Thursday, July 13, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான் 


தயரதன் சொல் கேட்டு கானகம் வந்த இராமனை மீண்டும் அரசை ஏற்றுக் கொள்ளும்படி பரதனும், பின் வசிட்டனும் வேண்டிய பின்னும், இராமன் மறுத்து விடுகிறான். பரதன் பிடிவாதம் பிடிக்கிறான்.

இறுதியில் வானவர் வந்து இராமன் கானகம் போவதும், பரதன் நாடாள்வதும் கடமை என்று சொல்லி விடுகிறார்கள்.

இராமன் பரதனிடம் சொல்கிறான்

"வானவர்கள் சொல்லி விட்டார்கள். அவர்கள் சொல்லை மீறக் கூடாது. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீ இந்த நாட்டை ஆள்"

என்று பரதனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு சொல்கிறான்

பாடல்

வானவர் உரைத்தலும்,
    ‘மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்,
    இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின்
    அளித்தி பார் ‘எனா,
தான் அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்.
  

பொருள்


வானவர் = தேவர்கள்

உரைத்தலும் = சொன்ன பின்னால்

‘மறுக்கற்பாலது அன்று = அதை மறுக்க முடியாது

யான் உனை இரந்தனென் = நான் உன்னை கேட்டுக் கொள்கிறேன்

இனி என் ஆணையால்  = இனி மேல் என் ஆணையால்

ஆனது ஓர் அமைதியின் = உனக்கென்று அமைந்து விட்ட

அளித்தி பார் ‘எனா, = இந்த உலகை ஆள் என்று

தான் = இராமன்

அவன் = பரதனின்

துணை  = இரண்டு

மலர்த் = மலர் போன்ற

தடக்கை = பெரிய கைகளை

பற்றினான் = பற்றிக் கொண்டான்


கண்ணில் நீர் வரவழைக்கும் பாடல்

நினைத்துக் கூட பார்க்க முடியாத இடம். கற்பனை கூட செய்ய முடியாத சூழ்நிலை.

எவ்வளவோ இருக்கிறது இந்தப் பாடலில் அறிந்து கொள்ள.

அண்ணன் சொல்லி விட்டான்.

குல குருவும் மௌனமாகி விட்டார் . அப்படி என்றால் அவரும் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தான் அர்த்தம்.

இப்போது தேவர்களும் கூறி விட்டார்கள்.

பரதனுக்கு வேறு வழியில்லை.

இராமன் கை ஓங்கி இருக்கிறது. "நான் தான் அப்பவே சொன்னேனே ...பார் இப்போது தேவர்களும் சொல்லி விட்டார்கள். நீ போய் நாட்டை ஆள் " என்று சொல்லி இருக்கலாம்.

இராமன் அப்படி சொல்லவில்லை.

"நான் உன்னிடம் பிச்சை கேட்கிறேன்' என்று கூறுகிறான்.

"யான் உனை இரந்தனென்". இரத்தல் என்றால் பிச்சை கேட்டல், கெஞ்சி கேட்டல்.

அவ்வளவு தூரம் கீழே இறங்கி வருகிறான் இராமன்.

பல வீடுகளில் கணவன் மனைவி உறவுச் சிக்கல்கள் இருக்கலாம். கொஞ்சம் வாதம், பிரதி வாதம் செய்த பின், யாரோ ஒருவர் சொன்னது சரியாகவும் மற்றவர் சொன்னது தவறாகவும் இருக்கலாம்.

உடனே, வென்றவர் , "நான் தான் அப்பவே சொன்னேனே. நீ கேட்கவில்லை. பாத்தியா இப்ப..." என்று தோற்றவர் மனதை மேலும் குத்தி புண் படுத்துவதை கண்டிருக்கிறோம்.

அப்படி செய்யக் கூடாது .

வென்றவர் , தோல்வி அடைந்தவர் மனதுக்கு ஆறுதலாக பேசினால் , தோற்றவர் கூட  தோல்வியை பெரிதாக நினைக்காமல் அந்த அன்பை நினைத்து செயல்படுவார்கள்.

இது கணவன் மனைவி உறவில் மட்டும் அல்ல, பெற்றோர் பிள்ளைகள் , அதிகாரி ஊழியர் உறவு என்று எல்லா இடத்திலும் வெற்றி பெற்றவர் ஆணவம் கொள்ளாமல் , தோற்றவர் மனதுக்கு மருந்து போடுவது போல பேச வேண்டும்.

அடுத்தது, பரதனின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு கேட்கிறான். அவ்வளவு பாசம் தம்பி மேல்.

தான் காட்டுக்குப் போகவும், தம்பிக்கு நாட்டைத் தரவும் இந்த கெஞ்சல்.

உதவி என்று கேட்கும் போது , எவ்வளவு இனிமையாக கேட்கிறான் இராமன்.

ஏதோ, அரண்மனையில் , சுகமாக இருந்து கொண்டு இவ்வளவு அன்பாக பேசவில்லை.

இருக்கும் இடம் கானகம். சற்று முன் தான் தந்தை இறந்த செய்தியை கேள்விப் படுகிறான் இராமன். தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி கடன்களை செய்கிறான். இன்னும் பதினாலு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.

சோகமான இடம். இறுக்கமான சூழ்நிலை. கடினமான காலம்.

இருந்தும் இராமனின் சொல்லிலும், செயலிலும் அவ்வளவு கனிவு.

"நாட்டைப் பார்த்துக் கொள் " என்று பரதனின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்.

முடியுமா ?

முடிந்த வரை முயற்சி செய்வோம். உறவுகளோடு அன்போடு பழகுவோம். இனிமையாக பேசுவோம். பேச்சிலும், செயலிலும் இனிமையை வெளிப் படுத்துவோம்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_13.html

2 comments:

  1. அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete
  2. இந்தப் பாடலில் மூன்று விதமான உத்திகளை கையாள்கிறான்... தேவர் சொல், தன் வேண்டுதல், ஆணை.

    அருமை. நன்றி.

    ReplyDelete