Saturday, November 5, 2016

இன்னிலை - திருமணமும் குழந்தைப் பேறும்

இன்னிலை - திருமணமும் குழந்தைப் பேறும் 


எதற்காக திருமணம் செய்து கொள்கிறாய் என்று கேட்டால் , "மனைவியோடு இன்பமாக இருக்கலாம், சீர் செனத்தி என்று கொஞ்சம் செல்வம்  வரும்,மாப்பிள்ளை என்று ஒரு மரியாதை வரும், சமூகத்தில் ஒரு மதிப்பு வரும்..." இவற்றிற்காக கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்கிறான்.

சரி, பிள்ளை எதற்கு என்று கேட்டால் "பிள்ளை இல்லா விட்டால் ஆண்மை இல்லாதவன், மலடி என்ற அவச் சொல் வரும், அது மட்டும் அல்ல, நமக்கு அப்புறம் நம் சந்ததி வளர வேண்டாமா, அதற்கும், மேலும், சேர்த்து வைத்த சொத்துகளுக்கு ஒரு வாரிசு வேண்டாமா அதற்கும் " ஒரு பிள்ளை வேண்டும் என்கிறான்.

சரி, பிள்ளைகளை எதற்கு பள்ளி கூடத்திற்கு அனுப்புகிறாய் என்று கேட்டால், படிச்சு வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கத்தான் என்கிறான்.

எதற்கு திருமணம் செய்துகொள்வது, எதற்கு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவது, எதற்கு அவர்களை படிக்க வைப்பது என்று சரியாகத்  தெரியாமலேயே இவை நடந்து கொண்டிருக்கின்றன.

திருமணம் செய்து கொண்டு, இல்வாழ்க்கையில் ஈடுபட்டு , குழந்தைகளை பெற்றுக் கொள்வதின் நோக்கம் என்ன என்று இன்னிலை என்ற அற நூல் கூறுகிறது.

"ஒரு பெண்ணை மணந்து அவளோடு இன்பம் காணப்பது என்பது நல்ல பிள்ளைகளைப் பெற்று, அவர்களை நான்கு அல்லது ஐந்து ஆண்டில் அவர்களை பள்ளிக்கு அனுப்பி, அவர்கள் இறைவனை காணும்படி கல்வி கற்பிப்பதே இல்வாழ்வின் இனிய நோக்கம் "

பாடல்

பாலை வளர்த்துக் கணங்குழை மாலையுறல்
சால்பென்ப கண்கூடாக் காணாய்-தழைகாதல்
வாலறிவ னாக்க வகையறிக காலத்தால்
தோலொடு நாலைந் தணந்து.

பொருள்

பாலை = பாலகனை

வளர்த்துக்  = வளர்த்து

கணங்குழை = அழகிய காதணிகளை அணிந்த பெண்ண

மாலையுறல் = மால் என்றால் மயக்கம். கிறக்கம் . இங்கே இன்பம் என்ற பொருளில் வந்தது. இன்பம் அடைதல்

சால்பென்ப = உயர்ந்தது என்று கூறுவார்கள்

கண்கூடாக் காணாய் = கண் கூடாகக் காண்பாய்

தழைகாதல் = பெருகி வரும் காதலில்

வாலறிவ னாக்க = இறைவனை அறிய

வகையறிக = வகையினை செய்தல் , பள்ளியில் சேர்த்தல், குருவிடம் ஒப்புவித்தல்

காலத்தால் = தகுந்த நேரத்தில்

தோலொடு = அழகான

நாலைந் தணந்து = நான்கு அல்லது ஐந்து வயதில்

இரண்டு வயதில், இரண்டரை வயதில் pre kg என்று பிள்ளைகளை கொண்டு போய்  பள்ளிக் கூடத்தில் தள்ளி விடுகிறார்கள்.

கல்வி கற்பதின் நோக்கம், ஏதோ வேலை தேடிக் கொண்டு , நாலு காசு பார்ப்பது அல்ல.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் என்பார் வள்ளுவர்.

கல்வியின் பயன் இறைவனைத் தொழுதல். இறைவனை அறியாமல் எப்படி அவனை தொழுவது ? இறைவன், கடவுள் என்றால் யார் என்றே அறியாமல் , எல்லோரும் செய்கிறார்கள், நானும் செய்கிறேன் என்று கோவிலுக்குப் போவது, பூஜை செய்வது, பாட்டுப் பாடுவது, விரதம் இருப்பது என்று பல பேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் தேவைதான். ஆனால் அதுவே முடிவு அல்ல.

மணி அடிப்பதும் , சர்க்கரை பொங்கல், சுண்டல் சாப்பிடுவதும் இறைவனை அறிவது ஆகாது. ஆனால் , அங்குதான் ஆரம்பிக்க வேண்டும்.

பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து அவர்கள் இறைவனை அடைய வழி செய்வதுதான் திருமணம் செய்து கொண்டு , ஒரு பெண்ணோடு இன்பமாக வாழ்வதின்  குறிக்கோள்.

சொல்லித் தந்திருக்கிறார்கள். படிக்காமல் விட்டு விட்டோம்.

படிப்போம். மற்றவர்களுக்கும் சொல்லுவோம்.

எந்த நிலையில் நம் சமுதாயம் சிந்திருக்கிறது என்று நினைத்துப் பார்ப்போம்.





Friday, November 4, 2016

இராமாயணம் - பரதன் 10 - சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது

இராமாயணம்  - பரதன் 10 -  சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது


துன்பம் இல்லாத யார் இந்த உலகில் ? எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அதிகார பலம் உள்ளவனாக இருந்தாலும், ஆள்  அம்பு சேனை என்று இருந்தாலும் துன்பம் ஏதோ ஒரு வகையில் அழையா விருந்தாளியாக வந்து விடுகிறது.

சரி துன்பம் வந்து விட்டது. என்ன செய்வது ? எப்படி அதைப் போக்கிக் கொள்வது என்று தெரியாமல் அல்லாடுபவர்கள் ஆயிரம்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று எதையெதையோ முயன்று பார்ப்பார்கள்.

தயரதன் இறந்து விட்டான்.  தந்தை இறந்த துக்கத்தை எப்படி மாற்றுவது ? அவன் உயிரோடு எழுந்து வந்தால் அல்லது அந்த துக்கம் போகாது. அது ஒன்றும் நடக்கும் காரியம் இல்லை. பின் எப்படி அந்த துக்கத்தில் இருந்து விடுபடுவது ?

பரதன் சொல்கிறான்


" என் தந்தையும், தாயும், என் தலைவனும், என் முன் பிறந்தவனும் , முடிவே இல்லாத நல்ல குணங்களை கொண்ட இராமனின் திருவடிகளில் என் தலையை வைத்தால் அல்லது இந்த துக்கம் மாறாது " என்று

பாடல்

எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன்கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது ‘என்றான்.


பொருள்

‘எந்தையும் = என்னுடைய தந்தையும்

 யாயும் = என் தாயும்

எம்பிரானும் = என் தலைவனும்

எம்முனும் = என் அண்ணனும் (முன் பிறந்தவன்)

அந்தம் = முடிவே

இல் =  இல்லாத

பெருங் = சிறந்த

குணத்து = குணங்களைக் கொண்ட

இராமன் = இராமன்

ஆதலால் = ஆதலால்

வந்தனை = வணக்கம்

அவன்கழல் = அவன் திருவடிகளில்

வைத்தபோது = செய்கின்றபோது

அலால் = தவிர

சிந்தை = மனதில் உண்டானான

வெம் = வெம்மகாயன்

கொடுந் = கொடுமையான

துயர் = துன்பம்

தீர்கலாது  = தீராது

என்றான் = என்றான் பரதன்

மனக் கவலையை மாற்றும் மருந்து இராமனின் திருவடிகள் என்பது பரதனின் முடிவு.

பரதன் இருந்த போது இராமன் இருந்தான். அவன் கூடவே, அவன் மாளிகையில். இப்போது நமக்கு ஒரு துன்பம் என்றால் இராமனைத் தேடி எங்கே போவது  ?

இராமனை வெறுமனே இராமன் என்று சொல்லவில்லை.

எந்தையும்
யாயும்
எம்பிரானும்
எம்முன்னும்
அந்தமில் குணத்து இராமன்

என்று கூறுகிறான்.

பெரியவர்கள், நல்லவர்கள், உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் , அவர்களைப் போய்ச் சேருங்கள். அதுவே மனக் கவலையை மாற்றும் மருந்து.

ஒரு வேளை , பரதனின் அதீத சோகத்தால் அவன் அண்ணனைப் பார்க்க நினைத்திருக்கலாம்.

உணர்ச்சி வசப்படாமல் , தெளிவாக சிந்தித்து , மனக் கவலை மாற்ற வழி சொன்னவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா ?

வள்ளுவர் இருக்கிறார். அவரிடம் கேட்போம்.

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக் கவலை மாற்றல் அரிது  

என்கிறார் வள்ளுவர்.

தனக்கு உவமை இல்லாதவனுடைய திருவடிகளை சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு  மனக் கவலையை மாற்ற முடியாது என்கிறார்.

பரதனைப் படிக்கும் போது , வாழ்க்கையைப் படிக்கிறோம்.



Thursday, November 3, 2016

இராமாயணம் - பரதன் 9 - தோய்ந்தே கடந்தான்

இராமாயணம் - பரதன் 9 - தோய்ந்தே கடந்தான்


முந்தைய பிளாகில் தயரதன் கோபம், காமம் போன்ற குற்றங்களை தவிர்த்து வாழ்தவன் என்று பார்த்தோம்.

(முந்தைய பிளாகைப் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/11/blog-post.html


‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறும் நெறி செலும்
    வள்ளியோய்! மறந்து ‘
உனக்கு உறும் நெறி செலல்
    ஒழுக்கின் பாலதோ? ‘


)


தயரதனுக்கு பதினாயிரம் மனைவிகள் மற்றும் மூன்று பட்டத்து இராணிகள் என்று இருந்தார்கள். இவ்வளவு பெண்களோடு வாழ்ந்தவன் எப்படி காமத்தை வென்றவனாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பு.


நாம் எதையும் முழு மனதோடு செய்வது இல்லை. ஒன்றைச் செய்யும் போதே இன்னொன்றின் மேல் மனம் செல்கிறது. மனம் ஒன்றிச் செய்வது இல்லை.

சாப்பிடும் போது டிவி பார்த்துக் கொண்டோ அல்லது பேப்பர் அல்லது புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடுவது. சாப்பாட்டில் எங்கே கவனம் இருக்கும். அலுவலத்தில் இருக்கும் போது வீட்டு எண்ணம். வீட்டில் இருக்கும் போது அலுவலகத்தின் எண்ணம். இறைவனை வணங்கும் போதும் ஆயிரம் சிந்தனைகள்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
        உத்தமர்தம் உறவு வேண்டும்  என்பார் வள்ளலார். 


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
        உத்தமர்தம் உறவு வேண்டும் 
        உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் 
        உறவு கலவாமை வேண்டும் 
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை 
        பேசா திருக்க வேண்டும் 
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் 
        பிடியா திருக்க வேண்டும் 
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை 
        மறவா திருக்க வேண்டும் 
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற 
        வாழ்வுனான் வாழ வேண்டும் 
    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் 
        தலமோங்கு கந்த வேளே 
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி 
        சண்முகத் தெய்வ மணியே. 

என்பது திருவருட்பா.

மனம் எங்கே ஒருமைப் படுகிறது ? எப்போதும் ஏதோ ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே வாழ்கிறோம். ஒரே நேரத்தில் பல காரியங்களை செய்ய நினைக்கிறோம். ஒன்றிலும் மனம் இலயிப்பது கிடையாது.

மனம் ஒன்றாததனால் , அனுபவம் முழுமை பெறுவது இல்லை. ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. அரைகுறையாக விட்டதை மீண்டும் அனுபவிக்க மனம் விரும்புகிறது.

ஒரு ஆசையில் இருந்தும் மீண்டு வர முடியவில்லை.

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்

பெண் என்பவள் என்ன மோசமானவளா . ஏன் ஞானிகள் , அறிஞர்கள் எல்லோரும் பெண்ணைக் கண்டால் இப்படி பயப்படுகிறார்கள் ? பெண்ணைப் பற்றி , அவளின் உடலைப் பற்றி கேவலமாக பேசுகிறார்கள். பெண் இல்லை என்றால் அவர்களே தோன்றியிருக்க முடியாதே. அப்படி இருக்க பெண்ணைப் பற்றி ஏன் அப்படி எழுதுகிறார்கள் ?

வள்ளலார் சொல்கிறார் "அணைக்கும் பெண்ணின் ஆசையை மறக்க வேண்டும்" என்கிறார்.  பெண் ஆசை வேண்டும். அந்த ஆசை இல்லை என்றால்  உலகம்  நின்று போகும். ஆனால், அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு கால கட்டத்தில் , பெண் என்பவள் ஒரு நண்பியாக, தோழியாக, தாயாக, சகோதரியாக நினைக்க வேண்டும். மருவுதலையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. பெண்ணை மறக்கச் சொல்லவில்லை. பெண் மேல் உள்ள ஆசையை மறக்க வேண்டும் என்கிறார்.

எப்படி அதை மறப்பது ? பெண் ஆசை எனபது மறக்கக் கூடியதா ?

மனதை வேறொன்றின் மேல் செலுத்தினால் பெண் ஆசை மறக்கும். "உன்னை மறவாது இருக்க வேண்டும்" என்கிறார் வள்ளலார். மனம் தெய்வ சிந்தனையில் போனால்  பெண் ஆசை போகும்.

எதையோ எழுத வந்து எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன்....மன்னிக்கவும்.



ஆனால், தயரதன் அப்படி அல்ல. எதைச் செய்தாலும் அதை முழுமையாக, அதன் இறுதி வரை சென்று முழுமையாக அனுபவித்து பின் அதை விட்டு மீண்டு வருகிறான். போதும் என்ற திருப்தி வந்து விடுகிறது.

அரசியல் சிறப்பு பற்றி சொல்ல வந்த கம்பன், தயரதனின் பெருமையைப் பற்றிக் கூறுகிறான்.

"இல்லை என்று கடல் போல வருபவர்களை தர்மம் என்ற படகில் ஏறிக் கடந்தான். உலகில் உள்ள எண்ணற்ற நூல்கள் என்ற கடலை ஆராய்ச்சி என்ற படகில் சென்று கடந்தான்.  பகைவர்கள் என்ற கடலை தன்னுடைய வீரம் என்ற படகால் கடந்தான். செல்வம் தரும் அனைத்து சுகங்களையும் அனுபவம் என்ற படகால் கடந்தான் "

பாடல்

ஈய்ந்தே கடந்தான் இரப்போர் கடல்;எண்
    இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும்
    அளக்கர்; வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை;
    கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான் திருவின்
    தொடர் போக பௌவம்.

பொருள் 


ஈய்ந்தே = தர்மம் செய்தே

கடந்தான் = கடந்தான், தாண்டினான்

இரப்போர் கடல் = கடல் போன்ற இரப்போர்களை.  கடல் போன்ற வறியவர்களை.

