Tuesday, January 3, 2017

நாலடியார் - யாரை நட்பாகக் கொள்வது ?

நாலடியார் - யாரை நட்பாகக் கொள்வது ?


நண்பர்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்கள். நம் வாழ்வின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள். அது நல்ல திசையிலும் இருக்கலாம், அல்லது மற்ற வழியிலும் இருக்கலாம்.

நண்பர்களை எப்படி தேர்தெடுப்பது ?

நம்மை விட படித்தவர்கள், செல்வத்தில், அதிகாரத்தில் , புகழில் உயர்ந்தவர்களை நாம் நட்பாக பெற விரும்புவோம். அதில் தவறு ஒன்றும் இல்லை.

நாலடியார் ஓர் எச்சரிக்கை தருகிறது.

படித்தவர்கள், அறிவாளிகள் , புத்திசாலிகள் சில சமயம் தங்களுடைய சுய நலத்துக்காக நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், வலிமை அற்ற சில நண்பர்களோ நாம் தவறே செய்திருந்தாலும் நம்மை மன்னித்து நம் மீது தொடர்ந்து அன்பு செலுத்துவார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை நாம் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது.

யானை இருக்கிறதே, அது வலிமையானதுதான், கம்பீரமானதுதான் இருந்தாலும் சில சமயம் தன்னை பழக்கிய பாகனையே அது மிதித்து கொன்று  விடுகிறது. நாய் இருக்கிறதே அது சாதாரண விலங்குதான் . நாம் அதை எட்டி உதைத்தாலும், திட்டினாலும், அது நம் மீது தொடர்ந்து அன்பு காட்டும். நாம் அதன் மீது வேலை எறிந்தாலும் , அந்த வேல் உடலில் தைத்து இருந்து வேதனை தந்தாலும்  , அதையும் மறந்து அந்த நாய் நம் மீது அன்பு செலுத்தும். அது போல, நம் பிழை பொறுத்து, நம் மீது அன்பு கொண்டவர்களை நாம் நட்பாகக் கொள்ள வேண்டும்.

பாடல்

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.

பொருள்

யானை யனையவர் = யானை அனையவர் = யானை போன்றவர்

நண்பொரீஇ = நட்பைக் கொள்ளாமல்

நாயனையார் = நாய் அனையர் = நாய் போன்றவர்

கேண்மை = நட்பை

கெழீஇக் கொளல்வேண்டும்; = தழுவிக் கொள்ள வேண்டும்

யானை = யானையானது

அறிந்தறிந்தும் = தன்னை நன்றாக அறிந்த

பாகனையே கொல்லும் = பாகனையே கொல்லும்

எறிந்தவேல் = தன் மேல் எறியப்பட்ட வேல்

மெய்யதா = உடலில் தைத்து இருந்த போதும்

வால்குழைக்கும் நாய் = வாலை குழைத்து வரும் நாய்


அறிவும், செல்வமும், அதிகாரமும் நட்புக்கு அடிப்படை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அது சில சமயம் அதுவே ஆபத்தாகக் கூட முடியலாம்.

அன்புதான் நட்புக்கு அடிப்படை.

அது மட்டும் அல்ல,

நாம் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்றால், நம் நண்பர்கள் செய்யும் துன்பத்தையும்  பொறுத்துக் கொள்ள வேண்டும். நட்பில் சில சமயம் சில வேண்டாத   வார்த்தைகள் வந்து விழுந்து விடலாம், சந்தேகம் வரலாம், வேறு ஏதேனும்  மனக் கசப்பு வரலாம். அவற்றை மறந்து அன்போடு இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

நாயிடம் இருந்தும் பாடம் படிக்கலாம்.

நாய் என்றால் ஏதோ ஒரு கேவலமான பிராணி என்று தான் இலக்கியங்கள்  பேசி வந்திருக்கின்றன.

நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு என்பார் மணிவாசகர்.

நம்மையும் ஓர் பொருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து என்பதும் அவர் வாக்கே.

அதை மாற்றி நாய் போன்ற குணம் உள்ளவர்களின் நட்பை கொள்ள வேண்டும் என்று சொல்கிறது  நாலடியார்.

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அந்த மாதிரி நண்பர்களாய் இருக்கிறோம் ?


1 comment:

  1. நாயைப் போன்ற அன்புடையவரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பாடமும், நாயைப் போல நண்பரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று இன்னொரு பாடமுமாக இரண்டு பொருள்களையும் தந்ததற்கு நன்றி. அருமையான விளக்கம்.

    ReplyDelete