Tuesday, April 25, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - மண் இடை விழுந்தான்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - மண் இடை விழுந்தான் 


தன்னிடம் அரசை மீண்டும் தர கானகம் வந்த பரதனிடம் , தந்தை தயரதன் எப்படி இருக்கிறான் என்று இராமன் கேட்டான்.

"உன்னைப் பிரிந்த பிரிவு என்ற நோயாலும், என் தாய் கைகேயி கேட்ட வரம் என்ற எமனாலும் தந்தை இறந்து விண்ணகம் போனான் "  என்று பரதன் இராமனிடம் கூறினான்.

அப்படி சொன்னதுதான் தாமதம், அந்த சொல் முழுவதுமாகக் கூட காதில் நுழையவில்லை, அதற்குள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினால் போல துன்பம் அடைந்து கண்ணும் மனமும் காற்றாடி போல சுழன்று மயங்கி மண்ணில் விழுந்தான்.

பாடல்

‘விண் இடை அடைந்தனன் ‘
    என்ற வெய்ய சொல்,
புண் இடை அயில் எனச்
    செவி புகாமுனம்,
கண்ணொடு மனம் சுழல்
    கறங்கு போல ஆய்,
மண் இடை விழுந்தனன்
    வானின் உம்பரான்.

பொருள்

‘விண் இடை = வானகம்

அடைந்தனன் = அடைந்தான் (தயரதன்)

என்ற= என்ற

வெய்ய சொல் = கொடிய சொல்

புண் இடை = புண்ணில்

அயில் எனச் = வேல் புகுந்தார் போல

செவி புகாமுனம் = காதில் விழு முன்

கண்ணொடு = கண்ணோடு

மனம் சுழல் = மனமும் , சுழலும்

கறங்கு போல ஆய் = பட்டம் போல ஆகி

மண் இடை விழுந்தனன் = மண்ணில் விழுந்தான்

வானின் உம்பரான் = வானத்திற்கும் அப்பாற்பட்ட இடத்தை சேர்ந்தவன்


ஆண் என்பவன் வலிமையானவன்.. முரடன்.  மென்மையான உணர்வுகள் மிக குறைவாக உள்ளவன். சண்டையும், வேகமும், கோபமும், வலிமையும், இரத்தமும்  அவன் குறியீடுகள்.

அன்பு, காதல், நேசம், கண்ணீர், நெகிழ்வு அவனுக்கு அந்நியமான ஒன்று என்றே முத்திரை குத்தி வளர்க்கப் படுகிறான்.

அழும் ஆண்மகனை யாரும் விரும்புவதில்லை.

துன்பம் கண்டு துவளும் ஆண்மகன் பரிகசிக்கப் படுகிறான்.

எத்தனை துன்பம் வந்தாலும் , பாறை போல உறுதியாக நிற்க வேண்டும் என்பது அவனுக்கு  விதித்த விதி.

அது சரி அல்ல.

உணர்ச்சிகளை சரியான அளவில் கையாளத் தெரிய வேண்டும்.

அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் அன்பு செலுத்த வேண்டும்.

பணிந்து போக வேண்டிய இடத்தில் பணிந்து போக வேண்டும்.

தோற்க வேண்டிய இடத்தில் தோற்க வேண்டும்.  இராவணனை பற்றி சொல்ல வந்த கம்பர் , படுக்கை அறையில் கூட பணியாதவன் என்கிறார். படுக்கை அறையா வீரத்தைக் காட்டும் இடம் ? அன்பு காட்ட வேண்டிய இடத்தில் ஆணவத்தை காட்டுவது அரக்க குணம்.

அழுவதும், துன்பத்தில் துவ;ளுவதும் தவறொன்றும் அல்ல.

தந்தை இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட இராமன் மயங்கி விழுந்தான்  என்கிறான்  கம்பன்.

ஒரு வேளை ,  அப்படி சொல்லாமல் , தயரதன் இறந்த செய்தியைக் கேட்ட இராமன் , சிறிதும் கலங்காமல் இருந்தான். அன்றலர்ந்த மலர் போல இருந்தது அவன்  முகம் என்று எழுதி இருந்தால், எல்லோரும் அதை இரசித்து இருப்பார்கள். "பார், இராமன் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் கலங்காமல் இருக்கிறான் ..." என்று அவனை பாராட்டி இருப்பார்கள்.

கம்பர் அப்படி சொல்லவில்லை. மயங்கி விழுந்தான் என்று  சொன்னார்.அருகில் இருந்த சீதை மயங்கி விழுந்தாள் என்று சொல்லவில்லை.  இராமன் மயங்கினான்.

பாசத்தின் உச்சம். தந்தை இறந்த துக்கத்தை தாங்க முடியவில்லை. அவன் மயங்கி விழுந்ததால் அவன் மேல் உள்ள மதிப்பு ஒன்றும் குறைந்து விடவில்லை.

ஆண்களுக்கு ஒரு பாடம். எப்போதும் ஒரு முரட்டு தன்மையோடேயே இருக்க வேண்டும் என்ற  கட்டாயம் இல்லை.

அழ வேண்டும் என்றால் அழுங்கள்.

துக்கம் தாளவில்லை என்றால் மயங்குவது கூட சரிதான்.

இவை எல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடு. உணர்ச்சிகளை அடக்கி வைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

ஆங்கிலத்தில் emotional intelligence என்று சொல்லுவார்கள்.

உணர்ச்சிகளை சரியாக கையாள பழக வேண்டும்.


1 comment:

  1. மயக்கம் எனது தாயகம் ; மௌனம் எனது தாய்மொழி....

    ReplyDelete