Friday, July 4, 2014

திருக்குறள் - பிரிவும், ஏக்கமும்

 திருக்குறள் - பிரிவும், ஏக்கமும் 


அது வானம் பார்த்த பூமி. மழை வந்தால் தான் வாழ்க்கை. விவசாயம் செய்ய முடியும். பயிர் பச்சை  வளரும். கிணற்றில் நீர் சுரக்கும். மழை  வரவில்லை என்றால் வாழ்கையே இல்லை.

இந்த வருடம் ஏனோ மழை இன்னும் வரவில்லை. கோடை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு  இருக்கிறது.

செடிகளும் மரங்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு  இருக்கின்றன.

மக்களும், ஆடு மாடுகளும் நீர் இன்றி தளர்ந்து போகிறார்கள்.

ஒரு சொட்டு மழை விழாதா என்று எல்லோரும் வானம்  பார்த்து காத்து இருக்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் மழை வராவிட்டால் நிறைய உயிர்கள் போய்  விடும்.செடி கொடிகள் பட்டுப் போய் விடும். ஆடு மாடுகள் தாகத்தில் உயிர் விடும். மனிதர்கள் இடம் பெயர்ந்து போவார்கள்.

அந்த மழைக்கான ஏக்கம் புரிகிறதா ? அந்த தாகத்தின் ஆழம் புரிகிறதா உங்களுக்கு ?

அந்த தாகத்தை, ஏக்கத்தை காதலனின் பிரிவின் ஏக்கத்திற்கு உவமை சொல்கிறார்   வள்ளுவர்.

பாடல்

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 
வீழ்வா ரளிக்கும் மளி.

பொருள்

வாழ்வார்க்கு = மழையை நம்பி வாழ்வார்க்கு

வானம் பயந்தற்றால் = மழை எப்படி பயன் தருமோ அதுபோல

வீழ்வார்க்கு = காதலில் விழுந்தவர்களுக்கு

வீழ்வா ரளிக்கும் மளி = அவர்களின் துணை தரும் பயன்.

அளி என்ற சொல்லுக்கு பல அர்த்தம். அவை - அன்பு, அருள், வரவேற்பு,  குளிர்ச்சி,குழைதல், மிகுந்த அன்பினால் நெகிழ்தல், அறக் கனிதல் (ரொம்பவும் கனிந்து போதல், pining என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது போல) , கலத்தல் , ஒன்று சேர்த்தல்

மழை வருவதற்கு மக்கள் என்ன செய்ய முடியும் - ஒன்றும் செய்ய  முடியாது.எதிர்  பார்க்கலாம், வேண்டலாம் வேறு ஒன்றும் செய்ய முடியாது.  அது போல  அவளோ அவனோ வருவதற்கு ஒன்றும் செய்ய முடியாது. காத்திருக்க   வேண்டியதுதான்.

மழை வேண்டி காத்திருப்பது எவ்வளவு கடினம் - சூடு ஒருபுறம், தாகம் ஒரு புறம். நாக்கு வரளும் . கண் எரியும் . உடல் சோர்ந்து  போகும்.

மழையே வராவிட்டால் - உயிர் போகும்.

மழை வந்து விட்டால் - எவ்வளவு மகிழ்ச்சியாக  இருக்கும்.மண் வாசனை கிளம்பும். செடி கொடிகள் துளிர்க்கும். மொட்டு வரும். மலர் மலரும். சூடு தணியும். காற்று சுகமாக வீசும்.

 இதை விட பிரிவின் தவிப்பை சொல்ல முடியுமா - ஏழே   வார்த்தைகளில்



இராமாயணம் - நிலமகள் பொறுமை இல்லாதவள்

இராமாயணம் - நிலமகள் பொறுமை இல்லாதவள் 


பொறுமை.

பொறுமை என்றால் பொறுத்தல். மற்றவர்கள் செய்யும் பிழைகளை பொறுத்துக் கொள்ளுதல்.

ஏன் பொறுக்க வேண்டும் ? எனக்கு என்ன தலை எழுத்தா அவனவன் செய்கின்ற பிழைகளை பொறுக்க ? அததுக்கு அப்பப்ப குடுத்தா தான் எல்லோரும் ஒழுங்காக இருப்பார்கள் என்று நாம் எண்ணுவோம்.

