Friday, September 5, 2014

இராமாயணம் - ஊசி போன்ற அம்பு

இராமாயணம் - ஊசி போன்ற அம்பு 


உவமைகளில் கையாள்வதில் கம்பனுக்கு நிகர்  கம்பனே.

மறைந்து நின்று வாலி மேல் இராமன் அம்பை எய்து விடுகிறான். அந்த அம்புக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும்.

உவமை என்பது உவமேயத்தை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

இங்கே இராமனின் அம்புக்கு கம்பன் ஊசியை உதாரணம் சொல்கிறான்.  வாழைப் பழத்தில் செல்லும் ஊசி போல சென்றது என்று  சொல்லுகிறான்.

முதலில் பாடலையும் அதன் பொருளையும் பார்த்து விடுவோம். பின் அந்த உவமையின் நயத்தைப்  பற்றி  சிந்திப்போம்.


பாடல்

காரும் வார் சுவைக் கதலியின்
    கனியினைக் கழியச்
சேரும் ஊசியிற் சென்றது
    நின்றது என் செப்ப?
நீரும், நீர்தரு நெருப்பும், வன்
    காற்றும், கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன்
    உரத்தை அப் பகழி.


பொருள்

காரும் வார் சுவைக் = கனிந்த மிகுந்த சுவை மிக்க

கதலியின் = வாழைப் பழத்தின்

கனியினைக் = கனியினை

கழியச் சேரும் = ஊடுருவிச் செல்லும்

 ஊசியிற் சென்றது = ஊசி போல சென்றது
   
நின்றது = பின் நின்றது

என் செப்ப? = என்ன சொல்ல

நீரும், = நீரும்

நீர்தரு நெருப்பும் = நீரில் இருந்து தோன்றிய நெருப்பும்

வன் காற்றும் = வன்மையான காற்றும்

கீழ் நிமிர்ந்த பாரும் = கீழே உள்ள நிலமும் 

சார் வலி படைத்தவன் = அனைத்தின் வலிமையையும் படைத்தவன் (வாலி)

உரத்தை = வலிமையை

அப் பகழி = அந்த அம்பு

இதில் சில அருமையான விஷயங்கள் புதைந்து  கிடக்கிறது. தோண்டி   எடுப்போம்.

முதலாவது:

இராமனின் அம்புக்கு மின்னலை, இடியை, உதாரணம் சொல்லி  இருக்கலாம். கம்பனுக்குத் தெரியாத  உவமையா. ஒரு சிறிய ஊசிக்கு உதாரணம் சொல்லுகிறான்.  தவறான ஒரு காரியத்தை செய்யும் போது எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் கூனி குறுகிப் போவதைப் போல, அவ்வளவு பெரிய வலிமை மிக்க பானம், மறைந்து இருந்து செலுத்தப் பட்டதால் கூனி குறுகி ஊசி போல ஆகி விட்டது.  யாசகம் கேட்டு வந்த போது உலகளந்த பெருமாளே குறுகி மூன்றடி உள்ள வாமனனாகத்தானே வந்தான்.


இரண்டாவது:

நாம் தான் ஊசி வாங்கி வருகிறோம். நாம் தான் அதை கொண்டு தைக்கிறோம். இருந்தாலும் சில சமயம் அது நம் கையில் குத்தி விடுகிறது அல்லவா ? அது போல, இராமனின் பானம்தான் , விட்டதும் இராமன் தான். இருந்தாலும் அது அவனின்  புகழை குத்தியது என்று கம்பன் சொல்லாமல் சொல்கிறான்.

மூன்றாவது,

இராம பானம் இலக்கை தாக்காமல் விடாது. இராமனின் குறி தப்பாது. இங்கே இராமன் விட்ட அம்பு வாலியின் மார்பில் தைத்தது. தைத்த பின், அந்த அம்புக்கே ஒரு கணம் குழப்பம் வந்து விட்டது. நாம் செய்வது சரியா தவறா என்று. இது இராமன் செய்தது தானா ? வாலியை கொல்ல விட்ட அம்புதானா ? ஒரு நிராயுதபாணி மேலா இராமன் என்னை விடுத்தான் என்று தயங்கி நின்று விட்டது அந்த அம்பு.

"ஊசியிற் சென்றது,  நின்றது, என் செப்ப?"

வாலி பிடித்து நிறுத்தவில்லை. அதுவே தானாக  நின்று விட்டது.


நான்காவது;

ஒரு நல்லவன், உயர்ந்தவன், நாம் மரியாதை வைத்திருக்கும் ஒருவன், ஒரு தவறான  காரியத்தை செய்து விட்டான் என்று நாம் கேள்விப் பட்டால் நம் நிலைமை எப்படி இருக்கும் ? "அவனா, அப்படியா செய்தான்... என்னத்தச் சொல்ல ...இப்படியும் கூட நடக்குமா "என்று நாம் திகைத்து வாயடைத்துப் போவோம் அல்லவா. 

அது போல, இராமனின் அந்த செய்கையை கண்டு இராம பக்தனான கம்பனே வாயடைத்துப் போகிறான்.


என்னத்தச் சொல்ல என்று வாய் விட்டே புலம்புகிறார்.

"ஊசியிற் சென்றது  நின்றது என் செப்ப?"

நான் என்ன சொல்லட்டும் என்று கவிச் சக்ரவர்த்தியே திகைத்து நின்ற இடம். வார்த்தை  வரவில்லை.

ஐந்தாவது

இராமனின் பானத்தை ஊசிக்கு உவமை சொன்ன கம்பன், ஆரம்பத்தில் வாலியின்  மார்பை கனிந்த , சுவை மிகுந்த வாழைப் பழத்திற்கு உதாரணம் சொல்கிறான்.  பஞ்சு என்று சொல்லி இருக்கலாம். அவன் மனம் கனிந்தவன் , இனிமையானவன் என்று சொல்ல நினைத்த கம்பன் கனிந்த சுவை மிகுந்த வாழைப் பழத்தை  சொன்னான்.  அவனுக்கே சந்தேகம் வந்து விட்டது. ஒரு வேளை  மக்கள் வாலியின் மார்பு அப்படி ஒன்று வலிமையானது இல்லை என்று நினைத்து விடுவார்களோ என்று நினைத்து பின்னால் இரண்டு வரியைச் சேர்க்கிறான்.

நீரும், நீர்தரு நெருப்பும், வன்
    காற்றும், கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன்
    உரத்தை 


 நீர்,நெருப்பு, காற்று, நிலம், வானம் என்ற ஐந்து பூதங்களின் வலிமையை ஒன்றாகக் கொண்டவன் வாலி என்று அந்த ஐயத்தைப் போக்குகிறான்.

ஆறாவது

இப்போது இரண்டையும் ஒத்துப் பாருங்கள். ஒரு புறம் மிக மிக வலிமை மிக்க வாலி,  இன்னொரு புறம் ஊசி போன்ற சிறிய இராம பானம்.  எது உயர்ந்ததாகத் தெரிகிறது ?

எவ்வளவு அர்த்தம் செறிந்த பாடல் !





Thursday, September 4, 2014

திருவிளையாடல் - திட்டமிடுதலும் செயல் படுதலும் (Planning and Execution )

திருவிளையாடல் - திட்டமிடுதலும் செயல் படுதலும் (Planning and Execution )



வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அதை சரி செய்யுங்கள் என்று பாண்டிய மன்னன் மந்திரிகளுக்கு உத்தரவிடுகிறான். அவர்கள் எப்படி அதை செய்தார்கள் என்று ஒரே பாடல் விளக்குகிறது.

பாடல்


வெறித் தடக்கை மத யானை மந்திரிகள் வேறு வேறு
                                                  பல குடிகளும்
குறித்து எடுத்து எழுதி எல்லை இட்டு அளவு கோல்
                                                  கிடத்தி வரை கீறியே
அறுத்து விட்டு நகர் எங்கணும் பறை அறைந்து அழைத்து
                                                  விடும் ஆள் எலாம்
செறித்து விட்டு அவர்க்கு அளந்த படி செய்மின் என்று
                                                  வருவித்தனர்.



வெறித் = கோபமும் வீரமும் கொண்ட

தடக்கை = தும்பிக்கைகளை கொண்ட

மதயானை = மதயானைகளை கொண்ட

மந்திரிகள் - மந்திரிகள்

வேறு வேறு பல குடிகளும் - வேறு வேறான பல குடிகளை கொண்ட மக்களை

குறித்து எடுத்து எழுதி - குறிப்பு எடுத்து எழுதி

எல்லையிட்டு - யார் யார் எந்த இடத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எல்லை கோடுகளை வரைந்து

அளவு கோல் கிடத்தி  = அளவு கோலை (Scale ) வரை படத்தின் மேல் வைத்து 

வரைகீறி = எல்லைகளை வரைந்து 

அறுத்து விட்டு -   வரையறுத்து

நகர் எங்கணும் = ஊர் முழுவதும்

பறை அறைந்து = பறை சாற்றி அறிவித்து

விடும் ஆள் எலாம் செறித்து விட்டு - வேலை செய்யும் ஆட்களை எல்லாம் ஒன்றாக எல்லோரையும் ஓரிடத்தில் கொண்டு வந்து

அவர் அவர்க்கு அளந்தபடி செய்மின் என்று வருவித்தனர் - அவரவர்க்கு அளந்து கொடுத்த படி செய்யுங்கள் என்று கூறி அவர்களிடம் கூறினார்கள்


எவ்வளவு தெளிவான செயல் திட்டம்.

முதலில், மதுரையின் வரை படம் அவர்களிடம் இருந்திருக்கிறது.

இரண்டாவது, அவர்கள் வரை கோல் (scale ) வைத்திருந்திருக்கிறார்கள்

மூன்றாவது, யார் எந்த இடத்தில் வேலை செய்ய வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.

நான்காவது, தெளிவான அறிவிப்பு (communication ).

ஐந்தாவது, எல்லோரையும் ஓரிடத்தில் கொண்டுவந்து, அவர்களுக்கு அவர்கள் எங்கே வேலை  செய்ய வேண்டும் வரையறுத்து தருகிறார்கள். குழப்பம் இல்லாத  செயல் திட்டம்.

ஆறாவது, இப்படி வேலை நடக்கப் போகிறது என்று ஊர் எல்லாம் பறை அடித்து  அறிவிக்கிறார்கள். இப்படி வேலை செய்யப் போகிறவர்களுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு.

ஏழாவது, வேலைக்கு வேண்டிய ஆட்களை சேர்கிறார்கள் (resource mobilization ).

ஒரு பாடலுக்குள் எப்படி ஒரு அரசாங்கம் செயல் பட்டது என்று சொல்லி விடுகிறார்கள்.

எவ்வளவு ஆச்சரியமான அரசியல்.

தமிழ் இலக்கியத்தில் என்னவெல்லாம் இருக்கிறது.

மேலும் சிந்திப்போம்.




Wednesday, September 3, 2014

இராமாயணம் - சீதையின் காலில் விழுந்த இராவணன்

இராமாயணம் - சீதையின் காலில் விழுந்த இராவணன் 



அசோக வனத்தில் சிறை இருந்த சீதையிடம் தன் மனதின் காதலை எடுத்து பலவாறு சொல்கிறான் இராவணன்.

கடைசியில் அவள் காலில் விழுகிறான்.

இராமயணத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒரு நிகழ்வு. மிக அதிகமாக பேசப் படாத நிகழ்வு.

பாடல்

என்று உரைத்து, எழுந்து சென்று,
    அங்கு, இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தாலும் நேராக்
    குவவுத் தோள் நிலத்தைக் கூட,
மின்திரைத்து அருக்கன் தன்னை
    விரித்து மீன் தொகுத்தது ஒன்று
நின்று இமைக்கின்றது அன்ன
    முடி படி நெடிதின் வைத்தான்.


பொருள் 

என்று உரைத்து = என்று சொன்ன பின்

எழுந்து சென்று = எழுந்து சென்று

அங்கு = அங்கு

இருபது என்று உரைக்கும் = இருபது என்று சொல்லப்படும்

 நீலக் குன்று = நீல நிறக் குன்று என்று

உரைத்தாலும் = சொன்னாலும்

நேராக் = சரியாக இருக்காது. அதை விட சிறந்தது.

குவவுத் தோள்= திரண்ட தோள்கள்

நிலத்தைக் கூட = நிலத்தோடு சேர

மின்திரைத்து = மின்னல் சிதறும்

அருக்கன் தன்னை = சூரியன் தன்னை

விரித்து = கதிர்கள் போல் விரித்து

முன் தொகுத்தது = ஒன்றாக தொகுத்து வைத்து

ஒன்று நின்று = ஒன்றாகச் சேர்ந்து

இமைக்கின்றது அன்ன = இமைப்பது போல

முடி படி நெடிதின் வைத்தான் = முடி தரையில் படுமாறு நீண்ட நேரம் வைத்தான்

ஏதோ கடனுக்கு விழுந்து எழுந்தரிப்பது மாதிரி அல்ல. அவள் காலடியில் தன் தலையை நீண்ட நேரம் வைத்தான்.

இதை விட ஒருவன் எவ்வளவு கீழே இறங்கி வர முடியும்.





திரு விளையாடல் புராணம் - கடலில் சிக்கிய கலம் என

திரு விளையாடல் புராணம் - கடலில் சிக்கிய கலம் என 


ஒரு பிரச்னை என்று வந்து விட்டால், ஒரு தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறது திருவிளையாடல் புராணம்.

எப்படி இப்படி எல்லாம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.

வைகையில் வெள்ளம் வருகிறது.

இப்போது வந்தால் என்ன செய்வோம்...வராது....வந்தால் என்ன செய்வோம் ?

ஏறக்குறைய ஒன்றும் செய்ய மாட்டோம். கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு போகச் சொல்லுவோம், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவோம், மற்றபடி அந்த வெள்ளத்தை வேடிக்கை பார்ப்போம்.

இது அரசாங்கத்தின் வேலை என்று அவரவர் தங்கள் வேலையை பார்க்கப் போய் விடுவார்கள்.


ஆனால், இங்கே,பாண்டிய மன்னனும் , அமைச்சர்களும், மக்களும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

பாண்டியன், எல்லா அமைச்சர்களையும்  அழைக்கிறான். இராணுவ அமைச்சர்,நிதி அமைச்சர், உள் துறை அமைச்சர் என்று எல்லோரையும் அழைக்கிறான். அதுவும் ஒன்றாக அழைக்கிறான்.

இதை கவனிக்க வேண்டியது அமைச்சர்களின் வேலை, என்று ஜாலியாக  அந்தப்புரம்  போகவில்லை. எல்லோரையும் ஒருங்கே அழைத்து, வெள்ளத்தினை அடக்குங்கள் என்று கட்டளை இடுகிறான்.  வெள்ளம் வந்து விட்டது, எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்குப் போய் விடுங்கள் என்று அறிவிக்கச் சொல்ல வில்லை.

தெளிவான கட்டளை. "வெள்ளத்தை அடக்குங்கள்".

பாடல்

கருங்க டற்றிரை யிடைக்கி டந்துகழல் கலமெ னக்கன 
                                   முகடளாய்
வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர் மறுகி யுட்கமற 
                                  வேலினான்
ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை சுமந்தொ துக்கிவரு
                                    மோதநீர்ப்
பொருங்க தத்தினை யடக்கு வீரென வமைச்சருந் தொழுது
                                      போயினார்.

சீர் பிரித்த பின்

கருங் கடல் திரை இடை கிடந்து கழல் கலம் என கன 
                                   முகடு அளாய்
வரும் புனற் பரவையுள் கிடந்து நகர் மறுகி உட்க மற 
                                  வேலினான்
ஒருங்கு அமைச்சரை விளித்து  நீர் கரை சுமந்து ஒதுக்கி வரும் 
                                    ஓத நீர்ப்
பொருங்கதத்தினை அடக்கு வீர் என அமைச்சரும்  தொழுது
                                      போயினார்.


பொருள் 

கருங் கடல் = கரிய கடலின்

திரை = அலை

இடை கிடந்து = இடையே கிடந்து

கழல் = தடுமாறும்

கலம் என = கப்பல் போல

கன முகடு அளாய் = வானத்தை அளாவி

வரும் = வரும்

புனற் = வெள்ள

பரவையுள் = பரப்பில்

கிடந்து நகர் மறுகி உட்க  = கிடைந்து (மதுரை ) நகரம் மறுகி வருத்தம் அடைய

மற வேலினான் = வீரம் பொருந்திய வேலைக் கொண்ட பாண்டிய மன்னன்

ஒருங்கு அமைச்சரை விளித்து = ஒன்றாக அனைத்து அமைச்சர்களையும் அழைத்து

 நீர் = நீங்கள்

கரை சுமந்து ஒதுக்கி வரும் = கரையை தாண்டி ஒதுங்கி வரும்

ஓத நீர்ப்  = பொங்கி வரும் நீரின்

பொருங்கதத்தினை  = பெரிய  வெள்ளத்தை

அடக்கு வீர் என = அடக்குங்கள் என்று கூற

அமைச்சரும்  தொழுது  போயினார். = அமைச்சர்களும் அவனை வணங்கி விடைப் பெற்று சென்றனர்.

அடுத்து அவர்கள் என்ன செய்தார்கள் ?

நம் அமைச்சர்களாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்....



சிவபுராணம் - அறம் , பாவம் என்ற கயிறுகள்

சிவபுராணம் - அறம் , பாவம் என்ற கயிறுகள் 


நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்  
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி


மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

நம் புலன்கள் நமக்கு இன்பத்தை நுகரச் செய்து நமக்கு நல்லது செய்வது போலத் தோன்றும். ஆனால், இறுதியில் அவை நமக்கு நன்மைக்கு பதில் தீமையே  செய்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றாக, ஒன்றுக்கு மேல் ஒன்றாக மேலும் மேலும் வேண்டும் என்று நம்மை உந்தித் தள்ளி கடைசியில் நம்மை துன்பத்தில் தள்ளி விடுகின்றன.



புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை


உலகிலேயே மிகப் பெரிய பற்று இந்த உடல் மேல் கொண்ட பற்று. இந்த உடலுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறோம். தாய், தந்தை, கணவன் , மனைவி , பிள்ளைகள் எல்லாம் நமக்கு அடுத்து தான். இந்த உடல் பற்றை விட்டால், நம் செயலும் சிந்தனையும் மாறிப் போகும்.

எனவே தான் ஞானிகள் எல்லாம், இந்த உடல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

இந்த உடலுக்குள்ளே என்ன இருக்கிறது ? இந்த தோலை நீக்கிப் பார்த்தால் பார்க்க சகிக்காது. நாற்றம் அடிக்கும். உடல் எங்கும் புழுவும் அழுக்கும் நிறைந்து இருக்கிறது. ஒன்பது வாயிலைக் கொண்ட உடலில் அனைத்து வாயில்களிலும் உடற் கழிவுகள் எந்நேரமும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. இந்த உடலின் மேல் என்ன பெரிய பற்று ?



அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

தீ  வினை மட்டும் அல்ல, நல் வினையும் பிறவிக்கு வழி வகுக்கிறது.
நல்லதும் தீயதும் இல்லாமல் ஒரு வினை இருக்க முடியுமா என்ன ? Beyond Good and Evil  என்று Neitsche ஒரு புத்தகம் எழுதி இருக்கிறர். படித்துப் பார்க்க வேண்டும்.



விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

விலங்கு மனம். நல்லது சொன்னால் மனதில் நிறுத்திக் கொள்ளாது.  உணர்ச்சி ஒன்றே பிரதானமாக அலையும். உணர்ச்சி அறிவை மழுங்க அடிக்கும். அந்த விலங்கு மனத்தால் உன் மேல் அன்பு கொள்ளும் நலம் இல்லாத எனக்கு நீ தந்தாய் என்கிறார் அடிகள்.

என்ன தான் தந்தான் ?







Tuesday, September 2, 2014

இராமாயணம் - மந்திரம் இல்லை, மருந்து இல்லை

இராமாயணம் - மந்திரம் இல்லை, மருந்து இல்லை 


பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்வார்கள்.

நல்லவற்றை நல்லவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.

உயர்ந்த நூல்களை கீழானவனுக்கு சொல்லித்தந்தால் அவன் அந்த உயர்ந்த நூல்களை கீழ்மைப் படுத்துவான். அவன் அறிவு அவ்வளவுதான்.

அவன் ஆணவம், தான் அந்த உயர்ந்த நூல்களில் சொல்லியவற்றை விட அதிகம் அறிந்தவன் என்று மார் தட்டச் சொல்லும்.

இங்கே, அசோகவனத்தில் சிறை இருக்கும் சீதையிடம் சொல்கிறான்.

"சீதை, முன்னொரு காலத்தில் அகலிகை என்று ஒரு பெண் இருந்தாள் . அவள் இந்திரன் மூலம் காதல் என்றால் என்ன என்று அறிந்தாள் . அதனால் அவளுக்கு ஒரு இகழும் இல்லை. என்னுடைய மையல் நோய்க்கு மந்திரம் இல்லை, மருந்து இல்லை. உன்னுடைய தாமரை போன்ற சிவந்த இதழ்களில் இருந்து வரும் அமுதம் அன்றி வேறு ஒன்றும் இல்லை, அமுதம் போன்ற சொற்களை உடையவளே"

பாடல்

அந்தரம் உணரின், மேல்நாள்,
    அகலிகை என்பாள், காதல்
இந்திரன் உணர்த்த, நல்கி
    எய்தினாள், இழுக்கு உற்றாேளா?
மந்திரம் இல்லை, வேறு ஓர்
    மருந்து இல்லை, மையல் நோய்க்குச்
சுந்தரக் குமுதச் செவ்வாய்
    அமுது அலால்; அமுதச் சொல்லீர்! ‘

பொருள் 

அந்தரம் உணரின் = உள்ளே உள்ளதை உணரப் போனால்

மேல்நாள் = முன்பொரு நாள்

அகலிகை என்பாள் = அகலிகை என்ற ஒரு பெண்

காதல் இந்திரன் உணர்த்த = காதல் என்றால் என்ன என்று இந்திரன் உணர்த்த

நல்கி = அவளும் வழங்கி

எய்தினாள் = அடைந்தாள்

இழுக்கு உற்றாேளா? = அதனால் அவளுக்கு ஒரு இழுக்கு வந்ததா

மந்திரம் இல்லை = மந்திரம் இல்லை

வேறு ஓர் மருந்து இல்லை = வேறு ஒரு மருந்து இல்லை

மையல் நோய்க்குச் = மையல் நோய்க்கு

சுந்தரக் = அழகிய

குமுதச் செவ்வாய் = தாமரை போன்ற சிவந்த இதழ்களின் 

அமுது அலால் = அமுதம் அன்றி

அமுதச் சொல்லீர் = அமுதம் போன்ற சொற்களை உடையவளே

எவ்வளவு அழகாக பேசுகிறான். அகலிகை இந்திரனோடு காதல் என்பதை என்ன என்று  அறிந்தாள் . அவளை இராமன்     கோவிக்கவில்லை. அது போல உன்னையும் கோவிக்க மாட்டான் என்று சொல்லாமல் சொல்லுகிறான்.


அகலிகையின் கதையை இந்த நோக்கில் இதுவரை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள்.

அது மட்டும் அல்ல,

பெண்களுக்கு அவர்களை புகழ்ந்தால்  பிடிக்கும். ஆண்களுக்கும் பிடிக்கும் என்றாலும் பெண்களுக்கு அவர்களின் அழகின் மேல் கொஞ்சம் அதிகப்படியான கவனமும், கர்வமும் உண்டு.

சீதையை புகழ் சொற்களால் குளிப்பாடுகிறான் ... சுந்தரம் , குமுதம் , செவ்வாய், அமுதச் சொல்லீர் என்று புகழ்ந்து  தள்ளுகிறான்.

தன்னுடைய மையல் நோய்க்கு மருந்தும் இல்லை, மந்திரமும் இல்லை...உன் முத்தம் ஒன்று தான் இதற்கு மருந்து என்று  புலம்புகிறான்.

















Monday, September 1, 2014

பட்டினத்தார் பாடல்கள் - இப்பிறப்பை நம்பி இருப்பாரோ

பட்டினத்தார் பாடல்கள் - இப்பிறப்பை நம்பி இருப்பாரோ


இப்பிறப்பை நம்பி இருப்பாரோ ? நெஞ்சமே 
வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம்போல் 
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப்பஞ் சிட்டு அப்பைக் 
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.

இந்தப் பிறவியை நம்பி யாராவது இருப்பார்களா ? நெஞ்சமே, சொத்து சுகம் எல்லாம் இருக்க, வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும், இந்த பிறவியை யாராவது நம்புவார்களா ?

வங்கியில் பணம் இருக்கிறது. ஒண்ணுக்கு இரண்டாக வீடுகள், நிறைய நகை நட்டுகள், மனைவி, பிள்ளைகள் எல்லாரும் இருக்கிறார்கள். பின் எதற்கு உயிரை விட வேண்டும்.

இத்தனையும் நம் உயிரை பிடித்து வைக்க உதவுமா ?

இந்த பிறவியும், இதில் பெற்ற செல்வமும், உறவும் நமக்கு ஒரு விதத்திலும் உதவப் போவது இல்லை. அப்படி இருக்க, இதை யார் நம்புவார்கள்.

பிள்ளைகள் நம்மை காக்க மாட்டார்கள்.

காசு பணம் உதவாது.

இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை நம்பியா வாழ்வது.

வாழ்வின் நிலையாமையை தெள்ளத் தெளிவாக விளக்கும் பாடல்கள்