Sunday, April 6, 2014

பழமொழி - கற்றொறுந்தான் கல்லாத வாறு

பழமொழி - கற்றொறுந்தான் கல்லாத வாறு


முந்தைய பாடலில், இளமையில் கற்க வேண்டும் என்று பார்த்தோம்.

எப்படி கற்க வேண்டும் ?

அதை இந்தப் பாடல் விளக்குகிறது.

கற்றவர்கள் முன்னால் ஒன்றைச் சொல்லும் போது நமக்கு ஒரு பயமும், தயக்கமும் (சோர்வு) வரும் அல்லவா ? அந்த சோர்வு வராமல் இருக்க, கற்கும் போது நாம் இது வரை எதுவும் கற்கவில்லை என்று உணர்ந்து,  இதுவரை கற்காமல் விட்ட காலத்திற்காக வருந்தி, ஆழமாக சிந்தித்து, கடினமான முயற்சியுடன், கற்க வேண்டும். கற்கும் போது "இது   தான் எனக்குத் தெரியுமே " என்ற இறுமாப்போடு படிக்கக் கூடாது.

பாடல்

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.


பொருள் 


சொற்றொறும் = சொல் தோறும். ஒவ்வொரு முறை சொல்லும் போதும்

சோர்வு படுதலால் = சோர்வு உண்டாவதால். சரியாக சொன்னோமா, முழுவதுமாகச் சொன்னோமா, விளங்கும் படி சொன்னோமா என்ற சோர்வு

சோர்வின்றிக் = களைப்பு இன்றி

கற்றொறும் = கற்கும் ஒவ்வொரு சமயத்திலும்

கல்லாதேன் = நான் இன்னும் முழுமையாக கற்காதவன்

என்று = என்று

வழியிரங்கி = அதற்காக இரக்கப் பட்டு

உற்றொன்று = உள்ளத்தில் ஒன்றே ஒன்றை (concentration )

சிந்தித்து = சிந்தித்து

உழன்று = சிரமப்பட்டு

ஒன்(று) அறியுமேல் = ஒன்றை அறிய வேண்டும். எப்படி என்றால்

கற்றொறுந்தான்  = கற்கும் தொறும்

கல்லாத வாறு = கல்லாதவன் எப்படி கற்பானோ அப்படி கற்க வேண்டும்.

அடக்கம் வேண்டும். நாம் எல்லாம் அறிந்தவர்கள், இனி அறிய என்ன இருக்கிறது என்று  நினைக்காமல், நாம் ஒன்றும் அறியாதவர்கள் என்ற அடக்க உணர்வோடு கற்க வேண்டும்.



Saturday, April 5, 2014

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை

நீத்தல் விண்ணப்பம் - உடல் எனும் வலை 


விலங்குகளை வலை வைத்துப் பிடிப்பார்கள். வலையில் மாட்டிக் கொண்ட விலங்குகள்  அதில் இருந்து விடுபட துள்ளும், தவிக்கும், தாவும் என்னென்னவோ செய்யும். அது எவ்வளவு முயற்சி செய்கிறதோ, அந்த அளவு மேலும் வலையில் சிக்கிக் கொள்ளும். வலை வைத்தவன் மனது வைத்தால் ஒழிய அந்த விலங்கு வலையில் இருந்து விடு பட முடியாது.

அது போல

இந்த உடல் என்ற  வலையில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உடலில் உள்ள பொறிகள் நாளும் பலப் பல அனுபவங்கள் மூலம் நான் என்ற எண்ணத்தை மேலும் மேலும் வலுப்  படுத்துகிறது. பின், நான் என்ற அகம்பாவத்தில் இருந்து வெளி வர முடியாமல் தவிக்கிறோம்.

அதைத்தான் மாணிக்க வாசகர் சொல்கிறார் , ஒரு  கணம் கூட இந்த உடம்பு என்ற வலிமையான வலை தரும் துயரை பொறுக்க முடியாது என்கிறார்.

பாடல்


தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய
மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே,
தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.


பொருள் 

தனித் துணை நீ நிற்க =  தனிச் சிறப்பான துணையான நீ இருக்கும் போது


யான் = நான்

தருக்கி = தலைக் கனம் கொண்டு

தலையால் நடந்த = காலால் நடக்காமல் தலையால் நடந்த

வினைத் துணையேனை = வினைகளையே துணையாகக் கொண்ட  என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வினையேனுடைய = வினை உடையவனான என்

மனத் துணையே = மனதிற்கு துனையாணவனே

என் தன் வாழ் முதலே = என் வாழ்வின் முதலே. (போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பதும் அவர் வாக்கே )

எனக்கு = எனக்கு

எய்ப்பில்= நலிந்த நேரத்தில்

வைப்பே = (கிடைத்த ) சொத்தே

தினைத்துணையேனும் பொறேன் = சிறிது நேரம் கூட பொறுக்க மாட்டேன்

துயர் = துயர் தரும்

ஆக்கையின் = உடம்பின்

திண்  = வலிமையான

வலையே = வலையே 

பழமொழி - அப்புறம் படித்துக் கொள்ளலாம்

பழமொழி - அப்புறம் படித்துக் கொள்ளலாம் 


பதினெண் கீழ் கணக்கு நூல்களில் பழமொழி 400 என்ற நூல் உண்டு.

பழ மொழி என்பது அனுபவங்களின் சாரம். பல பேர் அனுபவித்து,  அதை ஒரு விதி போல சொல்லி, சொல்லி நாளடைவில் அது ஒரு நிரந்தர வாக்கியமாக மாறி விடுகிறது.

பழ மொழிகள் நமக்கு வாழ்க்கையை சொல்லித் தரும் அனுபவ பாடங்கள். யாரோ பட்டு , உணர்ந்து நமக்குச் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.

அப்படிப் பட்ட பழ மொழிகளை கடைசி வரியாக கொண்டு, அந்த பழ மொழி சொல்லும் செய்தியை முன் மூன்று அடிகளில் எடுத்து இயம்புவது பழமொழி 400 என்ற இந்த நூல்.

அதில் இருந்து சில பாடல்கள்....

மரம் போக்கி கூலி கொண்டார் இல்லை என்பது பழ மொழி.

 இதற்கு என்ன அர்த்தம் ?  இது என்ன சொல்ல வருகிறது ?


எவ்வளவோ படிக்க வேண்டியது இருக்கிறது. எங்க நேரம் இருக்கு, அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று நாளும் நாளும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

அப்புறம் எப்போது வருமோ தெரியாது.

இளமையில் படித்து விட வேண்டும். பின்னால் படித்துக் கொள்வோம் என்று எதையும் தள்ளிப் போடக் கூடாது.

நெடுஞ்சாலைகளில் போகும் போது சில இடங்களில் சுங்கம் தீர்வை (Excise  Duty , entry tax , toll charges ) போன்றவை  இருக்கும்.வண்டி அந்த இடத்தை கடக்கும் முன் அவற்றை வசூலித்து விட வேண்டும். வண்டியைப் போக விட்டு பின் வசூலித்துக் கொள்ளலாம் என்றால் நடக்காது.

அது போல, படகில் ஏறும்போதே படகு சவாரிக்கான கூலியை வாங்கிவிட வேண்டும். அக்கரையில் கொண்டு சேர்த்தப் பின் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் அக்கறை இல்லாமல் போய் விடுவார்கள் பயணிகள்.

காலாகாலத்தில் படித்து விட வேண்டும்.

பாடல்

ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

பொருள் 

ஆற்றும் = வழிப் படுத்தும்

இளமைக்கண் = இளமை காலத்தில்

கற்கலான் = கற்காமல்

மூப்பின்கண் = வயதான காலத்தில்

போற்றும் = படித்துக் கொளல்லாம்

எனவும் புணருமோ = என்று நினைக்கலாமா?

ஆற்றச் = வழியில்

சுரம்போக்கி = செல்ல விட்டு

உல்கு கொண்டார் = தீர்வை (toll , excise ) கொண்டவர்கள்

இல்லையே இல்லை = இல்லவே இல்லை

மரம்போக்கிக் = இங்கே மரம் என்றது மரத்தால் செய்யப்பட்ட படகை. படகில் பயணிகளை அக்கரை சேர்த்த பின் 

கூலிகொண் டார். = கூலி பெற்றவர் யாரும் இல்லை.

தள்ளிப் போடாமல் படியுங்கள்.


இந்த சமுதாயம் படிப்பிற்கு எவ்வளவு முக்கியத்வம் கொடுத்து இருக்கிறது என்று நினைக்கும்  போது பெருமை படாமல் இருக்க முடியவில்லை. 


Friday, April 4, 2014

திருக்குறள் - சொல்லின் கண் சோர்வு

திருக்குறள் - சொல்லின் கண் சோர்வு 


ஒருவனுக்கு ஆக்கமும், கேடும் எப்படி வருகிறது ?

அவன் பேசும் பேச்சால் வருகிறது.

யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எப்படி பேசுகிறோம், பேசுவது சரியா தவறா என்றெல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும்.

ஆக்கமும் கேடும் சொல்லின் சோர்வால் வரும் என்பதால் அதை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும்.


பாடல்

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் 
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

பொருள்

ஆக்கமுங் = ஆக்கமும்

கேடும் = கேடும்

அதனால் வருதலால் = அதனால் வருவதால்

காத்தோம்பல் = காத்து ஓம்புதல் வேண்டும்

சொல்லின்கட் சோர்வு. = சொல்லில் ஏற்படும் சோர்வு

மேலோட்டமான பொருள் இதுதான். 

சற்று ஆழமாக சிந்தித்தால் மேலும் பொருள் விரியும். 


முதலாவது, 

நல்ல சொற்களால் ஆக்கம் வரும் 

தீய சொற்களால் தீமை வரும். 

எனவே நல்லதைச் சொல்லி, தீயதை விலக்க வேண்டும். 


இரண்டாவது, 

சோர்வு எப்போது வரும் ? ஒரு வேலையை அளவுக்கு அதிகமாக செய்தால் சோர்வு வரும். அல்லது செய்யத் தெரியாமல் செய்தால் சோர்வு வரும்.  எனவே, அதிகம் பேசக் கூடாது, பேசத் தெரியாமல் பேசக் கூடாது. 

மூன்றாவது, 

சோர்வு என்ற சொல்லுக்கு மறதி என்று ஒரு பொருள் உண்டு.  முன்பு என்ன சொன்னோம்  என்று மறக்காமல் பேச வேண்டும். இல்லை என்றால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி ஏளனத்திற்கு உள்ளாக நேரிடும்.

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து 
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் 
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி 
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே

என்பது பிரபந்தம். (பெரியாழ்வார் பாசுரம்)




நான்காவது,

சோர்வு என்ற சொல்லுக்கு, சலிப்பு என்று பொருள் உண்டு.  அதிகம் பேசினால் பேசுபவருக்கு மட்டும் அல்ல கேட்பவருக்கும் சலிப்பு வரும். 

ஐந்தாவது, 



ஓம்புதல் என்றால் என்ன ? ஓம்புதல் என்ற சொல்லுக்கு காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல் என்று பல அர்த்தங்கள் உண்டு. 

சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும். ஒரு சொல்லை சொல்வதற்கு முன்னால் அது சரியானதுதானா என்று சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். மிக ஆழமான வார்த்தை. 

வெற்றியும் தோல்வியும் நாம் உபயோகப் படுத்தும் சொற்களில் உள்ளது. 

வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேச பழக வேண்டும். 

அது வெற்றிக்கு வழி வகுக்கும். 


Thursday, April 3, 2014

கம்ப இராமாயணம் - சிறிது இது என்று இகழாதே

கம்ப இராமாயணம் - சிறிது இது என்று இகழாதே 


சிலர் இருக்கிறார்கள் - என்ன கேட்டாலும் "அது ஒன்றும் பிரமாதமில்லை, எனக்கு அவனைத் தெரியும், எனக்கு இவனைத் தெரியும், நானாச்சு உனக்கு உதவி செய்ய, இறங்கு இதில் " என்று நம்மை இழுத்து விட்டு விடுவார்கள். பின் வெளியே வரத் தெரியாமல் கிடந்து தள்ளாடுவோம்.

இப்படி உசுபேத்தி உசுபேத்தி விட்டே உடம்பை இரணகளமாய் ஆக்கி விடுவார்கள்.

நல்ல நண்பர்கள் நமக்கு தகுந்த புத்திமதி சொல்லி, நாம் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வழி சொல்வார்கள்.

அனுமன், கடலைத் தாண்டுகிறான். செல்லும் வழியில் தேவர்கள் அவனுக்கு அறிவுரை தந்தார்கள்....

"அகத்தியர் குடித்த கடல்தானே என்று அலட்சியமாக இருந்து விடாதே. எச்சரிக்கையோடு இரு." என்று அவனுக்கு அறிவுரை பகர்ந்தனர்.

