Thursday, January 28, 2016

திருக்குறள் - நினைத்ததை அடைய

திருக்குறள் - நினைத்ததை அடைய


உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

மனதில் நினைத்ததை அடைய யாருக்குத்தான் ஆசை இருக்காது ? நினைப்பது எல்லாம் நடக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள்.

ஆனாலும், நடப்பதிலையே ...ஏன் ?

மனதில் நினைத்ததை சாதிக்க வள்ளுவர் ஒரு வழி சொல்லித் தருகிறார்.

நாம் நம் மனதில் நினைத்ததை அடையாமல் போவதற்கு காரணம் ...

"மறதி"

மறதிக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் ? நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள் தங்கள் மனதில் நினைத்ததை எல்லாம் அடைந்து விடுவார்களா ?

கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

முதலில் சில உதாரணங்களைப் பாப்போம்.

நம்மில் பல பேருக்கு எடையை குறைக்க வேண்டும்,  நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்,  கண்டதையும் தின்னக் கூடாது என்ற எண்ணம் உண்டல்லவா ?

ஏன் அது நடக்க மாட்டேன் என்கிறது ? ஏன் எடை குறைய மாட்டேன் என்கிறது ?

காரணம் - ஒரு எண்ணெய்  பலகாரத்தைக் கண்டவுடன், ஒரு இனிப்பு பலகாரத்தைக் கண்டவுடன், சாக்லேட், ஐஸ் கிரீம் இவற்றைப் பார்த்தவுடன் ஆரோக்கியமான  உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்பது "மறந்து" போகிறது. ஆரோக்கியம் இல்லாத உணவை உட்கொண்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறோம்.

ஒரு மாணவன், நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று மனதில்  நினைக்கிறான்.

தொலைக் காட்சியில் நல்ல படம் வந்தால்,  படிக்க வேண்டும் என்ற எண்ணம் "மறந்து" போகிறது. நண்பர்கள் வெளியே சுத்தலாம் என்று கூப்பிட்டால் , படிக்கும் எண்ணம் "மறந்து" போகிறது.

இந்த உதாரணத்தை நீட்டிக் கொண்டே போகலாம்

- பணம் சம்பாதிக்க, தொழிலில் முன்னேற, கணவன் மனைவி உறவு பலப்பட என்று எந்த எண்ணத்திற்கும் பொருத்தலாம்.

 நமக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் அதை தொடர்ந்து செய்வது இல்லை.

மனைவியிடம் சண்டை பிடிக்கக் கூடாது என்று மனதில் எண்ணம் இருக்கும்.   ஆனாலும், அதை "மறந்து" விட்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டை பிடித்துவிடுவோம்.

எடையை குறைக்க வேண்டுமா, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா ...ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் இது சரியான உணவுதானா, என் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுதானா என்ற நினைப்போடு இருக்க வேண்டும். மறந்து விடக் கூடாது.



பாடல்

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

பொருள் 

உள்ளியது = மனதில் நினைத்தது

எய்தல் =அடைதல்

எளிது = எளிது

மன் = அசைச் சொல் அல்லது மன்னன்/தலைவன் என்று கொள்ளலாம்

மற்றுந்தான்  = மற்றபடி அவன்

உள்ளியது = மனதில் நினைத்ததை

உள்ளப் பெறின் = (எப்போதும் ) நினைப்பான் ஆனால்

எந்நேரமும் அதே சிந்தனையோடு இருக்க வேண்டும்.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார் மணிவாசகர்.

அவருக்கு பக்தி ஒன்றே குறிக்கோள். இறைவனின் திருவடிகள் ஒரு கண் இமைக்கும் நேரம்  கூட  அவர் மனதில் இருந்து நீங்கவில்லை.

அது போல, நாம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஒரு போதும் மறக்கக் கூடாது. மறந்து, அதற்கு எதிரான ஒன்றைச் செய்யக் கூடாது.


மனம்தான் செயலை நடத்திச் செல்லும். நாம் எதை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ, நம் செயலும் அந்தத் திசையிலேயே போகத் தொடங்கும்.


சரி, சிந்தித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா ? நினைத்தது நடந்து விடுமா ?

நடக்காது.

அந்த சிந்தனை எப்படி இருக்க வேண்டும், சிந்தனையைத் தொடர்ந்த செயல் எப்படி இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

ஆனால் , முதல் படி மறக்காத சிந்தனை.

இதை, மறக்காதீர்கள். 















No comments:

Post a Comment