Saturday, April 18, 2015

பிரபந்தம் - வா போ வா

பிரபந்தம் - வா போ வா 


வீட்டில் பிள்ளைகள் இருக்கும் போது , அவர்களை அவ்வபோது கூப்பிட்டு ஏதாவது கேட்போம், சொல்வோம். குழந்தைகள், வீட்டின் வெறுமையை போக்குவார்கள். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஏதாவது சத்தம் இருக்கும், அதைக் காணோம், இதைக் காணோம் என்று தேடுவதும், கண்டு பிடித்தபின் மகிழ்வதும் நிகழும்.

அவர்களின் இருப்பின் அருமை எப்போது தெரியும் என்றால் அவர்கள் மேல் படிப்புக்காக, அல்லது திருமணம் முடித்து வீட்டை விட்டு போன பின் தெரியும். வீடு வெறுமையாக இருக்கும்.

அவர்கள் உபயோகப் படுத்திய பொருள்கள், அவர்களின் சத்தம், அவர்களுக்கு பிடித்த உணவு என்று எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

அவர்கள் வீட்டை விட்டுப் போகப் போகிறார்கள் என்று தெரிந்த பின் அவர்கள் மேல் பாசம் மிக அதிகமாகும். இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கப் போகிறார்கள் என்று ஏக்கமாய் இருக்கும்.

அது மட்டும் அல்ல, அவர்கள் புது இடத்துக்குப் போய் எப்படி சமாளிப்பார்களோ, உணவு எப்படி இருக்குமோ, அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்களோ , என்றெலாம் நம் பிள்ளைகளைப் பற்றிப் கவலைப் படுவோம் அல்லவா ?


இராமன் கானகம் போகப் போகிறான். தசரதனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை.

இராமன் மாளிகையில்  இருக்கும் போது ஒரு நிமிடம் கூட அவனை பார்க்காமல் இருக்க முடியாது  தசரதனுக்கு.  உடனே அவனை "வா" என்று கூப்பிடுவான். இராமன் வந்து "என்ன " என்று கேட்டால் "ஒண்ணும் இல்லை, சும்மாதான் கூப்பிட்டேன், சரி நீ போ " என்பான். இராமன் போக ஆரம்பித்து கொஞ்ச தூரம் போன பின் "ஒரு நிமிஷம், இங்க வந்துட்டுப் போ " என்பான் . இராமனை பார்க்காமல் தசரதானால் ஒரு நிமிடம் இருக்க முடியாது.



புலம்புகிறான் ....


வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல்

வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்

மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று

நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறே

பொருள்

வா = இராமா, நீ இங்கே வா என்பேன்

போகு = ஒண்ணும் இல்லை போ என்பேன்

வாஇன்னம் = இன்னொரு தரம் வா

வந்தொருகால் கண்டுபோ = ஒரு நிமிஷம் வந்து என்னை பாதுவிட்டுப் போ என்பேன்

மலராள் கூந்தல் = மலர் உள்ள கூந்தலைக் கொண்ட

வேய்போலு = மூங்கில் போல

மெழில் = அழகான

தோளி = தோள்களைக் கொண்ட (சீதையின் )

தன்பொருட்டா = அவளுக்காக

விடையோன்றன் = (விடை = எருது ) எருதின் மேல் ஏறியவனின் (சிவனின்)

வில்லைச் செற்றாய் = வில்லை முறித்தாய்

மாபோகு = யானைகள் அலையும்

நெடுங்கானம் = பெரிய வனம்

வல்வினையேன் = கொடிய வினை உடைய

மனமுருக்கும்  = மனத்தை உருக்கும்

மகனே = மகனே

இன்று = இன்று

நீபோக = நீ போக

என்னெஞ்ச = ஏன் நெஞ்சம்

இரு பிளவாய்ப் = இரண்டு பிளவாகப்

போகாதே = போகாமல்

நிற்கு மாறே = நிற்கின்றேனே



1 comment:

  1. ஆஹா, என்ன அருமையான பாடல். இரு பிளவாய்ப் போகாத நெஞ்சம்! என்ன ஒரு மொழி!

    பெற்ற மனம் பித்து என்பது சரிதான். (பிள்ளை மனம் கல்லு என்பது சரியோ இல்லையோ சொல்லமுடியாது).

    தசரதன் புலம்பல் பாடல்கள் இன்னும் இருந்தால் தயவுசெய்து எழுதவும். நன்றி.

    ReplyDelete