Saturday, January 14, 2017

இராமாயணம் - பரதன் குகன் - நகை இழந்த முகத்தனை

இராமாயணம் - பரதன் குகன் - நகை இழந்த முகத்தனை 


வெளியே எங்காவது போக வேண்டும் என்றால் நாம் எப்படி கிளம்புவோம் ?

தலை சீவி, கொஞ்சம் பவுடர் போட்டு, நல்ல உடை அணிந்து செல்வோம். பெரிதாக அலங்காரம் பண்ணாவிட்டாலும் பார்க்கும் படியாகவாவது செல்லுவோம் அல்லவா ?

பரதன், ஒரு பெரிய நாட்டின் அரசன். அவன் கிளம்பி இராமனைப் பார்க்கப் போகிறான். மந்திரிகள் புடை சூழ, படை பின்னால் வர, மற்ற பெரியவர்கள், குல குரு , எல்லோரும் வருகிறார்கள். ஒரு அரசனுக்கு உரிய அலங்காரம் வேண்டும் அல்லவா. ஒரு பட்டு உடை, கிரீடம், இடுப்பில் வாள் , குளித்து முழுகி சுத்தமாக வந்திருப்பான் அல்லவா ?

இராமனைத் தேடி வரும் பரதனை , கங்கையின் மறு கரையில் உள்ள குகன் காண்கிறான்.

துணுக்குறுகிறான்.

மர பட்டையால் ஆன உடை அணிந்து இருக்கிறான். உடம்பு எல்லாம் ஒரே தூசி. உடம்பில் ஒரு ஒளி இல்லை.  முகத்தில் சிரிப்பு ஒரு துளியும் இல்லை. அவன் நிலையைப் பார்த்தால் கல் கூட கனிந்து விடும். அவனைப் பார்த்த குகன் மனம் நெகிழ்கிறான். அவன் கையில் உள்ள வில் அவனை அறியாமலேயே நழுவி விழுகிறது.

பாடல்

வற்கலையின் உடையானை
    மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன
    நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் கனிகின்ற
    துயரானைக் கண் உற்றான்,
வில் கையின் நின்று இடைவீழ,
    விம்முற்று நின்று ஒழிந்தான்.


பொருள்

வற்கலையின் உடையானை = வற்கலை என்றால் மரவுரி.

மாசு அடைந்த மெய்யானை = உடல் எல்லாம் ஒரே அழுக்கு. தூசி.

நல் கலை இல் மதி என்ன = கலை என்றால் நிலவின் பிறை. பிறை இல்லாத சந்திரன் எப்படி ஒளி மழுங்கி இருக்குமோ அப்படி இருந்தான்.

நகை இழந்த முகத்தானைக் = சிரிப்பை தொலைத்த முகம்

கல் கனியக் = கல்லும் கனியும்

கனிகின்ற துயரானைக் = துன்பத்தினால் மனம் கனியை போல நெகிழ்ந்து நிற்க

கண் உற்றான் = குகன் கண்டான்

வில் கையின் நின்று இடைவீழ = வில் கையில் இருந்து கீழே விழுந்தது

விம்முற்று = விம்மலுற்று

நின்று ஒழிந்தான் = நின்றான்

இராமன் மர உரி அணைந்து சென்றான் என்று அறிந்த பரதன், தானும் மர உரி அணிந்து வருகிறான்.

ஒரு வேளை நல்ல பட்டு உடை அணிந்து வந்தால் , அதைப் பார்க்கும் இராமன், ஒருவேளை தனக்கு இந்த ஆடம்பரங்களில் ஆசை இருக்கும் என்று நினைத்து விடலாம் , அப்படி நினைத்து அரசை தன்னிடமே கொடுத்து விடலாம் என்று  நினைத்து பரதனும் மர உரி அணிந்து வந்தான்.

இதில் ஒரு பாடம் நமக்கு இருக்கிறது.

பெரியவர்களை பார்க்கப் போகும் போது , எளிமையாக போக வேண்டும்.

நம்மிடம் உள்ள விலை உயர்ந்த ஆடை, நகை நட்டுகளை போட்டுக் கொண்டு அவர்கள் முன் போய் நிற்கக் கூடாது. பெரியவர்களை சுற்றி உள்ளவர்கள் எளிமையாக இருப்பார்கள். நாம் மட்டும் படோபடமாக சென்றால் , தனித்துப் போவோம். நம் செல்வத்தை, செல்வாக்கை காட்டும் இடம் அது அல்ல.

இன்னும் சொல்லப் போனால், அலுவலகத்தில் ஒரு மேலதிகாரியை பார்க்கப் போனால், அவரை விட உயர்ந்த ஆடை, கைக்கடிகாரம் இவற்றை அணிந்து சென்றால் அவருக்கு என்ன தோன்றும் ? என்னை விட இவன் உயர்ந்தவன் என்று  என்னிடமே காட்டுகிறானா என்று நினைக்கலாம். அல்லது, ஏற்கனவே நிறைய வசதி இருக்கும் போல ...இவனுக்கு கொடுக்க வேண்டிய பதவி உயர்வை, சம்பள உயர்வை வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்று நினைக்கலாம்.

கம்பர் அப்படிச் சொல்லவில்லை. நாம் சிந்திக்கலாமே.


"கல் கனியக் கனிகின்ற துயரானைக்"

பிறக்கும் போது மென்மையாக உள்ள மனம் நாளடைவில் கெட்டிப் பட்டுப் போகிறது. கல்லாய் போன மனதில் அன்பு, அருள், ஈரம், பக்தி என்று ஒன்றும்  இருக்காது. 

மனதில் இறைவன் திருவடி பாடியவேண்டும் என்றால் , மனம் மென்மையாக இருக்க வேண்டும். கல்லில் எப்படி எதுவும் படியும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரிநாதர் 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

மனம் உருக வேண்டும். 

இராமன் நிலை நினைத்து பரதனின் மனம் உருகுகிறது. கல்லும் கனியும் படி அவன் மனம் உருகுகிறது. 

வில் கையின் நின்று இடைவீழ,

அதைக் கண்ட குகனின் கையில் இருந்த வில் நழுவி விழுந்தது. மனம் வேறு ஒன்றைப் பற்றும் போது கை தானாகவே தன் பிடிப்பை நெகிழ விடும்.

சிவ பெருமானை காண்கிறார் மாணிக்க வாசகர். கை கூப்பி வணங்க வேண்டும். வணங்கவும் செய்கிறார். இருந்தும், அது ஒரு உண்மையான பக்தி அல்ல என்று அவர் நினைக்கிறார். கை கூப்பி வணங்க வேண்டும் என்றால் ஒரு முயற்சி வேண்டும். மனம் இறைவன் பால் இலயித்து விட்டால், கை நெகிழ்ந்து விடும். அதை உயர்த்தி இறைவனை வணங்க முடியாது. என்னால் அப்படி முடியவில்லையே என்று உருகுகிறார் மணிவாசகர். 


மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே. 


ஆனால் குகன் ஒரு படி மேலே போகிறான். அவன் கை நெகிழ்ந்து வில் கையை விட்டு  விழுந்து விடுகிறது. 


மணிவாசகரால் கையை நெகிழ விட முடியவில்லை. குகன் கை நெகிழ்ந்தது. 


அப்படி நெகிழ்ந்த குகன் , பரதனை தவறாக நினைத்து விட்டேனே என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான். 

எப்படி தெரியுமா ?







1 comment:

  1. அருமையான விளக்கம்.மனம் நெகிழ்ந்து விட்டது.ஒரு படிப்பினையும் கூட இருந்தது.
    பெரியவர்களை காண போகும்போது எளிமையின் அவசியத்தை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete