Wednesday, August 16, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொலைத்தலைய கூர்வாளி

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொலைத்தலைய கூர்வாளி 


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் தன் மனைவியோடும் , பச்சிளம் குழந்தையோடும் மதுரையில் உள்ள தன் மாமன் வீட்டுக்கு ஒரு காட்டின் வழியே வந்து கொண்டிருந்தான். அப்போது அவன் மனைவி தாகத்திற்கு நீர் கேட்டாள் . அவன் நீரை கொண்டு வரும் போது .....

என்பது வரை பார்த்தோம்.

அவன் நீரை கொண்டு வரும்போது அந்த மனைவி இருந்த ஆல மரத்தில் முன்பு யாரோ ஒரு வேடன் எய்த, சிக்கியிருந்த அம்பு காற்றில் மரத்தில் இருந்து கீழே இருந்த அந்த பெண்ணின் வயிற்றில் வந்து குத்தியது.....

மென்மையாக போய் கொண்டிருந்த கதையில் ஒரு திடீர் திருப்பம்.

கணவன் நீர் கொண்டு வரப் போனான். நீர் எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறான். அதற்குள், யாரோ எப்போதோ எய்த அம்பு ஒன்று மரத்தில் சிக்கி இருந்தது. அது ஒரு காற்று அடிக்க , மரத்தில் இருந்து நழுவி நேரே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது....

பாடல்


இலைத்தலைய பழுமரத்தின் மிசைமுன்னா ளெய்ததொரு
கொலைத்தலைய கூர்வாளி கோப்புண்டு கிடந்ததுகால்
அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த
வலைத்தலைய மானோக்கி வயிறுருவத் தைத்தன்றால்.


பொருள்

இலைத்தலைய = இலைகள் நிறைந்த

பழுமரத்தின் = பழுத்த மரத்தில்

மிசை = அசைச் சொல்

முன்னா ளெய்ததொரு = முன்னாள் எய்த ஒரு

கொலைத்தலைய = கொலை செய்வதை தொழிலாக கொண்ட

கூர்வாளி = கூர்மையான அம்பு

கோப்புண்டு = சிக்கிக் கொண்டு

கிடந்தது = கிடந்தது

கால் = காற்று

அலைத்தலைய = அலைக்கவும் (அலை, அலைத்தல்)

வீழ்ந்தும்மை = கீழே வீழ்ந்து

வினையுலப்ப = வினை முடிய (உலப்புதல் = அழிதல், முடிதல்)

வாங்கிருந்த =ஆங்கிருந்த

வலைத்தலைய = வலையில் அகப்பட்ட

மானோக்கி  = மானின் நோக்கத்தை போல உள்ள அந்தப் பெண்ணின்

வயிறுருவத் = வயிறு உருவ , வயிற்றுனுள்

தைத்தன்றால் = குத்தியது (தைத்தல் = குத்துதல்)


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

மிசை என்றால் அசைச் சொல் என்று பார்த்தோம். 

அசைச் சொல் என்றால் என்ன ?

நாம் நினைப்பதை சொல்ல வார்த்தைகள் தேவை. வார்த்தைகளை கோர்த்து வாக்கியங்கள்   அமைத்து நம் எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம். 

பாடல் எழுதும் போது அதற்கென்று இலக்கணம் இருக்கிறது. அதற்கு யாப்பிலக்கணம் என்று  பெயர். யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். 

இந்த உடம்புக்கு யாக்கை என்று பெயர். ஏன் என்றால், இது  இரத்தம், எலும்பு, தோல், தசை இவற்றைக் கொண்டு கட்டப் பட்டது. 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.

என்பார் வள்ளுவர். (மருந்து என்று ஒன்று வேண்டாம் இந்த உடம்புக்கு, எப்போது என்றால்  உண்ட உணவு நன்றாக ஜீரணமாகி விட்டது அறிந்து உண்டால்) 


ஒரு கவிஞன் தான் நினைத்ததை கவிதையில் சொல்கிறான். சொல்லி முடித்தாயிற்று. ஆனால் கவிதையின் இலக்கணம் சரியாக அமைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு வார்த்தை போட வேண்டும். சரி ஏதாவது ஒரு வார்த்தை போடலாம் என்றால் அந்த வார்த்தையின் அர்த்தம் கவிதையின் அர்த்தத்தை சிதைத்து விடக் கூடாது. 

வார்த்தையும் வேண்டும், அதே சமயம் அது கவிதையின் அர்த்தத்தை சிதைத்தும் விடக் கூடாது என்கிற போது அர்த்தம் இல்லாத வார்த்தைகள் சில  இருக்கின்றன. அவற்றிற்கு அசை சொற்கள் என்று பெயர். கேண்மியா, சொன்மியா என்றவற்றில் மியா என்பது அசைச் சொல். கேள், சொல் என்பது மட்டும் தான் அர்த்தம். 

தலைய என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது இந்தப் பாடலில். தலைய என்பது குறிப்பு பெயரெச்சம். 

எச்சம் என்றால் மீதி. 

பெயரெச்சம் என்றால், பெயரை மீதியாக கொண்டது.

அது என்ன பெயரை மீதியாக கொண்டது ?

"வந்த " என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.  வந்த என்ற அந்த சொல்லுக்குப் பின் ஒரு பெயர்தான் வர முடியும். 

வந்த பையன், வந்த மாடு, வந்த பெண் என்று தான் இருக்க முடியும்.

வந்த என்ற சொல்லுக்கு பின்னால் ஒரு வினைச் சொல் வர முடியாது.

வந்த ஓடு, வந்த நட , வந்த சாப்பிடு என்று எழுத முடியாது. அதற்கு ஒரு அர்த்தம் இல்லை. 

வந்த என்பது பெயரெச்சம். 

இந்த பெயரெச்சம் தெரிநிலை, குறிப்பு என்று இரண்டு வகைப்படும்.

குறிப்பு பெயரெச்சம் என்றால் காலத்தையோ, செயலையோ வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பை மட்டும் வெளிப்படையாகச் சொல்வது. காலம் மற்றும் செயல் குறிப்பாக பெறப்படும். வெளிப்படையாக இருக்காது. 

நேத்து அந்த மேடையில் பாடிய பெண், அழகா இருந்தாள் என்று சொல்லும் போது ...

பாடிய என்ற பெயரெச்சம் இறந்த காலத்தை காட்டுகிறது. எனவே இது தெரிநிலை பெயரெச்சம். 

சில சமயம், காலம் வெளிப்படையாக தெரியாமல், குறிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

அழகிய என்பது பெயரெச்சம். அழகிய பெண், அழகிய புறா என்று பெயரைக் கொண்டு முடியும். ஆனால் அதன் காலம் தெரியாது. 

இலக்கணம் போதுமா ?


"அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த"

உலப்ப என்றால் முடிதல். இறுதி என்று பொருள். 

இறைவன் திருவருள் முடிவில்லா ஆனந்தத்தைத் தரும் என்பார் மணிவாசகர். 

உலப்பிலா ஆனந்தமாய தேனினை சொரிந்து என்பது திருவாசகம் 


பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
    பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
    உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
    செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 


தமிழ், எங்கோ ஆரம்பித்து, எங்கோ இழுத்துக் கொண்டு போகிறது. 

வாசியுங்கள். அத்தனையும் தேன் . அள்ளிப் பருகுங்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_16.html

1 comment:

  1. படிக்க ரசிக்க அவாதான். ஆனால்அதில் உள்ள அழகை ஆழ்ந்த கருத்தை புரிந்து கொள்ள உங்கள் பதிவு இன்றிமையாயது.

    ReplyDelete