எண் இல் = எண்ணிக்கையில் அடங்காத

நுண் நூல் = நுண்மையான நூல்களை , புத்தகங்களை

ஆய்ந்தே கடந்தான் = ஆராய்ச்சி செய்தே கடந்தான்


அறிவு என்னும்  அளக்கர் = அறிவு என்ற கடலை

வாளால் = தன்னுடைய வாளால் , வீரத்தால்

காய்ந்தே கடந்தான் = சண்டையிட்டே கடந்தான்

பகை = பகைவர்கள் என்ற

வேலை = கடலை

கருத்து முற்றத் = மனம் நிறைய , திருப்தி படும்படி

தோய்ந்தே கடந்தான் = அனுபவித்தே கடந்தான்

திருவின் = செல்வத்தின்

தொடர் = தொடர்ந்து வரும்

போக = சுகம் என்ற

பௌவம் = கடலை

மிக ஆழமான பாடல்.

இன்பங்களை அனுபவித்து கடக்க முடியுமா ? நெய்யை விட்டு நெருப்பை அணைக்க முடியுமா ? அனுபவிக்க அனுபவிக்க இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்றல்லவா  மனம் கேட்கும்.

தயரதனுக்கும் அப்படி நிகழ்ந்து இருக்கலாம். மேலும் வேண்டும், மேலும் வேண்டும் என்று  அனுபவித்து ,  சரி,இதில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று  அவன் அதை கடந்திருக்கலாம். அல்லது, அனுபவத்தை  முழுமையாக்கி  , அதை கடந்திருக்கலாம். எப்படி இருப்பினும், உலக சுகங்களை எல்லாம்  அனுபவித்தே கடந்துவிட்டான். இனி , அந்த சசுகங்களின் மேல் பற்று இல்லை. நான் பார்க்காததா என்ற நிமிர்வு வந்து விடும்.

இரண்டாவது, சரி நாங்களும் அப்படி அனுபவித்து கடக்கிறோம். அவன் சக்திக்கு  பதினாயிரம் மனைவிகள் என்றால் எங்கள் சக்திக்கு ஒரு பத்தாவது முடியாதா  என்று குதர்க்கமாக யாரும் கேட்கலாம். இங்குதான் ஒரு முக்கியமான  கருத்தை நான் கவனிக்க வேண்டும்.

ஒரு அரசன், இந்த சுக போகங்களை அனுபவித்து கடந்து விட்டால், அவன் மனம் அதில் செல்லாது. வருகின்ற வரிப் பணத்தைக் கொண்டு எப்படி மக்களுக்கு நல்லது  செய்யலாம் என்று தோன்றும். இல்லை என்றால், எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். சேர்க்கிறார்கள்.  ஆசை சலித்துப் போனால் , மனம் மக்களை பற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தொடங்கும்.

குற்றங்கடிதல் பற்றி சொல்ல வந்த வள்ளுவர் , காமத்தை எதிரிகள் அறியாமல் அனுபவித்துக் கொள் என்கிறார். இல்லை என்றால் பகைவர்கள் அந்த பலவீனத்தை அறிந்து கொண்டு அதன் மூலம் உன்னை வீழ்த்தி விடுவார்கள் என்று மன்னனுக்கு அறிவுரை கூறுகிறார். வள்ளுவருக்குத் தெரியும் , காமம் என்பதை அடக்க முடியாது. இரகசியமாக அனுபவித்துக் கொள் என்று சொல்லித் தருகிறார்.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

என்பது வள்ளுவம். 

எண்  இல் நுண் நூல் ஆய்ந்தே கடந்தான்

கம்பர் காலத்திலேயே புத்தகங்கள் இருந்து இருக்கிறது. அதுவும் எப்படி, எண்ணில் அடங்காத  நூல்கள். அது மட்டும் அல்ல, எண்ணில் அடங்காத நுண்மையான நூல்கள். அறிவுப் பூர்வமான, ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்கள்  மட்டுமே எண்ணிக்கையில் அடங்காத அளவு இருந்ததாம். அது அல்லாமல் மற்ற  புத்தகங்களும் இருந்திருக்கும் போல. நுண் நூல் என்று சொல்லும்போது  நுண்மை இல்லாத நூல்களும் , பொழுது போக்கு நூல்களும்  இருந்திருக்கும்.

படித்தவர்களும், படித்ததை எழுதி வைத்தவர்களும், எழுதியதை படித்து பயன்  பெறுபவர்களும் நிறைந்த ஞான பூமி இது.

படிக்கும் போது , நல்ல விஷயங்கள் உள்ள, ஆழ்ந்த கருத்துகளை கொண்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

வார, மாத நாவல்களை விட்டு அறிவு பூர்வமான நூல்களை வாசிப்போம்.


