Monday, March 30, 2015

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்




வான் நின்று இழிந்து
    வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல்
    உள்ளும் புறனும் உளன் என்ப;
கூனும் சிறிய கோத் தாயும்
    கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்

    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.


இந்த பாடலைப் பற்றி நான் ஏதாவது எழுதினால் அது அந்த பாட்டுக்குச் செய்யும் அவ மரியாதை என்றே நினைக்கிறேன்.

இப்படியும் கூட கவிதை செய்ய முடியுமா ? 

இராமாயணத்தின் சாரம் இந்த பாடல். 

இறை தத்துவத்தின் சாரம் இந்தப் பாடல்.

இரண்டு நாளாய் இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்  கொண்டு இருக்கிறேன்.   

எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. என்ன எழுதுவது என்று தெரியவில்லை. 

இந்தப் பாடலை முழுவதும் வாசிக்க  முடிந்தால் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். 





 

Sunday, March 29, 2015

ஆசாரக் கோவை - யாருடன் தனித்து இருக்கக் கூடாது

ஆசாரக் கோவை - யாருடன் தனித்து இருக்கக் கூடாது 


இன்று பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நிகழ்கின்றன. இதற்கு யார் காரணம் என்று சர்ச்சைகள் எழுகின்ற போது , பெண்களும் காரணம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.  பெண்கள் ஒழுங்காக உடை அணிய வேண்டும், கண்ட நேரத்தில் ஊர் சுற்றக் கூடாது, என்றெலாம் சொல்கிறார்கள்.

அந்த விவாதங்கள் ஒரு புறம்  இருக்கட்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட ஆசாரக் கோவை ஆணிடம் சொல்கிறது...ஒரு பெண்ணோடு தனித்து இருக்காதே என்று. அதுவும் எந்தெந்த பெண்களோடு தெரியுமா ...சொன்னால் நம்மால் அதை ஜீரணிக்கக் கூட முடியாது..

பெற்ற தாய்,  மகள், உடன் பிறந்தாள் இவர்களோடு கூட தனித்து இருக்காதே...ஏன் என்றால் ஐந்து புலன்களையும் கட்டுப் படுத்த முடியாது என்கிறது.

இவர்களோடு தனித்து இருக்காதே என்று சொன்னது ஆணுக்குத்தான் என்றாலும், ஐந்து புலன்களையும் கட்டுப் படுத்த முடியாது என்று சொன்னது இருவருக்கும்  பொருந்தும்.

புலன்கள் கட்டவிழ்த்து கொண்டால் அது தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் பார்க்காது. கணவனுக்கும் தகப்பனுக்கும் வேற்றுமை தெரியாது.

சிந்தக்க கொஞ்சம் விரசமாகத்தான் இருக்கும். இருந்தும், புலன்களின் வேகத்தை  அறிந்து, எதற்கு வம்பு, தனியாக இருக்காதே என்று அறிவுறுத்துகிறது  ஆசாரக் கோவை.

இன்றும் கூட பல வீடுகளில் வயதுக்கு வந்த அண்ணன் தங்கை, அக்கா தம்பி இவர்களை தனியே விட்டு விட்டு பெற்றோர் செல்ல மாட்டார்கள். வயதின் தாக்கம், இளமையின் வேகம், வரம்பு மீறச் செய்யலாம் என்ற பயம்.

 தாய், மகள், உடன் பிறந்தாள் இவர்களோடு தனித்து இருக்கக் கூடாது என்றால் முன் பின் அறியாத வேறு எந்த பெண்ணுடன்   தனித்து இருக்கலாமா ?  கூடாது.

அறிவுக்குத் தெரியும் இது தாய், மகள், தமக்கை என்று. புலன்களுக்குத் தெரியாது.

அலுவலகம் ஆனாலும் சரி, மற்ற இடமானாலும் சரி, வேற்று ஒரு பெண்ணோடு தனித்து இருப்பதை தவிர்ப்பது நலம்.

குரான் சொல்கிறது , மனைவி இல்லாத மாற்று பெண்ணோடு தனித்து இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் சாத்தான் அமர்ந்து இருப்பான் என்று.

பாடல்

ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனுந்
தாங்கற் கரிதாக லான்.

பொருள்

ஈன்றாள் = தாய்

மகள் = மகள்

தம் உடன்பிறந்தாள் = உடன் பிறந்த அக்கா தங்கை

ஆயினும் = ஆனாலும்

சான்றார் = பெரியவர்கள், படித்தவர்கள், நல்லவர்கள்

தமித்தா உறையற்க = தனித்து இருக்கக் கூடாது

ஐம்புலனுந் = ஐந்து புலன்களும்

தாங்கற் கரிதாக லான் = கட்டுப் படுத்துவதற்கு கடினமானவை என்பதால்

மற்ற பெண்களோடு தனித்து இருப்பதை தவிருங்கள்

அந்த மாதிரி சந்தர்பங்களை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தராதீர்கள்


இந்த மாதிரி பாடல்களை பள்ளியில் , இளமைக் காலத்தில் சொல்லித் தந்து விட்டால், பின்னர் அது தானாகவே வந்து விடும். பின்னாளில், ஆணும் பெண்ணும் தனித்து இருக்கும் சந்தர்பங்களில்  இது சரியில்லை என்ற எண்ணம்  அவர்களுக்கு தானாகவே வந்து விடும். 

தவறு செய்ய சந்தர்ப்பம் வராது.

நாம் சொல்லித் தருவது இல்லை.

சிக்கல்களை சந்திக்கிறோம்.  

Saturday, March 28, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எப்படி மறப்பேன் ?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எப்படி மறப்பேன் ?


காதல் வயப் பட்டவர்களுக்கு அவர்களின் காதலனையோ காதலியையோ ஒரு நிமிடம் கூட மறக்க முடியாது. எப்போதும் அவர்கள் சிந்தனையாகவே இருப்பார்கள். உண்ணும் போதும், உறங்கும் போதும் அவர்கள் நினைவே வந்து வந்து போகும். வேறு ஒன்றிலும் ஆர்வம் இருக்காது. மீண்டும் எப்போது அவர்களைப் பார்ப்போம் என்று தவித்துக் கொண்டு  இருப்பார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்...


ஸ்ரீரங்கம் போய் இருக்கிறீர்களா ?

அகண்ட காவேரி ஆறு. மழைக் காலத்தில் இன்றும் நீர் இரு கரையும் தொட்டுப் போகும். பொங்கி பொங்கி வரும் நீர். அந்த ஆற்றின் நடுவில் உள்ள தீவு ஸ்ரீரங்கம். ஊரெல்லாம் சோலை. இன்று அந்த சோலை எல்லாம் மாறி வீடுகள்  வந்து விட்டன. ஊரின் நடுவில் கோவில்.கோவிலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள். பெருமாளை காண்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார். மனம் அப்படியே இலயித்துப்  போகிறார்.

அந்த உருவமே மீண்டும் மீண்டும் அவருக்கு நினைவுக்கு வருகிறது. வேறு ஒன்றிலும் மனம் போக மறுக்கிறது. வேறு எதிலும் ஆர்வம் இல்லை. பணம், பொருள், சொத்து , சுகம் என்று எதிலும் பற்று இல்லை. ஒன்றும் இல்லாத ஏழையேனே என்று தன்னைத் தானே  குறிப்பிடுகிறார்.


பாடல்  

கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.

சீர் பிரித்த பின்

கங்கயில்  புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கத்தன்னுள் 
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே 

பொருள்

கங்கயில் = கங்கையை விட

புனிதமாய = புனிதமான

காவிரி நடுவு பாட்டு = காவிரிக்கு நடுவில்

பொங்கு நீர் = பொங்கி வரும் நீர்

பரந்து பாயும் = பரந்து விரிந்து அனைத்து இடங்களிலும் பாயும்

பூம்பொழில் = பூக்கள் நிறைந்த சோலைகளில் உள்ள 

அரங்கத்தன்னுள் = திருவரங்கத்தில்

எங்கள் மால் = எங்கள் திருமால்

இறைவன் = இறைவன்

ஈசன் = ஈசன்

கிடந்ததோர் = படுத்து இருக்கும்

கிடக்கை கண்டும் = கோலத்தைக் கண்ட பின்

எங்ஙனம் மறந்து வாழ்கேன் = அந்தக் கோலத்தை எப்படி மறந்து வாழ்வேன்

ஏழையேன் ஏழையேனே = ஏழையேன் ஏழையேனே

இறை சிந்தனை என்பது எப்போதும் இருக்க வேண்டும்.

துன்பம் வரும்போது நினைப்பது, நாள் கிழமை வந்தால் நினைப்பது, காலை மாலை பூஜை நேரத்தில் நினைப்பது என்று நமக்கு வேண்டிய அல்லது சரிப்பட்ட நேரத்தில் நினைப்பது அல்ல.

மாணிக்க வாசகர் சொல்லுவார் "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். 



Thursday, March 26, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அணிலம் போலேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அணிலம் போலேன் 


முதியோர்  இல்லத்துக்கு, அனாதை பிள்ளகைளை பராமரிக்க, ஏழை குழந்தையின் மருத்துவ செலவுக்கு என்று எத்தனையோ நன்கொடை வேண்டி விளம்பரங்கள் வரும்.

கொடுத்து உதவலாம் என்று நினைப்போம். ஆனால் ஏனோ மறந்து போகும். கொடுக்கக்  கூடாது .என்றில்லை..மற்ற விஷயங்களில் மூழ்கி இதை மறந்து போவோம்.

நம்மால் ஒரு அனாதை ஆசிரமம் எடுத்து நடத்த முடியாது. யாரோ செய்கிறார்கள், நம்மால் ஆனதை செய்வோம் என்று நினைப்போம்...செய்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

இராமர் இலங்கைக்குப் போக பாலம்  கட்டினார்.குரங்குகள் எல்லாம் மலையைப் பிளந்து கல்லைக் கொண்டு வந்து போட்டு பாலம் செய்தன.

அங்கு ஒரு அணில்  இருந்தது.நாமும் இராமருக்கு ஏதாவது உதவி செய்வோம் என்று நினைத்து, ஓடிச் சென்று கடலில் மூழ்கும்.  அதன் உடலில் கொஞ்சம் மண் ஒட்டிக் கொள்ளும்.

கரைக்கு ஓடி வந்து உடலை குலுக்கி அந்த மண்ணை கீழே தட்டி விடும். இப்படி கடலின் மண்ணை எல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடலாம் என்று அந்த அணில் எண்ணியது. இராமருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம்.

அந்த அணிலுக்கு இருந்த நல்ல உள்ளம் கூட எனக்கு இல்லையே என்று வருந்துகிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.

பாடல்

குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே.

பொருள்

குரங்குகள் = வானரங்கள்

மலையை தூக்கக்  = மலையை பிளந்து கல்லைத் தூக்கி வந்து பாலம் போட

குளித்துத் = கடலில் குளித்து

தாம் = தான்

புரண்டிட் டோடி = புரண்டு இட்டு ஓடி

தரங்கநீ ரடைக்க லுற்ற = அலையும் கடலை அடைக்க நினைத்து

சலமிலா = சலனம் இல்லாத (இது முடியுமா முடியாதா என்ற சந்தேகம் இல்லை)

அணிலம் போலேன் = அணில் போல கூட இல்லாத நான்

மரங்கள்போல் = மரத்தைப் போல

வலிய நெஞ்சம் = வன்மையான மனத்தைக் கொண்ட

வஞ்சனேன் = வஞ்ச மனம் உள்ள நான்

 நெஞ்சு தன்னால் = மனதில்

அரங்கனார்க் காட்செய் யாதே = அரங்கனுக்கு ஆட் செய்யாமல்

அளியத்தே னயர்க்கின் றேனே. = அனாவசியமாக வாழ் நாளை வீணடிக்கின்றேனே

நல்ல காரியம் ஏதாவது செய்கிறோமா ?

நல்ல காரியங்களுக்கு உதவி செய்கிறோமா ?

தொண்டரடி தன்னைத் தானே கேட்டு அயர்ந்தார்.

நாமும் கேட்போம்.



ஆசாரக் கோவை - தூங்கும் முறை

ஆசாரக் கோவை - தூங்கும் முறை 


படுக்கப் போகும் முன் எதை நினைத்துக் கொண்டு படுக்கிறோமோ  அதுவே கனவில் வரும்....

இறைவனை கனவிலும் காண வேண்டும்.

ஆண்டாள் அப்படி கண்டாள் ...திருமாலை "கனா கண்டேன் தோழி நான்" என்று பாடினாள். அவனையே நினைத்துக் கொண்டு இருந்தாள், கனவிலும் அவன் வந்தான்.

இன்றோ, பெரியவர்களும் சிறியவர்களும் படுக்கப் போகு முன் தொலைக் காட்சியில் வரும் நிகழ்சிகளைப் பார்க்கிறார்கள். சினிமா, செய்தி என்று பார்த்து விட்டு படுத்தால் அது தான் கனவில் வரும்.

ஆசாரக் கோவை சொல்கிறது,

படுக்கும் முன் இறைவனை கை கூப்பி தொழுது, பின் வடக்கு மற்றும் கோண திசை பக்கம் தலை வைக்காமல், ஒரு போர்வையாவது உடல்மேல் போர்த்தி உறங்குவது நல்லது என்று.

பாடல்


கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது
வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி.

பொருள்

கிடக்குங்காற் = படுக்கும் போது

கைகூப்பித் = கைகளை கூப்பி

தெய்வந் தொழுது = தெய்வத்தை தொழுது

வடக்கொடு = வட திசை மற்றும்

கோணந் = கோண திசை (வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு)

தலைசெய்யார் = தலை வைக்காமல்

மீக்கோள் = போர்வை

உடற்கொடுத்துச் = உடலுக்குக் கொடுத்து

சேர்தல் வழி = தூங்குதல் நல்ல வழி

ஒரு நாள் செய்து பாருங்கள். நல்லா இருந்தால் பின் பற்றுங்கள்.


ஆசாரக் கோவை - எப்படி வாய் கொப்பளிப்பது

ஆசாரக் கோவை - எப்படி வாய் கொப்பளிப்பது 


சாப்பிட்டு முடிந்த பின் எப்படி வாய் கழுவ வேண்டும் என்பதற்கு ஒரு பாடல். 

இதில் என்ன இருக்கிறது, தண்ணிய வாயில் ஊத்த வேண்டும், கொப்பளிக்க வேண்டும்...இதில் என்னய்யா பெரிய வழி முறை என்று கேட்கிறீர்களா...

Finger Bowl ல், மேஜையில் அமர்ந்து கை கழுவி, வாய் கொப்பளிக்காமல் இருக்க அல்லவா நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்திருக்கிறோம். 

உணவு உட்கொண்டபின் எப்படி வாய் கழுவ வேண்டும் என்று சொல்கிறது ஆசாரக் கோவை...

வாயில் ஊற்றிய தண்ணீர் உடலுக்கு உள்ளே போகக் கூடாது. 

தொண்டை வரை நீர் சென்று சுத்தம் செய்ய வேண்டும்

மூன்று முறை நீர் கொப்பளிக்க வேண்டும் 

நீரால் முகத்தை கழுவ வேண்டும். அதுவும் எப்படி என்றால் கண், காது , மற்றும் மூக்கு போன்ற அவயங்களை அழுத்தி கழுவ வேண்டும்.


பாடல் 

இழியாமை நன்குமிழ்ந் தெச்சி லறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப்
பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

சீர் பிரித்த பின் 

இழியாமை நன்கு உமிழ்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவு உடைத்தா
முக்காற் குடித்துத் துடைத்து முகத்து உறுப்பு 
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய் பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

பொருள் 

இழியாமை = இழிதல் என்றால் இறங்குதல். வாயில் விட்ட நீர் உடலுக்கு உள்ளே இறங்கக் கூடாது 

நன்கு உமிழ்து = நல்லா துப்பி 

எச்சில் அறவாய் = வாயில் எச்சில் இல்லாமல் துப்பி 

அடியோடு நன்கு துடைத்து = அடி நாக்கு வரை நன்கு துடைத்து (நீரால் கொப்பளித்து)

வடிவு உடைத்தா = அளவோடு 

முக்காற் = மூன்று முறை 

குடித்துத் துடைத்து = நீரை உண்டு வாய் கழுவி 
 
முகத்து உறுப்பு = முகத்தில் உள்ள உறுப்புகள் (கண், காது , மூக்கு போன்றவை) 
 
ஒத்த வகையால் = அதற்கு பொருந்தும் வகையில் 

விரல் உறுத்தி = விரலால் அழுத்தி 

வாய் பூசல் = வாய் கழுவுதல் 

மிக்கவர் கண்ட நெறி = பெரியவர்கள் கண்ட வழி 

செய்து  பார்ப்போம்.  அப்படி ஒன்றும் பெரிய வேலையாகத் தெரியவில்லை. 

நல்லதை முயன்று பார்த்தால் என்ன ?





Wednesday, March 25, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கல்லணைமேல் கண் துயிலக் கற்றனையோ ?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கல்லணைமேல் கண் துயிலக் கற்றனையோ ?



இலக்கியங்களை, அதிலும் குறிப்பாக பக்தி இலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும் ? அவற்றைப் படிப்பதால் என்ன நன்மை ?

அதில் அறிவு பூர்வமாக என்ன இருக்கிறது ? கடவுளைப் பார்த்து நீ பெரிய ஆள், உன்னைப் போல் உண்டா, நீ அதைச் செய்தாய், இதை செய்தாய், நீ இப்படி இருக்கிறாய், நீ அப்படி இருக்கிறாய் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன இருக்கிறது.

மிஞ்சி மிஞ்சி போனால் கொஞ்சம் நிலையாமை, மற்றவர்களுக்கு உதவுவது என்பது பற்றி கொஞ்சம் உபதேசம் இருக்கும்.

இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது என்று சலிப்பு வரலாம்.

அதிலும் இன்றுள்ள இளைய தலைமுறை, அறிவியல், தர்க்கம், கணிதம் என்று படித்த இளைய தலைமுறை இந்த பக்தி இலக்கியம் எல்லாம் bore என்று தள்ளி விடலாம்.

அப்படி என்னதான் இருக்கிறது இதில் ?

நமக்கு துன்பம் வந்தால் நாம் என்ன செய்வோம் ?

துவண்டு போவோம், வருந்துவோம், நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் வருகிறது என்று நொந்து கொள்வோம், எப்படி இதை சமாளிக்கப் போகிறோமோ என்று திகைப்போம்...சில சமயம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி விடலாமா என்று தோன்றும், சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள்....

இந்த இலக்கியங்களை படிக்கும் போது துன்பங்களை தாங்கி, அவற்றை தாண்டிச் செல்ல  மனம் பக்குவப் படுகிறது. பழக்கப் படுகிறது.

இராமனுக்கு அரசை தருவதாக முதல் நாள் சொன்ன தசரதன் மறு நாள் இராமனை காட்டுக்கு அனுப்பி விடுகிறான்.

இராமன் எப்படி எல்லாம் துன்பப் பட்டிருப்பான் என்பதை தசரதனின் மன நிலையில் இருந்து குலசேகர ஆழ்வார்  உருகுகிறார்.

பிள்ளையை ஹாஸ்டலில் விட்டு விட்டு வந்த பின் தவிக்கும் பெற்றோரின் மனம் போல புலம்புகிறது.

பிள்ளைக்கு ஒரு துன்பம் என்றால் எந்த பெற்றோருக்கும் வருத்தம் வரத்தான் செய்யும்.

அதுவும், அந்த துன்பம் ஒரு தகப்பனால் ஒரு பிள்ளைக்கு வந்தது என்றால் அந்த தகப்பன் எப்படி துடித்துப் போவான் ?

அதை விடவா நமக்கு ஒரு துன்பம் வந்து விடும் ?


மெல்லிய பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கி பழக்கப் பட்டவன் நீ. எப்படித்தான் இந்த கல்லின் மேல் படுத்து உறங்குவாயோ என்று உருகுகிறான் தசரதன்.

அவனை விடவா நமக்கு ஒரு துன்பம் வந்து விடும்...பெற்ற பிள்ளையை காட்டுக்கு அனுப்பியதை விடவா ஒரு துன்பம் இருக்கும் ?

பாடல்

கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே


பொருள்

கொல்லணை = கொல்லும்

வேல் = வேல் போன்ற கூறிய

வரிநெடுங்கண் = நீண்ட கண்களை கொண்ட

கோசலைதன் = கோசலையின்

குலமதலாய் = குளத்தில் தோன்றிய பிள்ளையாய்

குனிவில் லேந்தும் = வளைந்த வில்லை ஏந்தும்

மல்லணைந்த = வலிமையான

வரைத்தோளா = மலை போன்ற பெரிய தோளை  உடையவனே 

வல்வினையேன் = பொல்லா வினயை உடைய நான்

மனமுருக்கும் வகையே கற்றாய் = மனம் உருகும் வகையே கற்றாய்

மெல்லணைமேல் = மெல்லிய படுக்கையில்

முன்துயின்றாய் = முன்பு துயின்றாய்

இன்றினிப்போய் = இன்று இனிப் போய்

வியன்கான மரத்தின் நீழல் = பெரிய கானகத்தில் மரத்தின் நிழலில்

கல்லணைமேல் = கல் தரையில்

கண்டுயிலக் கற்றனையோ  = கண் துயில என்று கற்றாய்

காகுத்தா = காகுந்தன் என்ற பரம்பரையில் வந்தவனே

கரிய கோவே = கரிய நிறம் கொண்ட அரசனே

காலம் எப்படி மனிதனைப் புரட்டிப் போடுகிறது.

இராமனுக்கே இந்த கதி என்றால் நாம் எம்மாத்திரம்.

அரசு வந்து விட்டது என்று ஆடவும் இல்லை.

அரசு போய் விட்டதே என்று அழுது புலம்பவும் இல்லை.

இந்த நிதானத்தை சொல்லித் தருவது இலக்கியம்.

துன்பத்தை தாங்கும் சக்தி தருவது இலக்கியம்.

அந்த சக்தி வேண்டாமா ?