Saturday, July 8, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க நாடு

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க நாடு 


தந்தையின் உரை கேட்டு கானகம் சென்ற இராமனை பின் தொடர்ந்து வந்த பரதன், அரசை ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் வேண்டுகிறான். எவ்வளவோ சொல்லியும் இராமன் ஏற்றுக்  கொள்ளவில்லை. வசிட்டன் இடையிட்டு , "இராமா , நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் . இது என் ஆணை " என்று கூறுகிறான்.

"நான் என் பெற்றோர் சொல்வதை கேட்பதா, குரு சொல்வதை கேட்பதா " என்று கேள்வியை வசிட்டனிடமே விடுகிறான் இராமன்.

வசிட்டன் பாடு சங்கடமாகிவிட்டது. பெற்றோர் சொல் கேளாதே என்று குரு சொல்ல முடியாது. பின்  என்ன செய்வது.

"நான் சொன்னது தவறுதான், நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. நீ பெற்றோர் சொல்லையே கேள் " என்று வசிட்டன் சொல்லி இருக்க வேண்டும்.

 அவன் படித்த கல்வி அவனை அவ்வாறு சொல்ல விடாமல் தடுக்கிறது.

இராமன் அப்படி கேட்டவுடன் "இனிமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை " என்று எண்ணி பேசாமல் அமர்ந்து விட்டான்.

பார்த்தான் பரதன், "சரி தான், வசிட்டனும் வாய் மூடி மௌனமாகி விட்டான். இனி மேல் இராமனை யாரும் மாற்ற முடியாது " என்ற எண்ணத்திற்கு வந்து வந்தான்.

" அப்படியா சங்கதி.   சரி.  யாராவது நாட்டை  ஆண்டு கொள்ளட்டும்.  நான் இராமனோடு கானகம் போகிறேன் " என்று கூறுகிறான்.

பாடல்

முனிவனும், 'உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி' என இருந்தனன்; இளைய மைந்தனும்,
'அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு; நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய்' என்றான்

பொருள்

முனிவனும் = வசிட்ட முனிவனும்

 'உரைப்பது = இனி சொல்வதற்கு

ஓர் = ஒரு

முறைமை கண்டிலெம் = வழியும் இல்லை

இனி' = இனிமேல்

என இருந்தனன்; = என்று நினைத்து அமர்ந்து விட்டான்

இளைய மைந்தனும் = பரதனும்

அனையதேல் = அப்படியானால்

ஆள்பவர் ஆள்க நாடு; = யாரவது நாட்டை ஆண்டு கொள்ளட்டும்

நான் = நான்

பனி படர் = பனி விழும்

காடு = காட்டுக்கு

உடன் = இராமனுடன்

படர்தல் மெய்' = உடன்செல்வது உண்மை

என்றான் = என்றான்

காப்பியம் நின்று விட்டது. கதையை மேலே நகர்த்த வழி இல்லை.


இராமன் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.

பரதன் நாட்டை ஆள மாட்டேன் என்கிறான்.

வசிட்டன் வாய் மூடி மௌனமாகிவிட்டான்.

அடுத்து என்ன செய்வது ?

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாக முட்டிக் கொண்டு நிற்கிறது. ஆங்கிலத்தில் grid lock என்று சொல்லுவார்களே ,   அது போல.


இந்த சிக்கலை யார் அவிழ்ப்பது ? எப்படி அவிழ்ப்பது ?

இராமனின்  அவதார நோக்கம் நிறைவேற வேண்டும். அதே சமயம் அயோத்தி மக்களும் மன்னன் இல்லாமல் தவிக்கக் கூடாது.

இராமனும் பரதனும் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வருவதாய் இல்லை.

என்ன செய்வது ? எப்படி கதையை நகர்த்துவது ? யார் வந்தால் இந்த சிக்கல் தீரும் ? எப்படித்தான் தீரும் ?

சிந்தித்துக் கொண்டு இருங்கள்.

நாளையும் சந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_81.html

No comments:

Post a Comment