Tuesday, February 14, 2017

இராமாயணம் - பரதன் குகன் - தொடர்ந்து பின்னே போனவன்

இராமாயணம் - பரதன் குகன் - தொடர்ந்து பின்னே போனவன் 


நாம் யாரையாவது பார்த்தால் , 'நீ எப்படி இருக்க ' என்று கேட்போம். அதையே கொஞ்சம் நீட்டி "வீட்ல எப்படி இருக்காங்க, பிள்ளைங்க எல்லா நல்லா இருக்காங்களா ? அப்பா அம்மா எப்படி இருக்காங்க ' என்று கேட்டால் அவர்களுக்கு சந்தோஷம் அதிகம் ஆகும்.

இராமன் எங்கே இருந்தான், எங்கே படுத்தான் என்று குகனிடம் கேட்டு அறிந்த பரதன் அந்த இடத்தையெல்லாம் பார்த்து கண்ணீர் விட்டான். என்னால் அல்லவா இராமன் இந்த துன்பங்களை அடைந்தான் என்று எண்ணி வருந்தினான்.

உடனே அவனுக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.

இராமனும் , சீதையும் இங்கே இருந்தார்கள் என்றால் , அவர்கள் கூட வந்த இலக்குவன் என்ன ஆனான் ? அவன் எங்கே படுத்தான், எங்கே உறங்கினான் என்று கேட்டான்.

பாடல்

தூண்தர நிவந்த தோளான்
     பின்னரும் சொல்லுவான்! ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
     இதுஎனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே 
     போந்தவன், பொழுது நீத்தது
யான்டு?’ என, இனிது கேட்டான்;
     எயினர்கோன், இதனைச் சொன்னான்;

பொருள்

தூண்த= தூண் போல

நிவந்த = உயர்ந்த

தோளான் = தோள்களை உடைய பரதன்

பின்னரும் = மேலும்

சொல்லுவான்! = கேட்பான்

‘அந் நீண்டவன் = அந்த உயர்ந்த இராமன்

துயின்ற = தூங்கிய

சூழல் = இடம்

இதுஎனின் = இது என்றால்

நிமிர்ந்த நேயம் = உயர்ந்த அன்பு

பூண்டவன் = கொண்ட இலக்குவன்

தொடர்ந்து = தொடர்ந்து

பின்னே - பின்னே

போந்தவன் = சென்றவன்

பொழுது நீத்தது = பொழுது நீக்கியது (உறங்கியது)

யான்டு?’ என,= எப்படி என்று

இனிது கேட்டான் = இனிமையாகக் கேட்டான்

எயினர்கோன், = வேடர் குலத்தலைவன்

இதனைச் சொன்னான் = இதைச் சொன்னான்

இராமனும் சீதையும் துன்பப்பட்டது ஒரு புறம் இருக்க. இலக்குவன் எவ்வளவு துன்பப் பட்டிருப்பான் என்று பரதன் பதறுகிறான்.

இராமாயணத்தை படித்துக் கொண்டே போகும் போது , இராமனும் சீதையும் பட்ட  துன்பங்கள் , தவிப்புகள் தான் நமக்குத் தெரியும்.

இலக்குவனும், அவன் மனைவி ஊர்மிளையும் பட்ட துன்பங்கள் தெரியாது. கதைப் போக்கில்  அது மறந்து போய் விடுகிறது.

குறிப்பாக கேட்கிறான் பரதன்.

ஒரு வீட்டில் ஆணோ அல்லது பெண்ணையோ சாதிக்கிறார்கள் என்றால் , அந்த சாதனைக்குப் பின்னால் மற்றவர்களின் தியாகங்கள் நிறைய இருக்கும்.


ஒரு நிறுவனம் வெற்றிகரமாக செயல் படுகிறது என்றால் அதன் தலைவர் மட்டும்  காரணம் இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு ஊழியனும் அந்த வெற்றிக்கு தங்கள் பங்களிப்பை அளித்து இருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களும்  காரணம். அதை அந்த நிறுவனத்தின் தலைவர் உணர வேண்டும்.

கணவனின் வெற்றிக்குப் பின்னால் மனைவியும், மனைவியின் வெற்றிக்குப் பின்னால்  கணவனும், பிள்ளைகளின் வெற்றிக்குப் பின்னால் பெற்றோரும் இருப்பார்கள்.

