியல் தருகிறார்கள். இரண்டு நாடியிலும் ஓடும் போது செய்யக் கூடிய ஒரே காரியம் யோகம் செய்வது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

குள்ளச் சாமி சொன்ன செய்தி "சுவாசத்தை கட்டுப் படுத்தி, மண் போல சுவர் போல வாழ வேண்டும்"

அது என்ன மண் போல சுவர் போல வாழ வேண்டும்.

மண்  இயற்கையானது. மண்ணைச் சேர்த்து குழைத்துக் கட்டியது சுவர். சுவர் செயற்கையானது.  மண் என்றும் இருக்கும். சுவர் இன்று இருக்கும், நாளை போகும். சுவரை இடித்தாலும் மண் அப்படியே தான் இருக்கும்.

மண்ணிற்கு என்ன இயல்பு - பரவுவது. குவித்து வைத்தாலும் நாளடைவில் தானே பரவி விடும்.

என்றும் , எப்போதும் சாஸ்வதமாக உள்ள ஒன்றைப் பிடி  என்கிறார்.

உலகில் உள்ள பொருள்கள்,  இன்பங்கள், உறவுகள் எல்லாம் மறையும் இயல்பு  உடையன. மண் எது சுவர் எது என்று கண்டு வாழ் என்பது இரண்டாவது உபதேசம். (மூச்சுப் பழக்கம் முதல் உபதேசம் )



தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;

இது மூன்றாவது உபதேசம். ஒளி உடைய சூரியனை கிணற்றுக்குள்ளே பார்ப்பது போல உனக்குள்ளே சிவனை காண்பாய்.

இறைவன் மிகப் பெரியவன். அவன் எப்படி எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்க முடியும். இந்த உயிர்கள் நேற்று  தோன்றி,இன்று இருந்து, நாளை போபவை. இதற்குள்  எப்படி அனாதியான இறை சக்தி இருக்க முடியும் ?

அதை விளக்குகிறார் குள்ளச் சாமி.

சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோ இருப்பது. கிட்ட போக முடியாது. ஆனால் அந்த பெரிய சூரியனை கிணற்று நீரில் காண முடியும்.

கிணற்றுக்குள் அந்த பிம்பத்தை காண முடியும்.

எந்த கிணற்றில் ? சலனம் இல்லாத கிணற்றில் சூரியனின் பிம்பம்  தெரியும்.பாழடைந்த வீட்டின் கொல்லையில் உள்ள கிணற்றில் சலனம் இல்லை. அதில் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரியும்.

அது போல, நம் உள்ளம் சலனம் இல்லாமல்  இருந்தால், நம் உள்ளத்திலும் சிவன்  தெரியும். ஆசை, கோபம், காமம் என்று பலப் பல சலனங்கள். எங்கே சிவனைக் காண்பது.

சரி இதை எல்லாம் ஏன் குள்ளச் சாமி தெளிவாக சொல்லவில்லை ? சொல்லி இருந்தால் நமக்கு சந்தேகம் வராது இல்லையா ?

அதைத்தான் அடுத்த வரியில் சொல்கிறார் பாரதியார் ...


பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்”என்றான்.

பேசுவதில் பயனில்லை. 

பேசிக் கொண்டே இருக்கிறோம். பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மற்றவர்கள் பேசுவதை கேட்பதை விட நமக்குள் நாமே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சு நிற்க வேண்டும். 

கேள்விகள் நிற்க வேண்டும். 

மௌனம் வர வேண்டும்.

மௌனம் ஞான வரம்பு என்பார்  ஒளவையார். மௌனம் ஞானத்தின் எல்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றால்  மணிவாசகர்.

"சும்மா இரு" என்று முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்தார். 

படிப்பது,  கேட்பதும், பேசுவதும், கேட்பதும் நின்று ...அனுபவத்தால் அறிய வேண்டும். 

அதுவே ஞானம் என்கிறார் பாரதி. 

உங்களுக்கும் உண்மைக்கும் நடுவே இன்னொருவர் எதற்கு ?

உண்மையை நேரடியாக உணருங்கள். 



3 comments:

  1. "பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
    பேரின்பம் எய்துவதே ஞானம்"

    ... என்ன அருமையான கருத்து!

    நன்றி.

    ReplyDelete
  2. அற்புதம்

    ReplyDelete
  3. மெளனமே
    ஞானத்தின்
    திறவுகோல்...

    ReplyDelete