Wednesday, December 5, 2012

இராமயாணம் - பணம் வந்தால் குணம் மாறும்


இராமயாணம் - பணம் வந்தால் குணம் மாறும் 


கூனி, கைகேயின் மனத்தை கலைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறாள். இராமனை பெற்ற எனக்கு என்ன துன்பம் வரும் என்று பதில் கேள்வி கேட்டால் கைகேயி. 

கூனியின் வாயிலாக கம்பன் ஒரு மிகப் பெரிய உண்மையை எடுத்து வைக்கிறான். 

"அடியே கைகேயி, இராமன் இன்று நல்லவனாய் இருக்கலாம். ஆனால் நாளை செல்வம் (நாடு) வந்தபின் அப்படியே இருப்பானா என்று கேள்வி எழுப்புகிறாள். அற வழியில் நிற்கும் தவ சீலர்கள் கூட செல்வம் வந்த பின் மாறி விடுவார்கள். உன்னை இன்று வீரத்தின் பாற்பட்ட நெறியின் காரணமாக கொல்லாமல் விட்டாலும், நாளை உனக்கு மன உலைச்சைளை சந்து நீயே உன்னை மாய்த்துக் கொள்ளும்படி செய்து விடுவான்"

என்று கூறினாள்.

பாடல் 

Tuesday, December 4, 2012

தேவாரம் - அவன் பாதம் சேர்


தேவாரம் - அவன் பாதம் சேர் 


தாத்தாவுக்கு வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. பேரன் பேத்திகள் எல்லாம் சுத்தி நிற்கிறார்கள். மகன்களும் மகள்களும் வந்து இருக்கிறார்கள். பாட்டி முன்னாலேயே போய் சேர்ந்து விட்டாள். மகள் மடியில் தலை வைத்து படுத்து இருக்கிறார். இன்னொரு மகளிடம் "பசிக்குது...கொஞ்சம் கஞ்சி கொண்டு வா " என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி இருந்த அப்பா / தாத்தா இப்ப இப்படி ஆகி விட்டாரே என்று வருந்துகிறார்கள். 

அப்படி ஒரு காலம் வரும் முன்னே திரு துருத்தி என்ற ஊரில் உள்ள சிவனின் பாதம் சேர் என்கிறார் நாவுக்கரசர்....

பாடல் 

இராமாயணம் - இராமனுக்கு முடியும், கோசலையின் துயரும்


இராமாயணம் - இராமனுக்கு முடியும், கோசலையின் துயரும் 


மகன் உள்ள எந்த பெண்ணிடமும் கேட்டுப் பாருங்கள்....உனக்கு கணவன் பிடிக்குமா, மகன் பிடிக்குமா என்று. 

என்ன சொல்லுவாள் ? இருவரையும் பிடிக்கும் என்பாள். 

யார் ரொம்ப பிடிக்கும் என்று கேட்டால், மௌனம் தான் பதிலாக இருக்கும். 

சரி, அடுத்த கேள்வி, கணவனுக்கு ஒரு இழப்பு ஏற்பட்டால், மகனுக்கு ஒரு நன்மை கிடைக்கும் என்றால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டால் என்ன பதில் வரும் ?  

மகனுக்கு நன்மை என்றால் மகிழ்ச்சிதான் ...ஆனால் கணவனுக்கு ஒரு இழப்பு என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தவிப்பாள்.

அதை அப்புறம் பார்ப்போம்.....


கடல் பார்த்து இருக்குறீர்களா ? எவ்வளவு தண்ணி. எப்படி அவ்வளவு தண்ணியும் ஒரே அளவில் எப்போதும் இருக்கிறது ? இவ்வளவு தண்ணீர் கொண்ட கடல் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு இந்த நிலத்தை மூழ்க அடிக்க எவ்வளவு நேரம் ஆகும் ? எது அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறது ?

நமது புராணங்களில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு நம்பிக்கை.

கடல் நடுவே வடவாக்கினி (வடல் + அக்கினி) ஒன்று இருக்கிறது. கடல் நீரின் அளவு அதிகமாகும் போது வடவை  கனல் அதிகப்படியான நீரை வற்றச் செய்துவிடும். ஊழி காலத்தில் வடவை கனல் மிகப் பெரிதாக உருவெடுத்து அத்தனை கடலையும் வற்ற வைத்துவிடும் என்பது நம்பிக்கை. 

அது அப்படியே இருக்கட்டும். 

கதைக்கு வருவோம். 

இராமன் முடி சூட்டுவதில் கோசலைக்கு இன்பம் தான் என்றாலும் ஒரு சின்ன துன்பம் என்றேன். அதில் அவளுக்கு என்ன துன்பம் இருக்கும் ?

இராமனுக்கு முடி சூட்டுவது என்றால் அந்த முடி தசரதன் தலையில் இருந்து இறங்க வேண்டும். தசரதன் முடி துறந்தால் தான் இராமன் முடி சூட முடியும்.

இராமனுக்கு முடி என்று கேட்ட கோசலை இன்பம், மகிழ்ச்சி கடல் மாதிரி இருந்ததாம். 

உடனே நினைத்துப் பார்க்கிறாள், இராமன் முடி சூட வேண்டுமானால் தசரதன் முடி துறக்க வேண்டுமே என்று நினைக்கிறாள். அப்படி நினைத்தவுடன் அவளின் சந்தோஷக் கடல் வடவைக் கனல் எழுந்து கடலை வற்ற வைப்பது மாதிரி  வற்றிப் போய் விட்டது. 

இராமனுக்கு முடி - மகிழ்ச்சிக் கடல்
தசரதன் முடி துறத்தல் - மகிழ்சிக் கடலை வற்றவைக்கும் வடவைக் கனல்.

எவ்வளவு நுணுக்கமாக கம்பன் யோசித்து எழுதி இருக்கிறான்....

பாடல்

Monday, December 3, 2012

ஆத்திசூடி - ஈவது விலக்கேல்


ஆத்திசூடி - ஈவது விலக்கேல்


அவ்வையார்: வள்ளுவரே, ஒருவர் தானம் செய்யும் போது அதை தடுத்து நிறுத்தும் ஆட்களை பற்றி நீங்கள் ஏதாவது குறள் எழுதி இருக்கிறீர்களா?

வள்ளுவர்: என்ன அப்படி கேட்டு விட்டீர்கள்...இதோ நான் எழுதிய குறள் 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் 
உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

ஔவ்: இதையே இன்னும் கொஞ்சம் சுருக்கமாக சொல்ல முடியுமா ?

வ: இதை விட எப்படி சுருக்க முடியும் ? இருப்பதே ஏழு வார்த்தை...

ஔவ்: முடியும்...இதைப் பாருங்கள்...

ஈவது விலக்கேல் 

ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதை நீ இடையில் சென்று விலக்காதே. 

இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம்...

ஈவது என்பது ஒரு நல்ல குணம். அதை விட்டு நீ விலகி விடாதே. அந்த குணத்தை நீ விலக்கி வைக்காதே. 

ஈவது விலக்கேல். 

இராமாயணம் - வயிற்றில் அடக்கியவனை வயிற்றில் அடக்கியவள்


இராமாயணம் - வயிற்றில் அடக்கியவனை வயிற்றில் அடக்கியவள்


இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது. கோசலைக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. எல்லோருக்கும் தானம் தர்மம் எல்லாம் செய்தாள். பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள். 

பிராரர்த்தனை  செய்தது யார் ?

இந்த அகிலத்தை எல்லாம் தன் வயிற்றில் அடக்கிய திருமாலை தன் வயிற்றில் அடக்கியவள்.

அவளின் தவம் தான் எத்துணை சிறந்தது ?