பரதனிடம் பெற்ற பாடம்.



Thursday, February 9, 2017

தேவாரம் - என்று வந்தாய் என்னும் எம்பெருமான்

தேவாரம் - என்று வந்தாய் என்னும் எம்பெருமான்


ரொம்ப நாள் கழித்து யாராவது நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்குப் போனால் "என்னப்பா ஆளையே காணோம். இப்பத்தான் என் நெனப்பு வந்துச்சா " என்று கேட்பார்கள் அல்லவா....

அது போல

நீண்ட நாள் கழித்து நாவுக்கரசர் சிதம்பரத்தில் உள்ள சிவ பெருமானை தரிசிக்கப் போகிறார்.

அங்கே சிவன் ஆடிய கோலத்தில் கையை அபிநயம் பிடித்தப்பிடி இருக்கிறார்.

அதைப் பார்த்த நாவுக்கரசருக்கு  "எப்ப வந்தாய் " என்று கேட்பது போல இருந்ததாம்....

பாடல்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்கா
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.

பொருள்

ஒன்றி இருந்து = மனம் வாக்கு காயம் என இவை எல்லாம் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = நினையுங்கள்

உம் தமக்கு =உங்களுக்கு

ஊனம் இல்லை = குறை இல்லை

கன்றிய = சினந்த

காலனைக் = எமனை

காலால் கடிந்தான் =காலால் எட்டி விலக்கினான்

அடியவற்கா = அடியவனான மார்கண்டேயனுக்காக

சென்று தொழுமின்கள் = அவனை சென்று தொழுங்கள்

தில்லையுள் = தில்லையுள்

சிற்றம்பலத்து =சிற்றம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும்

என்று வந்தாய் என்னும் = என்று வந்தாய் என்று கேட்கும்

எம்பெருமான் = எம்பெருமானாகிய சிவனின்

தன் திருக்குறிப்பே = சைகையே


ஒன்றி இருந்து நினைமின்கள் - மனமும் உடலும் ஒன்றாக இருக்க வேண்டும். எங்கே முடிகிறது. கண்ணை மூடினால் ஆயிரம் சிந்தனைகள். அலையும் மனதை நிறுத்தி ஒருமுகப் படுத்த வேண்டும்.

காலால் கடிந்தான் - கடிதல் என்ற சொல்லுக்கு கண்டித்தல் , விலக்குதல் , ஓட்டுதல் என்று  பொருள்.

காலனை காலால் ஓட்டினான் என்ற தொடருக்கு எமனை எட்டி உதைத்தார் என்று பொருள்  கொள்ளக் கூடாது. எமன் என்ன தவறு செய்தான் ? காலம் முடிந்த ஒருவனின் உயிரை எடுப்பது அவனுக்கு இடப்பட்ட வேலை. கடமை.  அதைத்தானே  அவன் செய்தான். கடமையை செய்ததற்காக அவனை தண்டிக்கலாமா ? அதுவும் பல பேர் அறிய எட்டி உதைக்கலாமா ?

அது அல்ல பொருள்.

சைவ சித்தாந்தம் 36 தத்துவங்களை கூறுகிறது. அதில் காலம் என்பது ஒரு தத்துவம். மார்கண்டேயர் யோக மார்கத்தில் கால தத்துவத்தை கடந்து  சென்று விட்டார்.  "இரவும் பகலும் அற்ற வெளிக்கு " சென்று விட்டார்.  இதை அறியாத எமன் அவர் ஏதோ 16 வயது முடிந்து விட்டது என்று அவருடைய உயிரை எடுக்கச்  சென்றார். கால தத்துவத்துக்கு உட்பட்டவர்கள் உயிரை எடுப்பதுதான் அவனுக்கு இட்ட வேலை.  காலத்தை தாண்டிய மார்கண்டேயர் போன்ற யோகிகளின் உயிரை பறிக்க முயன்றது அவன் தவறு.

சரி. எமன் தவறு செய்த்ததாகவே  இருக்கட்டும். அதற்காக அவனை எட்டி உதைப்பதா ?

ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள  வேண்டும். சமய இலக்கியங்கள் இறைவனின் திருவடி என்று சொல்லுவது ஞானத்தை.

'திருவடிகளைத் தருவாய் " என்றால் ஞானத்தை தருவாய் என்று பொருள்.


நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வைத்து என்பார் அபிராமி பட்டர்.

ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் 
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் 
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட 
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

என்பது அபிராமி அந்தாதி.

இறைவன் திருவடி தீண்டப் பெறுவதற்கு திருவடி தீட்சை என்று பெயர்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவனின் சிலை நாவுக்கரசரைப் பார்த்து "எப்போது வந்தாய்" என்று கேட்பது போல இருந்ததாம்.

என்னிடம் வர ஏன் இவ்வளவு நாள் ? முதலிலேயே வரவேண்டியது தானே என்று கேட்பது போல இருந்ததாம்.

உடலில் வலு இருக்கும் போது , மனதில் உறுதி இருக்கும் போது , இரத்தம் சூடாக இருக்கும் போது மனிதன் இறைவனை நினைப்பது இல்லை.

தோல்விகள் துரத்தும் போது , வாழ்வின் நிகழ்வுகள் தன்னுடைய சக்தியை தாண்டி  நிகழும் போது , மனிதன் இறைவனை நோக்கி ஓடுகிறான்.

இறைவன் காத்து   இருக்கிறான்.

நீங்கள் எப்போது வருவீர்கள் என்று.





Wednesday, February 8, 2017

முத்தொள்ளாயிரம் - யானையே , பைய நட

முத்தொள்ளாயிரம் - யானையே , பைய நட


பாண்டிய மன்னன் மேல் அவளுக்கு காதல். அவ்வப்போது பாண்டியன் நகர் வலம்  வருவான். அப்போது அவனை பார்த்து இரசிப்பாள் அவள்.  சாதாரணப் பெண். மன்னன் மேல் காதல் கொண்டாள் . நேரில் சென்று பேசவா முடியும் ? வெளியில் சொல்லவா முடியும்.

பாண்டியன் அமர்ந்து வரும் பெண் யானையிடம் சொல்லுகிறாள்....

"ஏய் , யானையே...உனக்கு என்ன  அவசரம்.ஏன் இவ்வளவு வேக வேகமாக போகிறாய். ஒரு பெண்ணா , இலட்சணமா மெல்ல நடந்து போகக் கூடாது ? இப்படி விசுக் விசுக்கென்று வேகமாக நடந்து போனால் , பாக்குறவங்க நீ ஒரு பெண் தானா என்று சந்தேகப்  படுவார்கள்.மெல்லமா நடந்து போ...என்ன ?"

என்று அந்த பெண் யானையிடம் மெல்ல போகச் சொல்லுகிறாள்.

அப்படி மெதுவாகப் போனால் , அவள் பாண்டியனை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் அல்லவா ...அதுக்குத்தான்.

நேரடியா சொல்ல முடியுமா ? நாணம்.


பாடல்

எலாஅ மடப்பிடியே! எங்கூடல்க் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன், உலா அங்கால்ப்
பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ(து) உடைத்து!


பொருள்


எலாஅ மடப்பிடியே! = ஏய் , பெண் யானையே

எங்கூடல்க் = எம்முடைய கூடல் (மதுரை) மாநகரத்து

கோமான் = மன்னன்

புலாஅல் = எப்போதும் புலால் இருக்கும்

நெடுநல்வேல் = பெரிய நல்ல வேலைக் கொண்ட (அவனுடைய வேலில் எதிரிகளின் உடல் சதை ஒட்டிக் கொண்டிருக்குமாம். எப்போதும் புலால் இருக்கும் நல்ல வேல்)

மாறன் =மன்மதன்  போன்ற அழகு உடையவன்

உலா அங்கால்ப் = உலா வரும் அந்த வேளையில்

பைய = மெல்ல

நடக்கவுந் தேற்றாயால் = நடக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா

நின்பெண்மை = உன்னுடைய பெண் தன்மையை

ஐயப் படுவ(து) உடைத்து = சந்தேகப் படும்படி இருக்கிறது !


மெல்ல நடக்காமல் வேகமாக நடப்பதால் ஒரு சந்தேகம்.

ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்று சொல்வார்கள். என் மனம் உனக்குத் தெரியாததால் , நீ ஒரு ஒரு பெண் தானா என்று  சந்தேகம்.

ஒரு தலைக் காதல்தான். அதன் சோகம் தெரியாமல், நகைச் சுவையாக சொல்லும் அந்தப்  பெண் நம் கண் முன் வந்து போகிறாள்.

இலக்கியம் ஒரு கால இயந்திரம். நம்மை வேறு ஒரு கால கட்டத்துக்கு கொண்டு சென்று  விடும்.

மதுரை வீதி, மன்னன் மேல் காதல் கொண்ட சாதாரணப் பெண், அவளின் மன  ஏக்கங்கள், உலாப் போகும் மன்னன், மதுரையின் வீதிகள் எல்லாம் நம் கண்  முன்னே விரிகின்றன - இந்த நாலு  வரியில்.


Tuesday, February 7, 2017

நீதி நெறி விளக்கம் - நிலையாமை மூன்று

நீதி நெறி விளக்கம் - நிலையாமை மூன்று 


குமரகுருபரர் அருளிச் செய்தது நீதி நெறி விளக்கம். இவர் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். பிறந்து ஐந்து வருடம் வரையில் வாய் பேசாமல் இருந்ததாகவும், பின் திருச்செந்தூர் முருகன் அருளால் வாய் பேசினார் என்றும் இவரின் வரலாற்று குறிப்பு கூறுகிறது.

இவருடைய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் கேட்க மீனாட்சியே நேரில் வந்து அவள் கழுத்தில் இருந்த மாலையை இவர் கழுத்தில் போட்டாள் என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது.

நீதிநெறி விளக்கம் என்ற இந்த நூல் 102 பாடல்களைக்  கொண்டது.அத்தனையும் வாழ்க்கைக்கு வழி காட்டும் அற்புதமான பாடல்கள். எளிய தமிழில் இனிமையான பாடல்கள்.

சில பாடல்களை இந்த பிளாகில் பார்ப்போம். முடிந்தால் மூல நூலைப் படித்துப் பாருங்கள். தேனினும் இனிய தமிழ் பாடல்கள்.

மனிதன் மூன்று விஷயங்களை நிரந்தரமானது என்று பிடிவாதமாக  நினைக்கிறான்.  இல்லை,அவை நிரந்தரமானவை இல்லை என்று எவ்வளவு சாட்சிகள் தந்தாலும் அனைத்தையும் மறுதலிக்கிறான்.  ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.

அவை - இளமை, செல்வம், வாழ்க்கை (உயிர்).

முடி நரைக்கிறது . பல்  விழுகிறது.தோலில் சுருக்கம்  வருகிறது. ஞாபக சக்தி குறைகிறது.  இருந்தும், ஏதோ இளமை நிலையானது என்று விடாப்பிடியாக  நினைக்கிறான். முடி கறுத்தால் அதற்கு சாயம் பூசி மறைக்கிறான். பல் விழுந்தால் அதற்கு பொய் பல் கட்டிக் கொள்கிறான். பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கப் போவதைப் போல நாளும் ஆடி ஓடி சாகும் வரை சொத்து சேர்கிறான். அனுபவிக்காமலே இறந்தும்  போகிறான்.

இவை நிலையானவை என்று நினைக்காமல் இருந்தால், வாழ்வு எவ்வளவோ சுகமாக இருக்கும்.

பாடல்

நீரில் குமிழி இளமை நிறை செல்வம் 
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் 
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே 
வழுத்தாதது எம்பிரான் மன்று


பொருள் 

நீரில் குமிழி இளமை = நீரில் தோன்றும் குமிழி போன்றது இளமை

நிறை செல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் = நிறைகின்ற செல்வம் நீரில் தோன்றும் அலை 

நீரில் எழுத்து ஆகும் யாக்கை = நீரில் மேல் எழுத்து ஆகும் இந்த உடல் 

நமரங்காள் = நம்மவர்களே

என்னே = ஏன்

வழுத்தாதது = வாழ்த்தாதது

எம்பிரான் மன்று = இறைவன் சந்நிதியில்

இளமையை நீரின் குமிழி என்றும், செல்வத்தை நீரில் தோன்றும் அலை என்றும்,  உடலை நீர் மேல் எழுத்து என்று கூறுகிறார்.

ஏன் ?

நீர் குமிழி முதலில் சாதாரணாமாகத் தோன்றும் பின் வான வில் நிறம் காட்டி பின் உடையும். அது போல, இளமை என்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பலப் பல வண்ணம் காட்டி  மறையும்.

பெண்ணைப் பார்த்தால் அழகு. அவள் சிரித்தால் அழகு. நடந்தால் அழகு. வெட்கப் பட்டால் அழகு....என்று மயங்கும் போது தெரிய வேண்டும் இது நீர் குமிழி என்று.


செல்வம் நீர் மேல் தோன்றும் அலை. அலை மேலே எழும் பின் கீழே விழும். செல்வமும் அப்படித்தான்.  ஒரு கால கட்டத்தில் மேலே வரும், பின் சட்டென்று  மறையும். மேலே வரும்போது இப்படியே வந்து கொண்டே இருக்கும் என்று மகிழக் கூடாது.  குறையும் போதும் இப்படியே இருந்து விடும் என்றும் நினைத்து வருந்தக் கூடாது. கூடுவதும் குறைவதும் செல்வத்தின் இயல்பு.

நீர் மேல் எழுத்து உடல்.

கடற் கரையில் எழுதி வைத்தால் எந்த அலை அந்த எழுத்தை அழிக்கும் என்று  தெரியாது.  அது போலத்தான் இந்த உடலும். எந்த நேரமும் மறைந்து விடும். மரணம் என்ற  அலை அடித்துக் கொண்டே இருக்கிறது. எந்த அலை நம்மை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரியாது.

சரி,  இளமையும்,செல்வமும், உடலும் நிலை இல்லாதது.

 புரிகிறது. அதனால் என்ன ? அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்.

நமது பெரும்பாலான கவலைகளுக்கு , துன்பங்களுக்குக் காரணம் நம் ஆணவம்.

எப்படி ?

நான் , எனது என்ற எண்ணங்கள் தான் ஆணவத்திற்கு காரணம்.

நான் பெரிய ஆள், படித்தவன்/ள் , அழகானவள் / ன் , பணக்காரன், செல்வாக்கு  உடையவன் , அதிகாரம் உடையவன் என்று நினைத்து நமது ஆணவத்தை வளர்த்துக்  கொள்கிறோம்.

என் வீடு, என்  கார்,என் வேலை, என் மனைவி, என் பிள்ளை என்று நமக்கு உரியவற்றினால் நமக்கு ஆணவம் வருகிறது.

இப்படி ஆணவம் வருவதால் அவற்றை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் , மேலும் பெருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.  நம்மை விட மற்றவன் அதிகம்  பெற்று விடுவானோ , அவன் மனைவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள்,  அவன் பிள்ளை என் பிள்ளையை நன்றாகக் படிக்கிறான்  என்ற பொறாமை வருகிறது. இருக்கிற செல்வம் , இளமை போய் விடுமோ   என்ற பயம் வருகிறது.

இப்படி ஆசை, பொறாமை, பயம் என்று பலப் பல துன்பங்களுக்கு காரணமாய் இருப்பது  இந்த ஆணவம்.

ஆணவத்திற்கு காரணம் நான் , எனது என்ற எண்ணம்.

 நான் எனது என்ற எண்ணத்திற்கு காரணம் இளமையும், செல்வமும், இந்த உடலும்.

இவை நிரந்தரமானவை என்று நினைத்தால் ஆணவம் போகும்.

ஆணவம் மறைந்தால் துன்பம்  விலகும்.

"எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்பார் அருணகிரி.

துன்பம் நீங்கினால் , இன்பம் தான். 

Sunday, February 5, 2017

இராமாயணம் – பரதன் குகன் – மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்

இராமாயணம் – பரதன் குகன் – மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்


பிள்ளைகள் ஒரு கால கட்டத்திற்குப் பின், வீட்டை விட்டு போய் விடுவார்கள். மேல் படிப்பு படிக்க வேண்டியோ, அல்லது வேலை நிமித்தமாகவோ அல்லது திருமணம் முடித்தோ வீட்டை விட்டு போக வேண்டியது இருக்கும்.

அவர்கள் போன பின், வீடு கொஞ்சம் வெறிச்சோடித் தான் போய் விடுகிறது.

