Thursday, February 15, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருச்சேறை - கூரைக்கும் சோற்றுக்கும் கூறாதே

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருச்சேறை - கூரைக்கும் சோற்றுக்கும் கூறாதே 


நமது வாழ்நாளில் பெரும் பகுதி பொருள் திரட்டவே போய் விடுகிறது. முன்பெல்லாம் ஆண்கள் தான் பொருள் தேடி அலைந்தார்கள். இப்போது பெண்களும். பெண்கள் நேரடியாக பொருள் தேடாவிட்டாலும், அந்த தேடலுக்கு பெரும் உதவி செய்கிறார்கள். எனவே, ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை பணம் சம்பாதிப்பதிலேயே கழித்து விடுகிறார்கள்.

சரி. பொருள் வேண்டும் தானே. சாப்பிடணும், உடை, உறை , மருத்துவம், பிள்ளைகள் படிப்பு இதுக்கெல்லாம் பணம் வேண்டாமா ?

வேண்டும் தான். வேலை செய்யத்தான் வேண்டும். ஆனால், வேலை மட்டும் செய்தால் போதுமா ? மேல் அதிகாரியை வணங்க வேண்டும்.  அவர் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு சண்டை பிடிக்கக் கூடாது. கீழே வேலை செய்பவர்களை அணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இப்படி பலப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இதுதானா வாழ்க்கை ? பல் இளிப்பதும் , பணம் சம்பாதிப்பதும் மட்டும் தானா வாழ்க்கை?

"உன் நேரத்தை, திறமையை பணம் சம்பாதிக்க வேண்டி செல்வர்கள் வீட்டு வாசலில் பழியாக கிடக்காதே. அதை இறை தேடவும் செலவழி என்கிறார்" பிள்ளை பெருமாள் ஐயங்கார்.


பாடல்

சென்றுசென்றுசெல்வஞ்செருக்குவார்வாயிறொறு
நின்றுநின்றுதூங்குமடநெஞ்சமே - யின்றமிழைக்
கூறைக்குஞ்சோற்றுக்குங்கூறாதே பேறாகச்
சேறைக்குநாயகன்பேர்செப்பு.


பொருள்


சென்று சென்று = ஒவ்வொரு இடமாகச் சென்று

செல்வம் = பணம் , பொருள்

செருக்குவார் = ஆணவம் கொண்டோர்

வாயில் தொரும் = வாசல் படி எல்லாம்

நின்று நின்று = நின்று நின்று

தூங்கு = காத்து கிட

மட நெஞ்சமே = மட நெஞ்சமே

இன்தமிழை = இனிமையான தமிழை

கூரைக்கும் = வீட்டுக்கும்

சோற்றுக்கும் = சோற்றுக்கும்

கூறாதே = கூறாமல்

பேறாக = பெரும் பேறு தரும்

சேறை = திருச் சேறை

நாயகன் = நாயகனாக விளங்கும்

பேர் = நாமத்தை

செப்பு = கூறு


சரி, இந்த ஊருக்கு சேறை என்று ஏன் பெயர் வந்தது ?

ஊழிக் காலத்தில், உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி போய் விட்டதாம். எது போனாலும் போகட்டும், வேதங்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த  ப்ரம்ம தேவர், ஒரு பெரிய பானை செய்து, அதற்குள் இந்த வேதங்கள் எழுதப் பட்ட ஓலை சுவடிகளை வைத்து விடலாம் என்று எண்ணினார். பானை செய்ய பல  இடங்களில் மண் எடுத்தார். பானை சரியாக வரவில்லை. கடைசியில்  இந்த இடத்தில் எடுத்த சேறு (மண்) தான் சரியாக வந்ததாம். எனவே, இந்த இடம் சேறை அல்லது திருச் சேறை என்று அழைக்கப்பட்டது.




இந்த ஒரு தலத்தில் தான் பெருமாள் ஐந்து தேவிகளோடு காட்சி தருகிறார். வேறு எங்கும் இப்படி ஒரு காட்சி கிடையாது. ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி என்ற ஐந்து தேவிகளோடு காட்சி தருகிறார்.

பைவிரியும் வரியரவில் படுகடலுள்
          துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே
          என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம் பெருமான்
          திருவடியைச் சிந்தித் தேற்கு, என்
ஐ யறிவும் கொண்டானுக் காளாணார்க்
          காளாமென் அன்பு தானே (1584)
                        பெரியதிருமொழி 7-4-7

இந்த ஊர் எங்கே இருக்கிறது ?

கும்பகோணம், திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது. நாச்சியார் கோவிலுக்குப் பக்கம்.

இன்னும் கொஞ்சம் சிறப்புகள் உண்டு. நேரில் போய் பாருங்கள். கொஞ்சம் சுவாரசியம்  இருக்கட்டும்.

சரிதானே !

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_15.html


1 comment:

  1. அந்தக் காலத்துப் பல் இளிப்புக்கும், இன்றைய இளிப்புக்கும் ஒரு வேறுபாடும் இல்லை! நினைத்தால் புன்னகை வருகிறது.

    ReplyDelete