Sunday, May 31, 2015

அபிராமி அந்தாதி - கல்லாமை கற்ற கயவர்

அபிராமி அந்தாதி - கல்லாமை கற்ற கயவர்


நாம் ஒன்றைச் செய்ய முடிவு செய்யும்போது, அது அல்லாத மற்றவற்றை செய்வதில்லை என்ற முடிவையும் எடுக்கிறோம்.

அடுத்த ஒரு மணி நேரம் டிவி பார்ப்பது என்று முடிவு செய்து விட்டால், அடுத்த ஒரு மணி நேரம் படிப்பது இல்லை, உடற் பயிற்சி செய்வது இல்லை, என்று எத்தனையோ விஷயங்களை செய்வது இல்லை என்பதும் முடிவு செய்யப் படுகிறது அல்லவா.

அதே போல், நாம் ஒன்றை படிக்கிறோம் என்று முடிவு செய்து விட்டால், அந்த ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் படிப்பது இல்லை என்றும் முடிவு செய்கிறோம்.

எஞ்சினீரிங் படிப்பது என்றால் மருத்துவம் படிப்பது அல்ல, சட்டம் படிப்பது இல்லை, வணிகம் படிப்பது இல்லை என்று முடிவு செய்கிறோம்.

உலகில் ஒன்றைப் படிப்பது என்றால், ஒரு கோடி விஷயத்தை படிக்காமல் விடுவோம்.

கற்பது என்பது கல்லாமையும் அடங்கியது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் மிக மிக கொடுமையானது எது என்றால் வறுமை.

 கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை

என்பார் ஔவையார். வறுமையின் கொடுமை அதை அனுபவித்தர்களுக்குத்தான் தெரியும்.

அந்த வறுமையை போக்க அபிராமியின் பாதங்களைப் பற்றுங்கள் என்று அழைக்கிறார் அபிராமி பட்டர்.

பாடல்

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

பொருள்

இல்லாமை சொல்லி = என்னிடம் இல்லை என்று  சொல்லி

ஒருவர் தம்பால் சென்று = மற்றவர்களிடம் சென்று

இழிவுபட்டு = கேவலப் பட்டு

நில்லாமை = நிற்காமல் இருப்பதை

 நினைகுவிரேல் = நீங்கள் நினைத்தால்

நித்தம் = தினமும்

நீடு தவம் = நீண்ட தவம்

கல்லாமை = கல்லாமல் இருப்பது

கற்ற கயவர் தம்பால் = அதைக் கற்ற கயவர்களிடம்

ஒரு காலத்தும் = எப்போதும்

செல்லாமை வைத்த = செல்லாமல் காக்கும்

திரிபுரை = அபிராமியின்

பாதங்கள் சேர்மின்களே = பாதங்களை அடையுங்கள்.

இல்லாமை என்று கூறும்போது, அது செல்வம் இல்லாமை மட்டும் இல்லை, கல்வி, ஆரோகியம், அதிகாரம், புகழ், மதிப்பு, என்று எந்த ஒரு இல்லாமையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அவள் பாதங்களைப் பற்றுங்கள், இல்லை என்று சொல்லி நீங்கள் இன்னொருவரிடம்  செல்ல வேண்டியது இருக்காது. எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

அது என்ன "கல்லாமை கற்ற கயவர்"

நாம் ஏதோ படித்து விட்டோம் என்று இறுமாப்பு கொள்கிறோம். நாம் படிக்காததையும், படித்தையும் வைத்துப் பார்த்தால் தெரியும் நாம் படித்தது எவ்வளவு, படிக்காமல் விட்டது எவ்வளவு என்று.

நாம், கல்லாமையைக் கற்று இருக்கிறோம்.

அறியாமையை அறிந்து இருக்கிறோம்.

மேலும், நம் கல்வி நம்மை எங்கே இட்டுச் செல்கிறது ?  

"நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால்"

நீண்ட தவத்தை கற்காத  கயவர் தம்பால். எதையெதையோ கற்கிறோம். நீண்ட தவத்தை கற்க வேண்டும் என்கிறார் பட்டர்.

 


Thursday, May 28, 2015

பிரபந்தம் - மனச் சுடரை தூண்டும் மலை

சிலர் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் கோவிலுக்குப் போய் இறைவனிடம் வேண்டுவார்கள். எனக்கு அது வேண்டும், எது வேண்டும், என்று வேண்டிக் கொள்வார்கள்.

வேண்டியது கிடைத்தவுடன், இறைவனை மறந்து விடுவார்கள். அடுத்த தேவை வரும் வரை, அந்த நினைவே கிடையாது.

வேறு சிலர், "எனக்கு வேண்டியதெல்லாம் நீ தந்திருக்கிறாய், நன்றி " என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.  போய் விட்டு வருகிறேன் என்று விடை பெற்றுச் செல்வார்கள்.

வேறு சிலரோ, தேவையும் இல்லை, நன்றியும் இல்லை,  பக்தி மட்டும் மனதில் இருக்கும். இறைவனை தொழுவது மட்டும் தான் உண்டு. அதற்கு பிரதி பலனாக ஒன்றையும் கேட்பது இல்லை.

இவர்களைப் பற்றி பொய்கை ஆழ்வார் கூறுகிறார்

பாடல்  

எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.


எழுவார் = கேட்டது கிடைத்தவுடன் எழுந்து போய் விடுவார்கள்

விடைகொள்வார் = சில பேர் சொல்லிக் கொண்டு போவார்கள்.

ஈன்துழா யானை = இனிய துளசி மாலை அணிந்தவனை

வழுவா வகை = குற்றமில்லாத வகை. குற்றமில்லாத என்பதற்கு வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காத என்று பொருள் சொல்கிறார்கள். 

நினைந்து = நினைத்து

வைகல்  தொழுவார் = எப்போதும் வணங்குவார்கள்

வினைச்சுடரை = வினை என்னும் தீயை

நந்துவிக்கும் = அணைக்கும்

வேங்கடமே = திருவேங்கட மலை

வானோர் = வானோர்

மனச்சுடரைத் தூண்டும் மலை = மனதில் உள்ள சுடரை தூண்டும் மலை

வினையான சுடரை அவிப்பவனும் அவன்.

மனதில் உள்ள சுடரை தூண்டி அதை பிரகாசிக்கச் செய்வதும் அவன்.

 


Wednesday, May 27, 2015

அபிராமி அந்தாதி - என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்

அபிராமி அந்தாதி - என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்



ஒரு பெண்ணை காதலிப்பவன் அவனுடைய காதலியை காணாமல் எப்படி தவிப்பான்.

காலையில் எழுந்தவுடன், அவள் இந்நேரம் எழுந்திருப்பாளா , பல் விளக்கி இருப்பாளா,  குளித்து, கல்லூரிக்குப் போக தயாராகி இருப்பாளா, இப்போது மதியம் உணவு  உண்டிருப்பாளா , இப்ப வீட்டுக்கு வந்திருப்பாள், இப்ப படித்துக் கொண்டிருப்பாள், இப்ப படுக்கப் போய் இருப்பாள், இப்ப தூங்கி இருப்பாள் என்று எந்நேரமும் அவள் நினைவாகவே இருப்பான் அல்லவா ?

பட்டரும் அதே போல அபிராமியின் நினைவாகவே இருக்கிறார்...எந்நேரமும் அவள் நினைவுதான் அவருக்கு.

நிற்கும் போதும்,
படுத்து இருக்கும் போதும்,
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லும் போதும்

அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

"நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை"

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று மணிவாசகர் சொன்ன மாதிரி சதா சர்வ காலமும் அவள் நினைப்பே.

 அன்பு, காதல் , பக்தி எல்லாம் படித்து விளங்காது. அது ஒரு அனுபவம். அனுபவம் இருந்தால் புரியும். இல்லை என்றால் அது என்னவென்றே விளங்காது.

பக்தியை புத்தகத்தில் தேடக் கூடாது.

"எழுதா மறையின் ஒன்றும் அரும் பொருளே"  என்கிறார் பட்டர்.

எழுதாத வேதம் அவள் பாதங்கள். சொல்லி விளங்க வைக்க முடியாது. ஒருவர் பெற்ற அனுபவத்தை எழுத்தில் இறக்கி வைக்க முடியாது.

நினைக்க நினைக்க அவர் மனத்தில் ஆனந்தம் பொங்குகிறது.

பாடல்

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

பொருள்


நின்றும் = நிற்கும் போதும்

இருந்தும்  = உட்கார்ந்து இருக்கும் போதும்

கிடந்தும் = படுத்து கிடக்கும் போதும்

நடந்தும் = நடக்கும் போதும்


நினைப்பதுன்னை = நான் நினைப்பது உன்னைத்தான்

என்றும் வணங்குவது = நான் எப்போதும் வணங்குவது

உன்மலர்த்தாள்!  = உன் மலர் போன்ற திருவடிகளைத்தான்

எழுதா மறையின் = எழுதாத வேதத்தின்

ஒன்றும் அரும் பொருளே! = ஒன்றான அரிய பொருளே . "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே" என்பார் மணிவாசகர்.

அருளே!  = அருள் வடிவானவளே

உமையே! = தூய்மையானவளே

இமயத்து அன்றும் பிறந்தவளே!  = பர்வத இராஜனுக்கு மகளாக பிறந்தவளே

அழியாமுத்தி ஆனந்தமே! = அழியாத முக்தியும் ஆனந்தமும் ஆனவளே

சொல்லித் தெரியாது காமம்.
சொன்னாலும் தெரியாது காதல்.
பக்தியும் அப்படித்தான் 

உணர்ந்து பாருங்கள்.


Tuesday, May 26, 2015

பிரபந்தம் - கொங்கை நல்லார் சிரியா முன்னம்

பிரபந்தம் - கொங்கை நல்லார் சிரியா முன்னம் 


நிலையாமை பற்று நம் முன்னோர்கள் ரொம்பவும் சிந்தித்து இருக்கிறார்கள்.

செல்வத்தின் நிலையாமை, இளமையின் நிலையாமை பற்றி ரொம்ப சிந்தித்து இருக்கிறார்கள்.

வயதாகி, படுக்கையில் விழுந்து, எழுந்து நடக்கக் கூட முடியாமல் இருக்கும் போது நாம் நேசித்தவர்கள், நம்மை நேசித்தவர்களே கூட நம்மை சுற்றி நின்று ஏளனம் செய்யும் நிலை வரும்.

மற்றவர்களுக்கு பாரமாய் ஆகும் காலம் வரும்.

கட்டிய மனைவியே 'கிழம் எப்போது போகும்' என்று சலிக்கும் காலம் வரும். அந்த காலம் வருவதற்கு முன்னே பத்ரிநாத்தில் உள்ள நாராயணனை வணங்குகள் என்று கூறுகிறார் திருமங்கை ஆழ்வார்.



பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப, ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர்மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும்நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே.

பப்ப = அப்பப்பா

அப்பர் = பெரியவர் (பெருசு)

மூத்த ஆறு = வயதாகும் விதம் (ஆறு = வழி)

பாழ்ப்பது = பாழானது

சீத்திரளை யொப்ப = சீழானது திரண்டு

ஐக்கள்போத வுந்த  = வாந்தி போல வந்து (ஐ = வாந்தி)

உன் = உங்களோட

தமர்க் = உறவினர்

காண்மினென்று = பார்த்துக் கொள்ளுங்கள் என்று

செப்பு = சொம்பைப்

நேர் = போன்ற

மென் = மென்மையான

கொங்கை = மார்புகளை கொண்ட

நல்லார் = நல்ல பெண்கள்

தாம் சிரியாத முன்னம் = தாங்கள் சிரிப்பதற்கு முன்னம்

வைப்பும் = சேர்த்து வைத்தவைகளும்

நங்கள் = நம்முடைய

வாழ்வு மானான் = வாழ்வும் ஆனான்

வதரி வணங்குதுமே = பத்ரிநாத்தில் உள்ள நாராயணனை வணங்குவோமே


மனைவி நம் மேல் மரியாதை வைத்து இருப்பாள், நமக்கு முடியாத காலத்தில் அன்புடன் பணிவிடை செய்வாள் என்றெல்லாம் கனவு காணாதீர்கள். அவளும் ஒரு மனுஷிதானே. அவளுக்குள்ளும் அருவருப்பும், ஆயாசமும், சலிப்பும் இருக்கும். கிண்டலும், நக்கலும் அவளுக்குள்ளும் இருக்கும். 'அந்த காலத்தில் கிழம் என்ன பாடு படுத்தியது ' என்ற எண்ணம் அவளுக்குள் எழாது என்று சொல்ல முடியாது.  

நம் கண் முன்னமேயே நம் மனைவி நம்மை பார்த்து , நம் இயலாமையைப் பார்த்து  சிரிக்கும் காலம் வரும். 

இதற்கா இந்தப் பாடு, விட்டு விட்டு அவனை வணங்குவோம் என்கிறார் ஆழ்வார். 

கடினமான காரியம் தான்...அன்பான மனைவியை அப்படி நினைத்துப் பார்ப்பது...இருந்தும் அதுதான் உண்மையாக இருக்குமோ ?


Saturday, May 23, 2015

இராமாயணம் - ஒருவன் நாமம்

இராமாயணம் - ஒருவன் நாமம் 


நாராயாணா என்ற நாமத்தின் பெருமையை பிரகலாதன் தன் தந்தையான இரணியனிடம் கூறுகிறான். 

பாடல்

"காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய!

பொருள்

"காமம் யாவையும் தருவதும் = நாம் ஆசை பட்டது அனைத்தையும் தருவதும்

அப் பதம் கடந்தால் = அவற்றைக் தாண்டி

சேம வீடு உறச் செய்வதும் = வீடு பேறு பெற உதவுவதும்

செந் தழல் முகந்த = சிவந்த நெருப்பு ஜொலிக்கும்

ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் =வேள்வியின் பலன்களைத் தருவதும்

ஒருவன் நாமம்; = ஒருவனின் நாமம்

அன்னது கேள்; = அது எது என்று கேட்டால்

நமோ நாராயணாய! = நமோ நாராயணாய

சிந்திக்க சிந்திக்க  அர்த்தங்கள் ஊறிக் கொண்டே இருக்கும் பாடல்.

எங்கு தொடங்குவது, எங்கு நிறுத்துவது. இப்படி எத்தனை பாடல்கள். எத்தனைக்கு அர்த்தம்  சொல்லிவிட முடியும் ?

சொல்லிய அர்த்தங்கள் முடிவானதா என்றால் அதுவும் இல்லை.

என்ன தான் செய்வது ?


Sunday, May 17, 2015

இராமாயணம் - துன்பத்தில் இருந்து விடுபட

இராமாயணம் - துன்பத்தில் இருந்து விடுபட

துன்பத்தை யாரும் விரும்புவது இல்லை. துன்பமில்லா வாழ்வே எல்லோருக்கும் வேண்டும்.

இருந்தும் துன்பம் வாழ்வில் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

ஏன் ?

துன்பம் ஏன் வருகிறது ?  நாம் துன்பம் வேண்டி போவது இல்லை. அதற்காக முயற்சியும் செய்வது இல்லை. இருந்தும் துன்பம் ஏன் வருகிறது ?

நாம் ஒழுக்கம் தவறினால் துன்பம் வரும்.

நமது ஒவ்வொரு துன்பத்திற்கும் காரணம் எங்கோ ஒழுக்கம் தவறியதுதான்.

சிந்தித்துப் பாருங்கள்.

உடல் நிலை சரி இல்லையா - உணவில் ஒழுக்கம் இல்லை.

வேலை சரி இல்லை, படிப்பு வரவில்லை, நல்ல மார்க் வரவில்லை என்றால்  - கல்வி கற்கும் ஒழுக்கத்தில் பிழை.

எந்த ஒரு துன்பத்திற்கும் ஏதோ ஒரு ஒழுக்கக் குறைவு காரணமாக இருக்கும்.

அது சரி,  உறவுகளினால் வரும் சிக்கலுக்கு , துன்பத்திற்கு என்ன காரணம் ?

