Friday, July 5, 2013

திருக்குறள் - புறங் கூறாமை

திருக்குறள் - புறங் கூறாமை 



புறங் கூறாமை என்றால் ஒருவரைப் பற்றி, அவர் இல்லாத போது தவறாகப் பேசுவது.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்.

என்ன அர்த்தம் ?

கண்ணின்று = கண்ணின் முன்னால் நின்று

கண்ணறச் = கண்ணோட்டாம் (அருள், அல்லது அன்பு ) இல்லாமல் = கண்+அற 

சொல்லினுஞ் = சொல்லக் கூடாது, அப்படியே சொன்னாலும்

 சொல்லற்க  = சொல்லக் கூடாது. எதை ?

முன்னின்று பின்நோக்காச் சொல் = ஒருவரை முன்னே விட்டு பின்னால் பேசுவது

அதாவது, முகத்திற்கு நேரா எவ்வளவு கொடுமையான சொல் கூட சொல்லிவிடலாம், ஆனால் முதுகுக்குப் பின்னால் ஒன்றும் சொல்லக் கூடாது.

இது நம் பாட நூல் பொழிப்புரை.

அதையும் தாண்டி சற்று ஆழமாக சிந்திக்கலாம்...

கண்ணை பிடுங்குவது எவ்வளவு கொடுமையான செயல் . எவ்வவளவு வலி தரக்  கூடியது ? பிடுங்கும் போது மட்டும் அல்ல, அதற்குப் பின்னும் கண்ணில்லாத வாழ்க்கை எவ்வளவு துன்பகரமானது ?

அந்த அளவுக்கு வலியும் துன்பமும் தரும் சொற்களைச் ஒருவரின் முகத்திருக்கு நேராக சொன்னால் கூடப் பரவாயில்லை, ஆனால் ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி  இல்லாததும் பொல்லாததும் சொல்லக் கூடாது.

இது ஒரு அர்த்தம்.

இன்னும் சற்று ஆழமாக சிந்திப்போம்..

அது என்ன பின் நோக்காச் சொல் ?

பின் நோக்காச் சொல் என்றால், பின்னால் சொல்லுவது முதுகுக்குப் பின்னால் சொல்லுவது என்று பொருள்  சொல்கிறார்கள்.

பின் நோக்காச் சொல் என்றால் பின்னால் வருவதை அறியாமல் சொல்லுவது.

யாரிடம் என்ன பேசுகிறோம், இது பின்னால் எப்படி மாறும் என்று அறியாமல் பேசுவது.

இன்று ஒருவரிடம் மற்ற ஒருவரைப் பற்றி ஏதோ தீயதாய் சொல்லி விடுகிறோம் . நாளையே அவர்கள் நண்பர்களாக ஆகி விடலாம். அந்த சமயத்தில் , நாம் இப்போது சொன்னது நமக்கு எதிராகப் போய் விடலாம்.

அது பின்நோக்காச் சொல்.

அண்ணன் தம்பிக்குள் சண்டை , கணவன் மனைவிக்குள் சச்சரவு, நண்பர்களுக்குள் பகை , வேலை செய்யும் இடத்தில் ஊழியர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு.....இவை எல்லாம் நிகழ்வது இயற்க்கை. நாம் நடுவில் போய் ஏதாவது சொல்ல, அது பின்னால் நமக்கு எதிராய் திரும்பி விடும்  ஆபத்து உண்டு.

எனவே, பேசுவதற்கு முன் அதன் பின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்று  ஆராய்ந்து பின் பேச வேண்டும்.

இது இன்னொரு அர்த்தம்.


மற்றொரு அர்த்தமும் சொல்லலாம்.

முன்னின்று பின் நோக்காச் சொல் என்றால் பின்னால் ஒருவரை நேருக்கு நேர் நோக்கி பேச முடியாமல் செய்யும் சொற்கள்.

