Sunday, January 24, 2016

பிரபந்தம் - ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

பிரபந்தம் - ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே


பாடல்

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி
பாய* சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்

"நெருப்பை விட சுடர் விட்டு பிரகாசிக்கும் சங்கு மற்றும் சக்கரத்தை உடலில் சின்னமாகக் கொண்டு வழி வழியாக அவனுக்கு ஆட் செய்கின்றோம். மாயங்களில் வல்லவனான பாணனை அவனுடைய ஆயிரம் தோள்களும் இரத்தம் சிந்த சக்கரத்தை விடுத்த அவனுக்கு பல்லாண்டு கூறுவோம் "

தீயிற்பொலிகின்ற = நெருப்பை விட பொலிவுடன் விளங்கும்

செஞ்சுடராழி = சிவந்த சக்கரம்

திகழ் திருச்சக்கரத்தின் = கரத்தில் திகழும் சக்கரத்தின்

கோயிற் = உடலில்

பொறியாலே = சின்னமாகத் தரித்துக் கொண்டு

ஒற்றுண்டு = ஒன்றாகக் கூடி

 நின்று = நின்று

 குடிகுடி ஆட்செய்கின்றோம் = தலை முறை தலை முறையாக  ஆட் செய்கின்றோம்

மாயப் = மாயங்களில் வல்லவனான

பொருபடைவாணனை = சண்டையிடும் படைகளைக் கொண்ட வாணன் என்ற அசுரனை

ஆயிரந்தோளும்= அவனுடைய ஆயிரம் தோள்களும்

பொழிகுருதி பாய = இரத்தம் பொழிந்து பாய

சுழற்றிய ஆழிவல்லானுக்குப் = சக்கரத்தை சுழற்றிய வல்லவனான பெருமாளுக்கு

 பல்லாண்டு கூறுதுமே. = பல்லாண்டு கூறுவோமே

சரி. இதன் மூலம் பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார். நாங்கள் அவனுக்கு  தொண்டு செய்கிறோம். அவன் அரக்கனை கொன்றான்.

அதனால் என்ன ? இதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்.  இதை ஏன் வேலை மெனக்கெட்டு ஆழ்வார் சொல்கிறார் ? இதில் ஆழ்ந்த அர்த்தம் எதாவது இருக்குமா ?

தேடுவோம் .

உலகில் எவ்வளவோ பேர் கை, கால், கண் போன்ற அவயங்கள் இல்லாமல் துன்பப் படுகிறார்கள்.  சிலருக்கு அவை இருந்து சரி வர செயல் படாமல் துன்பப் படுகிறார்கள்.

நமக்கு எல்லா அவயங்களும் நான்றாக இருக்கின்றன. நம் உடலில் உள்ள அவயங்கள் எல்லாம் நல்லபடி இயங்க நாம் செய்தது என்ன ? ஒன்றும் இல்லை.  நமக்கு வழங்கப் பட்டது அவ்வளவுதான்.

ஆரோக்கியமான உடல், சிறந்த மனம் , நல்ல வகையில் செயல் படும் அறிவு இவற்றை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் ?

சில பேர் தனக்கு தனக்கு என்று சுய நலமாக தங்களுக்கு வேண்டியதை செய்து கொள்கிறார்கள்.

சிலர் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்.

சிலர், இவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கிறார்கள். அவனை எப்படி கெடுக்கலாம், அவன் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், மற்றவனை எப்படி  அழிக்கலாம், என்று தீய வழியில் போகிறார்கள்.

அறிவை பெற்றதின் பயன் அவனை வணங்குவது.

வள்ளுவர் சொல்கிறார்

கற்றதனால் ஆய பயன் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 

கல்வியினால் பயன் என்ன, அவன் திருவடிகளை தொழாவிட்டால் ?

வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், 
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச் 
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே 
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

என்பார் திருநாவுக்கரசர்.

பெரியாழ்வார் சொல்கிறார் , சங்கையும் சக்கரத்தையும் தோளில் பொரித்துக் கொண்டு  அவனுக்கு தலை முறை தலை முறையாக தொண்டு செய்கிறோம் என்று.

பகவான் பானாசுரனுக்கு ஆயிரம் கைகள் கொடுத்தார். ஆயிரம் கைகளில் எவ்வளவு  நல்லது செய்து இருக்கலாம் ? செய்யவில்லை. மாறாக, அவற்றின் மூலம்  மற்றவர்களுக்கு துன்பம் செய்தான். பகவான் அவன் கரங்களை அறுத்து எறிந்தார்.  அவனைக் கொல்லவில்லை. பிறருக்குத் துன்பம் தந்த கைகளை  துண்டித்தார்.

பலன் தராத மரங்கள் எல்லாம் வெட்டி தீயில் இடப்படும் என்றார் இயேசு கிறிஸ்து .

சிந்தித்துப் பார்ப்போம்.

நமக்கு கிடைத்தது எத்தனை ? அவற்றின் மூலம் எத்தனை பேருக்கு நல்லது செய்து இருக்கிறோம் ?  எத்தனை உள்ளகளை மகிழச் செய்து இருக்கிறோம் என்று.

இது வரை செய்யாவிட்டால் என்ன ...இன்றிலிருந்து செய்யலாமே.

என்ன சரிதானே ?




1 comment:

  1. திருநாவுக்கரசர், வள்ளுவர், ஏசு என்று எத்தனை தொடுப்புக்கள்! இதைப் படிக்க மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.

    ReplyDelete