Wednesday, January 11, 2017

தேவாரம் - ஊஞ்சல்

தேவாரம் - ஊஞ்சல் 


ஊஞ்சல் !

ஊஞ்சல் ஆடி இருக்கிறீர்களா ? சிறு பிள்ளையாக இருக்கும் போது ஆடி இருப்பீர்கள். சில வீடுகளில் திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடும் வைபவம் இருக்கும். பெரிய வீடுகளில் இன்றும் கூட ஊஞ்சல் வைத்து கட்டுவார்கள்.

ஊஞ்சல் ஆடும்போது என்ன நிகழ்கிறது ? ஊஞ்சல் மேலே போகும். பின் கீழே வரும். பின் எதிர் திசையில் மேலே போகும். பின் மறுபடியும் கீழே வரும். இப்படி மாறி மாறி மேலே போவதும், கீழே வருவதும் நிகழும். ஆடி ஆடி ஒரு நாள் ஊஞ்சல் கயிறு அறுந்து போகும். ஊஞ்சல் பலகை தரையில் கிடக்கும்.

ஊஞ்சல் ஒரு வாழ்க்கை தத்துவத்தை விளக்குகிறது.

வாழ்க்கையில் நாம் சில சமயம் மேலே போவோம், கீழே வருவோம், மீண்டும் மேலே போவோம், கீழே வருவோம்....மேடு பள்ளங்கள் , உயர்வு தாழ்வுகள் வாழ்வின் மாறாத விதி.

மனிதன் ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு ஊஞ்சல் போல அலைகிறான்.

கார் வேண்டும் என்று ஆசைப் படுகிறான். கார் வாங்கிவிட்டால் , அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைப்பது இல்லை. மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுகிறான். அடுத்த ஆசை தலை தூக்குகிறது. வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை நோக்கி வாழ்க்கை நகர்கிறது. வீடு வந்தால்  , சிறிது நாளில் அந்த சந்தோஷம் போய் விடுகிறது. அடுத்த ஆசை எழுகிறது.

மேலே போகும் போது மகிழ்ச்சி. கீழே வரும்போது துன்பம். இன்பம், துன்பம், இன்பம், துன்பம்....இதுதான் ஊஞ்சல்.

இப்படி ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு மனிதன் ஊஞ்சல் போல ஆடிக் கொண்டிருக்கிறான். மனம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது, அமைதி இல்லாமல்.

பாடல்

உறுகயி றூசல் போல வொன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானே னதிகைவீ ரட்ட னீரே

சீர் பிரித்த பின் 

உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி 
மறு கயிறு ஊசல் போல வந்து வந்து உலவு நெஞ்சம்
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய் பாதத்

அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகை வீரட்டனீரே

பொருள் 

உறு = உறுதியான 

கயிறு ஊசல் போல = கயிற்றால் கட்டிய ஊசல் போல 

ஒன்று விட்டு ஒன்று பற்றி = ஒரு ஆசையை விட்டு , வேறொரு ஆசையை பற்றியதைப் போல 

மறு கயிறு = ஒரு பக்கம் போன ஊஞ்சல் மீண்டும் மறு பக்கம் சென்று வரும். அது மறு கயிறு 

ஊசல் போல = ஊஞ்சல் போல 

வந்து வந்து உலவு நெஞ்சம் = வந்து வந்து உலவும் நெஞ்சம் 

பெறு கயிறு ஊசல் போலப் = போவதும் வருவதையும் பெற்ற கயிறு போல 

 பிறை புல்கு சடையாய் = பிறையை தலையில் அணிந்த சிவனே 

பாதத் = பாதத்தில் 


அறு கயிறு = அறுந்து விழும் 

ஊசல் ஆனேன் = ஊஞ்சல் ஆனேன் 

அதிகை வீரட்டனீரே = திரு அதிகை என்ற தலத்தில் எழுந்து அருளும் வீரட்டனாரே 

ஊஞ்சலின் கயிறு அறுந்தால் , தரையில் விழும். 

மனம் என்ற ஊஞ்சல் அறுந்தால் இறைவன் திருவடியே அது சென்று தங்கும் இடம். 

அது சரி, ஊஞ்சல் மனம் என்றால், கயிறு எது ?

ஆசை, பாசம் என்பன கயிறுகள். கட்டப் பட்ட மரம் தான் வாழ்க்கை. 

ஆசையாலும், பாசத்தாலும் மனிதன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். 

எவ்வளவு அலைந்தாலும், ஊஞ்சல் எங்கும் போவது இல்லை. அங்கேயேதான்  இருக்கும். ஆசையும் பாசமும் மனிதனை முன்னேற விடமால் கட்டிப் போடும். 

ஆடி ஆடி களைத்துப் போய் , கயிறு பிடி விடும் போது தாங்குகின்ற தரையாக இறைவன் திருவடி இருக்கிறது. 

மங்கையர் மையல் என்ற ஊஞ்சலில் இருந்து என்று விடுபடுவேன் என்று ஏங்குகிறார் அருணகிரிநாதர். இந்த பெண் நன்றாக இருக்கிறாள். அட, அவள் இவளை விட அழகாக இருக்கிறாளே. இவர்கள் இரண்டு பேரையும் விட மூன்றாமவள் சிறப்பாக இருக்கிறாளே என்று மனிதன் அலை பாய்கிறான்.  

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, "ஊசல்" படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே


 கூர்ந்து கவனியுங்கள். ஊஞ்சல் கூட பாடம் சொல்லித் தரும். 




1 comment:

  1. அறுந்து விட்ட ஊஞ்சல் போல, இறைவன் பாதத்தில் விழுவது என்ற உவமை நன்றாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete