Sunday, July 7, 2013

திரு அருட்பா - மனமெனும் குரங்கு

திரு அருட்பா - மனமெனும் குரங்கு 


மனம் ஒரு குரங்கு என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். குரங்காவது ஒரு கிளையை விட்டு மறு கிளை தாவும். மனித மனம் அப்படியா ? இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் பறக்கும்.

வல்லாளர் சொல்கிறார் மனித மனம் - பேய் பிடித்த, கள் உண்ட, பிரம்பால் அடி கொண்டு, பைத்தியம் பிடித்த, கோபம் கொண்ட குரங்கு என்று. அப்படிப் பட்ட குரங்கு எப்படி நடந்து கொள்ளும் ? அது போன்றது மனித மனம்.

வள்ளலார் புலம்புகிறார் ....

வள்ளலே, நான் படும் பாட்டை வாயால் சொல்லி முடியாது...என்ன என்ன செய்வேன், என்ன செய்வேன்...

உன் திருவடிகளை அண்டாது, பொன்னாசை, மண் ஆசை, பெண் ஆசை என்று உழலும் என் மனது

பேய் பிடித்த, கள் உண்ட, கோலினால் அடி கொண்ட, பைத்தியம் பிடித்த, கோபம் கொண்ட குரங்கு போன்றது என் மனது,

அது எப்படி கிடந்து உழல்கிறது தெரியுமா ?

குயவன் மண் பாண்டம் செய்யும் போது சுற்றும் சக்கரம் போல சுழல்கிறது, சிறு பிள்ளைகள் விளையாடும் பந்து போல அங்கும் இங்கும் கிடந்து அலைகிறது....

அது மட்டுமா ?

பசி கொண்ட விலங்கு எப்படி மற்ற விலங்கின் மேல் பாயுமோ அப்படி பாய்கிறது என் மனது....பெரும் சூறாவளி காற்றில் கிடந்து உழலும் பட்டம் போல் அலைகிறது, காலம் எப்படி பொருள்களை மாற்றிப் போடுமோ அப்படி என் மனம் மாறுகிறது....இந்திர ஜாலமோ ? முன் ஜென்ம வினையோ...எனக்குத் தெரியாது

கந்த கோட்டத்தில்  உள்ள கந்தவேளே என்று உருகுகிறார் வள்ளல் பெருமான்...

அவர் மனம் அப்படி என்றால் நம் மனம் எப்படியோ



வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன் 
என்செய்கேன்
வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ

காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
காற்றினாற் சுழல்கறங்கோ
காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
கர்மவடி வோஅறிகிலேன்

தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே......!

(எளிமையான பாடல் தான். எனவே ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் தரவில்லை . வேண்டுமா என்ன ?)

ஜடாயு - சபாஷ், சரியான விருந்து

ஜடாயு - சபாஷ், சரியான விருந்து 


இராவணன் அரசனான பிறகு, எமன் அரக்கர்களின் உயிரை எடுப்பதை நிறுத்தி விட்டான். இராவணன் கூற்றையும் ஆடல் கொண்டவன் . ரொம்ப நாளைக்குப் பிறகு, கரன் தூரன் என்ற இரண்டு அரக்கர்களை இராமன் கொன்றான். அப்போதுதான், அரக்கர்களின் உயிர் ருசி எப்படி இருக்கும் என்று எமன் ரொம்ப கழித்து ருசித்தான் ஆஹா, நல்ல விருந்து என்று இரண்டு கையாலும் முகந்து உண்டானே, அது உனக்குத் தெரியாதா என்று இராவணனிடம் ஜடாயு கேட்டான்.

பாடல்

'உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை 
        மெய்யாக இராமன் விருந்திடவே, 
கை ஆர முகந்து கொடு, அந்தகனார், 
ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ?


பொருள்


Saturday, July 6, 2013

குசேலோபாக்கியானம் - நடந்து சிவந்த சேவடிகள்

குசேலோபாக்கியானம் - நடந்து சிவந்த சேவடிகள் 



இது  ஒரு புது ப்ளாகின் ஆரம்பம். குசேலோபாக்கியானம், குசேலனுக்கும் கண்ணனுக்கும்  உள்ள ஆழமான பக்தி கலந்த நட்பை விவரிக்கும் கதை.

