Friday, October 7, 2016

இராமாயணம் - இனி செயல் சொல்லுவீர்

இராமாயணம் - இனி செயல் சொல்லுவீர் 



இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரை அறவுரை கூறினான் வீடணன். இராவணன் கேட்கவில்லை. இராவணனை விட்டு விலகி வந்த வீடணன், தன் அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தினான்.

"அற வழியில் நிற்கும் இராம இலக்குவனர்களிடம் அன்பு கொண்டேன். மறந்து கூட புகழ் அல்லாத வாழ்வை நான் விரும்ப மாட்டேன். என் உடன் பிறந்த இராவணன் நான் சொன்னவற்றை கேட்கவில்லை. எனவே அவனை விட்டு வந்து விட்டேன். இனி செய்ய வேண்டியது என்ன " என்று தன் அமைச்சர்களிடம் வினவினான்.

பாடல்


'அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்;
"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத்
துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர்' என்றான்

பொருள்

'அறம்தலை நின்றவர்க்கு = அறத்தையே தலைமை பண்பாக கொண்ட இராம இலக்குவனர்களுக்கு

அன்பு பூண்டனென் = அன்பு கொண்டேன் ;

மறந்தும் = மறந்தும் கூட

நன் புகழ் = நல்ல புகழ்

அலால் = இல்லாத

வாழ்வு வேண்டலென் = வாழ்க்கையை வேண்ட மாட்டேன் ;

"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" = என் உடன் பிறந்த இராவணன் நான் சொன்னவற்றை ஏற்கவில்லை

எனாத் = எனவே

துறந்தனென்; = அவனை விட்டு விட்டு வந்து விட்டேன்

இனிச் செயல் சொல்லுவீர்' என்றான் = இனி செய்ய வேண்டியது என்ன என்று  கேட்டான்.

இராம இலக்குவனர்கள் அறத்தின் வழி நிற்பவர்கள் என்று உறுதியாகச் சொல்கிறான்.

புகழ் வராத எதையும் நான் மறந்தும் செய்ய மாட்டேன் என்கிறான்.

அது சுயநலமில்லையா ? தனக்கு புகழ் வேண்டும் என்பதற்காக, உடன் பிறந்த அண்ணனை விட்டு விட்டு வரலாமா ?

இது ஒரு முக்கியமான கேள்வி. புகழுக்காக செய் நன்றி மறக்கலாமா ?

இதற்கு விடை வள்ளுவர் சொல்லுகிறார்.

'வசை' என்ப, வையத்தார்க்கு எல்லாம்-’இசை’ என்னும்
எச்சம் பெறாஅவிடின்.

இசை என்றால் புகழ். புகழ் இல்லாமல் ஒருவன் இறந்து போவான் என்றால்  அதுவே ஒரு பெரிய பழிச் சொல் என்கிறார். அதாவது , புகழ் இல்லாமல் இருப்பதே ஒரு  இழிச் செயல் என்கிறார்.

அது மட்டும் அல்ல, பழி அவனுக்கு மட்டும் அல்ல, அவனைச் சார்ந்த எல்லோருக்கும்  அது ஒரு இழிவு என்கிறார். "வையத்தார்க்கு எல்லாம்" . உலகில் உள்ள அத்தனை பேருக்கும் அது ஒரு இழிவு என்கிறார். ஒரு மனிதன் புகழ் இல்லாமல் இறந்தால் அது அவனுக்கு மட்டும்  இழிவு அல்ல, இந்த மனித குலத்துக்கே இழிவு.

புகழ் என்பது சுயநலம் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  ஒருவன் புகழ் பெறுகிறான் என்றால் அதனால் எல்லா மக்களும் பயன்  பெறுவார்கள். ஒருவன் ஒரு மருந்தை கண்டு பிடித்து  அதன் மூலம் அவனுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது என்று  வைத்துக் கொள்வோம். அவனுக்கு புகழ்தான். ஆனால், அந்த புகழால்  இந்த மனித தலை முறை தலை முறையாக பயன் பெறும் அல்லவா ?

எனவே ஒருவன் புகழ் பெறுகிறான் என்றால் அவன் மூல இந்த உலகம் பயன்  அடையப் போகிறது என்று அர்த்தம்.

புகழ் பெறவில்லை என்றால்அவன் வாழ்வே வீண். ஏதாவது சிறப்பாக செய்து புகழ் பெறாமல் இறந்து போனால் மனித குலத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு ?

எனவே வீடணன் புகழுக்காக வாழ்கிறேன் என்று சொல்வது சுயநலம் இல்லை   என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

வீடணன் இராமனிடம் சேர்ந்தது சரியா தவறா என்ற ஆராய்ச்சி ஒரு புறம்  இருக்கட்டும்.  அது எதுவாக இருந்தால் நமக்கு என்ன ஆகப் போகிறது.

நாம் அறிந்து கொள்ள வேண்டியது, புகழோடு வாழ வேண்டும்.

உங்களுக்குப் பின் , உங்கள் பேர் நிலைத்து நிற்கும்படி புகழ் பெற  நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

  

2 comments: