Friday, October 21, 2016

திருக்கடைக் காப்பு - உள்ளம் குளிருமே

திருக்கடைக் காப்பு - உள்ளம் குளிருமே

நன்மைகளை உடையவனை. தீமைகள் இல்லாதவனை. உமையை தன்னுடைய இடப் பாகம் கொண்டவனை. வெண்மையான எருது ஒன்றைக் கொண்டவனை.  சம்பாதிக்காத செல்வம் உடையவனை. திருச்சிராப்பள்ளியில் உள்ள மலை மேல் இருப்பவனை பற்றி பேச என் உள்ளம் குளிரும் என்கிறார் ஞான சம்பந்தர்

பாடல்

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.

சீர் பிரித்த பின்

நன்று உடையானைத் தீயது இலானை நரை வெள்ளேறு
ஒன்று உடையானை உமை ஒரு பாகம் உடையானை
சென்று அடையாத  திரு உடையானைச் சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே

பொருள்

நன்று உடையானைத் = நல்லவைகளை, நன்மைகளை உடையவனை

தீயது இலானை = தீமைகள் இல்லாதவனை

நரை வெள்ளேறு= வெண்மையான எருது

ஒன்று உடையானை = ஒன்றை உடையவனை

உமை ஒரு பாகம் உடையானை = உமையை ஒரு பாகத்தில் கொண்டவனை

சென்று அடையாத  = அவனை சென்று அடையாத

திரு உடையானைச் = செல்வம் உடையவனை

சிராப்பள்ளிக் = திருச்சிராப்பள்ளி

குன்று உடையானைக் = மலையை உடையவனை

கூற = பற்றி பேச

என் உள்ளம் குளிரும்மே = என் மனம் குளிரும்

சிவனுக்கு சில அடையாளங்களை கூறி, அவனை பற்றி நினைக்க என் உள்ளம் குளிரும் என்கிறார்.

சரி, அதுக்கு என்ன இப்ப ? நாம் அதில் இருந்து பெறும் செய்தி என்ன ?

நன்று உடையானை என்று சொன்னால் மட்டும் போதாதா ? உடனே ஏன் தீயது இல்லானை என்கிறார் ?

மற்ற சமயங்களில் உள்ள கடவுள்கள் , கோபம் உள்ளவர்கள். பழி வாங்கும் குணம் உள்ளவர்கள். தண்டிக்கும் நோக்கம் உள்ளவர்கள். தன்னை வணங்காதவர்களை, தன் சொல் கேளாதவர்களை கொல்லச் சொல்லும் குணம் வாய்ந்தவர்கள். தன்னை சேர்ந்தவர்களுக்கு நல்லதும், சேராதவர்களுக்கு தீமையும் செய்யும்  குணம் கொண்டவர்கள்.

சிவன் அப்படி அல்ல.

நல்லது உள்ளவன். நல்லது இருக்கு சரி. அதோடு கொஞ்சம் தீய குணமும் இருக்குமோ என்றால். இல்லை.   தீய குணங்கள் எதுவும் கிடையாது அவனிடம். கருணையே வடிவாகக்  கொண்டவன். அன்பு நிறைந்தவன். நல்லது மட்டுமே உள்ளவன்.

அவன் எல்லோருக்கும் பொதுவானவன். தன்னை மதிக்காதவர்களுக்கும் அருள்  செய்வான்.  நல்லவர்களுக்கும்,கெட்டவர்களுக்கும் சம தூரத்தில் இருப்பவன் என்கிறார் வள்ளலார்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே 
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே 
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே 
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே 
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே 
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே 
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே 
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே

நரை வெள்ளேறு ஒன்று உடையானை - வெள்ளையான ஒரு எருது வச்சிருக்காரு. நிறைய பேர் கிட்ட இருக்கு. எல்லா விவசாயிகிட்டயும் இருக்கு. இது ஒரு பெரிய விஷயமா ?

எருதுக்கு , விடை என்று ஒரு பெயர் உண்டு.

"விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி" என்பார் ஞான சம்பந்தர்.

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

விடை என்றால் , தீர்வு , முடிவு. கேள்விக்கு என்ன விடை என்று கேட்போம் அல்லவா ?

உலகில் எத்தனையோ கேள்விகளுக்கு விடை இல்லை. இராமர் கூட சீதை போனாள் , இலக்குவன் கூட ஊர்மிளை ஏன் போகவில்லை.

முருகன் ஏன் பார்வதி வயிற்றில் பிறக்கவில்லை ?

நாலு முகம், ஆறு முகம், பத்து முகம் என்றெல்லாம் இருந்தால் எப்படி படுத்து உறங்குவது ?

நல்லவன் துன்பப் படுகிறான். கெட்டவன் இன்பமாக இருக்கிறான் - ஏன் ?

இப்படி ஆயிரம் கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் விடையை கொண்டிருப்பவன் அவன்.

ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்து போகும். அறம் மட்டும் அழியாது. அது விடையின் வடிவில் நிலைத்து நிற்கும் என்று நம் தமிழ் வேதம் பேசுகிறது.

பொருள்களால் ஆன உலகம் அழியலாம். அவற்றை செலுத்தும் தத்துவங்கள் அழியாது. அவை சாஸ்வதமானவை.

அந்த விடையை தன்னிடம் கொண்டவன் அவன்.


உமை ஒரு பாகம் உடையானை.

நாம் , நம்முடைய தந்தை மற்றும் தாய் இருவரின் கலப்பில் பிறக்கிறோம்.  தந்தையின்  குணமும், தாயின் குணமும் எல்லோரிடமும் இருக்கும். ஒவ்வொரு  ஆணுக்குள்ளும், ஒரு பெண் உண்டு. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் உண்டு. இந்த சமுதாயம் , ஒரு ஆணிடம் உள்ள பெண்ணை  மழுங்க அடிக்கிறது. "என்னடா, பொம்பள புள்ள மாதிரி அழுதுகிட்டு" என்று கேலி செய்து கேலி செய்து பெண் உணர்ச்சிகளை மழுங்க அடித்து  விடுகிறது.அதே போல் பெண் கொஞ்சம் கம்பீரமாக நடந்தால் "என்ன இப்படி  திம்மு திம்மு னு ஆம்புள புள்ள மாதிரி நடக்குற. மெல்லமா நட  " என்று பெண்ணுக்குள்  இருக்கும் ஆணை மழுங்க அடிக்கிறது.

இப்படி மழுங்க அடிக்கப் பட்டதால், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை இழந்து விட்டு வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். உள்ளே இருக்கும் பெண் போல   வெளியே ஒன்று  தெரிந்தால் அவள் பால் காதலில் விழுகிறான் ஆண். பெண்ணும் அதே போல் தான்.

தனக்கு வந்த மனைவி, அவனுக்குள்  இருக்கும் பெண்ணை போல இல்லை என்றால்  அவன்   தேடல் தொடர்கிறது.

தனக்குள் இருக்கும் பெண்ணோடு ஆண்  சேர்வதும், தனக்குள் இருக்கும் ஆணோடு பெண் சேர்வதும் தான்  உண்மையான திருமணம். அதுவே முழுமையைத்  தரும்.வெளியே உள்ள ஆணும் பெண்ணும் ஒரு காலத்திலும் உள்ளே இருக்கும் ஆண் மற்றும் பெண் போல வராது.

இதை புரிந்து கொண்ட நம் முன்னவர்கள்  அர்த்த நாரி என்று  வைத்தார்கள்.

அர்த் என்றால் பாதி.

உமை வெளியில் இருந்தால் சரி வராது. ஒன்றாக கலக்க வேண்டும். பாதி பாதியாக.

உமை ஒரு பாகம் உடையானை

சென்று அடையாத திரு உடையானை.

நம்மிடம் உள்ள செல்வம் எல்லாம் நம்மிடம் வந்தது. உழைத்து சம்பாதித்து வந்தது  அல்லது முன்னோர்கள் தேடி சேர்த்து வைத்து விட்டுப் போனது. எப்படியோ  நம்மிடம் வந்தவை. நாம் வரும்போது ஒண்ணும் கொண்டு வரவில்லை.

வந்தவை , கட்டாயம் போகும்.

அதன் பெயரே 'செல்வம்' . எப்போது வேண்டுமானாலும் செல்வோம் என்று சொல்லாமல் சொல்கிறது.

இறைவனிடம் இருப்பது வெளியில் இருந்து வந்தது அல்ல. உள்ளேயே இருப்பது.

உண்மையான , நிரந்தரமான செல்வம் உள்ளே இருப்பது.

அதைத் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

  என்னமோ தெரியல ...ரேவா, இந்து, உஷா ...எல்லோரும் இதே போல் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று வாழ்த்தத் தோன்றுகிறது.


உடம்பு எப்போது சூடாகும் ? கோபம் வரும்போது, காமம் வரும் போது , பொறாமை வரும் போது...இரத்தக் கொதிப்பு என்கிறோம். பொறாமை தீயில் வேகிறான் என்கிறோம். கோபத்தில் கண்ணில் கனல் பறக்கிறது என்கிறோம்.

அப்படி கொதித்த மனம் குளிர  என்ன செய்ய வேண்டும்.

ரொம்ப ஒண்ணும் செய்ய வேண்டாம்,

"சீராப்பள்ளி குன்றுடையானை சொல்லுங்கள்" உள்ளம் குளிரும் என்கிறார் ஞானசம்பந்தர்.


 அரி என்ற பேரரவம் உள்ளத்தில் புகுந்தால் குளிரும் என்கிறாள் ஆண்டாள்.

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

சொல்லிப் பாருங்கள். குளிரும். 

1 comment:

  1. உள்ளிருக்கும் ஆணும் பெண்ணும் பற்றியது சுவாரசியமான விளக்கம். உள்ளே இருக்கும் தேடலே வெளியே காதலாக ஆகிறது என்பதுவும் சுவாரசியமானது. நன்றி.

    ReplyDelete