குசேலோபாக்கியானம் - இதில் உள்ள பாடல்கள் அத்தனையும் தேன் .  முழுவதும் படித்து விட்டேன்.  எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியவில்லை.  அவ்வளவு அருமையான பாடல்கள். 

 அதில் இருந்து உங்களுக்காக சில பாடல்கள்.....

தாமரைப் பூ. மிக மென்மையானது. அதில் தோன்றிய திருமகள்.  அதைவிட மென்மையானவள். அவளுடைய கரம் முற்றாத தளிர் போல மென்மையானது. அப்படிப் பட்ட திருமகள், தன் தளிர் கரங்களால் மிக மிக மென்மையாக திருமாலின் பாதங்களை வருடுகிறாள். அந்த மென்மையைக்  கூட தாங்க மாட்டாமல், திருமாலின் பாதங்கள் சிவந்து போகின்றன. அப்படிப்பட்ட மென்மையான பாதங்கள் சிவக்க சிவக்க ஆடு மாடு மேய்க்க நடந்தான். அவன் புகழ் வாழ்க.

பாடல்  

முற்றா இளமென் தளிர்க்கரத்தால்
          முனிவி லாது மெல்லெனச்செம்
     பொற்றா மரையிற் குடியிருக்கும்
          பூவை வருடுந் தொறுஞ்சேக்கும்
     விற்றார் அணிநற் பதமிரண்டும்
          வியன்மா நிலந்தீண் டிடநடந்து
     கற்றா மேய்த்த சிற்றாயன்
          காமர் சீர்த்தி வாழியவே.



பொருள்

முற்றா = முற்றாத

இள = இளமையான

மென் = மென்மையான

 தளிர்க்கரத்தால் = தளிர் போன்ற கரங்களால்

முனிவி லாது = கோபம் இல்லாமல்,  இனிமையாக, மகிழ்ச்சியுடன்

மெல்லெனச் = மெல்லமாக

செம் = சிவந்த 

பொற்றா மரையிற் = பொன் போன்ற  தாமரையில்

குடியிருக்கும் = வசிக்கும்

பூவை = பூ போன்ற திருமகள்

வருடுந் = வருடும்

தொறுஞ் = ஒவ்வொரு முறையும்

சேக்கும் = சிவக்கும்

விற்றார் = வில் + தார் = பூமாலை

அணிநற் பதமிரண்டும் = அணிந்த பாதங்கள் இரண்டும்

வியன்மா நிலந்தீண் டிட = விரிந்த இந்த நிலத்தை கால் தரையில் பட

நடந்து = நடந்து

கற்றா = கன்று + ஆ = பசுவையும் கன்றையும்

 மேய்த்த சிற்றாயன் = மேய்த்த சிறிய  ஆயன்

காமர் சீர்த்தி வாழியவே. = பெரிய புகழ் வாழியவே

(if you like it and want me to continue with more writings on this, please click g+ button given below)

ஜடாயு - பேதாய் பிழை செய்தனை

ஜடாயு - பேதாய் பிழை செய்தனை 


ஜடாயு மேலும் சொல்லுவார் ....

பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின் 
மாதா அனையாளை  மனக்கொடு, நீ 
யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்? 
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ?


இராவணா, பேதையே நீ பிழை செய்து விட்டாய். இந்த உலகுக்கு எல்லாம் தாய் போன்றவளை, நீ உன் மனத்தில் என்ன என்று நினைத்தாய் ? எண்ணம் இல்லாதவனே, உனக்கு இனிமேல் யார் ஆதாரம் ?


பேதாய்! = பேதையே

பிழை செய்தனை;= பிழை செய்து விட்டாய் 

பேர் உலகின் = இந்த பெரிய உலகின்

மாதா அனையாளை = தாய் போன்றவளை 

மனக்கொடு, நீ யாது ஆக நினைத்தனை? = உன் கொடிய மனத்தில் யார் என்று நினைத்தாய் ?

