Wednesday, November 4, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - இளமை மீது ஊர - பாகம் 1

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - இளமை மீது ஊர - பாகம் 1


திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.




No comments:

Post a Comment