Friday, October 11, 2013

திருக்குறள் - மனைவி பேச்சை கேட்டால்

திருக்குறள் - மனைவி பேச்சை கேட்டால் 


இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 
நல்லாருள் நாணுத் தரும்.


மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும். (மு. வ. உரை )


முதலில் மனை விழைவார் என்றால் மனைவி இல்லை என்று சிலர் சொல்லக் கூடும். இப்போது இல்லாள் என்று கூறுகிறார்.  இதற்க்கும் மனைவி என்று பொருள் இல்லை. வேறு ஏதாவது பொருள் இருக்குமோ ?

இதற்கு பரிமேல் அழகர் என்ன சொல்லுகிறார் ?

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை – ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் – அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். 

பெண் என்பவள் அஞ்சி நடப்பவள். அவளிடம் அஞ்சி நடப்பது என்பது ஒரு இயல்பாக இருக்க முடியாது. கணவன், மனைவிக்கு பயந்து நடந்தால், அவளை யாராலும் கட்டுப் படுத்த முடியாது. ஒரு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பெண்ணினால் எல்லாவிதமான குற்றங்களும் , எப்போதும் விளையும் என்கிறார் வள்ளுவர். 

பரிமேலழகரின் உரை கீழே...சந்தேகம் உள்ளவர்கள் படித்து தெளிந்து கொள்ளலாம். 

(அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, ‘எஞ்ஞான்றும் நாணுத்தரும்’ என்றார்.)

இல்லாளுக்கு (மனைவிக்கு) தாழ்ந்து போகக் கூடாது 
மனைவி என்பவள் கட்டுக்குள் வைத்திருக்கப் பட வேண்டியவள். அதாவது கணவன் சொற்படி கேட்டு நடக்க வேண்டியவள்.

இந்த குறளுக்கு உங்கள் எண்ணங்களை அறிந்து கொண்ட பின், மேலும் எழுத உத்தேசம். 



Tuesday, October 8, 2013

திருக்குறள் - பெண் விழைவான்

திருக்குறள் - பெண் விழைவான் 




பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

முதலில் பரிமேலழகர் உரையை பார்ப்போம்

பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; 

பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும்.

ஏன் நாணம் தரும் ?

எப்பப் பார்த்தாலும் பெண்டாட்டி பின்னாடியே சுத்திக் கொண்டு இருந்தால் , செல்வதை காப்பது, செல்வதை அனுபவிப்பது , செல்வதை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை செய்ய முடியாது. எனவே நாணம் தரும். 

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ? இந்த செல்வம் எல்லாம் அவன் மனைவி சாமர்த்தியதால் வந்தது, இவனுக்கு ஒண்னும் தெரியாது என்று நினைப்பார்கள். அதுவும் நாணம் தரும். 

Monday, October 7, 2013

தேவாரம் - வயதான போது

தேவாரம் - வயதான போது 


முதுமை. 

இளமையில், உடலில் வலு இருக்கும் போது உலகை வென்று விடலாம் என்று தோன்றும். நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்று தோன்றும். விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி என்று இலகுவன் கூறியது போல விதியை புரட்டி போட்டு விடலாம் என்று தோணும்....

வயதாகும்...

புலன்கள் தளரும். நினைத்ததை செய்ய முடியாது. 

கண்ணால் கண்டு உணர வேண்டியதை கையால் தடவி உணருவோம். மனம் பேச நினைத்ததை  வாய் பேசாமல் குளறும். நிற்க முடியாது. நடக்க முடியாது. சொன்னது மறந்து போய் சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருப்போம். 

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இன்றி அறிவு மங்கிப் போகும் நேரம். 

மனைவியும் மக்களும் சுற்றமும் நட்பும் கேலி செய்யும். யார் துணையும் இன்றி மனம் தவிக்கும்....அப்போது 

அஞ்சேல் , நான் இருக்கிறேன் உனக்கு என்று சொல்பவன் இறைவன் மட்டுமே. அவன் அருள் செய்பவன் அமரும் கோவில் திருவையாறு. 

அந்த கோவிலில் , பெண்கள் பாட்டு பாடி நடனமாடி வலம் வருகிறார்கள். அப்போது பூஜை நேரம் என்பதால் முரசு அடிக்கிறது. அதை மேகத்தில் இருந்து வரும் இடி என்று நினைத்து சில குரங்குகள் மரதத்ின் மேல் ஏறி மழை வருகிறதா என்று பார்க்கும்.  (ஏன் சில மந்திகள் என்று சம்மந்தர் கூறினார் ?) 


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைமே லுந்தி
யலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங் கோவில்
வலம்வந்த மடவார்க ணடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவை யாறே

சீர் பிரிப்போம்:

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்து ஐமேல் உந்தி
அலமந்த போது அஞ்சேல் என்று அருள் செய்வான் அமருங் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடனம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி
சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே

பொருள்:

புலன் ஐந்தும் = ஐந்து புலன்களும்

பொறி கலங்கி = கலக்கமுற்று

நெறி மயங்கி = வழி தெரியாமல்

அறிவு அழிந்து = அறிவு அழிந்து

ஐமேல் உந்தி = ஐந்து புலன்களும் உந்தித் தள்ள

அலமந்த போது = இறுதி காலம் வந்த போது

அஞ்சேல் என்று = அச்சப் படாதே என்று

அருள் செய்வான் = அருள் செய்யும் இறைவன்

அமருங் கோயில் = உறையும் கோவில்

வலம் வந்த =அந்த கோவிலை சுற்றி வரும்

மடவார்கள்  = பக்தர்கள்

நடனம் ஆட = நடனம் ஆட

முழவு அதிர = முரசு, மத்தளம் ஒலிக்க

மழை என்று அஞ்சி = ஏதோ மழை வரப்போகிறது என்று அஞ்சி

சில மந்தி = சில குரங்குகள்

அலமந்து = மாலை நேரத்தில்

மரமேறி  = மரத்தின் உச்சியில் ஏறி

முகில் பார்க்கும் = மழை மேகம் வருகிறதா என்று பார்க்கும்

திருவையாறே = திருவையாறே 


Wednesday, October 2, 2013

திருக்குறள் - பெண்வழிச் சேறல்

திருக்குறள் -  பெண்வழிச் சேறல்


பெண் சொல்வதை , குறிப்பாக மனைவி சொல்வதை கேட்டால் நல்ல பயனை அடைய மாட்டார்கள் என்றும் ; நல்ல பயனை விரும்புவார்கள் மனைவி சொல்வதை கேட்க மாட்டார்கள் என்றும் வள்ளுவர் சொல்கிறார்.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.

பொருள்


மனைவிழைவார்  = மனைவியின் அன்பை, அவள் தரும் இன்பத்தை அடைய விரும்புவார்
மாண்பயன் எய்தார் = சிறந்த பயன்களை அடைய மாட்டார்கள்
வினைவிழைவார் = செயலை விரும்புபவர்கள்
வேண்டாப் பொருளும் அது. =  வேண்டாத அல்லது விரும்பாத பொருளும் அது. அதாவது செயல் திறனை விரும்புபவர்கள் மனைவியின் பேச்சை கேட்க மாட்டார்கள்

இது நான் சொல்லுவது இல்லை.

பரிமேலழகர் சொல்கிறார் ... மனைவியின் சொல்லை கேட்பவர்கள் அறத்தின் பயனை அடைய மாட்டார்கள் என்று.


மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்;

வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம்.

மனக் குடவர் , தேவ நேய பாவாணர் போன்றோரும் இதைப் போலவே உரை எழுதி இருக்கிறார்கள்.

வள்ளுவர் பொய்யா மொழி புலவர். பரிமேலழகர் மிகச் சிறந்த உரை ஆசிரியர்.

அவர்கள் பிழையாக ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல , பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார் வள்ளுவர் - பெண் வழி சேராதே என்று.....




பிரபந்தம் - மாணிக்கம் கட்டி

பிரபந்தம் - மாணிக்கம் கட்டி 


தாயாக இருப்பது எளிது. தந்தையாக இருப்பது மிகக் கடினம். 
ஏன் ?
தாய் என்பது இயற்கையாக இருப்பது. ஒரு தாய் தன் பிள்ளையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறாள். பின், தன் உதிரத்தை பாலாக்கி பிள்ளைக்கு தருகிறாள். அவளுக்கும் குழந்தைக்கும் உள்ள தொடர்பு உயிர் சார்ந்தது , உடல் சார்ந்தது. 

தந்தை அப்படி அல்ல. அவனுக்கும் பிள்ளைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஒரு தந்தை பிள்ளை மேல் வைக்கும் பாசம் மிகக் கடினமானது. அவன் மிக மிக முயற்சி செய்ய வேண்டும். 

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 

A mother is a natural phenomenon 
whereas a father is social phenomenon என்று 

தாயின் அன்பைக் காட்டிலும் தந்தையின் அன்பு மிக மிக உயர்வானது. 

பெரியாழ்வார்  தன்னை கண்ணனின் தாயாக பாவித்து பாடல்கள் எழுதி இருக்கிறார். அவ்வளவு இனிமீயான பாடல்கள். 

பொதுவாக எல்லோரும் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்போம். 

சில பேர் அப்படி கேட்காவிட்டாலும், இறைவா , என்னை நல்லபடி வைத்து இருக்கிறாய், உனக்கு நன்றி என்று சொல்லுவார்கள். 

சில பேர், இறைவனை திட்டவும் செய்வார்கள். உனக்கு எவ்வளவு பூஜை எல்லாம் செய்தேன், என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் , உனக்கு கண் இல்லையா , உன் மனம் என்ன கல்லா என்று வைப்பவர்களும் உண்டு. 

இறைவன் உண்டென்பார், இல்லை என்பார் நமக்கில்லை கடவுள் கவலை என்று இருப்பாரும் உண்டு. 

யாராவது, கடவுளே , இங்கே வா, என்னிடம் வா, நான் உன்னை நல்லபடியாக பார்த்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது உண்டா. இறைவா , நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தியது உண்டா ? 

பெரியாழ்வார்  சொல்கிறார். 

பெரியாழ்வார்  பாடல்களில் இருந்து சில எனக்குப் பிடித்த சில பாடல்களைத் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை.

இந்தப் பாடல்களை அறிவதால் என் வாழ்க்கைக்கு என்ன பயன் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. 

சிறகடித்து சிலிர்த்து பறக்கும் சிட்டுக்குருவி, காதோரம் கவிதை பாடும் தென்றல், காலோரம் கதை பேசும் கடல் அலை, பால் தெளிக்கும் நிலவு, விரல் பிடிக்கும் பச்சை குழந்தையின் கைகள், உயிர் பூக்க வைக்கும் ரோஜா மலர்...இவற்றை எல்லாம் பார்பதால் என்ன பயனோ அதே பயன்தான்...

இறைவனை தொட்டிலில் இட்டு தாலாட்டித் தூங்கப் பண்ணுகிறார் ஆழ்வார்....இறைவனுக்கு தாய் இல்லை என்ற குறையை போக்குகிறார்...

பாடல்

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!

பொருள்

Monday, September 30, 2013

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

அபிராமி அந்தாதி - செஞ்சேவகன் மெய்யடைய

யார் பெரியவர் ? 

சிவனா ? அபிராமியா ?

முப்புரங்களை எரிக்க தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு சண்டை போட்டு வென்றவரா அல்லது அப்பேர்பட்ட சிவனின் உடலில் பாதியை தன்னுடைய மார்பகத்தால் வென்ற அபிராமியா ?


தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.

பொருள்

தங்கச் சிலை கொண்டு = தங்கத்தால் ஆன மேரு மலையை வில்லாகக் கொண்டு 
தானவர் முப்புரம் சாய்த்து = அசுரர்களின் முப்புரங்களை சாய்த்து 

மத = மதம் கொண்ட 

வெங் கண் = சிவந்த கண்களை கொண்ட 
கரி = யானையின் 
உரி = தோலை உரித்து 
போர்த்த = மேலே போர்த்திக் கொண்ட 
செஞ்சேவகன் = சிவந்த மேனியை கொண்ட சேவகன் 
மெய்யடையக் = உடலில் பாதியை அடைய 

கொங்கைக் குரும்பைக் = குரும்பை போன்ற   கொங்களை 
குறியிட்ட நாயகி = குறியாகக் கொண்ட நாயகி 
கோகனகச் = பெரிய தங்கம் போன்ற 

செங் கைக் கரும்பும் = சிவந்த கையில் கரும்பும் 
மலரும் = மலரும் 
எப்போதும் என் சிந்தையதே. = எப்போதும் என் சிந்தையுள்ளே 

ஆண், வெளியே எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் , பெண்ணின் அழகின் முன்னால் அவன் தோற்றுத் தான் ஆக வேண்டும்.

அது பெண்ணுக்கு கிடைக்கும் மரியாதை 
ஆணுக்கு கிடைக்கும் கம்பீரம் 

மேருவை வில்லாக வளைத்த சிவனின் கதி அது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் ...



 

Sunday, September 29, 2013

குறுந்தொகை - மணந்த மார்பே

குறுந்தொகை - மணந்த மார்பே 


குறுந்தொகை போன்ற பாடல்களை படிக்கும் போது அவை எழுதப் பட்ட காலத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத காலம். சின்ன கிராமங்கள். விவசாயம் மட்டுமே பிரதானமாய் இருந்த காலம். ஊரை அடுத்து காடு இருக்கும். சில சமயம் காட்டில் இருந்து விலங்குகள் ஊருக்குள் வருவதும் உண்டு. 

அது ஒரு குளிர் காலம். முன் பனிக் காலம். பின்னிரவு நேரம். நிலவொளியில் ஊரே குளித்துக் கொண்டிருக்கிறது. குளிர் காற்று உயிரையும் சேர்த்து வருடிச் செல்லும் காலம். 
குளிர் மனிதர்களுக்கு மட்டும் அல்லவே. காட்டில் உள்ள மான்களையும் அது சென்று காதோரம் காதல் பேசி விட்டு செல்கிறது. குளிர் தாங்காமல் அவை மெல்ல மெல்ல அந்த கிராமத்துக்கு வருகின்றன. அங்குள்ள வயல்களில் உளுந்து விளைந்திருக்கிறது. அவற்றை அவை உண்ண நினைக்கின்றன. உணவு உண்டால் கொஞ்சம் உடல் சூடு பிறக்கும். இந்த குளிரை தாங்க முடியும் என்று அவை நினைகின்றன. 

அந்த ஊரில் உள்ள தலைவிக்கும் தூக்கம் வரவில்லை. ஜன்னலோரம் அமர்ந்து நிலவொளியில் வயல் வரப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறாள். மான்கள் மெல்ல மெல்ல வருவது தெரிகிறது. 

ஹ்ம்ம்ம் என்ற பெரு மூச்சு வருகிறது...அவன் அருகில் இருந்தால் இந்த குளிருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாள். அவன் மார்பில் சாய்ந்து இந்த குளிர் தரும் துன்பத்தை போக்கிக் கொள்ளலாமே என்று நினைக்கிறாள். 

பாடல் 

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை அவர் மணந்த மார்பே.

பொருள்

பூழ்க்கால் = காடை என்ற பறவையின் காலைப் 

அன்ன = போல 
செங்கால் = சிவந்த கால்களை உடைய 
உழுந்தின் = உளுந்து செடியின் 

ஊழ்ப்படு = காலத்தால் 
முதுகாய் = முற்றிய காய்களை 
உழையினங் கவரும் = மான் இனம் கவரும். உண்பதற்கு வரும் 
அரும்பனி = கடுமையான பனி
அற்சிரம் = அந்த சிரமத்தை  
தீர்க்கும் = போக்கும் 
மருந்து பிறிதில்லை = மருந்து பிறிது இல்லை 
அவர் மணந்த மார்பே = அவரோடு நான் இணைந்திருந்த அவரின் மார்பை தவிர 

யோசித்துப் பார்த்தேன்....எதுக்கு இந்த மான், உளுந்து எல்லாம் இந்த பாடலில். பேசாமல் குளிர் வேதனை போக்க மருந்து அவன் மார்பு என்று சொல்லி விட்டுப் போய் விடலாமே ?

சொல்லலாம். 

மான்கள் வருவது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருக்கும் அந்த ஊரின் தன்மை, உளுந்து விளையும் மண்ணின் தன்மை, குறைந்த மழை பெய்யும் அடி வருடும் வறட்சி, பயிர்களை உண்ணத் தலைப்படும் மான்களின் பசி, அது இரவு நேரமாக இருக்கும் என்ற யூகத்திற்கு இடம் தருவதும், (பகலில் வந்தால் விரட்டி விடுவார்களே), தூக்கம் வராதா தலைவி அதை பார்த்துக் கொண்டிருப்பதும், தலைவனை நினைத்து ஏங்குவதும் ... 

யோசித்துப் பாருங்கள்...எவ்வளவு அழகான பாடல்