Thursday, February 15, 2018

கம்ப இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செய்வது புகல்தி

கம்ப இராமாயணம் - மாரீசன் அறிவுரை - செய்வது புகல்தி 


இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தான் மாரீசன். இராவணன் கேட்பவனாகத் தெரியவில்லை.

காமம் ஒரு பக்கம். கோபம் மறு பக்கம். அவன் அறிவை மழுங்க அடித்தது.

மாரீசனை  கோபித்து ஏசுகிறான்.

கடைசியில் மாரீசன் தளர்ந்து போய்

"உன் நன்மைக்காக சொன்னேன். எனக்கு அழிவு வரும் என்று நினைத்து பயந்து அல்ல நான் சொன்னது. அழிவு வரும் காலத்தில், நல்லது சொன்னாலும் கெட்டது போலத்  தெரியும். தீய வழியில் செல்பவனே , நான் என்ன செய்ய வேண்டும் சொல் " என்றான்.

பாடல்

*
உன்வயின் உறுதி நோக்கி, உண்மையின் 
     உணர்த்தினேன்; மற்று, 
என்வயின் இறுதி நோக்கி, அச்சத்தால் 
     இசைத்தேன் அல்லேன்;
நன்மையும் தீமை அன்றே, நாசம் 
     வந்து உற்ற போது? 
புன்மையின் நின்ற நீராய்! 
     செய்வது புகல்தி' என்றான்.
*


பொருள்

உன்வயின் உறுதி நோக்கி = உன் அழிவை நினைத்து

உண்மையின் உணர்த்தினேன் = உண்மையை உணர்த்தினேன்

மற்று = மற்றபடி

என்வயின் இறுதி நோக்கி = என் அழிவை நினைத்து

அச்சத்தால் = பயத்தால்

இசைத்தேன் அல்லேன் = சொல்லவில்லை

நன்மையும் = நல்லது கூட

தீமை அன்றே = தீமை போல தெரியும் அல்லவா ?

நாசம் வந்து உற்ற போது? = நாசம் வந்தபோது

புன்மையின் நின்ற நீராய்! = தீய வழியில் செல்பவனே

செய்வது புகல்தி' என்றான் = நான் என்ன செய்ய வேண்டும் சொல் என்றான்.

உன்னிப்பாக கவனிக்க வேண்டியது, நமக்கு மற்றவர்கள் சொல்வது எரிச்சலும் கோபமும் தந்தால், ஒரு நிமிடம் நிதானமாக யோசிக்க வேண்டும்.  ஏன் கோபம் வருகிறது? ஏன் எரிச்சல் வருகிறது. சொன்னதில் நமக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா என்று.

மாரீசன் அவ்வளவு நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னான்.

இராவணன் மண்டையில் ஏறவே இல்லை. ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து இருந்தால், மிகப் பெரிய அழிவில் இருந்து தப்பி இருக்கலாம்.

காமம் கண்ணை மறைத்தது.

சிந்தனையில் தெளிவு வேண்டும்.

ஆயிரம் புத்தகம் படிக்கலாம். ஆயிரம் சொற் பொழிவு கேட்கலாம். மனதில் அழுக்கு இருந்தால், நல்லவை எதுவும் உள்ளே போகாது.

இராவணன் படிக்காத புத்தகமா ? கேட்காத அறிவுரையா? மாரீசன் வரை சொல்லிப் பார்த்தாகி விட்டது.

எனக்கு வேண்டியது சீதை என்று இராவணன் பிடிவாதமாக இருந்தான்.

இராவணனை விடுங்கள்.நடந்து முடிந்த கதை.

நம் கதையைப் பார்ப்போம்.

எவ்வளவு வாசிக்கிறோம். எவ்வளவு கேட்கிறோம். வாசித்தது, கேட்டது படி நடக்கிறோமா ? ஏதேதோ சாக்கு போக்கி சொல்லி, நாம் நினைத்தபடி தான் வாழ்கிறோம்.

அதெல்லாம் சரிப்படாது, நடை முறைக்கு ஒத்து வராது, practical இல்லை, என்று மெத்த படித்த மேதாவிகள் போல அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு நம் வழியில் சென்று விடுகிறோம்.

நமக்கு இராவணனுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா ?

அவனுக்கு சீதை, நமக்கு வேறு ஏதோ ஒன்று.

பொருள் தான் மாறுகிறதே தவிர, செயல் , மனம் எல்லாம் ஒன்று தான்.

அற நூல்களை கற்றும் கேட்டும் அதன் படி நடக்காமல் இருப்பது அரக்க குணம்.

நல்லவைகளை ஒதுக்காதீர்க்கள்.

அவற்றை வாழ்வோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை சிறக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/02/blog-post_46.html




1 comment:

  1. வால்மீகி ராமாய்ணத்தில், ராவணன் கடைசியாக மாரீசனிடம், 'இது ராஜ கட்டளை' என்று சொன்னவுடன், 'அரசாணையை மீறுவது பிரஜைக்கு தர்மமல்ல' என்பதால் மாரீசன் ஒன்றும் பேசமுடியவில்லை என்று வால்மீகி கூறுகிறார்

    ReplyDelete