அனுமனும் அதை கேட்டுக் கொண்டான்.  

பாடல்

'குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல்
வெறுவிது; விசயம் வைகும் விலங்கல்-தோள் அலங்கல் வீர!
"சிறிது இது" என்று இகழற்பாலை அல்லை; நீ சேறி' என்னா,
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான், பொருப்பை ஒப்பான். 

பொருள்

'குறுமுனி = குள்ள முனிவர் , அகத்தியர்

குடித்த வேலை = வேலை என்றால் கடல். குடித்த கடல்

குப்புறம் கொள்கைத்து = பாய்ந்து கடக்க வேண்டியது

ஆதல் = ஆதல்

வெறுவிது;  = மட்திக்கத் தகாதது

விசயம் வைகும்  = வெற்றி குடியிருக்கும் 

விலங்கல்-தோள் = மலை போன்ற தோள்களில் 

அலங்கல் வீர! = மாலை அணிந்த வீரனே

"சிறிது இது" என்று இகழற்பாலை அல்லை; = இந்த கடல் என் ஆற்றலுக்கு சிறிது என்று  அதை இகழாமல்

 நீ சேறி'  = நீ செல்வாய்

என்னா, = என்று

உறு வலித் துணைவர் சொன்னார்;  = வலிமை உடைய நண்பர்கள் சொன்னார்கள்

ஒருப்பட்டான், = அதை சரி என்று ஒப்புக் கொண்டான்

பொருப்பை ஒப்பான். = மலையை போன்ற ஆற்றல் கொண்ட அனுமன்

நண்பர்கள் என்றால் அப்படி இருக்க வேண்டும். 

அது ஒரு புறம் இருக்க, அப்படிப்பட்ட நண்பர்களை நாம் தேர்ந்தெடுத்து கைக் கொள்ள வேண்டும். 

நாம் துன்பத்தில் இருக்கும் போது , எதையாவது சொல்லி நம்மை மேலும் துன்பத்தில் இழுத்து  விடும் நண்பர்கள் பற்றி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


Wednesday, April 2, 2014

திருக்குறள் - அறிவும் நட்பும்

திருக்குறள் - அறிவும் நட்பும் 


அறிவு என்ன செய்யும் ?

கணக்குப் போடுமா ? கவிதை எழுதுமா ?  பெரிய பெரிய காரியங்களைச் செய்யுமா ? ஒருவன் அறிவுடையவன் என்றால் அவன் என்னென்ன காரியங்கள் செய்வான் ?

அது தெரிந்தால் நாமும் அதுபோல செய்யலாம் ....

வள்ளுவர் சொல்லுகிறார் - நல்லவர்களை , உயர்ந்தவர்களை ஒன்றி இருக்கும் அறிவு. அப்படி சிறந்தவர்களை நட்பாகக் கொண்ட பின் , அதை விட்டு விலகாமல் இருக்கும்.

பாடல்

உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங் 
கூம்பலு மில்ல தறிவு.

 சீர் பிரித்த பின்

உலகம் தழுவியது ஒட்பம் மலர்தலும் 
கூம்பலும் அல்ல அறிவு 


பொருள்

உலகம் = உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது நிகண்டு. உலகத்தில் உள்ள உயர்ந்தவர்களை, சிறந்தவர்களை, அறிவுள்ளவர்களை

தழுவியது = அவர்களோடு ஒன்றாக இருப்பது

ஒட்பம் = கூரிய அறிவு

மலர்தலும் = அப்படி நட்பு கொண்ட பின்

கூம்பலும் = அந்த  நட்பை விட்டு வில்குதலும்

அல்ல = செய்யாதது

அறிவு = அறிவு

அறிவுள்ளவன் எப்போதும் உயர்ந்தவர்களை சேர்ந்து இருப்பான். அப்படி சேர்ந்த பின் அவர்களை விட்டு விலக மாட்டான்.

நீரில் பூக்கும் தாமரை, அல்லி மலர்கள் ஒரு சமயம் பூக்கும், மறு சமயம் கூம்பும். மீண்டும் மலரும், பின்  வாடும்.

நல்ல நட்பு என்பது எப்போதும் மலர்ந்து இருக்கும்.

நீங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று ஒரு பட்டியல் இடுங்கள்.

அவர்களோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது ?  சில சமயம் நன்றாக இருக்கிறது...மற்ற சமயங்களில் கொஞ்சம் இழு பரியாக இருக்கிறதா ?

அப்படி என்றால் அது அறிவின்பாற்பட்ட செயல் அல்ல.

தேர்ந்தெடுங்கள்....யாரைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று.


அது அறிவின் முதற்படி.


நீத்தல் விண்ணப்பம் - உன்னை பிரிந்து அஞ்சி

நீத்தல் விண்ணப்பம் - உன்னை பிரிந்து அஞ்சி 


நம் புலன்கள்  தானே, நம்மால் கட்டுப் படுத்த முடியாதா என்று நாம் நினைக்கலாம்.  ஒன்றை கட்டுப் படுத்தினால் இன்னௌன்று வேறு பக்கம் இழுத்துக் கொண்டு ஓடும்.  ஒரு ஆசை போனால் இன்னொரு ஆசை வரும்.

பேராசை எனும் பிணியில் பிணிப்பட்டு என்பார் அருணகிரி.

அவை நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. நம்மோடு எப்போதும் போர் தொடுக்கின்றன.

அது வேண்டும்,  இது வேண்டும், என்று சதா சர்வ காலமும் நம்மை நச்சரித்துக் கொண்டே இருக்கின்றன.  அவை நம்மை படுத்தும் பாட்டை நாம் அறிந்து கொள்ளாவிட்டால் அவை இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஆடி ஓடி தளர்ந்து போவோம்.

என்னோடு சண்டை பிடிக்கும் புலன் வயப்பட்டு, உன்னை பிரிந்து அஞ்சி நின்றேன். ஒரு புறம் சண்டை போடும் புலன்கள். இன்னொரு புறம் உன் துணை இல்லாத தனிமை. இதற்கு நடுவில், இந்த அழகான பெண்கள். அவர்கள் மேல் உள்ள பற்றையும் விட முடியவில்லை.   சுடர் போல் ஒளி விடுபவனே, சுடுகாட்டுக்கு அரசனே, தொண்டர்களுக்கு அமுதம் போன்றவனே, அணுக முடியாதவனே, என் தனிமையை நீக்கும் துனையாணவனே, என்னை விட்டு விடாதே என்று உருகுகிறார் மணிவாசகர்.

பாடல்

அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல்நல் லார்அவர்தம்
விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேஎரியும்
சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே
தொடவரி யாய்தமி யேன்தனி நீக்கும் தனித்துணையே.

கொஞ்சம் சிக்கலான பாடல். சீர் பிரிப்போம்

அடர் புலனால் நின்னை பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே 
தொடர்வு அரியாய் தமியேன் தனி நீக்கும் தனித் துணையே.



பொருள்


அடர் புலனால் = அடுத்து வருகின்ற புலன்களால்

நின்னை பிரிந்து = உன்னை பிரிந்து (புலன்கள் பின்னால் போய் )

அஞ்சி = அச்சப் பட்டு

அம் சொல் = அழகிய சொல்

நல்லார் = நல்லவர்கள் (நல்ல பெண்கள் )

அவர் தம் = அவர்களின்

விடர் விடலேனை = தொடர்பை விட முடியாதவனை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விரிந்தே எரியும் = பரந்து சுடர் விட்டு எரியும்

சுடர் அனையாய் = சுடர் போன்றவனே

சுடுகாட்டு அரசே = சுடு காட்டு அரசே

தொழும்பர்க்கு அமுதே = தொழும் அடியவர்களுக்கு அமுதம் போன்றவனே 

தொடர்வு அரியாய் = தொடர முடியாதவனே, நெருங்க முடியாதவனே

தமியேன் = அடியவனான என்

தனி நீக்கும் = தனிமையை நீக்கும்

தனித் துணையே = ஒப்பற்ற துணையே
.
அவனல்லால் ஒரு துணை இல்லை. 


துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்பார் அபிராமி பட்டர். 

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.


என்பார் அருணகிரி நாதர் 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
  
என்பது நாவுக்கரசர் வாக்கு 

நீங்கள், உங்கள் துணை என்று எதை அல்லது யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? 

சேர்த்து வைத்த செல்வமும், கணவன் / மனைவி, பிள்ளைகள் எது துணை ?

உன் பற்று அல்லால் ஒரு பற்று அல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே என்று ஓலமிடுகிறார்  பட்டினத்தார்.