Saturday, April 25, 2015

பட்டினத்தார் - கடவுள் நாள்

பட்டினத்தார் - கடவுள் நாள் 


சில வார்த்தைகள் நம்மை அப்படியே திகைக்க வைக்கும். இப்படியும் இருக்குமா என்று ஒரு வார்த்தை நம்மை கட்டிப் போட்டு விடும்...அப்படி ஒரு பிரயோகம் "கடவுள் நாள்".

கடவுள் நாள் என்றால் என்ன ? கடவுளைப் போல உயர்ந்த நாள்...

எந்த நாள் ?

காலம் கடவுள் போன்றது.

மிக உயர்ந்தது. கிடைக்காது. அருமையானது.

அந்தக் காலத்தை எப்படியெல்லாம் வீணாக்குகிறோம் ?

ஏதோ அது நம்மிடம் மிக மிக அதிகமாக இருப்பது போல, அதை அனாவசியமாக செலவு செய்கிறோம்.

மீண்டும் மீண்டும் அதே இட்லி, தோசை, அரிசிச் சோறு, உப்புமா, காபி, டீ என்று சாப்பிடதையே மீண்டும் மீண்டும் சாப்பிட்டு ....

அதே சட்டை, சேலை, சுடிதார் என்று போட்ட உடைகளையே மீண்டும் மீண்டும் போட்டு

திருப்பி திருப்பி அதே பேச்சு, அரட்டை, பொய்கள்...

அதே வீடு, அதே அலுவலகம், அதே பிள்ளைகள், அதே கணவன், மனைவி என்று அவர்களையே திருப்பி திருப்பி பார்த்து, அவர்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் கேட்டு ....

இப்படி நம் வாழ்வில் நடப்பது எல்லாம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.

இதில் புதியதாய் என்ன இருக்கிறது...ஏதோ ஒன்றிரண்டு புதியதாய் இருக்கலாம் நாளடைவில் அதுவும் இதே சக்கரத்துக்குள் வந்து விடும்....

சலிப்பு வரவில்லையா ?

எத்தனை நாள் இதையே செய்து கொண்டு இருப்பது ?

எப்போது இதில் சலிப்பு வந்து இதை விடுவது ?

காலம் கடவுள் போன்றது...அதை இப்படி வீணடிக்கலாமா ?


பாடல்

உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்


பொருள்


இத்தனை நாளும் செய்ததையே செய்து, செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து வாழ் நாளை எல்லாம்   வீணாக்கி விட்டேனே என்று வருந்துகிறார் பட்டினத்தார்....

நாம் என்ன செய்தோம் என்று நாமும் யோசிப்போமே....


3 comments:

  1. "கடவுள் நாள்" என்பது சும்மா தடால் என்று குண்டு போட்ட அதிர்ச்சி மாதிரி இருக்கிறது!

    ReplyDelete
  2. இங்கு "கடவுள் நாள்" அல்ல கடவளுடிய நாட்கள் எல்லாம் என்று எடுத்துகொள்ள வேண்டும். Every life is God, as human beings we are unaware of this. You are Truth, God, Shivan. Know Yourself.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete