Sunday, February 15, 2015

பிரபந்தம் - உன் மனதை யார் அறிவார் ?

பிரபந்தம் - உன் மனதை யார் அறிவார் ?


நாம் சிறுவர்களாக இருக்கும் போது நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நம்மை சிலவற்றைச் செய்யச் சொல்வார்கள். நமக்கு அது பிடிக்காது. கோவம் வரும். ஏன் இப்படி நம்மை சிரமப் படுத்துகிறார்கள் என்று எரிச்சல் அடைவோம்.

ஆனால், நமக்கு வயதான பின், அவர்கள் சொன்னதின் அர்த்தம் விளங்கும். நம் நன்மைக்குத்தான் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.

அது போல இறைவன் நமக்குச் சிலவற்றை செய்கிறான். ஏன் இப்படி நடக்கிறது, என்று நமக்கு எரிச்சலும், கோவமும் வரும். பின்னால் நாம் புரிந்து கொள்வோம் ஏன் நமக்கு அப்படி எல்லாம் நடந்தது என்று.

அதை ஆண்டாள் மிக அழகாகச் சொல்கிறாள்.

"நாங்கள் மிக இளம் பெண்கள். எங்கள் மார்புகள் கூட இன்னும் முழுவதும் வளரவில்லை. நீ என்னவெல்லாமோ செய்கிறாய். நீ செய்வது ஒன்றும் எங்களுக்கு புரியவில்லை. எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நீ செய்வது. நீ எவ்வளவு பெரியவன். ஒரு பெண்ணின் பொருட்டு, கடலில் பாலம் அமைத்து, அரக்கர் குலத்தை வேரோடு அழித்தாய். உன் வலிமையின் முன் நாங்கள் எம்மாத்திரம்..."

என்று இறைவனின் செயல்களுக்கு நாம் காரணம் அறிய முடியாது என்று சொல்கிறாள்.

பாடல்

முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
சுற்றிலோம், கடலை அடைத்து அரக்- கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! எம்மை வாதியேல்.

பொருள்

முற்று இலாத = முதிர்வு அடையாத

பிள்ளைகளோம் = பிள்ளைகள் நாங்கள்

முலை போந்திலா தோமை  = முலைகள் முழுமை பெறாத எங்களை

நாள்தொறும் = தினமும்

சிற்றில் மேல் இட்டுக் கொண்டு = சிறிய வீட்டில் அழைத்துச் சென்று

நீ சிறிது உண்டு = நீ செய்தது சிறிது உண்டு

திண்ணென நாம் அது சுற்றிலோம் = உறுதியாக நாம் அவற்றை கற்றிலோம்

கடலை அடைத்து  = கடலை அடைத்து (பாலம் அமைத்து)

அரக்கர் குலங்களை முற்றவும் = அரக்கர் குலங்களை முற்றாக அழித்து

செற்று = சண்டை இட்டு

இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! = இலங்கையை போர்க்களம் ஆக்கியவனே

எம்மை வாதியேல் = எங்களை துன்புறுத்தாதே


குறுந்தொகை - தச்சன் செய்த தேர்

குறுந்தொகை - தச்சன் செய்த தேர் 


கவிதையின் அழகு அது சொல்வதில் அல்ல...அது சொல்லாமல் விடுவதில்.

தலைவி தலைவனை பிரிந்து இருக்கிறாள். தன் சோகத்தை தோழியிடம் சொல்கிறாள்.

"தச்சன் செய்த சிறு தேரை சிறுவர்கள் கையில் இழுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி இன்புறுவதைப் போல தலைவனோடு சேர்ந்து இன்பகமாக இல்லாவிட்டாலும் அவனோடு மனிதனால் கொண்ட நட்பால் நான் நன்றாக இருக்கிறேன் (என் வளையல் கழலாமல் இருக்கிறது ") என்கிறாள்.

பாடல்

தச்சன் செய்த சிறுமா வையம்      
ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின்     
ஈர்த்தின் புறூஉ மிளையோர்     
உற்றின் புேறெ மாயினு நற்றேர்ப் 
பொய்கை யூரன் கேண்மை     
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. 

சீர் பிரித்த பின் 

தச்சன் செய்த சிறு மாவையம்      
ஊர்ந்து இன்பம் உராராயினும் கையின்     
ஈர்த்து இன்பம் உறும் இளையோர்     
உற்று இன்பம் உறேமாயினும்  நற்றேர்ப் 
பொய்கை ஊரன்  கேண்மை     
செய்து இன்புற்ற என் நெஞ்சு செறிந்தன வளையே. 

பொருள்

தச்சன்  = மர வேலை செய்யும் தச்சன்

செய்த =செய்த

சிறு மாவையம் = சிறிய தேர்
     
ஊர்ந்து = மேல் ஏறி சென்று

இன்பம் உராராயினும் = இன்பம் அடையா விட்டாலும்

கையின் = கையில்
   
ஈர்த்து = இழுத்து

இன்பம் உறும் = இன்பம் அடையும்

இளையோர் = சிறுவர்களைப் போல
   
உற்று இன்பம் = தலைவனை அடைந்து  இன்பம்

உறேமாயினும் = அடையாவிட்டாலும்

 நற்றேர்ப் = நல்ல தேர்

பொய்கை = சிறந்த நீர் நிலைகளைக் கொண்ட

ஊரன் = தலைவன்

கேண்மை = நட்பு
   
செய்து = செய்து

இன்புற்ற என் நெஞ்சு = இன்புற்ற என் நெஞ்சு

செறிந்தன வளையே = கையோடு இருக்கிறது என் வளையல்கள்

பாடல் இது.

கவிதை எது தெரியுமா ?

தேர் என்பது அதில் அமர்ந்து ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுகமாக செல்வதற்கு உருவாக்கப் பட்டது.

ஆனால், சிறுவர்களோ, தேரை கையில் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

காதல் என்பது, தலைவனும் தலைவியும் ஒருவரோடு ஒருவர் கூடி இன்பம் அனுபவிக்க  ஏற்பட்டது. ஆனால், இவளோ பழைய நட்பை நினைத்து வாழ்கிறாள். பொம்மை தேரைப் போல.


மேலும், சிறுவர்கள் தேரை இழுத்துக் கொண்டு திரிவார்கள். ஒரு காலம் வரை. அதற்குப் பிறகு பொம்மை தேரை தூக்கி போட்டு விட்டு உண்மையான தேரை செலுத்த தொடங்கி விடுவார்கள். பெரிய ஆளான பின்னும் பொம்மை தேரை இழுத்துக் கொண்டு திரிந்தால் எப்படி இருக்கும் ?

காதல் கண்ணில் தொடங்கும், அப்பப்ப ஒரு சிறு புன் முறுவல், முடிந்தால் ஒரு சில கடிதங்கள், பின் நேரில் தனிமையில் சந்திப்பு, கொஞ்சம் விரல் பேசும், வியர்வை நீர் வார்க்க, வெட்கம் பூ பூக்கும்...இப்படியாக காதல் வளரும். வாழ் நாள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும் ? (next step கு போடா ).

அது போல, இன்னும் அவன் மேல் கொண்ட நட்பை எண்ணி வாழ்கிறேன் என்கிறாள். காதல் வளரவில்லை. தேரை இழுத்துக் கொண்டு அலைகிறாள்.


சிறுவர்கள் சிறிய தேரை இழுத்துக் கொண்டு அலைகிறார்கள். அவன் பெரிய தேரில் செல்கிறான் என்று இரண்டையும் சேர்த்தும் படிக்கலாம் நாம். 

தலைவன் ஏன் பிரிந்தான் ?  கவிஞர் அதைச் சொல்லவில்லை.

ஒரு வேளை பரத்தையிரடம் போய் இருக்கலாம்.

எப்படி தெரியும் ?

பாடல் சொல்கிறது, அவன் பெரிய பணக்காரன் என்று. அவனிடம் தேர் இருக்கிறது, நீர் நிலைகள்  நிறைந்த ஊருக்குத் தலைவன். பெரிய ஆள் தான். தலைவியை மறந்து விட்டான்.

இன்னும் சொல்லப் போனால், கவிதை , தலைவன் மறந்து விட்டான் என்று கூடச் சொல்ல வில்லை.

அவன் நட்பை நான் மறக்க மாட்டேன் என்கிறாள். எனவே அவன் மறந்து விட்டான் என்று நாம் அறியலாம்.


 



Thursday, February 12, 2015

ஆசாரக் கோவை - காலையில் செய்ய வேண்டியவை

ஆசாரக் கோவை - காலையில் செய்ய வேண்டியவை 


ஆசாரக் கோவை என்பது பெரியவர்கள், அறிஞர்கள் தங்கள் அனுபவத்தில் கண்ட நல்ல வாழ்கை முறைகளின் தொகுப்பு.

குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித் தர வேண்டும். நமக்கும் உதவும்.

அதிலிருந்து சில பாடல்கள்.

ஒரு நாளை எப்படி தொடங்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்கிறது கீழே வரும் பாடல்.

காலையில் எழ வேண்டும். காலை என்றால் ஏதோ ஆறு அல்லது ஏழு மணி அல்ல. நாலு அல்லது ஐந்து மணிக்கு எழ வேண்டும். வைகறையில் எழ வேண்டும்.

எழுந்தவுடன், அன்று செய்ய வேண்டிய நல்ல காரியங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். யாருக்கு உதவி செய்யலாம், என்ன தர்மம் செய்யலாம், என்ன படிக்கலாம் என்று நல்ல விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். நல்ல காரியம் செய்கிறோமோ இல்லையோ, மனம் கெட்ட வழியில் போகாது.

அடுத்தது, பொருள் தேடும் வழி பற்றி சிந்திக்க வேண்டும். இன்று அலுவலகத்தில், வேலையில் , பள்ளியில், கல்லூரியில் , தொழிலில், கடையில் என்ன செய்தால் நமக்கு பொருள் வரவு கூடும், உத்தியோக உயர்வு கூடும், நல்ல rating கிடைக்கும், இலாபம் பெருகும், அதிக மதிப்பெண் வரும், என்று சிந்தித்து அதற்கான வழிகளை காண வேண்டும்.

அடுத்து, பெற்றோரை தொழ வேண்டும்.

பாடல்

வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில்
தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.

பொருள்

வைகறை யாமந் துயிலெழுந்து = நள்ளிரவு தாண்டி வரும் அதிகாலையில் தூக்கத்தை விட்டு எழுந்து


தான்செய்யும் = தான் செய்ய வேண்டிய

நல்லறமு = நல்ல அறங்களையும்

மொண்பொருளுஞ் = ஒள்  பொருளும் = ஒளி பொருந்திய பொருள். அதாவது வாழ்க்கைக்கு வெளிச்சம் தரும் பொருள்கள். வாழ்வை பிரகாசமாக்கும் பொருள்கள். கல்வி, செல்வம், போன்றவை.

சிந்தித்து = எப்படி பெறுவது என்று சிந்தித்து.  அதை எப்படி அடைவது என்று திட்டமிட்டு

வாய்வதில் = வாய்புடைய

தந்தையுந் தாயுந்  = தந்தையையும் தாயையும்

தொழுதெழுக = தொழுது எழுக

என்பதே = என்பதே

முந்தையோர் கண்ட முறை = நம் முன்னவர்கள் கண்ட முறை.

இதைவிடவும் வாழ்வில் வெற்றி பெற இன்னுமொரு வழி இருக்குமா  என்ன ?

புதையலின் மேல் அமர்ந்து வாழ் நாள் எல்லாம் பிச்சை எடுத்த பிச்சைக் காரனைப் போல  நமக்கு வாய்த்த செல்வங்களை எல்லாம் விட்டு விட்டு மேலை  நாடுகளில் இருந்து பாடம் பயில முயல்கிறோம்.

நம் பெருமை அறிவோம்




Tuesday, February 10, 2015

திருவாசகம் - எதுவும் வேண்டாம்

திருவாசகம் - எதுவும் வேண்டாம் 


எல்லோரும் கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பார்கள்.

கேட்காவிட்டால் கூட, இருப்பதை எடுத்துக் கொள் என்று யாரும் வேண்டிக் கொள்ள மாட்டார்கள்.

"இறைவா, என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. இவ்வளவு வேண்டாம், கொஞ்சத்தை எடுத்துக் கொள்.

நான் நிறைய படித்துவிட்டேன். என் பட்டத்தில் ஒன்றிரண்டை எடுத்துக் கொள்.

எனக்கு ஊருக்குள் நல்ல பேரும் புகழும் இருக்கிறது. இவ்வளவு வேண்டாம். என் புகழை குறைத்து விடு.

எனக்கு ஆறு அறிவு இருக்கிறது. அதில் ஒன்றை குறைத்து என்னை ஒரு ஐந்தறிவு உள்ள விலங்காக மாற்றி விடு "

என்று யாராவது வேண்டுவார்களா ?

வேண்டிய ஒரே ஆள், மாணிக்க வாசகர்.

பாடல்

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,

கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

பொருள்

உற்றாரை யான் வேண்டேன் = சொந்தக்காரர்கள் வேண்டாம்

ஊர் வேண்டேன் = சொந்த ஊர் வேண்டாம்

பேர் வேண்டேன் = புகழ் வேண்டாம்

கற்றாரை யான் வேண்டேன்; = கற்றவர்கள் உறவு வேண்டாம்

கற்பனவும் இனி அமையும்; = படிப்பும் வேண்டாம்

குற்றாலத்து = குற்றாலத்தில்

அமர்ந்து = அமர்ந்து

உறையும் கூத்தா! = வாழும் கூத்தனே

உன் குரை கழற்கே = உன்னுடைய திருவடிகளுக்கே


கற்றாவின் = கன்றை ஈன்ற பசுவின் (கற்று + ஆ )

மனம் போல = மனம் போல்

கசிந்து, உருக வேண்டுவனே! = கசிந்து உருக வேண்டுவனே

பக்தனைப் போல, ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டுவனே என்கிறார்.

யோசிக்கவாவது முடிகிறதா நமக்கு ? இருக்கிறதை வேண்டாம் என்று சொல்ல  எப்படி பட்ட மனம் வேண்டும் ?

அப்படிப் பட்டவர்கள் வாழ்ந்த ஊரில் நாமும் வாழ்கிறோம்.

அவர்கள் எழுதியதை நாம் படிக்கிறோம்.

நாம் தான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ?



திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது - பாகம் 2

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது  - பாகம் 2  



இறைவனை அடைய விடாமல் நம்மை பல விதமான சிக்கல்கள் பின்னி பிணைத்து இருக்கின்றன.

அவற்றை சிக்கல்கள் என்று கூட சொல்லக் கூடாது, அவற்றை ஆபத்துகள் என்று சொல்கிறார் மணிவாசகர். எத்தனை ஆபத்துகளில் இருந்து பிழைத்தேன் என்று பட்டியல் தருகிறார்.

உணவு ஒரு பெரிய தடை. ஆபத்து. எந்நேரமும் பசி, உணவு, உண்டதைக் செரித்தல் பின் மீண்டும் பசி, உணவு என்று வாழ்நாளில் மிகப் பெரிய நேரம் உணவு தேடுவதிலும், உண்பதிலும் சென்று விடுகிறது.

இரை தேடும் மும்முரத்தில் இறை தேட முடியாமல் போகிறது.

உணவு தேட வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதில் அதிக நேரம் போகிறது.

வேலை செய்த களைப்பில் தூக்கத்தில் கொஞ்ச நேரம். வேலைக்காக அங்கும் இங்கும் அலைவதில் கொஞ்ச நேரம்.

இடைப்பட்ட நேரத்தில் காமம், அதில் இருந்து வரும் பிள்ளைகள், அதனால் வரும் சிக்கல்கள் என்று வாழ்வு செக்கு மாடு போல இவற்றிலேயே போய் விடுகிறது.

இவை போதாது என்று கல்வி என்ற பெரும் கடலில் இருந்து பிழைக்க வேண்டும். கல்வி குழப்பும். இறைவனை அடைய கல்வி ஒரு தடை.

செல்வம் ஒரு தடை.

வறுமை ஒரு தடை.

மணிவாசகரின் பட்டியல் இதோ

பாடல்


காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

பொருள்

காலை மலமொடு = காலையில் கழிக்கும் மலமொடு

கடும் பகல் பசி = பகலில் வரும் பசி

நிசி = இரவு

வேலை  = வேலை

நித்திரை = நித்திரை. மாற்றிப் படிக்க வேண்டும். பகலில் வேலை மற்றும் பசி. இரவில் நித்தரை.

யாத்திரை, பிழைத்தும் = அதற்காக அலையும் அலைச்சல்களில் இருந்து பிழைத்தும்

கரும் குழல் = கரிய முடி

செவ் வாய் = சிவந்த உதடுகள்

வெள் நகை = வெண்மையான (பற்கள் தெரிய சிரிக்கும்) சிருப்பும்

கார் மயில் = கரிய மயிலைப்

ஒருங்கிய சாயல் = ஒத்த சாயலும்

நெருங்கி = நெருங்கி

 உள் மதர்த்து = உள்ளே கிளர்ந்து எழுந்து

கச்சு அற நிமிர்ந்து = மார்பு கச்சை மீறி நிமிர்ந்து

கதிர்த்து = உயர்ந்து

முன் பணைத்து = முன் எழுந்து

எய்த்து = அடைந்து

இடை வருந்த = இடை வருந்த

எழுந்து = எழுந்து

புடை பரந்து = பரந்து விரிந்து

ஈர்க்கு = ஈர் குச்சி

இடை போகா = இடையில் போக முடியாமல்

இள முலை = இளமையான மார்புகள்

மாதர் தம் = பெண்களின்

கூர்த்த = கூர்மையான

நயனக் = கண்களின்

கொள்ளையில் = கொள்ளையில்

பிழைத்தும் = பிழைத்தும்

பித்த உலகர் = பித்தர்கள் நிறைந்த உலகில்

பெரும் துறைப் பரப்பினுள் = பெரிய கடல் சூழ்ந்த உலகில்

மத்தக் களிறு = யானை

எனும் = போன்ற

அவாவிடைப் பிழைத்தும் = ஆசையில் பிழைத்தும் (யானை போன்ற ஆசை; பேராசை)

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் = கல்வி என்ற பல கடலைப் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் = செல்வம் என்ற  துன்பத்தில் இருந்து பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் = வறுமை என்ற பழைய விஷத்தில் இருந்து  பிழைத்தும்

மிக ஆழமான பாடல். இதன் விரிவுரையை அடுத்து வரும் ப்ளாகுகளில் சிந்திப்போம்


=======================பாகம் 2 =========================================


எதுவெல்லாம் தடை, இவற்றில் இருந்தெல்லாம் தான் பிழைத்தேன் என்று சொல்ல வந்த  மணிவாசகர், எல்லாவற்றிற்கும் ஒரு வரி சொன்னார்...ஆனால் பெண்ணிடம்  இருந்து பிழைத்ததைச் சொல்ல ஆறு வரி எடுத்துக்  கொள்கிறார்.

கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:

காமம் மிகப் பெரிய ஆபத்து. அதை கடப்பது என்பது எளிதான காரியம் அல்ல. மணிவாசகருக்கு ஆறு வரி தேவைப்பட்டது.  

நமக்கு எத்தனை வரியோ ?

பெண்ணைக் கடந்து மேலும் சில ஆபத்துகளை சொல்கிறார். 

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;

கல்வி ஒரு தடை.  கல்வி தலையில் ஏற ஏற குழப்பமும் ஏறுகிறது. கல்வியின் கரையை  கண்டது யார் ?  ஞான மார்கத்தில் இறைவனை கண்டவர்களை விட பக்தி  மார்கத்தில் கண்டவர்கள்தான் அதிகம்.

கற்றாரை யான்  வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

என்பார் மணிவாசகர்.

படித்தவர்களின் சகவாசமே வேண்டாம்  என்கிறார்.படித்தவன், தான் அறிந்ததுதான்  உண்மை என்று சாதிப்பான். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவான் என்பது அவர் எண்ணம்.

அறிவு கர்வத்தைத் தரும். வித்யா கர்வம் என்பார்கள்.

கற்பனவும் இனி அமையும்....படித்தவரை போதும் என்கிறார். யாரால் முடியும் ?

படிப்பு வேண்டாம் என்று சொன்னவரின் பாடல் காலங்களை கடந்து நிற்கிறது. பெரிய பெரிய படிப்பு படித்தவர்களின் புத்தகங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.



செல்வம் எனும் அல்லலில் பிழைத்தும் 

அல்லல் என்றால் துன்பம். 

நாம் எல்லாம் செல்வம் துன்பத்தை தொலைக்கும் கருவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

பணம் மட்டும் இருந்து விட்டால், நமது எல்லா தொல்லைகளும் தொலைந்து போய் விடும்  என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், அந்த செல்வமே துன்பம் என்கிறார் அடிகள்.

சேர்க்க சேர்க்க, மேலும் மேலும் வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். சேர்த்த செல்வத்தை காக்க வேண்டும். முதலீடு செய்தால் நஷ்டம் வந்து  விடுமோ என்ற கவலை.

அதற்காக செல்வமே வேண்டாம் என்று இருந்தால் வறுமை வந்து சேருமே . அது மட்டும்  சரியா ?

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;


இல்லை. நல்குரவு என்றால் வறுமை.  வறுமை என்ற பழைய விஷத்தில் இருந்து  பிழைத்தும் என்கிறார்.

செல்வம் ஒரு அளவோடு வேண்டும். பேராசை கொள்ளக் கூடாது.

ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டிய பாடல்.

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடல்.

Wednesday, February 4, 2015

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது - பாகம் 1

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது  - பாகம் 1  



இறைவனை அடைய விடாமல் நம்மை பல விதமான சிக்கல்கள் பின்னி பிணைத்து இருக்கின்றன.

அவற்றை சிக்கல்கள் என்று கூட சொல்லக் கூடாது, அவற்றை ஆபத்துகள் என்று சொல்கிறார் மணிவாசகர். எத்தனை ஆபத்துகளில் இருந்து பிழைத்தேன் என்று பட்டியல் தருகிறார்.

உணவு ஒரு பெரிய தடை. ஆபத்து. எந்நேரமும் பசி, உணவு, உண்டதைக் செரித்தல் பின் மீண்டும் பசி, உணவு என்று வாழ்நாளில் மிகப் பெரிய நேரம் உணவு தேடுவதிலும், உண்பதிலும் சென்று விடுகிறது.

இரை தேடும் மும்முரத்தில் இறை தேட முடியாமல் போகிறது.

உணவு தேட வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதில் அதிக நேரம் போகிறது.

வேலை செய்த களைப்பில் தூக்கத்தில் கொஞ்ச நேரம். வேலைக்காக அங்கும் இங்கும் அலைவதில் கொஞ்ச நேரம்.

இடைப்பட்ட நேரத்தில் காமம், அதில் இருந்து வரும் பிள்ளைகள், அதனால் வரும் சிக்கல்கள் என்று வாழ்வு செக்கு மாடு போல இவற்றிலேயே போய் விடுகிறது.

இவை போதாது என்று கல்வி என்ற பெரும் கடலில் இருந்து பிழைக்க வேண்டும். கல்வி குழப்பும். இறைவனை அடைய கல்வி ஒரு தடை.

செல்வம் ஒரு தடை.

வறுமை ஒரு தடை.

மணிவாசகரின் பட்டியல் இதோ

பாடல்


காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

பொருள்

காலை மலமொடு = காலையில் கழிக்கும் மலமொடு

கடும் பகல் பசி = பகலில் வரும் பசி

நிசி = இரவு

வேலை  = வேலை

நித்திரை = நித்திரை. மாற்றிப் படிக்க வேண்டும். பகலில் வேலை மற்றும் பசி. இரவில் நித்தரை.

யாத்திரை, பிழைத்தும் = அதற்காக அலையும் அலைச்சல்களில் இருந்து பிழைத்தும்

கரும் குழல் = கரிய முடி

செவ் வாய் = சிவந்த உதடுகள்

வெள் நகை = வெண்மையான (பற்கள் தெரிய சிரிக்கும்) சிருப்பும்

கார் மயில் = கரிய மயிலைப் 

ஒருங்கிய சாயல் = ஒத்த சாயலும்

நெருங்கி = நெருங்கி

 உள் மதர்த்து = உள்ளே கிளர்ந்து எழுந்து

கச்சு அற நிமிர்ந்து = மார்பு கச்சை மீறி நிமிர்ந்து

கதிர்த்து = உயர்ந்து

முன் பணைத்து = முன் எழுந்து

எய்த்து = அடைந்து

இடை வருந்த = இடை வருந்த

எழுந்து = எழுந்து

புடை பரந்து = பரந்து விரிந்து

ஈர்க்கு = ஈர் குச்சி

இடை போகா = இடையில் போக முடியாமல்

இள முலை = இளமையான மார்புகள்

மாதர் தம் = பெண்களின்

கூர்த்த = கூர்மையான

நயனக் = கண்களின்

கொள்ளையில் = கொள்ளையில்

பிழைத்தும் = பிழைத்தும்

பித்த உலகர் = பித்தர்கள் நிறைந்த உலகில்

பெரும் துறைப் பரப்பினுள் = பெரிய கடல் சூழ்ந்த உலகில்

மத்தக் களிறு = யானை

எனும் = போன்ற

அவாவிடைப் பிழைத்தும் = ஆசையில் பிழைத்தும் (யானை போன்ற ஆசை; பேராசை)

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் = கல்வி என்ற பல கடலைப் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் = செல்வம் என்ற  துன்பத்தில் இருந்து பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் = வறுமை என்ற பழைய விஷத்தில் இருந்து  பிழைத்தும்

மிக ஆழமான பாடல். இதன் விரிவுரையை அடுத்து வரும் ப்ளாகுகளில் சிந்திப்போம்


Monday, February 2, 2015

திருவாசகம் - காட்டாதன எல்லாம் காட்டி

திருவாசகம் - காட்டாதன எல்லாம் காட்டி 


சிற்றின்பம், பேரின்பத்திற்கு வழி  காட்டுகிறது.

சிற்றின்பத்தையே அறிய முடியாவிட்டால் பேரின்பத்தை எப்படி அறிவது ?

மாணிக்க வாசகர் பெண்ணாக மாறி உருகுகிறார்.

ஒரு இளம் பெண்,  தன் தோழியிடம், அவளுடைய காதலன் எப்படியெல்லாம் அவளிடம் நடந்து கொண்டான் என்று வெட்கப்பட்டு கூறுகிறாள்.

"  கேட்டாயோ தோழி, என்னை அவன் தந்திரம்  செய்தான். அவன் வீட்டு மதிள் சுவர் மிகப் பெரியாதக இருக்கும். அதில் படங்கள் எல்லாம் வரைந்து இருப்பார்கள். அவன் எனக்கு என்னவெல்லாமோ காட்டினான். சிவத்தைக் காட்டினான். அவன் பாதங்களைக் காட்டினான். அவனுடைய கருணையைக் காட்டினான். எல்லோரும் சிரிக்க என்னை மேலுலகம் சேர்பித்தான் . என்னை ஆட்க் கொண்டவனை சொல்லி நாம் அம்மானை ஆடுவோம்"  என்கிறார்.

பாடல்


கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
ஆட்டாண்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.

பொருள்

கேட்டாயோ தோழி = தோழி, கேட்டாயா ?

கிறிசெய்த வாறொருவன் = கிறி செய்தவாறு ஒருவன். கிறி என்றால் தந்திரம். ஒருவன் தந்திரம் செய்து

தீட்டார் = தீட்டப்பட்ட (ஓவியங்கள் )

மதில் = சுவர்

புடை சூழ் = சூழ்ந்து இருக்க

தென்னன் = தென்புறத்தை சேர்ந்தவன்

பெருந்துறையான் = திருப் பெருந்துறையில் உள்ளவன்

காட்டா தனவெல்லாங் காட்டிச் = காட்டதனவெல்லாம் காட்டி. இதுவரை கான்பிக்கதவற்றை எல்லாம் காண்பித்து

சிவங்காட்டித் = சிவத்தைக் காட்டி

தாட்டா மரைகாட்டித் = தாள் + தாமரை + காட்டி = தாள் என்கிற தாமரையைக் காட்டி

தன்கருணைத் தேன்காட்டி = தன்னுடைய கருணையான தேனினைக் காட்டி

நாட்டார் நகை செய்ய  = நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நகைக்க

நாம்மேலை வீடெய்த = நாம் மேலை வீடு எய்த . நாம் சொர்கத்தை அடைய

ஆட்டாண்  = ஆள் + தான் = அவன் தானே

கொண்டாண்ட வா = கொண்டான் (ஆட் கொண்டான்)

பாடுதுங்காண் அம்மானாய் = நாம் அம்மானை பாடுவோம்

மணிவாசகர் ஒரு அரசின் முதல் அமைச்சராக  இருந்தவர்.பெரிய அறிவாளி. 35 வயது இருக்கும்.

பெண்ணாக மாறி  உருகுகிறார்.

கேட்டாயோ தோழா என்று ஆரம்பித்து  இருக்கலாம்.கேட்டாயோ தோழி என்று  தொடங்குகிறார்.

பெண்ணின் இயல்பு எளிதில் சரணாகதி அடைய வழி வகுக்கும்.

இன்று பெண்ணீயம் பேசுபவர்கள் பெண்களை ஆண்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே   கருதுகிறேன்.

மணிவாசகர் பெண்ணாக  உருக்கினார்.

80 வயதில் நாவுக்கரசர் பெண்ணாக உருகினார்.

நம்மாழ்வாரும் அப்படியே...

பெண்ணில் அப்படி என்னதான் இருக்கிறது ?