அவசரத்தில், கோபத்தில், ஆத்திரத்தில் ஒருவரைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசி விடலாம். பின்னால் அவரை வேறு எங்காவது காண நேர்ந்தால், "ச்சே, அன்று அப்படி பேசி விட்டோமே...இப்ப எப்படி அவர் முன்னால போய் நிக்கிறது " என்று அவரைப் பார்பதை தவிர்ப்போம்.

முன்னால் அவர் முன் நின்று பேசினோம். பின்னால் அவரைப் நோக்கி பேச முடியவில்லை. அது பின்  நோக்காச் சொல்.

பேசும் போது பின்னால் அவரை நேருக்கு நேர் பார்க்க வேண்டி வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பின் பேச வேண்டும்.

பேசு முன் யோசியுங்கள்.

மற்றவைகளைப் பற்றி எப்போதும் நல்லதையே பேசுங்கள். இந்தச் சிக்கல் எதுவும் வராது.

யாரைப் பற்றியும் எப்போதும் தீயதாய் எதையும் சொல்லாதீர்கள் - அது   உண்மையாகவே  இருந்தால் கூட. யார், எதை எப்படி திரித்து சொல்லுவார்களோ ?

நல்லதையே பேசி விட்டுப் போவோமே ?

சரிதானே ?






Thursday, July 4, 2013

குழைத்த பத்து - நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு

குழைத்த பத்து - நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு 




நாம் செய்யும் நல்லது கெட்டதுகளை எல்லாம் அந்த ஆண்டவன் அறிவான். நாம் செய்யும் நல் வினை தீ வினைகளுக்கு ஏற்ப அவன் நமக்கு பலன் அளிப்பான்.

மாணிக்க வாசகர் பார்த்தார்....

முதலில் நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியாது. தெரிந்தாலும், இந்த பாழாய் போன மனம் நல்லதை விடுத்து கெட்டதின் பின்னே போகிறது.

நல்லது எது, கெட்டது எது என்று அறிந்து, மனதை கட்டுப் படுத்தி அல்லவை விலக்கி நல்லதை மட்டும் செய்வது என்பது நடக்காத காரியம் என்று புரிந்து கொண்டார்.

எனவே, சிவனிடம் அவர் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்...."இறைவா, இந்த நல்லது கெட்டது கணக்கு எல்லாம் நீ தான் எழுதி வைத்து இருக்கிறாய். ஒண்ணு செய், நான் செய்த கெட்டதை எல்லாம் நல்லதுன்னு கணக்கை மாத்தி எழுதிரு. உன்னை யார் கேட்கப் போகிறார்கள். நீ எழுதினது தான் கணக்கு....அப்படி கணக்கை மாத்தி எழுதினதுனால உனக்கு ஒரு நட்டமும் இல்லை....எப்படி நம்ம ஐடியா "

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்கிறார் மணிவாசகர்.

இறைவன் அருளைப் பெறுவது என்பது ஏதோ வாழ்வில் ஒரு முறை நடக்கும் செயல் அல்ல. ஏதோ வந்தாரு, அருள் தந்துவிட்டு போய் விட்டாரு என்று நடப்பது அல்ல. இறைவனின் அருள் மீண்டும் மீண்டும் வேண்டும். ஒரு தடவை அவன் அருள் கிடைத்தால் மீண்டும் மீண்டும் கிடைக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் அல்ல.

குழந்தை பசித்து தாயின் அருள் வேண்டி அழுகிறது. அவளும் பால் தந்து  குழந்தையின்  பசியைப் போக்குகிறாள். மீண்டும் பசி வரும். மற்றவள் தன் அருள்  நினைந்தே அழும் குழவி அது போல் ஆனேனே என்று குலசேகர ஆழ்வார் கூறியதைப் போல


பாடல்


ஒன்றும் போதா நாயேனை
    உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான்
    ஏழை பங்கா எம்கோவே
குன்றே அனைய குற்றங்கள்
    குணமாம் என்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய்
    எண்தோள் முக்கண் எம்மானே.  

