Wednesday, October 26, 2016

நாலடியார் - நம் குற்றம் எண்ணும் கொல் ?

நாலடியார் - நம் குற்றம் எண்ணும் கொல் ?


பிரிவு உறவை ஆழப் படுத்துகிறது. உறவை உறுதிப் படுத்துகிறது.

தலைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியூர் போய் இருக்கிறான். திரும்பி வர நாள் ஆகிறது.

தலைவியைப் பற்றி சிந்திக்கிறான்.

அவள் எப்படியெல்லாம் தன்னைப் பிரிந்து வருந்துவாள் என்று சிந்திக்கிறான்.

தூக்கம் வராமல் விழித்து இருப்பாளோ ? படுக்கையில் படுக்காமல் தரையில் , தன்னுடைய கையையே தலையணையாக வைத்துப் படுத்துக் கிடைப்பாளோ ? பிரிவுத் துயரில் அழுவாளோ ? என்னைப் பற்றி என்னென்ன நினைப்பாள் ? பாவம் அவளுக்காக நான் ஒன்றும் செய்தது இல்லை. ரொம்ப கஷ்டப் படுத்தி இருக்கிறேன். நான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்ப்பாளோ ? என்று தலைவன் உருகுகிறான்.

காதலின் பிரிவை சொல்லும் , நாலடியார் பாடல்


செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.


பொருள்

செல்சுடர் = செல்லுகின்ற சுடர். சூரியன். சூரியன் சென்று மறையும் மாலை நேரம்.

நோக்கிச் = அதை நோக்கி

சிதரரிக் கண் = செவ்வரி ஓடிய கண்கள். சிவந்த கண்கள்  

கொண்டநீர் = ததும்பிய கண்ணீர்

மெல்விரல் = மெல்லிய விரலால்

ஊழ்தெறியா = முறையாக தெறிக்கும் படி விரலால் சுண்டி

விம்மித்தன் = பிரிவின் துயர் பொறுக்காமல் விம்மி

மெல்விரலின் = மெல்லிய விரலின்

நாள்வைத்து = நாட்களை எண்ணி

நங்குற்றம் = நம்முடைய குற்றங்களை

எண்ணுங்கொல் = நினைப்பாளோ ?

அந்தோதன் = ஐயோ , தன்னுடைய

தோள்  = தோளை யே

வைத்து = வைத்து

அணை மேல்  = தலையணை போல்

கிடந்து = படுத்து

தரையில் படுத்து இருக்கிறாள். கையை மடித்து தலைக்கு , தலையணை போல் வைத்து  இருக்கிறாள். கண்ணில் நீர் வழிகிறது. அதை விரலால் எடுத்து சுண்டி விடுகிறாள்.

என்று கற்பனை செய்கிறான் தலைவன்.

அவனுக்குத் தன்னிரக்கம் மேலிடுகிறது.  என்னைப் பற்றி பெரிதாக நினைக்க என்ன இருக்கிறது. அவள் மகிழும்படி என்ன செய்து விட்டேன் ? அவளுக்குத் தந்தது எல்லாம் துன்பம் தான். நான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள் அவள் என்று வருந்துகிறான்.

பிரிவை, அதன் வலியை , அதன் சோகத்தைக் கூட இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா ?

1 comment:

  1. கூட இருக்கும்போது ஒருவரோடொருவர் கூடினாலும் ஊடினாலும், பிரிந்தபின் தலைவன் தன்னைத் தானே நொந்து கொள்வது ஏன்?! அவளைப் பிரிந்து இருக்கும்போது அவளை உயர்த்தியும், தன்னைத் தாழ்த்தியும் எண்ணுவது இயல்புதானோ?

    நான்கே வரிகளில், ஒரு சித்திரம் வரைந்தது போல, அவளையும் அவனையும் எவ்வளவு அழகாக நம் முன்னே வந்து வைக்கிறது இந்தப் பாடல்!

    மிக இனிமையான இதை எங்கள் முன் கொண்டு வந்ததற்கு நன்றி.

    ReplyDelete