எண்ணம் இலாய்? = (நல்ல ) எண்ணம் இல்லாதவனே

ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? = உனக்கு இனிமேல் யார் ஆதாரம் ? (ஒருவரும் இல்லை)

அதாவது, இராவணன் தவறு மேல் தவறு செய்து கொண்டு போகிறான். திருமாலால் தண்டிக்கப்  படப் போகிறான். அப்போது அவனுக்காக பரிந்து பேசி, தண்டணையை குறைப்பவள் திருமகள். பிள்ளை தவறு செய்தால் அப்பா கண்டிப்பார் ...அடிக்க கை ஓங்குவார்...அம்மா வந்து தடுத்து...."பாவம், இந்த ஒரு தடவை  விட்டுருங்க...இனிமேல் அப்படி செய்ய மாட்டான் " என்று பிள்ளைக்காக  பரிந்து பேசுவாள் தாய்.


அது போல் இராவணன் தவறே செய்து இருந்தாலும் உலகுக்கு எல்லாம் தாயான அவள்   அவனுக்காகவும் பரிந்து பேசி இருக்கலாம்....அதையும் தடுத்து, அவளையே  தூக்கிக் கொண்டு போகிறாயே இராவணா இனி உனக்கு என்ன  ஆதாரம் இருக்கிறது ? யார் உன்னை காப்பாற்றப் போகிறார்கள் ? என்றார் ஜடாயு.




திருக்குறள் - உதவியின் அளவு

திருக்குறள் - உதவியின் அளவு 



உதவி வரைத்து அன்று, உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவி, அது எவ்வளவு பெரியது அல்லது எவ்வளவு சிறியது என்பது நம்மையோ, நாம் செய்யும் உதவியையோ பொருத்தது அல்ல . அது அந்த உதவியை பெற்றுக் கொண்டவனின் சால்பைப் பொருத்தது.

அது என்ன சால்பு ?

சால்பு என்றால் மேன்மை, நல்ல குணம்.

பிள்ளையின் படிப்புக்கு, பெண்ணின் திருமணத்திற்கு அல்லது ஏதோ அவசர மருத்துவ செலவுக்கு என்று ஒரு நல்லவர் உங்களிடம் உதவி கேட்க்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்கள். அதைப் பெற்றுக் கொண்டு அவர் உங்களை வாழ்த்துவார் "நீங்க நல்லா இருக்கணும், உங்க புள்ள குட்டியெல்லாம் நல்லா இருக்கணும்...இந்த ஆயிரம் ரூபாய், எனக்கு லட்ச ரூபாய்க்கு சமம் " என்று வாழ்த்தி விட்டு செல்வார்


அதே ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு கெட்டவனுக்கு கொடுத்துப் பாருங்கள்.
"பெருசா ஆயிரம் ரூபாய் கொடுக்க வந்துட்டான்....பிச்சாத்து காசு...இந்த ஆயிரம் ரூபாய் எனக்கு பத்து பைசாவுக்கு சமம்...." என்று உங்களை தரக் குறைவாகப் பேசலாம் '

இரண்டு இடத்திலும் கொடுத்தது நீங்கள்தான்,  கொடுத்த பணம் ஒரே அளவுதான்....ஒரு இடத்தில் இலட்ச்ச ரூபாயாக மாறியது, இன்னொரு இடத்தில் பத்து பைசாவாக  மாறியது.

அது அது பெற்று கொண்டவனின் தகுதியைப் பொருத்தது.

 உதவி வரைத்து அன்று = வரைத்து என்றால் அளவு. வரை முறை இல்லாமல் பேசாதே என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா? வரை என்றால் ஒரு அளவு.

உதவியின் அளவு செய்யும் உதைவியைப் பொறுத்து அல்ல என்பது பொருள்.

சரி, அதுக்கு என்ன இப்ப ? இதை அறிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன் ?

கொஞ்சம் மாத்தி யோசித்துப் பாருங்கள்.

உங்களுக்கு ஒரு உதவி வேண்டி இருக்கிறது. ஒரு பெரிய மனிதரிடம் போய் உதவி கேட்கிறீர்கள். அவரும் உங்களுக்குச் செய்கிறார். அந்த உதவிக்கு பதில் உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

சிக்கல் அங்குதான் வருகிறது.

என்ன செய்வீர்கள்.

உங்களுக்கு ஒரு இலட்சம் உதவி செய்வது அவருக்கு எளிது. நீங்களும் பதிலுக்கு ஒரு இலட்சம் உதவி செய்யப் போனால் அது ஒன்றும் பெரிதாக இருக்காது. நீங்கள் பல மடங்கு பெரிதாகச் செய்ய வேண்டி இருக்கும்.