பொருள்


திருக்குறள் - அன்பு, உடல், உயிர்

திருக்குறள் - அன்பு, உடல், உயிர் 



அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.

அன்போடு சேர்ந்த நெறி என்பது உயிருக்கு எலும்போடு கொண்ட தொடர்பு போன்றது. 

ஏதாவது புரியுதா ? 

என்னமோ , அன்பு - எலும்பு என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இருக்கிற மாதிரி இருக்குல ?

மற்றவர்கள் என்ன அர்த்தம் சொல்கிறார்கள் என்று பார்ப்போம் 


உயிரும்  உடலும்போல்  அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த
பொருத்தமாகும் - இது கலைஞர் கருணாநிதி உரை 

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர். - இது மு. வ எழுதிய உரை. 

நாமும் கொஞ்சம் சிந்திப்போம்.

வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் உயிரை விட யாரும் அவ்வளவு எளிதில் நினைப்பது இல்லை. சிறை, சித்தரவதை, தாங்க முடியாத துக்கம் என்று எது வந்தாலும்,  இந்த உடலுக்கு உயிரின் மேல் உள்ள ஆசை போவது இல்லை. 

உயிரும் உடலை அவ்வளவு எளிதில் விடுவது இல்லை. 

வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லா உயிர்களிடத்திலும் மேலோங்கி இருக்கிறது. 

ஹிட்லர் அப்பாவி மக்களை எப்படி எப்படி எல்லாமோ துன்பப் படுத்தினான். மக்கள் அதையும் சகித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தார்கள். 

உயிராசை. உயிர் பற்று அவ்வளவு ஆழமானது. எந்த காலத்திலும் விடாது. 

நூறு வயது ஆன பாட்டிக்கோ, தாத்தாவுக்கோ கூட சாவதில் விருப்பம் இருப்பது இல்லை. 

கால காலத்தில் போய் சேர வேண்டும் என்று வாய் சொல்லும், கொஞ்சம் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருந்தால் கூட ஊரை கூட்டி விடுவார்கள். ஆஸ்பத்திரி,  மருந்து, உணவு, அது இது என்று பக்குவமாக இருப்பார்கள். 

போக மனசு வராது.

எப்படி இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு வலுவாய் இருக்கிறதோ, நம் வாழ்க்கையில் அன்பின் பிடிப்பு அவ்வளவு வலுவாய் இருக்க வேண்டும். 

இப்போது குறளை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.


அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.


கொஞ்சம் சீர்களை இடம் மாத்திப் போடுவோம் ....

ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்ப 
அன்போடு இயைந்த வழக்கு 

வழக்கு என்றால் நெறி, வழி 

அன்போடு இயைந்த வழக்கு என்றால் அன்போடு சேர்ந்து அல்லது இணைந்த நெறி அல்லது வழி. 

அன்போடு நாம் செல்லும் வழி எப்படி பட்டதாய் இருக்க வேண்டும் என்றால் ஆருயிர்க்கு  எலும்போடு இயைந்ததைப் போல இருக்க வேண்டுமாம்.

வாழ்வில் எந்த வழியில் சென்றாலும் அன்பை விடக் கூடாது. கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.  என்ன வந்தாலும் அன்பை விடக் கூடாது. எவ்வளவு கெட்டியாக என்றால் இந்த உடலும் உயிரும் எவ்வளவு கெட்டியாக  ஒன்றை ஒன்று  கட்டிப் பிடித்திருக்கிறதோ அப்படி.

உயிர், இந்த உடலை விட்டு விட்டால் உயிருக்கும் மதிப்பு இல்லை, உடலுக்கும் மதிப்பு   இல்லை. 


அது போல அன்பை விட்டு விட்டால், அன்புக்கும் மதிப்பு இல்லை, நாம் வாழும் வாழ்க்கைக்கும்   அர்த்தம் இல்லாமல் போகும்.

இது எனக்கு தோன்றிய அர்த்தம். இலக்கணப் படி சரியாக வருமா அல்லது வராதா என்று தெரியாது. 