Wednesday, November 2, 2016

இராமாயணம் - பரதன் 8 - உனக்கு உறும் நெறி செலல்

இராமாயணம் - பரதன் 8 - உனக்கு உறும் நெறி செலல்


இராமாயணம் போன்ற காப்பியங்களை எழுதுவதின் நோக்கம் ஏதோ கதை சொல்வதற்காக அல்ல. கதை என்று பார்த்தால் இராமாயணம் போன்ற கதைகள் ஆயிரம் இருக்கின்றன. இராமாயணத்தில் என்ன சிறப்பு என்றால் அதன் கதை அல்ல. அந்தக் கதையின் ஊடாக சொல்லப் பட்ட தர்மங்கள், அறங்கள். கதை என்பது மாத்திரையின் மேல் பூசப்பட்ட சர்க்கரை மாதிரி. வெறுமனே அறத்தை மட்டும் எடுத்துச் சொன்னால் கசக்கும். கதையோடு சொல்லும் போது , வாசகன் அறியாமலேயே நல்ல கருத்துக்கள் அவனுள் சென்று சேர்ந்துவிடும்.

தயரதன் இறந்த செய்தியை கேட்டதும் பரதன் அழுது அரற்றுகிறான். அங்கும் கம்பன் பல நல்ல செய்திகளை வைக்கிறான். தயாராதனின் நல்ல குணங்கள் என்று பரதன் பட்டியல் போட்டுச் சொல்கிறான். அது நமக்கும் ஒரு பாடம். அந்த நல்ல குணங்களை நாமும் மேற்கொள்ள வேண்டும். அடுத்த சந்ததிக்கும் சொல்லித் தர வேண்டும்.


"சினம் காமம் போன்ற குற்றங்களை தவிர்த்து, எல்லோருக்கும் பிடித்த நல் வழியில் செல்பவனே (தயரதனே ) , இன்று அவற்றை விட்டு விட்டு நீ நினைத்த பாதையில் போவது சரி தானா ?"

என்று புலம்புகிறான்.

பாடல்

‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறும் நெறி செலும்
    வள்ளியோய்! மறந்து ‘
உனக்கு உறும் நெறி செலல்
    ஒழுக்கின் பாலதோ? ‘

பொருள்


‘சினக் = சினம் என்ற

 குறும்பு = குறும்பை

எறிந்து = தவிர்த்து

எழு = எழுகின்ற

காமம் = காமம் என்ற

தீ = தீயை

அவித்து = அணைத்து

இனக் = சினம் காமம் போன்றவற்றின் இனமான

குறும்பு யாவையும் = மற்றைய குறும்புகள் அனைத்தையும்

எற்றி = மாற்றி, தவிர்த்து

யாவர்க்கும் = அனைவர்க்கும்

மனக்கு = மனதுக்கு

உறும் = பிடித்த

நெறி செலும் = வழியில் செல்லும்

வள்ளியோய்! = வள்ளலே

மறந்து  = அவற்றை எல்லாம் மறந்து

உனக்கு = உனக்கு

உறும் = பிடித்த

நெறி செலல் = வழியில் போவது

ஒழுக்கின் பாலதோ? = ஒழுக்கத்தின் பாற் பட்டதா ?

குறும்பு என்றால் மீண்டும் மீண்டும் வரும் வந்து துன்பம் தரும் பகை  என்று பொருள். 

மனதளவில்  ஆறு விதமான  பகைகள் மீண்டும் மீண்டும் வரும். 

கோபம். காமம். பேராசை. மானம். உவகை. மதம். 

இதில் கோபமும், காமமும் உள்ளிருந்து வெளியில் செல்பவை என்று சொல்கிறார்கள். அது மட்டும் அல்ல, கோபமும் காமம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை. 

ஒன்றின் மேல் ஆசை வரும். அது கிடைக்கவில்லை என்றால் கோபம் வரும். 

சீதை மேல் இராவணனுக்கு காமம் வந்தது. அவள் அவனுக்கு உடன் படவில்லை என்றபோது  கோபம் வந்தது. அந்த காமமும் கோபமும் அரக்கர் குலத்தையே அழித்தது. 

கோபம் வரும்போது சிந்தித்துப் பாருங்கள். ஆதற்கு முந்தைய காமம் புலப்படும். அடுத்த முறை காமம் வரும்போது , எண்ணிக்கொள்ளுங்கள், கோபம் வரப்போகிறது என்று . 

மற்ற பூதங்கள்  - நீர், காற்று போன்றவை ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு  இடத்துக்கு தூக்கிப் போடும். அதனால் அந்தப் பொருள் கொஞ்சம் சேதம்  அடையலாம். ஆனால், அந்தப் பொருளின் தோற்றமும், வடிவமும் அப்படியே  இருக்கும். ஆனால், தீ அப்படி அல்ல. எரித்து சாம்பலாக்கி விடும்.  உருவமே இல்லாமல் செய்து விடும். எனவே தான் காமத்தை  தீ க்கு ஒப்பிட்டு கூறினார். காமம் வந்தால் ஒருவன் தன் நிலை இழப்பான்.  ஆளே மாறிப்போவான். 

‘சினக் குறும்பு எறிந்து,
    எழு காமம் தீ அவித்து,
இனக் குறும்பு யாவையும்
    எற்றி'


சினம், காமம் அதற்கு இனமான மற்றைய குறும்புகள் அனைத்தையும் நீக்கி.

இவற்றை நீங்கியதால்  தயரதன் பெரிய சக்ரவர்த்தியாக திகழ்ந்தான். உயர் நிலையை அடைய வேண்டுமென்றால் இந்த குற்றங்களை தவிர்க்க வேண்டும் என்பது பாடம்.

இப்போது இதை எல்லாம் விட்டு விட்டு , நீ பாட்டுக்கு உன் வழியில் போனால் என்ன அர்த்தம்  என்று புலம்புகிறான்.

புலம்பலில் கூட உயர்ந்த கருத்துக்கள்.

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல் என்றார் வள்ளுவர்.

இம்மைக்கும் மறுமைக்கும் பயனில்லாத சொற்களை பேசுபவன் என்று அதற்கு உரை செய்தார்  பரிமேல் அழகர்.

துக்கத்தில் அழும் போது கூட உயர்ந்த சொற்களை கூறினவன்  பரதன்.


Tuesday, November 1, 2016

இராமாயணம் - பரதன் 7 - பரதனின் தந்தைப் பாசம்

இராமாயணம் - பரதன் 7 - பரதனின் தந்தைப் பாசம் 


இராமாயணம் படிப்போர் எல்லாம் , இராமனுக்கும் தயரதனுக்கும் உள்ள நெருக்கமான உறவைப் பற்றித்தான் பெரும்பாலும் பேசுவார்கள். சொல்லப் போனால் தயாரதனுக்கு பரதன் மேல் கோபம் கூட உண்டு. தனக்கு அவன் பிள்ளை இல்லை, தனக்கு அவன் இறுதிக் கடன் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு உயிர் விடுகிறான் தயரதன்.

ஆனால், தயரதன் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறான் பரதன்.

தந்தை மகன் உறவு எப்போதும் மௌனத்திலேயே நடக்கிறது. இருவரும் வெளியே சொல்லிக் கொள்வதில்லை.

 பரதனின் தந்தைப் பாசம் கண் கலங்க வைக்கும்.

ஒரு பெண்ணைப் போல ஆணால் அன்பை, உணர்ச்சியை எளிதாக வெளிப் படுத்த முடிவதில்லை.

தயரதன் இறந்துவிட்டான். பரதன் , தயரதனைத் திட்டுகிறான்.

"நீ பாட்டுக்கு இப்படி பொறுப்பு இல்லாமல் இறந்து போய் விட்டாயே. நீ இறந்து விட்டால் இந்த அறத்தையும், அருளையும், நீதியையும், நீ சேர்த்த செல்வத்தையும் யார் காப்பாற்றுவார்கள். இப்படி பொறுப்பில்லாமல் இறந்து விட்டாயே" என்று ஏசுவது போல துக்கத்தில் குமுறுகிறான்.

பாடல்

‘அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை,
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறத்னை ஆம் எனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ?


பொருள்

‘அறம்தனை = அறத்தை

வேர் அறுத்து = வேரோடு அறுத்து

அருளைக் கொன்றனை = அருளை, கருணையை கொன்றாய்

சிறந்த= உயர்ந்த

நின் = உன்னுடைய

தண்ணளித் = தண் + ஒளி = குளிர்ந்த ஒளி பொருந்திய

திருவைத் = செல்வத்தை

தேசு = பெருமை, செல்வாக்கு

அழித்து = அழித்து

இறத்னை ஆம் எனின் = இறந்துவிட்டாய் என்றால்

இறைவ! = தலைவனே

நீதியை = நீதியை , ஞாயத்தை

மறந்தனை; = மறந்து விட்டாய்

உனக்கு = உனக்கு

இதின் = இதைவிட

மாசு = குற்றம்

மேல் உண்டோ? = அதிகம் உண்டோ


தயரதனை "இறைவ " என்று அழைக்கிறான். காக்கும் தொழில் இறைவனின் பிராதன தொழில். நாம் இறைவனிடம் எதிர்பார்ப்பது நம்மை காப்பாற்றுவதைத் தான்.  யாரும் கடவுளிடம் "கடவுளே என்னை படை , என்னை  உருவாக்கு" என்று கேட்பது இல்லை. நாம் தான் ஏற்கனவே படைக்கப் பட்டு  விட்டோமே. "ஆண்டவா என்னை அழித்து விடு "என்று யாரும்  ஆண்டவனை வேண்டுவது இல்லை. அழிப்பதும் ஆண்டவன் தொழில் தானே. கடவுளிடம் வேண்டுவது எல்லாம் காப்பாற்றுதல் ஒன்றுதான்.


யார் காப்பாற்றுகிறார்களோ அவர்கள் கடவுள்.

அரசனுக்கு "இறைவன்" என்று பெயர். இறைமாட்சி என்று ஒரு அதிகாரம் வைத்தார்  வள்ளுவர், அரசனின் கடமைகளை சொல்ல.

அறத்தை, நீதியை, அருளை, புகழை காக்கும் தொழில் அரசனுக்கு உண்டு.


அவன் இறந்ததே குற்றம் என்கிறான். இதெல்லாம் யார் பார்ப்பார்கள் என்று நீ பாட்டுக்கு  இறந்து விட்டாய் என்று புலம்புகிறான்.

நாங்கள் எல்லாம்  சின்னப் பிள்ளைகள். எங்களுக்கு என்ன தெரியும். அறமும், நீதியும், அருளும், புகழும் எல்லாம் உனக்குத்தான் தெரியும். நீ இறந்து விட்டால் நாங்கள் என்ன செய்வோம். நீ இப்படி இறந்தது தவறு என்று ஒரு சிறு பிள்ளை போல்  அழுகிறான்.

தந்தை இறந்த அந்த சோகத்திலும் அவனுக்கு மனதில் முதலில் வருவது "ஐயோ, இந்த அறத்தை இனி யார் காப்பார்கள்" என்பது தான். துக்கத்திலும் அற உணர்வே  அவனிடம் மேலிட்டு நிற்கிறது.

அறத்தை காப்பது அரசனின் கடமை . தயரதன் அந்தக் கடமையில் இருந்து தவறி விட்டான்  என்று புலம்புகிறான் பரதன்.

இப்படி ஒரு பிள்ளையை கண்டது உண்டா ?



Monday, October 31, 2016

இராமாயணம் - பரதன் 6 - ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்

இராமாயணம் - பரதன் 6 - ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்

இராமன் கானகம் போய் விட்டான். அவனோடு கூட இலக்குவனும், சீதையும் போய் விட்டார்கள்.

பாட்டனார் ஊரில் இருந்து பரதன் வருகிறான். வந்தவுடன் , தாயான கைகேயிடம் "அப்பா எங்கே ?" என்று கேட்கிறான்.

அவர் இறந்துவிட்டார் என்று மிகச் சாதாரணமான ஒரு செய்தியை சொல்வதைப் போல சொல்கிறாள் கைகேயி.

துடித்துப் போகிறான் பரதன்.

"கணவன் இறந்தான் என்ற செய்தியை இதை விட சாதாரணமாக சொல்ல உன்னை விட வேறு யாரும் நினைக்கக் கூட மாட்டார்கள்" என்று சொல்லி அழுகிறான்.

பாடல்

வாய் ஒளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரை
ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்
‘தீ எரி செவியில் வைத்து அனைய தீய சொல்
நீ அலது உரைசெய நினைப்பரோ? ‘என்றான்.

பொருள்

வாய் = முகம்

ஒளி மழுங்கத் = ஒளி மங்கி வாடிப் போக

தன் = தன்னுடைய

மலர்ந்த தாமரை = மலர்ந்த தாமரை

ஆய் = போன்ற

அலர் நயனங்கள் = மலர் போன்ற கண்கள்

அருவி சோர்தரத் = அருவி போல கொட்ட

‘தீ எரி = எரிகின்ற தீயை

செவியில் = காதில்

வைத்து = வைத்தது

அனைய = போல

தீய சொல் = தீய சொல்லை

நீ அலது = உன்னைத் தவிர

உரைசெய = சொல்வதற்கு

நினைப்பரோ? = நினைப்பார்களோ

‘என்றான் = என்றான்

இராமாயணத்தை விமரிசிக்கும் சிலர், பரதன் , தன்னுடைய பாட்டனார் வீட்டில் இருந்து கொண்டு , தாய்க்கு சொல்லிக் கொடுத்து அரசை அபகரித்துக் கொண்டான்  என்ற குற்றச் சாட்டை அவன் மேல் சுமத்துவார்கள்.

கதையில், பரதனின் செயலை உன்னிப்பாக கவனித்தால் அது எந்த அளவுக்கு ஒரு தவறான  குற்றச் சாட்டு என்று புரியும்.

இராமனைப் பொறுத்தவரை , தாயும் தந்தையும் சொல்லிவிட்டால் அது வேத வாக்கு. அது சரியா, தவறா என்றெல்லாம் அவன் ஆராய்ச்சி செய்வது கிடையாது.

"மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ" என்று சொல்லி காட்டுக்கு கிளம்பி விட்டான்.

 ஆனால்,பரதன் அப்படி அல்ல. யார் சொன்னாலும், கேட்பது இல்லை. எது அறமோ, எது தர்மமோ, எது ஞாயமோ  அதில் உறுதியாக நிற்பான்.

தாய் தானே என்று அவன் பார்ப்பது இல்லை.

"இந்த துக்கச் செய்தியை , உன்னைத் தவிர வேறு யாரும் இப்படி சொல்ல நினைக்கக் கூட  மாட்டார்கள்" என்று அவள் மேல் கோபம் கொள்கிறான்.

உறவுகளைத் தாண்டி , அறத்தின் பால் உறுதியாக நின்றது பரதனின் ஒரு குணம்.

மேலும் சிந்திப்போம்.



Sunday, October 30, 2016

இராமாயணம் - பரதன் 5 - நின்னினும் நல்லன்

இராமாயணம் - பரதன் 5 - நின்னினும் நல்லன் 



பரதன் அரசாள வேண்டும். நீ காடாள வேண்டும் என்று கைகேயி சொன்ன பின், கோசாலையை காண இராமன் வருகிறான். இராமனின் கோலத்தைக் கண்டு கோசலை , இராமனைப் பார்த்துக் கேட்டாள்  "முடி புனைவதற்கு ஏதேனும் தடை உளதோ" என்று . "முடி புனைய தடை இல்லை, ஆனால் முடி பரதன் புனைகிறான்" என்று சொல்கிறான்.

பங்கமில் குணத்து என் தம்பி, உன் காதல் மைந்தன் பரதன் முடி சூட்டுகிறான் என்று கூறுகிறான்.

கோசலை கலங்கவில்லை.

"அரச முறை என்று ஒன்று இருக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால், உங்களை போல மூன்று மடங்கு நல்ல குணங்கள் கொண்டவன். உன்னை விட நல்லவன். ஒரு குறையும் இல்லாதவன் பரதன். அவனே ஆளட்டும் " என்று கூறுகிறாள்.


பாடல்

“முறைமை அன்று என்பது
    ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன்
    நின்னினும் நல்லனால்;
குறைவு இலன்;“ எனக்
    கூறினள், நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்
    வேற்றுமை மாற்றினாள்.

பொருள்

“முறைமை அன்று = அரச முறை இல்லை. மூத்தவன் இருக்க, இளையவனுக்கு முடி சூட்டுவது என்பது அரச தர்மம் இல்லை.

என்பது = என்று

ஒன்று உண்டு; = ஒன்று உண்டு

மும்மையின் = மூன்று மடங்கு

நிறை குணத்தவன் = நிறைந்த குணங்கள் கொண்டவன்

நின்னினும் நல்லனால் = உன்னை விட நல்லவன்

குறைவு இலன்; = குறை ஒன்றும் இல்லாதவன்

எனக் கூறினள்,= என்று கூறினாள் . கூறியது யார் ?

நால்வர்க்கும் = நான்கு சகோதரர்களுக்கும்

மறு இல் = குறை இல்லாத

அன்பினில் = அன்பினால்

வேற்றுமை மாற்றினாள் = வேறு பாடு இல்லாத கோசலை

நுணுக்கமாக அறிய வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.

முதலாவது, தன் மகனுக்கு அரசு இல்லை. தான் சக்ரவர்த்தியின் தாய் இல்லை  என்று அறிந்த கோசலை பேசுகிறாள்.

இரண்டாவது, தாய்மார்கள் பாடம் படிக்க வேண்டிய இடம். பிள்ளை ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் வாங்கினாலோ, அல்லது ஏதாவது போட்டியில்  வெற்றி பெறவில்லை என்றாலோ, பெரும்பாலும் தாய்மார்கள் பிள்ளைகளை திட்டுவது இயல்பு. சரி படிச்சாதானே, ஒழுங்கா படுகிறதே இல்லை, எந்நேரம் பார்த்தாலும் டிவி என்று கடிந்து கொள்வார்கள். பிள்ளை ஏற்கனவே  மனம் நொந்து வந்திருப்பான். அதற்கு மேல் தாயின் கடிய சொற்கள்.

கோசலை அறிவாள் . ஒரு வேளை இராமன் மனம் துன்பப் பட்டிருக்குமோ , அவனை மேலும் வருத்தம் கொள்ளச் செய்யக் கூடாது என்று, "பரவாயில்லை, பரதன் உன்னை விட நல்லவன், அவனே ஆளட்டும் " என்று ஆறுதல் சொல்கிறாள்.

மூன்றாவது, அவள் பரதனைப் பற்றி கூறும் சொற்கள்.   மும்மையின் நிறை குணத்தவன் என்கிறாள். உங்கள் மூன்று பேரை காட்டிலும் நிறைந்த குணங்கள்  கொண்டவன் என்பது பொருள்.

நான்காவது, நின்னினும் நல்லன். உன்னை விட நல்லவன் என்கிறான். பரதன்  உயரும் இடம். இராமனை விட ஒரு படி மேலே போய் விட்டான். சொல்வது வேறு யாரும் அல்ல,  கோசலை கூறுகிறாள். இராமனின் தாய். எந்த தாய்க்கும் தன் பிள்ளை  உயர்வுதான். தன் பிள்ளையிடமே இன்னொரு பிள்ளையைப் பற்றி எந்தத் தாயும் பேச மாட்டாள். அதுவும் இராமனைப் போன்ற பிள்ளையை விட  வேறு யார் பெரிய நல்ல குணங்கள் கொண்டிருக்க முடியும் ? பாரதனால் முடிந்தது.  இராமனை விட நல்லவன் என்று கோசலை சான்றிதழ் தருகிறாள்.

ஐந்தாவது, இதுவரை பரதன் எதுவும் சாதித்தாக செய்தி இல்லை. இருந்தும் அவன்  உயர்ந்து நிற்கிறான். எப்படி ? அவன் குணங்கள் . குணத்தால்,மனத்தால் உயர்ந்தவன் பரதன்.

இராமனை விட நல்லவன் என்று இராமனின் தாய் கூறும் அளவுக்கு நல்லவன் பரதன்.

எப்படி அப்படி ஆனான் என்று கம்பர் காட்டுகிறார்.

மேலும் சிந்திப்போம்.