மாமியார் மருமகள் உறவில் சிக்கல்,
கணவன் மனைவி உறவில் சிக்கல்,
பிள்ளைகளோடு உரசல்

இவற்றிற்கும் ஏதோ ஒழுக்கக் குறைவுதான் காரணம் என்று  கொண்டால்,  அந்த ஒழுக்கம்   எங்கே சொல்லப் பட்டு இருக்கிறது ? அப்படி இருந்தால் அதை படித்து  அதன் படி வாழலாம்.

தமிழில் எங்கேனும் அந்த ஒழுக்க வரை முறை இருக்கிறதா ?

உதாரணமாக கணவன் மனைவி உறவில் வரும் சிக்கலை எப்படி  போக்கிக் கொள்வது ?

தமிழில் இதற்கு வழி இருக்கிறது.

ஒழுக்கம் என்றால் என்ன ?

ஒழுகுவது ஒழுக்கம்.

வீடு ஒழுகிறது என்கிறோம் அல்லவா, அந்த ஒழுகுதல்.

ஒழுகுதல் என்பது எப்போதும் மேலிருந்து கீழாகத்தான் வரும்.

கூரையில் இருந்து தரை நோக்கி ஒழுகும்.

தரையில் இருந்து கூரை நோக்கி ஒழுகாது.

 இரண்டாவது,ஒழுகுதல் என்பது தொடர்ச்சியாக நடப்பது. சொட்டு சொட்டாக விழுவது அல்ல.

எனவே ஒழுக்கம் என்பது மேலிருந்து கீழாக தொடர்ச்சியாக வருவது.

அது என்ன மேலிருந்து கீழ் ?

உயர்ந்தவர்கள், சான்றோர், நல்லவர்கள், பெரியவர்கள் செய்வதை கண்டு நாமும்   அதையே வாழ்வில் விடாமல் கடை பிடிப்பது ஒழுக்கம்.

சரி, இப்போது பிரச்னைக்கு வருவோம்.

கணவன் மனைவி இடையே சிக்கல்.

பணம், வேலை, உறவு இவற்றில் ஏதோ ஒன்றினால் கணவனும் மனைவியும் ஒரு  சுமுகமான சூழலில் இல்லை. என்ன செய்வது ?

முதலில் வழியைச் சொல்கிறேன். பின், அது எப்படி வந்தது என்பதைச் சொல்கிறேன்.

முதலாவது, மனைவி கணவன் மேல் வைத்துள்ள நமிபிக்கையை எந்த காலத்திலும்  கை விடக் கூடாது.

இரண்டாவது, கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் மூன்றாவது நபரை விடக் கூடாது. ஒரு பெண், துன்பத்தில் இருக்கிறாள் என்றால் யாரும் உதவி செய்ய வருவார்கள். மனைவி, தனக்கு உள்ள பிரச்சனையை மற்றவர்கள் மூலம்  தீர்த்துக் கொள்ள முயலக் கூடாது. "என் கணவன் சரி இல்லை, அவரால்  முடியவில்லை, நீங்கள் உதவி செய்வீர்களா " என்று மனைவி யாரையும்  அண்டக் கூடாது. அப்படி செய்தால் , உதவி செய்தவன் பதிலுக்கு ஏதாவது  எதிர்பார்பான். அது குடும்பத்தில் மேலும் சிக்கலை உருவாக்கும். அது மட்டும் அல்ல,   கணவன் , அவனுடைய மனைவியின் பிரச்சனைகளை கண்டு கொள்ள  மாட்டான் "அவள் யாரையாவது வைத்து சமாளித்துக் கொள்வாள்" என்று விட்டு விடுவான். இது உறவில் மேலும் விரிசலை உருவாக்கும்.

மூன்றாவது, மனைவி , கணவனின் பெருமையை ஒரு போதும் விட்டு கொடுக்கக் கூடாது. அது கணவனுக்கு பலம்  சேர்க்கும். என் மனைவி என்னை மதிக்கிறாள்  என்ற எண்ணம் கணவனுக்கு ஆயிரம் யானை பலம் தரும்.

இப்போது கதைக்குப் போவோம்.

பெரிய சக்ரவர்த்தி ஆவான் என்று  எண்ணி இராமனை மணந்து கொண்டாள் சீதை. பெரிய பலசாலி. சிவ தனுஷை வளைத்தவன். தசரதனின் மூத்த குமாரன். வசிட்டனிடம் கல்வி பயின்றவன். என்னென்ன qualification வேண்டுமோ  , எல்லாம் இருந்தது அவனிடம்.

என்ன ஆயிற்று ?

இராஜியத்தை இழந்து, நடுத் தெருவுக்கு வந்து விட்டான். அது மட்டும் அல்ல,  கட்டிய  மனைவியை மாற்றான் கவர்ந்து செல்ல விட்டு விட்டான்.

சீதை அசோக வனத்தில் சிறை இருக்கிறாள்.

அங்கே அனுமன் வருகிறான்.

அவள் துன்பத்தைக் கேட்டு,  "பேசாமல், என் தோளில் ஏறிக் கொள்..இப்பவே உன்னை இராமனிடம்  சேர்த்து விடுகிறேன்....மத்தது எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறுகிறான்.

'வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப் 
பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய் 
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள் 
ஏறு, கடிது' என்று, தொழுது இன் அடி பணிந்தான்.

எங்கே ஒரு நிமிடம் நிறுத்தி, நீங்கள் சீதையாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்துப் பாருங்கள் .

கணவன் சரி இல்லை. வேலை இல்லை. பதவி இல்லை. வருமானம் இல்லை. கட்டிய  மனைவியை காக்கத் தெரியவில்லை. இங்கே , அனுமன் என்ற மிக வலிமையானவன், கடலைத் தாண்டி வந்து இருக்கிறான். மகன் போன்றவன். அவன்  தோளில் ஏறி அமர்ந்து கொண்டால் நேரே இராமனிடம் போய் சேர்ந்து விடலாம்.

இதில் தவறு என்ன இருக்கிறது ? என்று தானே நினைப்போம்.

சீதை அப்படி நினைக்கவில்லை.

அந்த சூழ்நிலையிலும்  தனக்கும் இராமனுக்கும் நடுவில் இன்னொரு மனிதன் (அனுமன்) வருவதை அவள் அனுமதிக்க வில்லை.

அது மட்டும் அல்ல, "இந்த பிரச்சனையை நானே தீர்த்துக் கொள்வேன். அப்படி செய்தால்   அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு " என்று செய்யாமல் இருக்கிறேன் என்று கூறுகிறாள்.

அதாவது, கணவனின் திறமையில் அசைக்க முடியாத நம்பிக்கை. அவன் இது வரை  அவளுக்கு தந்தது எல்லாம் துன்பம் தான் என்றாலும் அவன் திறமையை  அவள் குறைத்து மதிப்பிடவில்லை. மேலும், அவன் திறமையை மற்றவர்களுக்கு  எடுத்துச் சொல்கிறாள்.

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ? 
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என் 
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன் 
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.

எனக்கு இந்த பிரச்சனையை தீர்க்கத் தெரியும். அதற்கான ஆற்றலும் உண்டு. ஆனால், நான் செய்ய மாட்டேன். என் கணவன் தான் செய்ய வேண்டும் என்கிறாள். 

தன் ஆற்றலை அடக்கிக் கொண்டு, கணவனை முன்னிலைப் படுத்துகிறாள்.  

இராமனுக்கு மாசு என்று சொல்லவில்லை. 

இராமனின் வில்லுக்கு மாசு என்று சொல்லவில்லை. 

இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று  நினைக்கிறாள்.

அதாவது, கணவனின் திறமையை தான் மதிப்பது மட்டும் அல்ல, மற்றவர்களும் அறியச் சொல்லுகிறாள்.

ஒரு வேளை , சீதை அனுமன் கூடப் போய் இருந்தால் என்ன ஆகி இருக்கும் ? மனைவியை காக்கத்  தெரியாதவன் என்று இராமனுக்கு தீராப் பழி வந்து சேர்ந்து இருக்கும். 

பிரச்னை என்று வரும்போது, நம்பிக்கை இழக்காதீர்கள். மூன்றாவது மனிதனை , அது யாராக இருந்தாலும் , உங்களுக்கும் உங்கள் கணவனுக்கும் இடையில் வர விடாதீர்கள். கணவனை  முன் நிலைப் படுத்துங்கள்....

இது சீதை செய்தது.

இராமாயணம் கிடைத்தது நமக்கு. 

சிந்தியுங்கள். 


Friday, May 15, 2015

திருக்குறள் - எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம்

திருக்குறள் - எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம் 


உலகிலேயே பெரிய முட்டாள் யார் என்று கேட்டால், படிக்காதவன் , படிப்பு அறிவில்லாதவன் அல்ல பெரிய முட்டாள்.

படித்து, அதை நன்கு உணர்ந்து, மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லி தான் அடங்காதவன் தான்  முட்டாள்களில் பெரிய முட்டாள் என்கிறார் வள்ளுவர்.

செவிட்டில் அறைந்தது மாதிரி இருக்கிறது.

எத்தனையோ படிக்கிறோம். புரியவும் செய்கிறது. புரிந்ததை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் படித்ததை கடைபிடிக்கிறோமா என்றால் இல்லை.

பாடல்

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப்

பேதையின் பேதையார் இல்.

பொருள்

ஓதி = படித்து

உணர்ந்தும் = உணர்ந்து. படித்ததில் உள்ள பலன்களை உணர்ந்து. 

பிறர்க்குரைத்தும் = பிறர்க்கு உரைத்து

தான் அடங்காப் = தான் அடங்கா


பேதையின் பேதையார் இல். = முட்டாளை விட பெரிய முட்டாள் இல்லை

இனிப்பு சேர்ப்பது உடலுக்கு தீங்கு என்று படிக்கிறோம். அதன் காரணம் புரிகிறது.  மற்றவர்களுக்குக் கூட எடுத்துச் சொல்கிறோம். ஆனால், அந்த இனிப்பை நாம்  சாப்பிடாமல் இருக்கிறோமா என்றால் இல்லை. நாக்கு சுவை வேண்டுகிறது. புலன் அடக்கம் இல்லை.

பொறாமை கொள்வது தவறு. பேராசை கொள்வது தவறு. கோபம் கொள்வது தவறு  என்று தெரிகிறது. இருந்தும் மனம் அடங்குகிறதா ? இல்லை.

புலன் அடங்கவில்லை.

மனம் அடங்கவில்லை.

பொய் பேசக் கூடாது. புறம் கூறக் கூடாது. பயன் இல்லாத சொற்களை பேசக் கூடாது  என்று படித்து அறிகிறோம். செய்யாமல் இருக்கிறோமா ? இல்லை.

மொழியும் அடங்குவது இல்லை.

மன, மொழி, மெய் அடங்குவது இல்லை.

பின் படித்து என்ன  பலன்.

படிக்காமல் இருந்திருந்தால் அந்த நேரமாவது மிச்சமாகி இருக்கும்.

சிறந்த நூல்களை படிக்கிறோம்.

அதன் படி நடப்பது இல்லை "அது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது" என்று  சொல்லிவிட்டு பழைய வழியிலேயே செல்கிறோம்.

பின் படிப்பது எதற்கு ?

நம்மால் முடியவில்லை என்றால் மற்றவர்களால் எப்படி முடியும் ? எதற்காக மற்றவர்களுக்கு சொல்ல நாம் படித்ததை சொல்ல வேண்டும் ?

இந்த ப்ளாக் எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று யோசிக்கிறேன்.

ஒன்று, நான் படித்ததன் வழி நின்று என் மன, மொழி , மெய்கள் அடங்க நான் வழி காண  வேண்டும்.

 அல்லது,படிப்பதையும், எழுதுவதையும் விட்டு விட வேண்டும்.

கடந்த சில நாட்களாக காதில் மீண்டும் மீண்டும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்கிறது இந்த குறள் ...

யோசிக்கிறேன்....நீங்களும் யோசியுங்கள்.