கவிதை இலக்கணத்தை தாண்டியது என்பது என் எண்ணம். 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Wednesday, July 3, 2013

திருக்குறள் - நட்பு

திருக்குறள் - நட்பு


திருக்குறள் படிப்பது அதற்கு புதுப் புது அர்த்தங்கள் சொல்லுவதற்காக அல்ல.


திருக்குறள் நமக்கு வாழ்க்கையில் பயன் பட வேண்டும், வழி காட்ட வேண்டும், நம்மை உயர்ந்தவர்களாக ஆக்க வேண்டும்.

ஹா..இதில் என்ன நுணுக்கமான, புதுமையான அர்த்தம் எதுவும் இல்லையே என்று  எந்த குறளையும் தள்ளி விடக் கூடக் கூடாது.

எல்லா குறளிலும் வார்த்தை விளையாட்டுகள் இருக்காது. குறள் படிப்பதின் நோக்கம் அதில் உள்ள இலக்கணம், வார்த்தை செறிவு, எதுகை மோனை போன்ற யாப்புச் சிறப்பு இவற்றை அறிந்து வியக்க அல்ல.

குறள், அறம் சொல்ல வந்த நூல். அதற்காக, அதைப் படிக்க வேண்டும். படித்தபின் அதன் படி நடக்க வேண்டும்.


நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.



பொருள் 

செயற்கரிய = செய்வதற்கு அரிய 

யாவுள = எது உள்ளது 

நட்பின் = நட்பை விட 

அதுபோல் = அந்த நட்பை போல 

வினைக்கரிய = வினை செய்வதற்கு அரிய 

 யாவுள காப்பு.= எது காவலாய் இருக்கும் 


வாழ்வில் மிகப் பெரிய செயல் எது என்றால் சிறந்த நட்பை பெறுவது. அப்படி ஒரு நடப்பை பெற்றால், உலகில் சாதிக்க முடியாத செயல் ஒன்று எதுவும் இல்லை. நல்ல நட்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


நட்பு என்ன பெரிய காரியமா ? நமக்கு எல்லாம் எத்தனை நண்பர்கள் ? இதில் என்ன பெரிய கஷ்டம் என்று கேட்டால்....

பொதுவாக நமக்கு வாய்ந்த நட்புகள் நம்முடைய முயற்சியால் அமைந்ததாக இருக்காது. சந்தித்தோம், பழகினோம்...அவ்வளவுதான்.

பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்...

நட்பு கொள்ள வேண்டியவர்களை தேர்ந்து எடுப்பது , தேர்ந்து எடுத்தபின் அவர்களோடு நடப்பாக இருப்பது, நட்பாக இருக்கும் போது அந்த நடப்பில் சிக்கல் வந்தால் அவற்றை சரி செய்வது....இது  எல்லாம் மிக மிக கடினமான விஷயம் என்கிறார்.

நாம் எங்கே தேர்ந்து எடுக்கிறோம். அதுவாக  நிகழ்கிறது.

நிகழ்ந்த பின்னும், அந்த நடப்பை போற்றி பாதுகாக்க பெரு முயற்சி செய்கிறோமா ? 

நட்பு என்பது   மிகப் பெரிய விஷயம். 

அதைப் பற்றி வள்ளுவர் மேலும் சொல்கிறார்.

அதை பார்பதற்கு முன், உங்கள் நபர்களின் பட்டியலைப் போடுங்கள். கையில் அதை தயாராய் வைத்துக்  கொள்ளுங்கள். பின்னால் வரும் குறட்பாக்களை  சிந்திக்கும்போது , அந்தப் பட்டியலை அடிக்கொருதரம் பார்த்துக் கொள்ளுங்கள்....




Tuesday, July 2, 2013

திருக்குறள் - அன்பு, கொடுப்பதும் பெறுவதும்

திருக்குறள் - அன்பு, கொடுப்பதும் பெறுவதும் 


அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர்கள் எல்லாம் தனக்கு வேண்டும் என்று விரும்புவார்கள். அன்பு உள்ளவர்கள் தங்களுடைய எலும்பு கூட பிறருக்கு வேண்டும் என்று நினைப்பார்கள்.

இது மேலோட்டமான அர்த்தம்.

சற்று ஆழமாக சிந்திப்போம்.

நாம் ஒருவரை காதலிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம் என்றால் என்ன அர்த்தம் ?

அவர்களின் அன்பு நமக்கு மிக மிக அவசியமான ஒன்று. அவர்களின் அன்போ காதலோ இல்லாமல் நம்மால் வாழ முடியாது (நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை) என்று தான் நாம் சொல்வோம்.

வள்ளுவர் அது தவறு என்கிறார்.

உன் அன்பை எனக்குத் தா, உன் காதலை எனக்குத் தா, உன் அருகாமை வேண்டும், உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், உன் குரலை கேட்க வேண்டும் என்பது அன்பு அல்ல.

அன்பு என்பது வேண்டுவது அல்ல. அன்பு என்பது தா தா என்று கேட்பது அல்ல.

அன்பு என்பது கொடுப்பது.

அன்பு என்பது பிச்சை எடுப்பது அல்ல - உன்னைத் தா, உன்னை எனக்கு மட்டும் தா என்று யாசகம் கேட்பது அல்ல.

எல்லாவற்றையும் எடுத்துக் கொள், என் எலும்பைக் கூட.

சொல்லப் போனால் வள்ளுவர் அன்பு என்பது கொடுப்பது என்று கூட சொல்லவில்லை..தன் உடமை எல்லாம் அன்பு செலுத்துபவர்களுக்கு உரிமை ஆக்கி விடுவது.

நான் கொடுப்பது என்ற பேச்சே அல்ல...என்னை உனக்கு உரிமை ஆக்கி விட்டேன். எப்போது வேண்டுமோ எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள் என்று விடுவது.

சில பேர் மனைவியோ, கணவனோ, காதலியோ, காதலனோ பணம் காசு கேட்டால் கொடுத்து  விடுவார்கள், வீடு வாசல் வேண்டுமா எடுத்துக் கொள், வண்டி வேண்டுமா  எடுத்துக் கொள் ....ஆனால் என் நேரத்தை மட்டும் கேட்காதே...தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்பார்கள்.

அன்பு என்பது எலும்பையும் தருவது.

அது என்ன எலும்பையும் தருவது...?

அன்பு என்பது பிரதி பலன் எதிர் பாராதது.....எலும்பை கொடுத்து விட்டால் திரும்பிப் பெற என்ன இருக்கும் ? பதிலுக்கு எதையும் எதிர் பாராமல் தருவது அன்பு.

அது என்ன எலும்பு மட்டும் ?

என்பு"ம்" உரியர் பிறர்க்கு. எலும்பு உரியர் என்று சொல்லவில்லை....எலும்பும் உரியர் என்று சொன்னார்...அப்படி என்றால் மத்ததும் உரியர் பிறர்க்கு.

அன்பில்லாதவர் அதே போல் கேட்டுப் பெற மாட்டார்கள்..எல்லாம் தனக்கு உரியர்...எல்லாமே தனக்கு உரிமையானது என்று நினைப்பார்கள்.

இதையே கொஞ்சம் பிரித்து பொருள் பார்க்கலாம்....

"அன்புடையார் எல்லாம் " அதாவது அன்பு இல்லாதவர்கள் எல்லாம்

"தமக்கு உரியர்" அவர்களுக்கு அவர்களே உரியவர்கள். அவர்களால் மற்றவர்களுக்கு ஒரு  பிரயோஜனமும் கிடையாது. அன்பிலாதவர்கள் அவர்களுக்குள்ளேயே வாழ்ந்து கொள்ளும் சுயநல வாதிகள்.

