Tuesday, October 4, 2016

இராமாயணம் - வீடணன் சரணாகதி - ஒத்தன உணர்த்தினேன்

இராமாயணம் - வீடணன் சரணாகதி - ஒத்தன உணர்த்தினேன் 


வீடணன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாய் இல்லை. வீடணனின் வார்த்தைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போனது.

கடைசியாக, "எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் உனக்கு உயர்த்தினேன். நீ உணரவில்லை. நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் என்னைப் பொறுத்துக் கொள்" என்று கூறிவிட்டு இலங்கையை விட்டு நீங்கினான்.

பாடல்

எத்துணை வகையினும் உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;
அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என,
உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.

பொருள்

எத்துணை வகையினும் = எத்தனை வழி உண்டோ அத்தனை வழியிலும்

உறுதி எய்தின = உறுதியானவற்றை
,
ஒத்தன = ஒத்துப் போபவைகளை

உணர்த்தினேன் = உனக்கு உணர்த்தினேன்

உணரகிற்றிலை = நீ உணரவில்லை

அத்த ! = தந்தையே

என் பிழை பொறுத்தருளுவாய்' = என் பிழைகளை பொறுத்து அருள்வாய்

என = என்று கூறி

உத்தமன் = உயர்ந்தவனான

அந் நகர் = இலங்கையை

ஒழியப் போயினான் = விட்டு விலகிப் போனான்

ஒத்தன உணர்த்தினேன் என்றான்.

ஒத்தன என்றால் என்ன ?

ஒத்தன என்றால் ஒத்துப் போவது ? எதனோடு ஒத்துப் போவது ?

உலகோடு ஒத்துப் போவது. வாழும் சமுதாயத்தோடு ஒத்துப் போவது. மற்ற உயிர்களோடு ஒத்துப் போவது. இயற்கையோடு ஒத்துப் போவது. அறத்தோடு ஒத்துப் போவது.

வள்ளுவர் கூறினார்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான், மற்றையவர்கள் செத்தாருள் வைக்கப் படும் .

வாழ்வில் பல துன்பங்களுக்குக் காரணம் ஒத்துப் போகாததுதான்.

உடலுக்கு ஒத்துப் போகாத உணவை உண்பதால் நோய் வருகிறது.

நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு ஒத்துப் போகாவிட்டால் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேர்கிறது.

நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு ஒத்துப் போகாவிட்டால் தனிமைப் பட்டு  துன்பப் படுவோம்.

இயற்கையோடு ஒத்து போகாவிட்டால், வெள்ளம், சுற்றுப் புற மாசு, வெப்பமயமாதல் என்று  பல பிரச்சனைகள் வருகிறது.

யார் ஒத்துப் போகாமல் இருப்பார்கள் ? பிணம் தான் யார் சொன்னாலும் கேட்காது, யார் எப்படி போனால் என்ன என்று அது பாட்டுக்கு இருக்கும்.

அப்படி மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாமல் வாழ்பவர்களை பிணம் என்கிறார் வள்ளுவர்.

அது போல, இராவணனுக்கு எது எல்லாம் நல்லதோ, அதை எடுத்துக் கூறினான் வீடணன்.

அடுத்து வரும் வரி தான் மிக மிக முக்கியம்.

சொன்னதைக் கேட்கவில்லை இராவணன். வீடணன் இலங்கையை விட்டு நீங்கினான்.

பெரியவர்கள், நல்லவர்கள் நமக்கு வேண்டியதைச் சொல்லுவார்கள். ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை சொல்லுவார்கள். கேட்க வில்லை என்றால், நம்மை விட்டு விலகி விடுவார்கள்.

பெரியவர்கள் சொல்வதை கேட்காமல் விதண்டாவாதம் செய்து கொண்டு இருந்தால்,  ஒரு கட்டத்தில் அவர்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள்.

அப்புறம், கீழானவர்கள்தான் நம்மோடு இருப்பார்கள்.

அவர்கள் சொல்வதை கேட்டு வாழ்ந்தால், வாழ்க்கை சீரழிந்து விடும்.

எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பெரியவர்கள், நல்லவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்களோடு ஓயாமல் , முடிவில்லாமல்  வாதம் செய்து கொண்டே இருந்தால், அவர்கள் நம்மை  விட்டு விலகிப் போய்விடுவார்கள்.

இராவணன் அப்படி அழிந்தான்.

No comments:

Post a Comment