Thursday, October 6, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - மீண்டும் பிறந்தால் ?

தேவாரம் - திருத்தாண்டகம் - மீண்டும் பிறந்தால் ?


இந்த வாழக்கை தான் எவ்வளவு விசித்திரமானது.

ஒரு துளி நீரிலே உயிர் உண்டாகிறது. கை , கால், மூளை, உடல் என்று பிரிந்து பிரிந்து வளர்கிறது. பின் பிறக்கிறது. தாயால் வளர்க்கப் படுகிறது.

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் , அந்த முதல் கரு முட்டை ஒரு உருவமாக , சிந்திக்கும் திறனோடு பிறப்பது.

 எத்தனையோ தவறுகள் நிகழ்ந்து இருக்கலாம். ஆனால், அத்தனையும் கடந்து, உயிர் பிறந்து வளர்கிறது.

சரி, இத்தனை சிக்கல்களையும் தாண்டி பிறந்து வளர்க்கிறதே , நீண்ட நாள் இருக்குமா என்றால், அதுவும் இல்லை. கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது.

எதற்கு இத்தனை முயற்சி ?

வாழ்வின் நோக்கம் தான் என்ன. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று முடிவதற்கா இத்தனை பாடு ?


இறந்த உயிர் மீண்டும் பிறக்கிறது. மீண்டும் இதே சக்கரம் சுழல்கிறது.

எதற்கு இது என்று திகைக்கிறார் நாவுக்கரசர்.

எது எப்படியோ. இறவாமை வேண்டும், அப்படி இறந்தால், பின் பிறவாமை வேண்டும். மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும் என்று வேண்டுகிறார்.

பாடல்

கரு ஆகி, குழம்பி(இ)இருந்து, கலித்து, மூளைக்
    கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி, 
உரு ஆகிப் புறப்பட்டு, இங்கு ஒருத்தி தன்னால்
         வளர்க்கப்பட்டு, உயிராரும் கடை போகாரால்; 
மருவுஆகி, நின் அடியே, மறவேன்; அம்மான்!
   மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல், மறவா வண்ணம்,- 
திரு ஆரூர் மணவாளா! திருத் தெங்கூராய்!
            செம்பொன் ஏகம்பனே!- திகைத்திட்டேனே.


பொருள்


கரு ஆகி = கரு ஆகி

குழம்பி = ஒரு உருவம் இல்லாமல்  குழம்பி

இருந்து = இருந்து

கலித்து = முளைத்து

மூளைக் = மூளை

கரு நரம்பும் = கரிய நரம்பும்

வெள் எலும்பும்  = வெண்ணிறமான எலும்பும்

சேர்ந்து ஒன்று ஆகி = சேர்த்து ஒன்றாகச் செய்து

உரு ஆகிப் = ஒரு உருவத்தை அடைந்து

புறப்பட்டு = பிறந்து

இங்கு = இங்கு

ஒருத்தி தன்னால் = தாயினால்

வளர்க்கப்பட்டு, = வளர்க்கப் பட்டு

உயிராரும் = உயிரானது

கடை போகாரால் = போகாமல் இருந்தால்

மருவுஆகி = பொருந்தி

நின் அடியே, மறவேன் = உன் திருவடிகளை மறக்க மாட்டேன்

அம்மான் = அம்மானே

மறித்து = மீண்டும் 

ஒரு கால் = ஓவர் வேளை

பிறப்பு உண்டேல் = பிறப்பு என்று ஒன்று இருந்தால்

மறவா வண்ணம் = உன்னை மறவா வண்ணம்

திரு ஆரூர் மணவாளா! = திருவாரூர் மணவாளா

திருத் தெங்கூராய்! = திருத்தெங்க்கூர் என்ற ஊரில் உள்ளவனே

செம்பொன் ஏகம்பனே = சிவந்த பொன்னைப் போன்ற மேனி உள்ளவனே

திகைத்திட்டேனே = நான் திகைத்து நிற்கிறேன்

என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்க்கை ஓடி விடுகிறது.

என்ன செய்வது ? எதைச் செய்வது என்று திகைத்து நிற்கிறார் நாவுக்கரசர்.

எனக்கு ஒன்றும் தெரியாது. உன் திருவடிகளை பற்றிக் கொள்கிறேன். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்துக் கொள் என்கிறார்.

அவர் பாடே அப்படி என்றால்....



.

No comments:

Post a Comment