அவர்கள் மட்டும்தான் அவர்களுக்கு உரியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதே கிடையாது.



 


இராமாயணம் - அறம் காக்க ஒருவர் துணையும் இன்றி

இராமாயணம் - அறம் காக்க ஒருவர் துணையும் இன்றி 


அறம் என்பது மிகப் பெரிய விஷயமாக இருக்கிறது. நம் நூல்கள் எல்லாம் அறத்தைப் பற்றியே பேசுகின்றன.

கீதையில் அறத்தை நிலை நிறுத்த யுகம் யுகம் தோறும் நான் சம்பவிப்பேன் என்கிறான் கிருஷ்ணன்.

குறள் முழுக்க முழுக்க ஒரு அற நூல்.

நம் முன்னோர்கள் நம் வாழ்வை அறம் , பொருள், இன்பம், வீடு என்று நான்கு பகுதிகளாக பிரித்தார்கள். அறம்தான் அடிப்படை

இராமாயணத்தில், விராதன் என்று ஒரு அரக்கன். அவன் சீதையை கவர்ந்து செல்கிறான். இராமனும் இலக்குவனும் சடையிட்டு அவனைக் கொல்கிறார்கள் . அந்த அரக்கன் மாண்டு விழுகிறான். அவனுள் இருந்து ஒரு தேவன் சாப விமோசனம் பெற்று எழுகிறான்.

எல்லா அரக்கனுக்குள்ளும் ஒரு தேவன் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான்.

அவன் வெளிப்பட்டு இராமனைப் பற்றி கூறுகிறான்.

இறைவனின் தன்மை பற்றிய மிக உயர்ந்த பாடல்கள்.


எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவனே. உன்னுடைய அருள் பார்வை என்றும் குறையாமல் இருப்பவனே. தாமரை போன்ற கண்களை கொண்ட எம் பெருமானே . அறத்தை காப்பதற்கு ஒருவரின் துணையும் இல்லாமல் காற்று போல அங்கும் இங்கும் திரிந்து, அதை ஒரு கடமை போலச் செய்பவனே என்று புகழ்கிறான்.

பாடல்

புறம் காண அகம் காணப் பொது முகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்!  இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய,  நீயேயோ கடவாய்தான்?


பொருள் 

Monday, July 1, 2013

முறிந்த வில் - முன்னை ஊழ் வினையால் முடிக்கில் ஆம்

முறிந்த வில் - முன்னை ஊழ் வினையால் முடிக்கில் ஆம் 


ஜனகன், சிவ தனுசை கொண்டுவரும்படி சொன்னான். அது கேட்டு வீரர்களும் அந்த பெரிய சிவ தனுசை கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்ததும் அங்குள்ள மக்கள் எல்லாம் பெரு மூச்சு விடுகிறார்கள்.

எதுக்கு இந்த இராஜா இந்த வில்லை கொண்டு வா ன்னு சொன்னார். மூளையே இல்லை இந்த இராசாவுக்கு. இந்த வில்லை வளைக்க மனித சக்தியால் முடியாது. ஒரு வேளை இதற்கு முன் செய்த புண்ணியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வந்தால் அந்த புண்ணிய பலத்தில் வேண்டுமானால் முடியலாம். பாவம் அந்த பெண் சீதை இந்த வில்லை பார்த்தாளோ என்னவோ. பார்த்தால் எவ்வளவு வருத்தப் படுவாள் ? இந்த வில்லை யார் வளைத்து தன்னை மணந்து கொள்ளப் போகிறார்களோ என்று அவள் மனம் எவ்வளவு வேதனைப் படும்....

பாடல்



என். “இது கொணர்க” என     இயம்பினான்?’ என்பார்;
‘மன்னவர் உளர்கொலோ    மதி கெட்டார்?’ என்பார்;
‘முன்னை ஊழ் வினையினால்    முடிக்கில் ஆம்’ என்பார்;
கன்னியும் இச் சிலை    காணுமோ?’ என்பார்.


பொருள்