Thursday, June 15, 2017

திருக்குறள் - செல்வத்தை கட்டும் கயிறு

திருக்குறள் - செல்வத்தை கட்டும் கயிறு 


செல்வம் இருக்கிறதே, அதன் பெயரே அதன் நிலையைக் குறிக்கும்.

செல்வோம் என்பது செல்வம் என்று ஆனது. எப்போது வேண்டுமானாலும் சென்று விடும்.

முடி சாய்த்த மன்னரும் பிடி சாம்பராய் போய் விடுவர்.

செல்வம் நிற்காமல் உருண்டு ஓடிக் கொண்டே இருக்கும்.

இளமை எப்படி நில்லாமல் போய் கொண்டே இருக்குமோ, அது போல செல்வமும். அதை கட்டி வைக்க முடியாது.

ஆனால், அதையும் கட்டி வைக்க முடியும், அதற்கு ஒரு வழி இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

உங்களிடம் வந்த செல்வம் , உங்களை விட்டு போகாமல் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டுமா ?

ஆம், என்றால் அதற்கு ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர்.

நல்ல பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள், வீடு வாங்கி போடுங்கள், நிலத்தில் முதலீடு செய்யுங்கள், தங்கம் வாங்குங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை.

நிறைய உழையுங்கள், கடினமாக வேலை செய்யுங்கள், நிறைய படியுங்கள், நிறைய  பேரை தெரிந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லவில்லை.

பின், என்ன தான் சொல்கிறார் ?

ஒன்றே ஒன்று தான், காலத்தோடு சேர்ந்து வாழுங்கள். அவ்வளவுதான்.

பாடல்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு

பொருள்

பருவத்தோடு = காலத்தோடு

ஒட்ட = சேர்ந்து

ஒழுகல் = வாழ்தல்

திருவினைத் = செல்வத்தை

தீராமை  = தீர்ந்து போகாமல்

ஆர்க்கும் = பிணைக்கும்க, கட்டும்

கயிறு = கயிறு

பருவத்தோடு ஓட்ட ஒழுகல் என்றால் என்ன ?

நிறைய மென்பொருள் (software ) பொறியாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். சில பேரை அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் வீட்டுக்கு அனுப்பி விடுகிறது. நிறுவனத்தின் மேல் கோபம் கொள்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு காரணம் என்ன ?

அவர்கள் படித்த படிப்பு, இந்த காலத்துக்கு பொருந்த வில்லை.  சந்தையில் வேறு திறமைகள் வேண்டி இருக்கிறது.


நான் படித்த படிப்புக்கு வேலை கொடு என்றால், அந்த படிப்பு காலாவதியாகி விட்டது.

இப்போது எது தேவையோ , அதை படிக்க வேண்டும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல்.

இது அரசர்களுக்கு சொல்லப் பட்ட அறிவுரை. நமக்கும் பொருந்தும்.

இதை இன்னும் கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.

காலத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால், ஒவ்வொரு காலத்திலும் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து செய்ய வேண்டும்.

இன்று என்ன செய்ய வேண்டும், நாளை என்ன செய்ய வேண்டும், இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம், என்று கணக்கு பண்ணி செயலாற்ற வேண்டும்.


அது மட்டும் அல்ல, நமது பாதையை காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.

இன்டர்நெட், கம்ப்யூட்டர், என்று புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது. அவற்றை அறிந்து , அதில் நம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் படித்ததை வைத்துக் கொண்டு காலம் தள்ள முடியாது.

சரி, அது என்ன "ஒழுகல் "

ஒழுகுதல் என்பதில் இருந்து ஒழுகல் , ஒழுக்கம் என்பவை வந்தன.


ஒழுகல் என்ற வார்த்தையில் இரண்டு பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்று, உயர்ந்த இடத்தில் இருந்து தான் ஒழுகும். கூரையில் இருந்து நீர் ஒழுகி கீழே வரும். கீழிருந்து மேலே போகாது.

அது போல, ஒவ்வொவரு காலத்திலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். உயர்ந்தவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, ஒழுகுவது என்பது ஒரே சீராக வருவது. கொட்டுவது, தெளிப்பது, சிதறுவது என்றால் விட்டு விட்டு வருவது. ஒழுகுதல் என்றல் ஒரே சீராக வந்து கொண்டு இருப்பது.

அது போல, நல்ல விஷயங்களை பழக்கமாக கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என்று இருக்கக் கூடாது. ஒரு காரியத்தை எடுத்தால் அதை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும்.

பருவத்தோடு ஒட்டி ஒழுகினால், இருக்கின்ற செல்வம் நம்மை விட்டு போகாது.

ஒரு காகிதத்தை எடுத்து பட்டியில் போடுங்கள்.

எத்தனை காரியங்கள் நீங்கள் செய்கிறீர்கள், அதில் எத்தனை காலத்தோடு ஒட்டி இருக்கிறது என்று.

காலத்துக்கு ஒவ்வாத காரியங்கள் எவை எவை என்று சிந்தியுங்கள் அவற்றை என்ன செய்வது என்று முடிவுக்கு வாருங்கள்.

இன்று என்ன செய்வது, நாளை என்ன செய்வது, இந்த வாரம், இந்த மாதம், இந்த வருடம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள்.

அப்படி சிந்தித்து செயல் பட்டால், உங்களிடம் செல்வம் நிலைத்து நிற்கும்.

நிற்கட்டும். 

2 comments:

  1. பல கோணங்களில் அணுகி உள்ளீர்கள். அருமையான விளக்கம்.நன்றி.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான விளக்கம.

    ReplyDelete