Friday, August 25, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொன்று என் பெற வல்லான்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொன்று என் பெற வல்லான் 


ஒரு புறம் மறையவன் தன்னுடைய மனைவியை வேடன் தான் கொன்றான் என்று குற்றம் சுமத்துகிறான்.

இன்னொரு புறம் , வேடனோ, தான் கொல்லவும் இல்லை, கொன்றவரை காணவும் இல்லை என்று சாதிக்கிறான்.

வேறு எந்த சாட்சியும் இல்லை.

பாண்டிய மன்னன் யோசிக்கிறான்.

"இந்த வேடனோ தண்டனைக்கு அஞ்சுபவனாய் தெரியவில்லை. அவனுடைய பேச்சு முன்னுக்கு பின் முரணாக இல்லாமல் சரியாக இருக்கிறது. ஆளைப் பார்த்தாலும் கொலை செய்தவனைப் போலத் தெரியவில்லை. எதிரியே, விலங்கோ, பறவையோ என்றால் இவன் வேட்டை ஆடியிருப்பான். இந்த அப்பாவி பெண்ணை கொன்று இவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது. கொல்ல ஒரு முகாந்திரமும் இல்லை"   என்று மன்னன் சிந்திக்கிறான்.

பாடல்

ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற 
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான் 
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த 
கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான்                                               கொலை செய்வான்.


பொருள்


ஆற்ற = பொறுத்துக் கொள்ள முடியாத

ஒறுக்கும் = தண்டிக்கும்

தண்டமும் = தண்டனைக்கும்

அஞ்சான் = (இந்த வேடன்) அச்சப் படவில்லை

அறைகின்ற = (இவன்) சொல்கின்ற


கூற்றமும் = கூற்றுகள், செய்திகள்

ஒன்றெ = ஒன்றே. முரண் இல்லாமல் ஒரே சீராக இருக்கிறது

கொன்ற குறிப்பு = கொலை செய்ததைப் போல

முகம் தோற்றான் = முகத்தைப் பார்த்தால் தோன்றவில்லை

மாற்றவரேயோ = எதிரிகளோ

மாவோ = கொடிய விலங்குகளோ

புள்ளோ = பறவையோ

வழி வந்த = வழியில் வந்த

கோல் தொடியைக் = பெண்ணை (வளையல் அணிந்த பெண்)

கொன்று = கொலை செய்து

என் பெற வல்லான் = எதை அடையப் போகிறான் ?

கொலை செய்வான் = கொலை செய்வான் (என்று மற்றவர்களால் கூறப் பட்டவன்)

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம்


"கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான்"


தொடி என்றால் வளையல். கோல் தொடி என்றால் கோலை போல நன்கு பருத்த  வளையல். நல்ல கனமான வளையல் அணிந்து இருக்கும் பெண். 

நேரடியாக அர்த்தம் கொண்டால் "வளையலை கொன்று என்ன பெறப் போகிறான்" என்று வரும். 

வளையலை எப்படி கொல்ல முடியும் ?

அங்கு தான் இலக்கணம் வருகிறது. 

எழுத்துகள் சேர்ந்து வார்த்தை வருகிறது.  சரிதானே. 

வார்த்தைகள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.  சரிதானே ?

இரண்டு வார்த்தைகளை எப்படி இணைப்பது என்பதில் இருக்கிறது  இலக்கணச் சுவை. 

இரண்டு வார்த்தைகளை இணைக்கும் போது , முதலில் வரும் வார்த்தைக்கு நிலை  மொழி என்று பெயர். அதனோடு வந்து சேரும் வார்த்தைக்கு வரு மொழி என்று பெயர். 

இராமன் வந்தான் 

என்பதில் இராமன் என்பது நிலை மொழி. வந்தான் என்பது வரு மொழி. 

புரிகிறது தானே. சிக்கல் இல்லையே ?

அடுத்த கட்டத்துக்கு போவோம். 

இப்படி நிலை மொழியும், வரு மொழியும் சேரும் போது நடுவில் சில வார்த்தைகளை  போடுவோம். இரண்டு பொருளை ஓட்ட வைக்க வேண்டும் என்றால் பசை வேண்டும் அல்லவா அது போல. 

அந்த பசைக்குப் பெயர் "வேற்றுமை உருபு"

உருபு என்றால் சொல் என்று வைத்துக் கொள்ளுங்கள். 

தமிழில் ஆறு வேற்றுமை உருபுகள் இருக்கிறது. அவை 

ஐ (இரண்டாம் வேற்றுமை உருபு)
ஆல் (மூன்றாம்)
கு (நான்காம்) 
இன் (ஐந்து)
அது (ஆறாம்)
கண் (ஏழாம்)

முதலாம் வேற்றுமை கிடையாது. அதற்கு விளி வேற்றுமை என்று பெயர். அதை விட்டு விடுவோம். 

பால் குடித்தான் என்பது பாலைக் குடித்தான் (ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு  வந்துள்ளது) 

அணுக் குண்டு என்பது அணுவால் ஆன குண்டு (ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு) 

இப்படி வேற்றுமை உருபு வந்து நிலை மொழியையும் வரு மொழியையும் சேர்த்து வைக்கும். 

இந்த வேற்றுமை உருபு சில சமயம் வெளிப்படையாக வரும்.  சில சமயம் மறைந்து இருக்கும். 

வெளிப்படையாக வந்தால் அது தொகா நிலைத் தொடர் என்று பெயர். 

மறைந்து (தொக்கி) வந்தால் அதற்கு தொகை நிலைத் தொடர் என்று பெயர். 

பாலக் குடித்தான் என்பதில் ஐ என்ற வேற்றுமை உருபு வெளிப்ப்டையாக வந்து உள்ளது. எது தொகா நிலைத் தொடர். 

பால் குடித்தான் என்பதில் ஐ என்ற வேற்றுமை உருபு தொக்கி (மறைந்து) வந்துள்ளது. 

சில சமயம் , இந்த வேற்றுமை உருபுகள் நிலை மொழியையும் வரு மொழியையும் சேர்ப்பதோடு அல்லாமல் , சேர்த்த பிறகு அந்த இரண்டு சொற்களையும் கடந்து இன்னொரு சொல்லை சுட்டிக் காட்டும். அதற்கு அன்மொழித் தொகை என்று பெயர். 

அல் + மொழி = அல்லாத மொழி.

வீட்டில் அம்மா , "தம்பி , யாரோ அழைப்பு மணி அடித்திருக்கிறார்கள். யாருனு கொஞ்சம் பாரு " என்று மகனிடம் சொல்வாள். 

மகன் கதவை திறந்து பார்த்து விட்டு "அம்மா பால் வந்திருக்கு" என்பான். 

வந்தது பால் அல்ல. பாலை கொண்டு வரும் ஆள் வந்திருப்பார். 

பால் + வந்திருக்கு   = பாலை கொண்டு வரும் ஆள் 

இங்கே நடுவில் வந்த ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு , பாலைக் குறிக்கவில்லை, வந்த செயலை குறிக்கவில்லை. அந்த பாலைக் கொண்டு வந்த ஆளை குறிக்கிறது அல்லவா . அதற்கு

"வேற்றுமைத் தொகை புறத்து பிறந்த அன்மொழித் தொகை " என்று பெயர். 

ரொம்ப பெரிய வாக்கியம்தான்...:)

இங்கே 

கோல் தொடி என்றால் , கோலைப் போன்ற தடித்த வளையலை அணிந்த பெண் என்று பொருள். 

அது கோலையும் குறிக்கவில்லை. 
வளையலையும் குறிக்கவில்லை.

அந்த வளையலை அணிந்த பெண்ணை குறிக்கும். 

அப்பாட , ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டோம். 


இலக்கணம் படிக்க படிக்க , இலக்கணமும் சுவைக்கும், இலக்கியமும் சுவைக்கும். 

ரொம்ப bore அடித்தால் சொல்லுங்கள். குறைத்துக் கொள்கிறேன். 

No comments:

Post a Comment