Friday, June 9, 2017

இராமாயணம் - பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்

இராமாயணம் - பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும் 



அரசை ஏற்றுக் கொள் என்று பரதன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான் இராமனிடம். இராமன் உடன் படவில்லை.

பரதனிடம் இராமன் சொல்கிறான் ,  " பரந்த கேள்வி அறிவும் , குற்றமற்ற ஞானமும், கொண்ட ஒழுக்கமும்,  செய்யும் தொழிலின் மேன்மையும் , வணங்கத் தக்க தேவர்களும் , நமது பெரியவர்களே "

அதனால், நீ படித்த அறங்களும், நமது குல வழக்கமும், மனு நீதியும், எல்லாம் என் தந்தையான தயரதன் சொல்லுக்கு அப்புறம் என்று சொல்லி விடுகிறான்.

பாடல்



‘பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,
விரவு சீலமும், வினையின் மேன்மையும் -
உர விலோய்! - தொழற்கு உரிய தேவரும்,
“குரவரே”எனப் பெரிது கோடியால்.


பொருள்


‘பரவு கேள்வியும் = புகழ் பெற்ற கேள்வி அறிவும்

பழுது இல் ஞானமும் = குற்றம் அற்ற ஞானமும்

விரவு சீலமும் = கடை பிடிக்கும் ஒழுக்கமும்

வினையின் மேன்மையும் = செயலின் மேன்மையும்

உர விலோய்! = உறுதியான வில்லைக் கொண்டவனே

தொழற்கு உரிய தேவரும் = தொழுதற்கு உரிய தேவர்களும்

“குரவரே”எனப் = பெரியவர்களே

பெரிது கோடியால் = பெரிதும் மனதில் கொள்வாய்

இதில் குரவர் என்றால் யார் என்று முதலில் பார்த்து விடுவோம்.

குரவர் என்றால் பெரியவர், முன்னோர், என்று கொள்ளலாம். ஆசாரக் கோவை என்ற நூல் ஐந்து பேரை  குரவர் என்று சொல்கிறது.

யார் அந்த ஐந்து பேர் ?

அரசன்,
ஆசிரியன் ,
தாய்,
தந்தை,
தனக்கு முன் பிறந்த சகோதரன், சகோதரி (அண்ணன் /அக்காள்)

இவர்களுக்கு இணையான குரவர் அல்லது பெரியவர்கள்  .யாரும் இல்லை. எனவே இவர்களை தினம் தொழ வேண்டும் என்று சொல்கிறது. 

அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைத் போலத் தொழுது எழுக!’ என்பதே-
யாவரும் கண்ட நெறி.


இராமனைப் பொறுத்தவரை, அறிவு , ஞானம், தேவர்கள், ஒழுக்கம், நெறி எல்லாம்  அவனுடைய தந்தை சொல்லுக்குப் பிறகுதான்.

இதை இந்த இடத்தில் மட்டும் அல்ல, இராமாயணத்தில் அத்தனை சிக்கலான  இடத்திலும் , எங்கெல்லாம் நடைமுறை சிக்கல்கள் வருகின்றனவோ , அங்கெல்லாம்  யாரோ ஒரு பெரியவரின் சொல் கேட்டுத்தான் நடக்கிறான்.

எனக்குத் தெரியும், நான் அறிந்த அறத்தின் படி நடக்கிறேன் என்று சொல்லவில்லை.

மாறாக, பாரதனோ, அம்மா சொன்னால் என்ன, அப்பா சொன்னால் என்ன, அறம்  இவர்கள் எல்லோரையும் விட உயர்ந்தது. அதன் படி நடக்க வேண்டும் என்று  கூறுகிறான்.

எது சரி, எது தவறு என்று பின்னால் கம்பன் கூறுகிறான்.

அதுவரை அவர்களின் பேச்சை கவனிப்போம்.

No comments:

Post a Comment