எனவே, உதவி கேட்டுப் போகும்போது யாரிடம் உதவி கேட்கிறோம் என்று கவனமாய் இருங்கள்.



Friday, July 5, 2013

ஜடாயு - எங்கு அடா போவது ?

ஜடாயு - எங்கு அடா போவது ?


சீதையை தூக்கிச் செல்லும் இராவணனை ஜடாயு மறிக்கிறான்.

இராவணன் பேராற்றல் கொண்டவன். உடல் வலியும் , தவ வலியும் கொண்டவன்.

ஜடாயுவோ வயதான ஒரு பறவை.

ஜடாயுவுக்குத் தெரியும் அவனால் இராவணனை வெல்ல முடியாது என்று. இந்திராதி தேவர்கள் எல்லாம் இராவணனுக்கு தூசு. ஜடாயு எம்மாத்திரம்.

இருந்தும் ஏன் இராவணனோடு சண்டை போடப் போனான் ?

அநீதியை எங்கு கண்டாலும் யாரும் எதிர்க்க வேண்டும். என்னால் எப்படி முடியும், நான் இந்த அநீதியை வெல்ல முடியுமா என்று சந்தேகப் பட்டுக் கொண்டிருந்தால் காரியம் ஆகாது.

அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது முதல் செய்தி.

சீதையின் அபயக் குரல் கேட்டவுடன், ஜடாயு இராவணன் முன் பறந்து வந்து, எங்கே அடா போகிறாய், நில் நில் என்று இடி இடித்தார்போன்ற குரலுடனும், நெருப்பு கக்கும் விழிகளுடனும், மின்னலைப் போல ஒளி வீசும் அலகுடனும் , அந்த மேரு மலையே வானில் பறந்து வருவது போல பறந்து வந்து இராவணனை தடுத்தான்....

பாடல்


என்னும் அவ் வேலையின்கண், 'எங்கு 
     அடா போவது?' என்னா, 
'நில் நில்' என்று, இடித்த சொல்லன், 
     நெருப்பு இடைப் பரப்பும்கண்ணன்; 
மின் என விளங்கும் வீரத் 
     துண்டத்தன்; மேரு என்னும் 
பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே 
     பொருவும் மெய்யான்;

பொருள்


ஜடாயு - ஒரு அறிமுகம்

ஜடாயு - ஒரு அறிமுகம் 


இராமாயணத்தில்  பல கிளைக் கதைகள், பல சிறு பாத்திரங்கள் வந்து போவது உண்டு.

அந்த கதா பாத்திரங்கள் இல்லை என்றால் கதையின் போக்கு ஒன்றும் மாறிப் போய் விடாது.

பின் எதற்கு அந்த கதா பாத்திரங்கள் ?

குகன் அந்த மாதிரி ஒரு பாத்திரம்.

ஜடாயு இன்னொரு பாத்திரம்.

பிரகலாதன் மற்றொரு பாத்திரம்.

இந்த கதா பாத்திரங்கள் ஏதோ ஒன்றை சொல்லாமல் சொல்லிப் போகிறார்கள்.

அவர்கள் மூலம் வால்மீகியும் கம்பனும் ஏதோ சொல்ல வருகிறார்கள். நேரடியாகச் சொல்லவில்லை....அந்த கதா பாத்திரங்களின் செயல் மூலம்  ஏதோ ஒன்றை உணர்த்துகிறார்கள். அது என்ன ?

 ஜடாயு !

வயதான கருடன்.

இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போகிறான். ஜடாயு வழி மறிக்கிறான். இராவணனோடு போரிட்டு விழுகிறான் . பின் இராம இலக்குவனர்களை சந்தித்து நடந்தவற்றை  கூறி, முழுதும் அல்ல, உயிரை விடுகிறான்.

இராமன் ஜடாயுவுக்கு இறுதிக் கடன் செய்கிறான்.

கதை அவ்வளவுதான்.

இதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய தத்துவங்களை சொல்லிப் போகிறான் கம்பன்.

வாழ்க்கை நெறி சொல்ல வந்தது இந்த கதை.

சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டது இந்த கதை.

அது என்ன என்று பார்ப்போமா ?