அப்படி அல்ல.

பொறுமைக்கு என்று ஒரு அதிகாரமே வைத்து இருக்கிறார் வள்ளுவர் - அறத்துப் பாலில்.

கணவனோ, மனைவியோ, நண்பர்களோ, பிள்ளைகளோ, உறவினரோ, அலுவகலத்தில் யாருமோ ஏதோ பிழை செய்யல்லாம். பொறுமையாக இருந்தால் அதன் பலன் மிகப் பெரியது என்கிறார் வள்ளுவர்.

நல்ல குணங்களை நல்ல பாத்திரங்களின் மேல் ஏற்று சொல்லுவது இலக்கிய மரபு.

சீதை, பொறுமையின் சிகரம்.

பொறுமைக்கு உதாரணம் என்றால் நிலமகளை சொல்லுவது வழக்கம்.

அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொருத்தல் தலை என்பார் வள்ளுவர்.

ஆனால், "இது எல்லாம் ஒரு பொறுமையா ...இதெல்லாம் ஒரு பொறுமையே இல்லை " என்று சொல்லும் அளவுக்கு பொறுமை வாய்ந்தவள் சீதை.  சீதையின் பொறுமையின் முன்னால் நில மகளின் பொறுமை ஒன்றும் இல்லையாம்.


விடிகாலை.

பறைவகள் எல்லாம் கூட்டை விட்டு இரை தேடி கிளம்பி விட்டன.

அவை அங்கும் இங்கும் அலைகின்றன.

அதை பார்த்த இராமனுக்கு, அந்த பறவைகள் சீதையை காணாமல் தான் அங்கும் இங்கும் அலைவதைப் போல தோன்றியதாம்.


பாடல்

நிலம் ‘பொறை இலது ! ‘என நிமிர்ந்த கற்பினாள்
நலம் பொறை கூர்தரு மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில் கடிது போயினார்.

பொருள்

நிலம் ‘பொறை இலது ! ‘என = நிலமகள் பொறுமை இல்லாதவள் என்று கூறும் அளவுக்கு பொறுமை உள்ள சீதை

நிமிர்ந்த கற்பினாள் = உயர்ந்த கற்புள்ளவள்

நலம் =நலத்தை தரும்

பொறை கூர்தரு = பொறுமையை கைக் கொண்ட

 மயிலை நாடிய = மயில் போன்ற சீதையைத் தேடி

அலம்புறு = அங்கும் இங்கும் அலையும்

பறவையும் = பறவைகளும்

அழுவவாம் எனப் = அழுதன என்று

புலம்புறு விடியலில் = புலம்பும் விடியலில்

கடிது போயினார். = விரைந்து போனார்கள் (இராமனும் இலக்குவனும் )


Thursday, July 3, 2014

இராமாயணம் - கவந்தன் - ஒரு அறிமுகம்

இராமாயணம் - கவந்தன் - ஒரு அறிமுகம் 


கவந்தன் வதைப் படலம் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

காப்பியத்தில் ஒவ்வொரு கதா பாத்திரமும் ஏதோ ஒன்றை சொல்லி நிற்கின்றன.

பொதுவாகவே அரக்கர்கள் அழிக்கப் படும்போது நிகழ்வது என்ன என்றால், அவர்கள் தங்கள் சாபம் தீர்ந்து, அழித்த அந்த பரம் பொருளை வணங்கி விண்ணுலகு செல்வார்கள்.

என்ன அர்த்தம்?

எல்லா மனிதர்களுக்குள்ளும் அரக்க குணம் நிரம்பிக் கிடக்கிறது. அந்த அரக்க குணம் தலை விரித்து ஆடுகிறது...காமம், குரோதம், மதம், மாச்சரியம், பொறாமை, பேராசை என்ற பல அரக்க குணங்கள், அசுர குணங்கள் தலை விரித்து ஆடுகின்றது.

நான் என்ற அந்த உடல் அழியும் போது அவர்களின் உண்மையான தெய்வ வடிவம்  பெறுகிறார்கள்.