பாடல்

அபிராமி அந்தாதி - நீ துன்பம் தந்தாலும் உன்னை வாழ்த்துவனே


அபிராமி அந்தாதி - நீ துன்பம் தந்தாலும் உன்னை வாழ்த்துவனே 


 எவ்வளவோ நல்லது கேட்டது எல்லாம் எடுத்துச் சொன்னாலும், தாம் தவறு செய்யாமல் இருப்பதில்லை. அப்பப்ப ஏதாவது தவறு செய்து கொண்டுதான் இருக்கிறோம்...

தெரிந்து கொஞ்சம், தெரியாமல் மிச்சம் என்று பிழைகள் செய்வது நமது பிழைப்பாய் இருக்கிறது...

அதற்காக, அபிராமி என்னை கை விட்டு விட்டாதே...சிறியோர் செய்யும் சிறு பிழைகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை அல்லவா..இது ஒண்ணும் புதுசு இல்லையே...அந்த பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை உன் கணவன் சிவன் அள்ளி உண்டான்...அந்த நஞ்சையே நீ அவன் கழுத்தில் நிறுத்தி அவனை காத்தாய்...அவ்வளவு பெரிய ஆலகால விஷத்தின் தன்மையையே நீ மாற்ற வல்லவள் ... நான் செய்யும் சிறு பிழைகள் எம்மாத்திரம் உனக்கு....

அப்படியே நீ எனக்கு பிடிக்காத விஷயங்களை செய்தாலும்...நான் உன்னை கோவிக்க மாட்டேன் ...ஏன் என்றால் எனக்கு எது நல்லது கெட்டது என்று உனக்குத் தெரியாதா ?

பாடல் 

Saturday, December 1, 2012

ஆத்திசூடி - அறம் செய்ய விரும்பு


ஆத்திசூடி - அறம் செய்ய விரும்பு


அது என்ன அறம் செய்ய "விரும்பு". 

அறம் செய் என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம் தானே. 

அது என்ன விரும்பு ? விரும்பினால் மட்டும் போதுமா ? அறம் "செய்ய" வேண்டாமா ?

உங்களுக்கு மிக விருப்பமான செயல் எது ? 

இசை, இலக்கியம், வித விதமான உணவு வகைகளை சமைப்பது/உண்பது, புது புது இடங்களை சென்று பார்ப்பது, வித விதமான உடைகளை அணிவது என்று ஏதோ ஒன்றில் விருப்பம் இருக்கும்.

நமக்கு விருப்பமான ஒன்று என்றால் அதற்காக நாம் நம் நேரத்தை செலவு செய்வோம், பணத்தை செலவு செய்வோம், அதை பற்றி நம் நண்பர்களிடம் பெருமையாக சொல்வோம்...எவ்வளவு அதில் மூழ்கி இருந்தாலும் இன்னும் இன்னும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். 

மேலும் மேலும் அதில் புதிதாக என்ன இருக்கிறது என்று ஆராய்வோம். புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே, புது டிசைனில் சேலை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்....

எது நமக்கு விருப்பமானதோ அது நம் சிந்தனையையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டே இருக்கும். 

நமக்கு விருப்பமான செயலை செய்வதில் நமக்கு ஒரு வருத்தமோ பளுவோ தெரியாது...மகிழ்ச்சியாக செய்வோம்...

எனவே, அவ்வை பாட்டி சொன்னாள் ...அறம் செய்ய விரும்பு என்று.

விரும்பினால், மகிழ்ச்சியாக அறம் செய்வோம், மீண்டும் மீண்டும் செய்வோம், தேடி தேடி போய் செய்வோம்...

அறம் செய் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஏதோ வருடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் செய்துவிட்டு, அவ்வை சொன்ன மாதிரி அறம் செய்து விட்டேன் என்று முடித்துக் கொள்வோம்....


அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல...அற  வழியில் நிற்றல் என்றால் ஒழுங்கான,தர்ம வழியில் நிற்றல் என்று பொருள். அற  வழியில் நிற்க விருப்பப் பட வேண்டும். 

எனவே ... அறம் செய்ய விரும்புங்கள்