Thursday, October 13, 2016

தாயுமானவர் பாடல்கள் - பராபரக் கண்ணி

தாயுமானவர் பாடல்கள் - பராபரக் கண்ணி 


தாயுமானவரின் பராபரக் கண்ணி இரண்டைடிகளால் ஆனது. உலகை வெல்லும் இரண்டு வரிகள். திருக்குறள் போல இரண்டு அடிகளில் ஆழமான அர்த்தங்களை தருவது.

உயிர்கள் மேல் அன்பு கொண்டவர் தாயுமானவர்.

பாடல்

கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று 
அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே 

எளிமையான பாடல்.

நல்லவர் யார் என்று கேட்டால் உயிர்களை கொல்லாதவர் யாரோ, அவரே நல்லவர்.

அப்படியானால் கொல்பவர்கள் கெட்டவர்களா ?

அப்படி யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மற்று அல்லாதார் யாரோ, அறியேன் என்கிறார் ஸ்வாமிகள்.

அப்படி உயிர் கொலை செய்பவர்கள் கூட இருக்கிறார்களா ? எனக்குத் தெரியாது என்கிறார்.

எல்லோரும், உயிர் கொலை செய்யாமல் நல்லவர்களாக இருப்பார்கள் என்பது  அவர் எண்ணம்.


நமக்கு எதில் எதில் எல்லாம் ஆசை இருக்கிறது ?

நிறைய பணம் வேண்டும். வீடு, வாசல், கார், பங்களா, நகை, பாங்கில் பணம்,  தோட்டம் , புகழ், செல்வாக்கு என்று ஏதேதோ வேண்டும்  என்று ஆசைப் படுவோம்.

தாயுமானவருக்கு என்ன ஆசை தெரியுமா ?

கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க 
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே 

கொல்லா   விரதத்தை எல்லோருக்கும் சொல்லுவதுதான் அவருக்கு உள்ள ஆசையாம்.

உயிர்கள் மேல் எத்தனை கருணை இருந்தால் இப்படி ஒரு ஆசை இருக்கும்.

அருளாளர்கள் வாழ்ந்த பூமி இது.




1 comment:

  1. கொல்லாமை என்பது எந்த ஜீவனையும் புண்படுத்தும் நோக்கமே இல்லாத மனப்பான்மை. உயிரை மட்டுமில்லை.மனதையும் கூடத்தான்.கருணையும் இரக்கமும் உள்ள அத்தகைய சமூகம் உன்னதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete