Saturday, November 30, 2013

இராமாயணம் - புலன் அடக்கத்தை விட அன்பு சிறந்தது

இராமாயணம் - புலன் அடக்கத்தை விட அன்பு சிறந்தது 


அன்று தொட்டு இன்று வரை ஆசையே துன்பத்திற்கு காரணம், புலன் அடக்கம் அவசியம் என்று எல்லா நூல்களும் போதித்து வருகின்றன.

இராமயணம் இந்த அடிப்படை உண்மையை கேள்வி கேட்கிறது.

புலன்களை நம்  எதிரிகள் என்று நினைத்து அவற்றோடு சண்டை போட்டு, அவற்றை அடக்கி, அவற்றை தூய்மை படுத்துகிறேன் என்று அவற்றை போட்டு கொல்வது ஏன் ? அன்றும், இன்றும் , என்றும் மூன்று உலகத்திலும் அன்பே சிறந்தது. புலன் அடக்கத்தை விட அன்பு செலுத்துவதே சிறந்தது என்று இராமனுக்கு வசிட்டர்  கூறுகிறார்.


பாடல்

‘என்பு தோல் உடையார்க்கும், இலார்க்கும், தம் 
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி, மூ உலகத்தினும்,
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?


வில்லிபாரதம் - எடுக்கவோ கோக்கவோ ?

வில்லிபாரதம் - எடுக்கவோ கோக்கவோ ?


குந்தி போருக்கு முன் கர்ணனை சந்திக்கிறாள். கர்ணனின் தாய் தான் தான் என்று சொல்கிறாள். கர்ணனை பாண்டவர்களோடு சேரும்படி சொல்கிறாள். கர்ணன் மறுக்கிறான். அவன் ஏன் பாண்டவர்களோடு சேர மாட்டேன்  என்பதற்கு பல காரணங்கள் சொல்கிறான். அதில் ஒன்று

" அம்மா,ஒரு முறை நானும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு பின் துரியோதனன் வந்தான். எனக்கு பின்னால் வந்ததால் நான் அவனை கவனிக்க வில்லை. ஆனால், வாயிலை பார்த்து அமர்ந்து இருந்த பானுமதி தன் கணவன் வருவதை கண்டு எழுந்தாள் . அவள் ஆட்டத்தில் தோற்பதை தவிர்க்கத் தான் எழுந்திருக்கிறாள் என்று எண்ணி அவளை பிடித்து உட்கார வைக்க முனைந்தேன். அப்போது அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலை என்ற ஆபரணம் அறுந்து அதில் உள்ள மணிகள் சிதறி ஓடின. அங்கு வந்த துரியோதனன் அந்த முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ என்று  கேட்டான்.அப்படி என் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த துரியோதனனுக்காக போர் செய்வது என் செஞ்சோற்று கடன், தர்மம் , புகழ் தரும் செயல் "  என்றான்.

பாடல்

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவே?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

தருமமும்!'


பொருள்

மடந்தை = துரியோதனின் மனைவி பானுமதி

பொன்-திரு மேகலை மணி = இடையில் கட்டியிருந்த மேகலை என்ற பொன் ஆபரணத்தில் உள்ள மணிகள்

உகவே = உதிர்ந்து விழ

மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் = மிகமிக அற்புதமான வரி. அவர்கள் (கர்ணனும், பானு மதியும் ) தனியாக  இருந்தார்கள். ஆனால் அந்த இடம் குற்றமோ தவறோ நிகழாத தனிமையான இடம். மாசு என்றால் குற்றம். குற்றம் அற்ற தனிமியான இடம்.


புரிந்தே நான் அயர்ந்து இருப்ப = நான் விளையாட்டு மும்முரத்தில் அயர்ந்து இருக்க

 "எடுக்கவோ? கோக்கவே?'" என்றான் = அப்படி உதிர்ந்த முத்துகளை எடுக்கவோ கோர்கவோ என்றான்

திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் = உறுதியான வேலை கொண்ட இராசராசனான துரியோதனுக்கு

 செருமுனைச் சென்று = போர்க்களம் சென்று

செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே = உண்ட சோற்றுக்கு கடன் கழிப்பதுவே

எனக்கு இனிப் = எனக்கு

புகழும், கருமமும், தருமமும்!'= புகழும் கருமமும் தருமமும் ஆகும்.

எடுப்பது சரி. எதற்கு கோர்க்க வேண்டும் ?

முத்தில் நூலை கோர்ப்பது என்றால் கை நடுங்காமல் இருக்க வேண்டும்.

கை எப்போது நடுங்கும் ? பயத்தில் உதறும். கோபத்தில், ஆத்திரத்தில் நடுங்கும்.

துரியோதனுக்கு பயமும் இல்லை, கோபமோ ஆத்திரமோ இல்லை. நிதானமாக இருக்கிறான் என்று காட்டவே "கோர்க்கவோ" என்றான்.

மேலும்,

கர்ணனுக்கோ பானுமதிக்கோ கொஞ்சம் பதற்றம் இருக்கலாம்....துரியோதனன் தங்களை தவறாக நினைத்து விடுவானோ என்று. அவர்களால் கோர்க்க முடியாது என்பது மறைமுக கருத்து.

நீங்கள் விளையாடுங்கள், நான் கோர்த்து தருகிறேன் என்ற இடத்தில் துரியோதனன் தன் மனைவி மேல் வைத்த நம்பிக்கையும், தன் நண்பன் மேல் வைத்த  நம்பிக்கையும் ஒளிர் விடுகிறது.

ஒரே ஒரு வாக்கியம். எவ்வளவு அர்த்தம்.

அப்படி பேசப் படிக்க வேண்டும்.

இப்படி சிறந்த பல பாடல்களை கொண்டது வில்லி பாரதம்.


நேரம் இருப்பின் மூல நூலை படித்துப்  பாருங்கள்.

இராமாயணம் - போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

இராமாயணம் - போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது


இராமாயணத்தில் அறிவுரைகள், அறவுரைகள் நிறைய உண்டு.

வாழ்க்கைக்கு வேண்டிய தத்துவங்களை இராமாயணம் நமக்குச் சொல்லித் தருகிறது. காலம் கடந்து நிற்கும் அந்த தத்துவங்களில் சிலவற்றை நாம் வரும் ப்ளாகுகளில் சிந்திக்கலாம்.

பொதுவாக புகழ் வேண்டும் என்றால் நாம் என்ன நினைப்போம் ? வெற்றி பெற்றால் புகழ் கிடைக்கும்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் யாரோ தோற்க வேண்டும்.

தோற்பவன் எளிதில் தோற்பானா ? சண்டையிடுவான்.

சண்டை என்றால் வில், வாள், கத்தி, கேடயம் என்று இல்லை. வாதங்கள், தர்க்கங்கள் என்று எத்தனையோ குட்டி குட்டி யுத்தங்கள். சின்ன சின்ன போர்கள். எல்லா தர்க்கத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று  நினைக்கிறோம். வாதங்களில் வென்று நண்பர்களின் நடப்பை , கணவன்/மனைவியின்  அன்பை இழக்கிறோம்.

இப்படி சின்ன சின்ன போர்களில் நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொள்கிறோம்.

இராமனுக்கு முடி சூடுவதற்கு முன் வசிட்டர் சில புத்தி மதிகளை  கூறுகிறார்.

"யாரோடும் பகை கொள்ளாதே. அப்படி இருந்தால் போர் மறைந்து போகும் , ஆனால் உன் புகழ் மறையாது.  போர் இல்லை என்றால் உன் படைக்கு சேதம் இல்லை. அது அழியாது. அழியாத பெரிய படையை கண்டு மற்றவர்கள் உன் மீது போர் செய்ய மாட்டார்கள். அப்படி அன்பால் பகைவர்களை வென்ற பின் அவர்களை அழிக்கும் எண்ணம் தோன்றாது .."

பாடல்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? 


பொருள்

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் = யாரோடும் பகை இல்லை என்ற பின்

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது = போர் இல்லாது போகும்; ஆனால் புகழ் இல்லாது போகாது

தன் தார் ஒடுங்குல் செல்லாது = (உன்) படை அழியாது

அது தந்தபின் = அது நடந்த பின்

வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? = பகைவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்ற நினைப்பு வருமோ ? வராது.

இராமாயணம் அன்பை போதிக்கிறது. சண்டை வேண்டாம் என்கிறது. போர் இல்லாமலே  புகழ் வரும் என்கிறது. பகைவனையும் அன்பால் வெல்லலாம் என்கிறது. 

நம்முடைய போர்களை எண்ணிப் பார்ப்போம். 


Thursday, November 28, 2013

வில்லிபாரதம் - வேண்டிய தருதி நீ

வில்லிபாரதம் - வேண்டிய தருதி நீ 


பாரதப் போரில் கர்ணன் அடி பட்டு தளர்ந்து தேரில் இருந்து விழுந்து கிடக்கிறான். அர்ஜுனன் அவன் மேல் அம்பை விட நினைக்கும் வேளையில் கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தி விட்டு, தேரை விட்டு  இறங்கி, ஒரு வேதியர் வடிவில் கர்ணனை அடைகிறான்

கர்ணன்: (ஐயா தாங்கள் யார் ?)

வேதியன்: நான் மேரு மலையில் தவம் புரிபவன்

கர்ணன்: (நல்லது, இந்த போர் களத்தில் என்ன செய்கிறீர்கள்)

வேதியன்: என்னை வறுமை வாட்டுகிறது

கர்ணன்: அதற்காக இந்த யுத்த களத்தில் என்ன செய்கிறீர்கள்

வேதியன்: கர்ணா , நீ வறுமையில் வாடுபவர்களுக்கு வேண்டியதைத் தருவாய் என்று கேள்வி பட்டேன். எனவே உன்னை காண வந்தேன்.

பாடல்

தாண்டியதரங்கக்கருங்கடலுடுத்த தரணியிற்றளர்ந்தவர்தமக்கு,
வேண்டியதருதிநீயெனக்கேட்டேன்மேருவினிடைத்தவம்பூண்டேன்,
ஈண்டியவறுமைப்பெருந்துயருழந்தேனியைந்ததொன்றிக்கணத்
                                        தளிப்பாய்,
தூண்டியகவனத்துரகதத்தடந்தேர்ச்சுடர்தரத்தோன்றியதோன்றால்,

சீர் பிரித்த பின்

தாண்டிய தரங்கக் கருங் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு 
வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன் மேருவில் இடை தவம் பூண்டேன் 
ஈண்டிய வறுமை பெரும் துயர் உழந்தேன் இயைந்த ஒன்றை கணத்தில் அளிப்பாய் 
தூண்டிய கவனத் துரக தடம் தேர் சுடர் தரத் தோன்றிய தோன்றால் 

பொருள்

தாண்டிய = தாண்டி தாண்டி வந்து கரையில் மோதுகின்ற

தரங்கக் = அலை பாயும்

கருங் கடல் = கரிய கடலை

உடுத்த = உடையாக உடுத்திய

தரணியில் = இந்த உலகில்

தளர்ந்தவர் தமக்கு = தளர்ந்தவர்களுக்கு

வேண்டிய = வேண்டியதை

தருதி நீ = நீ தருவாய்

எனக் கேட்டேன் = என கேள்வி பட்டேன்

மேருவில் = இமய மலையில்

இடை தவம் பூண்டேன் = தவம்  கொண்டிருக்கிறேன்

ஈண்டிய = வந்து தங்கிய

வறுமை = வறுமை

பெரும் துயர் உழந்தேன் = பெரிய துன்பத்தில் கிடந்து உழல்கிறேன்

இயைந்த ஒன்றை = எனக்கு ஏற்ற ஒன்றை

கணத்தில் அளிப்பாய்  = இப்போதே தருவாய்

தூண்டிய = தூண்டப் பட்ட

கவனத் துரக = கதியில் செல்லும் குதிரைகளை கொண்ட

தடம் தேர் = பெரிய தேர்

சுடர் தரத் = சூரிய ஒளியில்

தோன்றிய தோன்றால் = தோன்றிய தோன்றலால்

அப்படி தனக்கு பொருள் வேண்டும் என்று கேட்ட வேதியனிடம் கர்ணன் ஒன்று  கேட்டான்.

அது என்ன என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.









Wednesday, November 27, 2013

இராமாயணம் - மேனி காண மூளும் ஆசையால்

இராமாயணம் - மேனி காண மூளும் ஆசையால்


சீதையை காணும் ஆசை இராவணனின் மனதில் தீ போல கொளுந்து விட்டு  எரிகிறது.

அவள் உடலை காணும் ஆசை என்கிறான்  கம்பன்.

ஒரு இடத்தில் நில்லாமல், நல் வழி செல்லாமல் தாவி தாவி செல்லும் மனதை உடைய இராவணன்,  தீது என்று எண்ணாமல், சீதையை, சிறிது நேரம் கூட மறக்க  முடியாமல்,மா வடு, நெய்தல் பூ, வேல் போன்ற, சிவந்த கண்களை கொண்ட சீதையின் மேனியை காண மூளும் ஆசையால் அவன் ஆவி ரொம்ப நொந்து வருந்தினான்.

பாடல்

தாவியாது, தீது எனாது,
     தையலாளை மெய் உறப்
பாவியாத போது இலாத பாவி-
     மாழை, பானல், வேல்,
காவி, ஆன கண்ணி மேனி
     காண மூளும் ஆசையால்,
ஆவி சால நொந்து நொந்து, -
     அழுங்குவானும் ஆயினான்.


பொருள்

தாவியாது = தாவி தாவி செல்லும் மனது. ஒன்றில் இருக்கும் போது இன்னொன்றை நினைத்து தாவும் மனது.

தீது எனாது = தீது என்று எண்ணாமல்

தையலாளை = பெண்ணை (சீதையை)

மெய் உறப் பாவியாத போது = மனதில் நினைக்காமல் இருக்க முடியாமல்

இலாத பாவி = இருக்க முடியாத பாவி


மாழை = மாவடு

 பானல் = நெய்தல் மலர்

வேல் = கூர்மையான வேல் போன்ற

காவி = சிவந்த

ஆன கண்ணி = கண்களை கொண்ட சீதையின்

மேனி காண மூளும் ஆசையால் = உடலை காணும் ஆசையால்

ஆவி சால நொந்து நொந்து = ஆவி ரொம்ப நொந்து

அழுங்குவானும் ஆயினான் = வருந்துவானும் ஆயினான்

சீதையின் கண் = மாவடு போன்ற தோற்றம், நெய்தல் மலர் போல மணம் , மென்மை , வேல் போன்ற கூர்மை, சிவந்த நிறம்....

கண்ணே இவ்வளவு அழகு என்றால் .....?

Tuesday, November 26, 2013

வில்லிபாரதம் - உணர்வில் ஒன்று படுக

வில்லிபாரதம் -  உணர்வில் ஒன்று படுக 


பாரதத்தில் மிக முக்கியமான, ரொம்பவும்  அறிந்திராத ஒரு இடம்.

துரோணன் போர்க்களத்தில்  இருக்கிறான். அவனை வெல்வது யாராலும் முடியாது. போர் நடந்து கொண்டே  இருக்கிறது.

அப்போது ஒரு நாள் ....

மரிசீ, அகத்தியர் போன்ற ஏழு முனிவர்கள் துரோணரிடம் வந்து "நீ என்ன  கொண்டிருக்கிறாய்? இது நீ செய்யும் வேலை அல்ல. இதை எல்லாம் விடு. விண்ணுலகு சேர வேண்டாமா, உன் மனதில் உள்ள குழப்பத்தை விடுத்து , உணர்வில் ஒன்று படு " என்று உரிமையோடு சொன்னார்கள்.

அவர்கள் சொன்னவுடன் துரோணனுக்கு உண்மை விளங்கிற்று. அவனுக்கு போரில் உள்ள முனைப்பு குறைந்தது. துரோணன் உயிர் துறக்கும் காலம் வந்தது என்று உணர்ந்த கண்ணன் , துரோணனை கொல்ல தர்மனுக்கு ஒரு வழி சொல்லித் தந்தான்.

பாடல்


தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும் 
விடுக; வெஞ் சினமும் வேண்டா; விண்ணுலகு எய்தல் வேண்டும்; 
கடுக, நின் இதயம்தன்னில் கலக்கம் அற்று, உணர்வின் ஒன்று 
படுக!' என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர், பவம் இலாதார். 

பொருள்

தொடு கணை வில்லும் = அம்பை தொடுக்கின்ற வில்லும்

வாளும் = வாளும்

துரகமும் = குதிரையும்

களிறும் = யானையும்

தேரும் = தேரும்

விடுக = விட்டு விடு

வெஞ் சினமும் வேண்டா = கொடிய சினமும் வேண்டாம்

விண்ணுலகு எய்தல் வேண்டும் = விண்ணுலகை அடைய வேண்டும்

கடுக = விரைவாக

 நின் இதயம்தன்னில் = உன் இதயத்தில்

கலக்கம் அற்று = கலக்கத்தை அற்று

உணர்வின் ஒன்று படுக!'= உணர்வில் ஒன்று படுக

என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர் = உரிமையோடு கூறினார்கள்

பவம் இலாதார் = பிறப்பு இல்லாதவர்கள் (அந்த முனிவர்கள்).

இது துரோணனுக்கு மட்டும் சொல்லப் பட்டது அல்ல.

உங்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்டது.

நாம் செய்யாத யுத்தமா ? நாளும் நாளும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

எதற்கு இந்த போராட்டம் ? எதை அடைய ?

அரசை துரியோதனன் அடைந்தால் என்ன ? தர்மன் அடைந்தால் என்ன ? துரோணனுக்கு அதில் என்ன ஆகப் போகிறது ?

துரோணனின் நோக்கம் என்ன ? விண்ணுலகு அடைவது ? அதற்க்கு இந்த யுத்தம் உதவுமா ?

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் நோக்கம் நிறைவேற உதவுமா என்று பாருங்கள்.

தேவை இல்லாத யுத்தங்களில் ஈடு படாதீர்கள்.

Monday, November 25, 2013

வில்லிபாரதம் - முன் நின்ற நெடுமாலே

வில்லிபாரதம் - முன் நின்ற நெடுமாலே 


துரியோதனனிடம் தூது போவதற்கு முன்னால் பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் கண்ணன் அவர்களின் எண்ணத்தை கேட்டு அறிகிறான்.

கடைசியில் பாஞ்சாலியிடம் வருகிறான்.....

"கண்ணா, இரணியன் தன் மகனான பிரகலாதனை வெகுண்டு தூணை போது அதில் இருந்து வெளிப்பட்டு பிரகலாதனை காத்தாய், வாய் பேச முடியாத யானை "ஆதி மூலமே " என்று அழைத்த போது வந்து காத்தவனே " என் மேல் கருணை இல்லையா என்று கேட்கிறாள் ...

பாடல்

சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த 
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்! 
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு 
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!

பொருள்

சாலக் = சிறந்த

கனகன் = பொன்னிறமான நிறம் கொண்ட இரணியன்

தனி மைந்தனை முனிந்த = தனித்துவமான மகனான பிரகலாதனை கோபித்த போது


காலத்து = அந்த நேரத்தில்

 அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்! = அவன் அறைந்த கல் தூணில் இருந்து வெளி வந்தாய்

மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு = ஆதி மூலமே என்று யானை உன்னை அழைத்த போது

நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே! = நீல மலை போல் முன் நின்ற நெடுமாலே


அவளுக்கு கண்ணன் என்ன சொன்னான் தெரியுமா ?