அரக்கர்கள் என்றால் ஏதோ  கருப்பா,குண்டா , பெருசா இருப்பார்கள் என்று நினைக்கக்  கூடாது.

நாம் தான்  அரக்கர்கள்.

நமக்குள் இருப்பதுதான் அரக்க குணம்.

கவந்தன் என்று ஒரு  அரக்கன்.  அவனிடம் உள்ள கெட்ட குணம் அளவுக்கு அதிகமாக உண்பது. அளவுக்கு அதிகமான எதுவும் அரக்க குணம்தான்.

இராவணனுக்கு காமம் தலைக்கு  ஏறியது.

கவந்தனுக்கு உணவு மேல்  ஆசை.பெருந்தீனி  உண்பவன்.

வாயில் போட்டு, அரைத்து உண்டு, அது வயிற்றிற்கு போவது கூட அதிக நேரம் ஆகும் என்று, அவனுக்கு வாய் வயிற்றிலேயே இருக்குமாம்.

வயிற்றிடை வாயன் என்று பெயர்.

உணவை எடுத்து அப்படியே வயிற்றிலேயே போட்டுக் கொள்வான். வாய் தான்  வயிற்றில் இருக்கிறதே.

அதிமான உணவு உண்டதால் உடல் பெருத்து, புத்தி மழுங்கி பலப் பல தீய செயல்களை  செய்கிறான். வரும் நாட்களில் அவனைப் பற்றி அறிவோம்.

காப்பியங்கள் நிகழ்வுகளை கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்லும். நிகழ்வுகளுக்கு பின் இருக்கும்  செய்தியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கொட்டிக் கிடக்கிறது புதையல். வேண்டுமட்டும் அள்ளிக் கொள்வோம்.


Wednesday, July 2, 2014

இன்னிலை - அறம் கேட்ட பேய்

இன்னிலை - அறம் கேட்ட பேய் 


பாரதப் போரின் தொடக்கத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தான். அதை அங்கிருந்த பேய் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தது. கீதையை கேட்ட பேய் அதனால் பயன் பட்டு உயர் நிலை அடைந்தது என்று ஒரு கதை உண்டு.

கீதை பேய்க்கு சொன்னதில்லை. இருந்தும், யாருக்கோ சொன்ன அற உரைகளை கேட்டு பேய் உயர்வடைந்தைப் போல நீங்களும் அற நூல்களைப் படித்து பயன்  பெறுங்கள்.

பாடல்

அன்றமரிற் சொற்ற வறவுரைவீழ் தீக்கழுது
மன்று யர்ந்து போந்த வகைதேர்மின்-பொன்றா
அறமறிந்தோன் கண்ட வறம்பொருள்கேட் டல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.

சீர் பிரித்த பின்

அன்று அமரில் சொன்ன அற  உரை வீழ் தீக்கழுது
மன்று உயர்ந்து போந்த வகை தேர்மின்-பொன்றா
அறம் அறிந்தோன் கண்ட வறம் பொருள் கேட்டல்லன்
மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு.


பொருள்

அன்று = அன்று, பாரதப் போர் நடந்த அன்று

அமரில் = போரில்

சொன்ன அற  உரை = சொல்லப்பட்ட அற உரைகளை (கீதையை)

வீழ் தீக்கழுது = கேட்ட பேயானது

மன்று உயர்ந்து போந்த வகை = மன்று என்றால் மன்றம். உயர்ந்தவர்கள் வாழும் இடம். சொர்க்கம். பேய் சொர்க்கம் போன வகை.

தேர்மின் = ஆராய்ந்து அறியுங்கள்.

பொன்றா = குறையாத

அறம் அறிந்தோன் = அறத்தினை அறிந்தவன் ( பெரியவர்கள்,)

கண்ட வறம் பொருள் கேட்டல்லன் = கண்டு சொன்ன அறத்தின் பொருளை கேட்டு அறிந்து , துன்பம் நீங்கி

மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு = அறம் அல்லாத (மறம் ) வாழ்கையை ஒறுத்து (வெறுத்து ஒதுக்கி)  வாழும் வகையை கடை பிடிக்க வேண்டும்.


ஒரு பேய் அறம் கேட்டு  உய்யும் என்றால் நாம் எந்த விதத்தில் அந்த பேயைவிட தாழ்ந்து போனோம் ? நாமும் அற நூல்களை படித்து பயன் பெறலாம் - பயன் பெற வேண்டும்.

அறம் அறம் என்று நம் இலக்கியங்கள் அரற்றுகின்றன.

எங்கு சென்றாலும், எந்த  இலக்கியத்தை பிரித்தாலும்  அறத்தின் சாயலை பார்க்கலாம்.

நம் இலக்கியங்கள் அறத்தை மிக வலியுறுத்துகின்றன.

சில தலைமுறைகள் அறம் என்றால் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து  வருகின்றன.

இலக்கியங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இளம் வயதில் அறத்தினை மனதில் ஏற்றி விட்டால் பின் அது மாறாது.

கொஞ்சம் வளர்ந்த பின் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். அதற்கு முன் அறத்தை போதிக்க வேண்டும்  குழந்தைகளுக்கு.

அறம் செய்ய விரும்பு என்று ஆரம்பித்தாள் ஔவை.

இவற்றை எப்படியாவது இந்தத் தலை முறைக்கு சொல்லித் தரவேண்டும்.

ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம்.







Tuesday, July 1, 2014

ஐந்திணை ஐம்பது - கூத்தாடி உண்ணினும் உண்

ஐந்திணை ஐம்பது  - கூத்தாடி உண்ணினும் உண்

சங்கப் பாடல்கள் என்றாலே ஏதோ காதல், பிரிவு, என்று மட்டும் தான் இருக்கும் என்று இல்லை.

கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் ஒரு சலிப்பினை, குடும்பத்தில் நடக்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது இந்தப் பாடல்.

அவள் நல்ல அழகி தான். அவனும் அவளும் திருமணம் செய்து கொண்டார்கள். வாழ்கை சொர்கமாக இருந்தது.

சிறிது காலம் கழித்து அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவளின் உடல் கட்டு தளர்ந்து போனது. அழகு குறைந்தது. அவனுக்கு அவள் மேல் இருந்த ஆர்வம் குறைந்தது. நாளடைவில் மற்ற பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படத்  தொடங்கியது. சுகம் நாடி அந்தப் பெண்களின் பின்னால் போக ஆரம்பித்து விட்டான்.

அது அவளுக்குத் தெரிய வந்தது.

ஒரு நாள் அவனுடைய நண்பன் அவனைத் தேடி வீட்டுக்கு வந்தான்.

அவனிடம் வருந்தி , அந்த நண்பன் கூட தலைவனுக்கு நல்லது சொல்லி திருத்தவில்லையே என்ற கோபத்திலும் அவள் சொன்னாள்

"...என் கழுத்தைக் கட்டிக் கொள்ள மகன் பிறந்து விட்டான். அவன் என்னிடம் பால் குடிக்கிறான். எனக்கு வயதாகி விட்டது. நல்ல கட்டு கோப்பாக உள்ள  அந்த மாதிரி பெண்கள் உள்ள இடங்களுக்கு அவன் போய் தண்ணி அடிக்க ஆரம்பித்து விட்டான். அவனிடம் போய் சொல். இல்லை என்றால் நீயும் அங்கே போய் கூத்தடி ...இங்கே வராதே "

என்று கதவை தாழிட்டாள்

பாடல்

போத்தில் கழுத்திற் புதல்வ ணுணச்சான்றான்
மூத்தே மினியாம் வருமுலையார் சேரியு
ணீத்துநீ ரூனவாய்ப் பாண!நீ போய்மொழி
கூத்தாடி யுண்ணினு முண்.

சீர் பிரித்த பின்

போத்தில் கழுத்தில் புதல்வன் உண்ணச் சான்றான் 
மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியில் 
நீ நீத்து நீர் ஊன் வாய் பாண ! நீ போய் மொழி 
கூத்தாடி உண்ணினும் உண் 

பொருள்

போத்தில் = பொழுது இல்லை

கழுத்தில் = கழுத்தில்...என்னை கழுத்தோடு கட்டிக் கொள்ள பொழுது இல்லை

புதல்வன் = மகன்

உண்ணச் = முலை உண்ணத்

சான்றான் = தொடங்கி விட்டான்

மூத்தேம் இனி யாம் = வயதாகி விட்டது எனக்கு

வரு முலையார் = வளருகின்ற இளமையான முலையை உடைய பெண்கள் உள்ள

சேரியில் = சேரியில்

நீ = நீ

நீர் = கள் குடித்து

 ஊன் வாய் = ஊன் (மாமிசம் ) உண்டு

பாண ! = பாணனே

நீ போய் மொழி = நீ போய் சொல்லு. இல்லை, உன்னை நம்ப முடியாது . அங்க போனவுடன் எல்லாவற்றையும் மறந்து விட்டு, நீயும் அந்த பெண்கள் பின்னால் போய் விடுவாய்


கூத்தாடி உண்ணினும் உண் = சொன்னா சொல்லு, இல்லேன்னா அங்கேயே போய் கூத்தடி

பெண்ணின் இயலாமை ... பிள்ளை பெற்ற பின் இளமை அழிவதனால் வரும் சோகம், கணவன் தன் மேல் அன்போடு இல்லையே என்ற ஏக்கம்....பாணன் மேல் வரும் கோபம், அழகான அந்த மாதிரி பெண்களின் மேல் பொறாமை என்று அனைத்தும் கலந்த உணர்ச்சி குவியலான பாடல்


ஆண்கள் அந்த காலத்திலும் அப்படித்  தான் இருந்திருக்கிறார்கள்.

பெண்கள் சகித்திருக்கிரார்கள்




இராமாயணம் - தனிமையின் இனிமை

இராமாயணம் - தனிமையின் இனிமை 


இராம இலக்குவனர்களுக்கு மெய் நெறியைச் சொன்ன பின், சவரி தன் உடலை துறந்து அந்த தனிமையான இனிமையை அடைந்தாள் . நினைத்த நேரத்தில் உடலை துறக்க முடிந்தது. உடலை துறக்க முடியும் என்றால் எது உடலை துறக்கும் ?

இராமனும் இலக்குவனும் இதை எல்லாம் படித்து  இருக்கிறார்கள்.ஆனால் பார்த்தது இல்லை. முதன் முறையாக யோகத்தின் பலத்தால் எப்படி உடலை நினைத்த மாத்திரத்தில் துறக்க முடிகிறது என்று கண்டு அளவில்லா வியப்பு அடைந்தார்கள். அதைக் கண்ட அவர்களின் மனத்திலும் பெரிய மகிழ்ச்சி. ஒரு துள்ளலோடு அவர்கள் சவரி  காட்டிய வழியில் சென்றார்கள்.


பாடல்

பின், அவள் உழந்து பெற்ற 
     யோகத்தின் பெற்றியாலே 
தன் உடல் துறந்து, தான் அத் 
     தனிமையின் இனிது சார்ந்தாள்; 
அன்னது கண்ட வீரர் அதிசயம் 
     அளவின்று எய்தி, 
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப, 
     புகன்ற மா நெறியில் போனார்.

பொருள்

பின், = அதன் பின்

அவள் உழந்து பெற்ற = அவள் முயன்று பெற்ற

யோகத்தின் பெற்றியாலே = யோகத்தின் பலனால்

தன் உடல் துறந்து = தன் உடலை துறந்து

தான் = அவள்

அத் தனிமையின் இனிது சார்ந்தாள் = அந்த தனிமையின் இனிமையை அடைந்தாள்

அன்னது = அதைக்

கண்ட வீரர் = கண்ட இராம இலக்குவனர்கள்

அதிசயம் அளவின்று எய்தி = அளவற்ற அதிசயம் அடைந்தனர்

பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப = பொன் போன்ற அடிகளில் அணிந்த கழல்கள் சப்திக்க

புகன்ற மா நெறியில் போனார் = சொன்ன பெரு வழியில் சென்றனர்


யோகம் செய்தது சவரி.

உடலை துறந்து தனிமையான இனிமை கண்டது சவரி.

அதைக் கண்ட இராமனுக்கும் இலக்குவனுக்கும் பெரிய மகிழ்ச்சி. ஏன் ?

மனிதன் யோகத்தின் உச்சியை தொடும்போது இறைவன் மகிழ்கிறான். 

இறைவன் மகிழ்கிறான் என்றால் உயிர்கள் அனைத்தும் மகிழ்கின்றன என்று பொருள். 

பிறவியின் நோக்கம், யோகத்தின்  பலனை அடைவது. 

சவரி அடைந்தாள் . இராமன் மகிழ்ந்தான். 

இறைவனும், இயற்கையும் மகிழ வேண்டுமானால் யோகத்தின் உச்சம் தொடுங்கள். 

இராமாயணம் - உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான்

இராமாயணம் - உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான்


சில சமயம் சிறு பிள்ளைகள்  தங்கள் ஆசிரியரிடமோ அல்லது பெற்றோரிடமோ வந்து தாங்கள் புதியதாய் கற்றுக் கொண்ட ஒன்றைப் பற்றி சொல்லுவார்கள்....ஆசிரியரோ பெற்றோரோ .."அப்படியா, அது எப்படி" என்று ஆச்சரியமாக ஒன்றும் தெரியாதவர்கள் போல கேட்பார்கள். பிள்ளைகளுக்கு இன்னும் மகிழ்ச்சி. பிள்ளைகளின் அறிவைக் கண்டு பெரியவர்களுக்கு மகிழ்ச்சி.

அது ஒரு புறம் இருக்கட்டும்

இராமனுக்கு உபசாரம் எல்லாம் செய்த பின், சவரி முக்தி அடையும் வழிகளை இராமனுக்கு எடுத்துச் சொன்னாள். அவள் சொன்னதை எல்லாம் இராமன் கேட்டுக் கொண்டான்.

அப்படி கேட்டுக் கொண்டவன் யார் தெரியுமா ?

கல்வி கேள்விகளில் சிறந்த பெரியவர்கள், அவர்கள் உணர்வில் அனுபவிக்கும் அமிர்தத்தின் சுவை போல இருந்த இராமன்.

அமுதம் என்றால் ஏதோ ஒரு வகை உணவு பதார்த்தம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதை உண்டால் மரணத்தை வெல்லலாம் என்றும் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால் கம்பன் சொல்கிறான் அமிர்தம் என்பது ஏதோ உண்ணும் பண்டம் அன்று. அது வாயால் உண்ணும் பண்டம் அன்று. உணர்வால் உண்ணும் பண்டம். உணர்ந்து அறிய வேண்டிய ஒன்று.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்பார் மணி வாசகர்

"உலகெலாம் உணர்ந்து ஓதர் கரியவன் "  என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்

 அப்படி உணர்வில் உண்ணும் அமுதின் சுவை போல இருந்தான் இராமன்.

பாடல்


வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி 
     வெளியிற்று ஆகக் 
காட்டுறும் அறிஞர் என்ன, 
     அன்னவள் கழறிற்று எல்லாம் 
கேட்டனன் என்ப மன்னோ - 
     கேள்வியால் செவிகள் முற்றும் 
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் 
     சுவையாய் நின்றான்.


பொருள்

வீட்டினுக்கு = வீடு பேற்றினை அடைவதற்கு

அமைவது ஆன மெய்ந்நெறி = அமைந்த உயர்ந்த வழிகளை

வெளியிற்று ஆகக் = வெளிப்படையாக தெரியும்படி

காட்டுறும் அறிஞர் என்ன = காட்டுகின்ற அறிஞர்களைப் போல

அன்னவள் கழறிற்று எல்லாம் = அவள் கூறியவற்றை எல்லாம்

கேட்டனன் என்ப மன்னோ = கேட்டான்

கேள்வியால் = கேள்விகளால் 

செவிகள் முற்றும் தோட்டவர் = காதுகள் துளைக்கப் பெற்றவர்கள்

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் 
தோட்கப் படாத செவி

என்பது வள்ளுவம். 

(அது என்ன தோட்கப் படாத செவி (துளைக்கப் படாத செவி). ? அது பற்றி பின்னொரு சமயம் சிந்திப்போம்).  

உணர்வின் உண்ணும் அமுதத்தின் = உணர்வில் உண்ணும் அமுதத்தின்

சுவையாய் நின்றான் = சுவை போல நின்ற இராமன்