Sunday, October 23, 2016

நாலடியார் - பூம்பாவை செய்த குறி

நாலடியார் - பூம்பாவை செய்த குறி


அந்தப் பெண் அவளுடைய காதலனோடு நாளை ஓடிப் போகப் போகிறாள். ஏதோ காரணத்தினால் அவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்தில் நடக்காது என்று தெரிந்து விட்டது.

காதலனும் காதலியும், வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்வது கொள்வது என்று தீர்மானம் செய்து விட்டார்கள்.

அவளுக்கு மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.

அவளுடைய தாயை பார்க்கும் போது உணர்ச்சி கொந்தளிக்கிறது.

என்னை எப்படியெல்லாம் வளர்த்து இருப்பாள். என்னை வளர்க்க எப்படி எல்லாம் கஷ்டப் பட்டு இருப்பாள். என்னைப் பற்றி என்னவெல்லாம் கனவு இருப்பாள் ? என்னை மாலையும் கழுத்துமாக காண எவ்வளவு ஆசை பட்டிருப்பாள் ...நானும் என் கணவனும் ஒன்றாக வெளியில் போகும் போது எங்களை பார்த்து எவ்வளவு மகிழ்திருப்பாள் ...அத்தனையையும் கலைத்து விட்டு இப்போது என் காதலனோடு போகப் போகிறேன். நான் இந்த வீட்டை விட்டு போன பின், அவள் மனம் எவ்வளவு பாடு படும் என்று நினைக்கிறாள்.

தாய் பாசம் ஒரு புறம். காதலனோடு செல்ல வேண்டும் என்ற ஆவல் மறுபுறம். அல்லாடுகிறாள்.

அவள், தன்னுடைய தாயை மீண்டும் மீண்டும் இறுக கட்டி அணைத்துக் கொள்கிறாள். தாய்க்கு புரியவில்லை.

மறு நாள். மகள் வீட்டை விட்டு போன மறுநாள். தாய் புலம்புகிறாள். "அவள் என்னை அப்படி மார்பு அழுந்தும் படி, அவள் கழுத்தில் அணிந்திருந்த மாலையில் உள்ள முத்து என் உடலில் அழுந்தும்படி, உடல் பூராவும் படும்படி ஏன் கட்டிப் பிடித்தாள் என்று நான் அறியவில்லை. புலிகள் உள்ள காட்டில் மான் செல்லுவதைப் போல அவளும் செல்கிறாள் என்பதை குறிக்கவோ அப்படி செய்தாள் " என்று அறியாமல் புலம்புகிறாள்.

சோகம் ததும்பும் அந்தப் பாடல்

பாடல்

முலைக்கண்ணும், முத்தும், முழுமெய்யும், புல்லும் 
இலக்கணம் யாதும் அறியேன்; -- கலைக்கணம் 
வேங்கை வெருஉம் நெறிசெலிய போலும், என்
பூம்பாவை செய்த குறி

பொருள்

முலைக்கண்ணும் = அவளுடைய மார்பும்

முத்தும் = அவள் கழுத்தில் உள்ள மாலையில் உள்ள முத்து, வைரம் போன்றவை

முழுமெய்யும் = முழு உடம்பும்

புல்லும் = அணைத்ததின்

இலக்கணம் = காரணம்

யாதும் = எதுவும்

அறியேன்; = நான் அறிய மாட்டேன்

கலைக்கணம் = கலை என்றால் பெண் மான். பெண் மான்கள்

வேங்கை = புலிகள்

வெருஉம் = கோபித்து அலையும்

நெறிசெலிய = வழியில் செல்வதற்காக

போலும் = போலும்

என் = என்னுடைய

பூம்பாவை = பூ போன்ற பெண்

செய்த குறி = செய்த அடையாளங்கள்

தன்னுடைய பெண்ணை குறிக்கும் போது , பூம் பாவை என்கிறாள். பூ போன்ற பெண் என்கிறாள்.

அவள் போன வழி தாய்க்குத் தெரியாது. இருந்தும், புலிகள் அலையும் காட்டில் மான்கள் செல்வதைப் போல அவளும் போய் இருப்பாளோ என்று பயப்படுகிறான்.

தாயின் மனம்.

என்ன நேர்ந்தது என்று தெரியாது. "இதற்காகத்தானா அப்படி கட்டிப் பிடித்தாள் " என்று  நினைக்கிறாள்.

ஒரு பெண்ணுக்குத்தான் மற்றொரு பெண்ணின் மனம் புரியும். அதுவும், ஒரு தாய்க்கு மகளின் மனம் புரியாதா ?

அவள் அப்படி கட்டி பிடித்ததற்கு காரணம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறாள்.

இந்த பாடல் நிகழ்வதற்கு முன் என்ன நடந்தது, அதற்கு பின் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.

இந்த பாடலில் உள்ள நான்கு வரிகளைக் கொண்டு நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான்.

காதலை, பிரிவை, பாசப் போராட்டத்தை, எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையை, உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை இதை விட அழகாக சொல்ல முடியுமா ?




1 comment:

  1. தன் பெண் காதலனோடு போனாலும், புலிகள் நிறைந்த ஆபத்தான காட்டில் மென்மையான மான் போலப் போவதாகத்தான் அந்தத் தாய்க்குத் தோன்றுகிறது! சோகம், பயம் எல்லாம் கலந்த உணர்ச்சி!

    இந்தப் பாடலை நாங்கள் அனுபவிக்கத் தந்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete