Friday, June 6, 2014

திருமந்திரம் - சீர்காழி வாருங்கள்

திருமந்திரம் - சீர்காழி வாருங்கள்


 வயது ஆகும். மூப்பு வரும். காலும் கையும் தளரும். ஆசையின் பின்னால் ஓடி ஓடி உடல் களைக்கும் , சலிக்கும்.

அன்போடு நம்மை கவனித்த மனைவி கூட நம்மை வெறுப்பாள். "கிழத்துக்கு வேற வேலை இல்லை...கொல்லு கொல்லு  என்று இருமிக் கொண்டு உயிரை வாங்குகிறது " என்று அவளும் சலிக்கும் நாள் வரும். மனைவின் அன்பு நிரந்தரம் அல்ல. மூப்பு வரும்போது வெறுப்பும் கூடவே வரும்.

மனைவியே அப்படி என்றால் பிள்ளைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்....

அந்த நாள் வரும் முன்னம் சீர்காழி வந்து சேருங்கள்...என்று வரவேற்கிறார்  திருமூலர்.

பாடல்

காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினா ரிகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.


பொருள்

காலினோடு =    கால்களோடு

கைகளும் =  கைகளும்

தளர்ந்து = தளர்ந்து

காம நோய்தனால் =  காம நோயினால்

ஏல = ஏலம் மணம் வீசும்

வார் = அழகாக வாரிய

குழலினார் = குழலினை உடைய பெண்கள் (மனைவி )

இகழ்ந்து = கேவலமாக திட்டி

உரைப்ப தன் முனம் = சொல்லவதற்கு முன்

மாலினோடு = திருமாலோடு

 நான்முகன் = பிரமனும்

மதித்தவர்கள் =  மதித்து அவர்கள்

காண்கிலா = காண முடியாத

நீலமேவு கண்டனார் = கழுத்தில் நீலம் கொண்ட அவர் (சிவன்)

நிகழ்ந்த = வாழும் , இருக்கும்

காழி = சீர்காழி

சேர்மினே = சேருங்கள்

உடல் அழகும், வனப்பும், வலிவும் நிரந்தரம் இல்லை.

மனைவி மக்கள் அன்பும் நிரந்தரம் இல்லை.

இவை எல்லாம் என்றும் இருக்கும் என்று நினைக்காதே என்று சொல்லி வைக்கிறார் திருமூலர்

இராமாயணம் - இராவணன் இருந்த இடம்

இராமாயணம் - இராவணன் இருந்த இடம் 


இராவணன் எங்கு இருந்தான் ?

தன்னுடைய அளவற்ற தவ வலிமையால் மூன்று உலகங்களிலும் ஆட்சி செய்த இராவணன், கரிய மேகம் போன்ற கரிய கண்களை கொண்ட பெண்களின் கண்கள் என்ற வெள்ளத்தில் வாழ்ந்தான்.

அவன் மேல் எப்போதும் பெண்களின் கண்கள் மொய்த்த வண்ணம் இருக்கும். ஓரிரண்டு கண்கள்  அல்ல ....கண்கள் என்ற வெள்ளம்.

பாடல்

 இருந்தனன் - உலகங்கள் இரண்டும் 
     ஒன்றும், தன் 
அருந் தவம் உடைமையின், 
     அளவு இல் ஆற்றலின் 
பொருந்திய இராவணன், 
     புருவக் கார்முகக் 
கருந் தடங் கண்ணியர் 
     கண்ணின் வெள்ளத்தே.

பொருள்

 இருந்தனன் = இருந்தான்

உலகங்கள் இரண்டும் ஒன்றும் = மூன்று உலகங்களிலும்

தன் அருந் தவம் உடைமையின் = தன்னுடைய அரிய பெரிய தவத்தால்

அளவு இல் ஆற்றலின் = அளவு இல்லாத ஆற்றலுடன்

பொருந்திய இராவணன் = கொண்ட இராவணன்

புருவக் = புருவம் என்ற

கார்முகக் = கரிய மேகம் மிதக்கும்

கருந் தடங் கண்ணியர் = கரிய பெரிய கண்கள் கொண்ட பெண்களின்

கண்ணின் வெள்ளத்தே = வெள்ளம் போன்ற கண்களில்

எவ்வளவு கண்கள் !


Thursday, June 5, 2014

ஐந்திணை ஐம்பது - புலி நகம் போன்ற பூக்கள்

ஐந்திணை ஐம்பது - புலி நகம் போன்ற பூக்கள் 


பூ எவ்வளவு மென்மையானது.

இரத்தம் தோய்ந்த புலியின் நகம் எவ்வளவு கொடூரமானது.

அந்த நகத்தை முருக்கம் மரத்தின் பூவுக்கு உதாரணம் சொல்லி நம்மை அதிர வைக்கிறாள் தலைவி.

தலைவனை பிரிந்த பின் அவளுக்கு எல்லாமே துன்பம் தருவனவாக இருக்கிறது. பூ கூட புலி நகம் போல இருக்கிறது.

அதை விடுத்து வானத்தைப் பார்க்கிறாள் - ஒரு மேகம் கூட. குளிர் தரும் மேகம் ஒன்று கூட இல்லாமல் வானம் வறண்டு கிடக்கிறது.

சரி அதையும் விடுவோம்...இந்த இளவேனில் காலமாவது அவளுக்கு கொஞ்சம் இதம் தருகிறதா என்றால், அதுவும் இல்லை. இந்த இனிமையான இள வேனில் காலமும் அவளை வருத்துகிறது.

தலைவனின் பிரிவு அவளை அவ்வளவு வாட்டுகிறது.

அந்த பிரிவின்  சோகத்தை,துன்பத்தை சொல்லும் பாடல் .....

பாடல்

உதிரங் துவரிய வேங்கை யுகிர்போ
லெதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்
கின்பம் பயந்த விளவேனில் காண்டொறுந்
துன்பங் கலந்தழிவு நெஞ்சு.


பொருள்

உதிரங் துவரிய = உதிரம் துவரிய = இரத்தம் தோய்ந்த 

வேங்கை = புலியின்

யுகிர் = உகிர் = நகம்

போல் = போல

எதிரி = பருவத்தோடு ஒன்றிய  

முருக்கரும்ப = முருக்க மலர்கள் அரும்ப

ஈர் = ஈரமான

தண் = குளிர்ந்த

கார் = கார்மேகம். கரிய மேகல

 நீங்க = நீங்கிப் போக

எதிருநர்க் = காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் எதிரில் இருந்து

கின்பம் = இன்பம்

பயந்த = தந்த

விளவேனில் = இள வேனில்

காண்டொறுந் = பார்க்கும் போது  எல்லாம்

துன்பங் கலந்தழிவு நெஞ்சு = துன்பம் கலந்து அழிகின்றது என் மனம்.

அவளின் பிரிவுத் துயரம் நம்மை ஏதோ செய்கிற மாதிரி இல்ல ?


இராமாயணம் - தையலார் நெடு விழியென கொடிய சரங்கள்

இராமாயணம் - தையலார் நெடு விழியென கொடிய சரங்கள் 





சூர்பனகை கரன் என்ற அரக்கனை அழைத்துக் கொண்டு இராமனோடு சண்டை இட வருகிறாள். கரன் பெரிய படையைக் கொண்டு வருகிறான். அந்த படைகளோடு இராமன் தனியனாக சண்டை இடுகிறான்.

அவன் கையில் இருந்து அம்புகள் புறப்பட்டு சரம் சரமாக சென்று  தாக்குகிறது. அந்த அம்புகள் மிகுந்த துயரத்தைத் தருகின்றன. எப்படி என்றால், பெண்ணின் கண்கள் போல. கூறிய அந்த கண்ணில் இருந்து புறப்படும் பார்வை எப்படி ஆண்களின் மனதை வாட்டுமோ அப்படி என்கிறார் கம்பர்.


பாடல்

கைகள் வாளொடு களம் பட,
     கழுத்து அற, கவச
மெய்கள் போழ்பட, தாள் விழ,
     வெருவிட, நிருதர்
செய்ய மாத் தலை சிந்திட,
     திசை உறச் சென்ற-
தையலார் நெடு விழி எனக்
     கொடியன சரங்கள்


பொருள்

கைகள் = எதிரிகளின் கைகள்

வாளொடு = வாளோடு

களம் பட = நிலத்தில் விழ

கழுத்து அற = கழுத்து அறுபட்டுப் போக

கவச மெய்கள் போழ்பட = கவசம் அணிந்த உடல்கள் இரண்டாகப் பிளக்க

தாள் விழ =  கால்கள் துண்டாகி விழ

வெருவிட, நிருதர் = நிருதர் வெருவிட = அரக்கர்கள் அஞ்ச

செய்ய மாத் தலை சிந்திட = சிவந்த பெரிய தலைகள் சிந்தி விழ

திசை உறச் சென்ற = அனைத்து திசைகளிலும் சென்றன

தையலார் நெடு விழி எனக் = பெண்களின் நீண்ட கண்கள் போல

கொடியன சரங்கள் = கொடுமையான அந்த அம்புகள்


பெண்ணின் கண்கள் என்ன அவ்வளவு கூர்மையா ? அது வாட்டி வதைக்குமா ?

பார்த்தவர்களுக்குத்  தெரியும்.அடி பட்டவர்களுக்குத் தெரியும். ...:)


கலிங்கத்துப் பரணி - மார்பில் துயில்வீர்

கலிங்கத்துப் பரணி - மார்பில் துயில்வீர் 


கணவனோடு கூடி இருந்த மயக்கம் தீராமல், விடிந்தது கூடத் தெரியாமல், அவன் மார்பின் மேலேயே படுத்து உறங்கும் பெண்களே, கதவைத் திறவுங்கள்.

பாடல்


போக அமளிக் களிமயக்கில்
     புலர்ந்த தறியா தேகொழுநர் 
ஆக அமளி மிசைத்துயில்வீர் 
   அம்பொற் கபாடம் திறமினோ.

பொருள்

போக = இன்பம் தரும்

அமளிக் = போர்

களிமயக்கில் = மிகுந்த மயக்கத்தில்

புலர்ந்த தறியா தே = பொழுது புலர்ந்ததை அறியாமல்

கொழுநர் = கணவரின்

ஆக = மார்பு என்ற

அமளி = படுக்கை

மிசைத்துயில்வீர் = மேல் துயில்வீர்

அம் = அந்த

பொற்  =பொன்னாலான

கபாடம் திறமினோ = கதவைத் திறவுங்கள்


Wednesday, June 4, 2014

பழமொழி - மரம் வெட்டும், மயிர் வெட்டுமா ?

பழமொழி - மரம் வெட்டும், மயிர் வெட்டுமா ?


பிறர் மேல் அன்பு, கருணை, ஏழைகளுக்கு இரங்குதல் , தானம் செய்தல் , பசித்தவர்களுக்கு உதவுதல் போன்றவை படித்து வராது. அது ஒரு இயற்கை குணம்.

இன்னும் சொல்லப் போனால், படிக்க படிக்க , எதிர் காலம் பற்றிய பயமும், எவ்வளவு செல்வம் சேர்த்துவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே போகும். அதனால் தான் பெற்ற செல்வத்தை மற்றவர்களுக்குத்  தர வேண்டும் என்ற எண்ணம் குறைந்து கொண்டே போகும்.

படிக்காதவர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு படித்தவர்களிடம் இருப்பது இல்லை.

கோடாலி வலிமையான ஆயுதம் தான். அதை வைத்து  பெரிய பெரிய மரங்களை வெட்டி வீழ்த்தி  விடலாம். அவ்வளவு பெரிய மரத்தையே வெட்டுகிறது, இந்த முடியை வெட்டாதா என்று யாரும் கோடாலியால் முடி வெட்டிக் கொள்வது இல்லை.

முடி வெட்ட  சின்ன,  மிகக் கூர்மையான கத்தி வேண்டும்.

அது போல கற்றறிவு பெரிய பிரச்சனைகளை சரி செய்ய  உதவினாலும், இரக்கம் கருணை இதுவெல்லாம்  அதில் இருந்து வராது.

பாடல்

பெற்றாலும் செல்வம்பிறர்க்கீயார் தாந்துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர!
மரங்குறைப்ப மண்ணா மயிர்.


பொருள்

பெற்றாலும் = செல்வத்தை பெற்றாலும்

செல்வம் = அந்த செல்வத்தை

பிறர்க்கீயார் = பிறருக்குத் தர மாட்டார்கள்

தாந்துவ்வார் = தாங்களும் அனுபவிக்க மாட்டார்கள். வங்கியில்  வைப்பார்கள். கடன் பத்திரம் (Fixed Deposit ) வாங்குவார்கள்.

கற்றாரும் = படித்தவர்கள்

பற்றி இறுகுபவால் = பணத்தை இறுகப் பற்றிக் கொள்வார்கள்

கற்றா = கன்றை ஈன்ற பசு

வரம்பிடைப் = வயல் வரப்பில்

பூமேயும் = பூக்களை உண்ணும்

வண்புனல் ஊர! = நிறைந்த நீர் வளம் கொண்ட ஊரை   உடையவனே

மரங்குறைப்ப = மரத்தை குறைக்க (வெட்ட)  பயன்படும் கோடாலி

மண்ணா மயிர்.= முடி வெட்ட பயன் படாது


கோயில் மூத்த திருப்பதிகம் - அழுவது அன்றி வேறு என் செய்வேன் ?

கோயில் மூத்த திருப்பதிகம்  - அழுவது அன்றி வேறு என் செய்வேன் ?


திருவிழா கூட்டத்தில் ஒரு குழந்தை பெற்றோரைத் தவற விட்டு விட்டது. அவர்களை எப்படி அடைவது என்று தெரியவில்லை. ஓ என்று அழுகிறது. அந்த அழுகுரல் கேட்டு அதன் பெற்றோர் வந்து அதனை கண்டு கொள்வார்கள் என்று நினைக்கிறது.

அழுவதைத் தவிர அதற்கு வேறு ஒன்றும் தெரியவில்லை. பெற்றோர்கள் எங்கு இருப்பார்கள், அவர்களை எப்படி அடைவது என்று ஒன்றும் தெரியவில்லை. யாரிடம் போய் கேட்பது ? திகைத்து அழுகிறது குழந்தை.

அந்த குழந்தையைப்  போல அழுகிறேன் என்கிறார் மணிவாசகர்.

"முழு முதலே. எனது ஐந்து புலன்களுக்கும், மூன்று தேவர்களுக்கும், எனக்கும், வாழ்வின் வழி காட்டுபவனே, உன் அடியார்கள் திரண்டு உன்னிடம் வந்து இருக்கிறார்கள்.  எனக்கு எப்போது அருள் தருவாய் என்று நினைத்து அழுவதைத் தவிர வேறு என்ன என்னால் செய்ய முடியும், பொன்னம்பலத்தில் ஆடும் அரசனே"

பாடல்

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்றனக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்திரள் வான்குழுமிக்
கெழுமுத லேஅருள் தந்திருக் கஇரங் குங்கொல்லோஎன்
றழுமது வேயன்றி மற்றென்செய் கேன்பொன்னம் பலத்தரைசே.

பொருள்

முழு முதலே = முழுவதற்கும் முதலானவனே

ஐம் புலனுக்கும் = ஐந்து புலன்களுக்கும் 

மூவர்க்கும் = மூன்று தேவர்களுக்கும் 

என்றனக்கும் = எனக்கும்

வழி முதலே = வழிக்கு முதலானவனே

நின் = உன்

பழ வடியார் = பழைய அடியார்கள்

திரள் = திரண்டு

வான் குழுமிக் = வானில் குழுமி

கெழுமுத லே = சேர்ந்து இருக்கையில்

அருள் தந்திருக்க = அவர்களுக்கு நீ அருள் தந்து இருக்க

இரங்குங் கொல்லோ = என் மேல் எப்போது இரக்கம் கொள்வாய்

என் றழுமது வேயன்றி = என்று அழுவதுவே அன்றி

மற்றென் செய்கேன் = வேறு என்ன செய்வேன்

பொன்னம் பலத்தரைசே.= பொன் அம்பலத்தில் ஆடும் அரசே

பூஜை, புனஸ்காரம் எல்லாம் அவனை  சென்று அடைய  உதவாது. உதவும் என்றால் மணிவாசகர் ஏன் அழ வேண்டும். பேசாமல் பூஜைகள் செய்து இருக்கலாமே.

அழுதால் உன்னைப் பெறலாமே என்பதும் அவர் வாக்கு