அவர்கள் உபயோகப் படுத்திய பொருள்கள் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். பைன் விளையாடிய வீடியோ கேம்ஸ், அவன் பைக், சைக்கிள், புத்தகங்கள் என்று. பெண் பிள்ளையாக இருந்தால் அவளின் துணி மணிகள், அழகு சாதன பொருள்கள், புத்தகங்கள், என்று அவர்களின் பொருள்கள் எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

அந்த பொருள்களை தூக்கி வேறு எங்காவது கண் காணாத இடத்தில் வைத்து விடலாம் என்றால் அதுக்கும் மனம் வராது. சரி, அவற்றை பார்காமலாவது இருக்கலாம் என்றால் அதுக்கும் மனம் வராது.

பிள்ளை ஹாஸ்டலில் எப்படி இருக்கிறான் என்று பார்க்கப் போவோம். அங்கே ஒரு சிறிய கட்டில் இருக்கும். உட்கார கடினமாக ஒரு நாற்காலி இருக்கும். புழங்க அதிகமான இடம் ஒன்றும் இருக்காது. அடடா , பிள்ளை எப்படி இருந்தவன் இங்க வந்து இப்படி துன்பப் படுகிறானே என்று மனம் தவிக்கும். இருந்தாலும் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் அவனுக்கு கஷ்டமாக இருக்குமே என்று "நல்லாதான் இருக்கு " என்று ஒப்புக்குச் சொல்லி விட்டு வருவோம். 

கட்டிக் கொடுத்த பெண்ணைப் பார்க்கப் போனால் அவள் அதிகாலை எழுந்து வீட்டு வேலை செய்து கொண்டிருப்பாள். நம் வீட்டில் இருந்தவரை காலையில் சுகமாக படுத்து உறங்கி இருப்பாள். காலைத் தூக்கம் அவளுக்கு ரொம்பப்  பிடிக்கும். 

 என்ன செய்வது. வந்த இடம் அப்படி. பொறுப்புகள் அதிகம். 

எப்படி சுகமாக இருந்த பிள்ளைகள் எப்படி கஷ்டப் படுகின்றனவே என்று மனதுக்குள் அழுவோம். 

வேறு என்னதான் செய்ய முடியும் ?

பிரிவுத்    துன்பம் பெரிய துன்பம்தான்.

இராமனை பிரிந்த பரதன் , அவனைத் தேடிக் கொண்டு கங்கை கரையை அடைகிறான். அங்கே குகனின் நட்பு கிடைக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின், இராமன் இருந்த இடத்தை காட்டும் படி குகனிடம் பரதன் வேண்டுகிறான். குகனும் காட்டுகிறான். 

ஓடோடிச் சென்று இராமன் இருந்த இடத்தை காணுகிறான் பரதன். 

இராமன்  கல்லின் மேல் புற்களை பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். அரண்மனையில், ஒரு சக்ரவர்த்தியின் மகன் எப்படி இருந்திருப்பான். அவன் படுக்கை எப்படி இருந்திருக்கும் ? 

இங்கே, கல்லின் மேல் புல்லைப் பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். 

அதைக் கண்ட பரதன் உருகுகிறான்.  

பாடல் 

கார் எனக் கடிது சென்றான்;
     கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல்,
    வைகியபள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
    பருவரற்பரவை புக்கான்-
வார் மணிப் புனலால் மண்ணை
    மண்ணு நீர் ஆட்டும் கண்ணான்.



 பொருள் 

கார் எனக் = நீர் கொண்ட மேகம் போல 

 கடிது சென்றான் = விரைந்து சென்றான் 

கல்லிடைப் படுத்த புல்லின் = கல்லின் மேல் புல்லைப்  பரப்பி

வார் சிலைத் = நீண்ட , நேர்மையான வில்லை 

தடக் கை வள்ளல் = தன்னுடைய கையில் கொண்ட வள்ளல் 

வைகிய = தங்கிய, உறங்கிய 

பள்ளி = படுக்கையைக் 

கண்டான் = கண்டான் 

பார்மிசைப் = தரையின் மேல் 

பதைத்து = பதறி 

வீழ்ந்தான் = வீழ்ந்தான் 

பருவரல் = துன்பம் 

பரவை = கடலில் 

புக்கான் = புகுந்தான் 

வார் மணிப் புனலால் = மணி போன்ற கண்களில் இருந்து 

மண்ணை = மண்ணை 

மண்ணு நீர் = மஞ்சன நீர் 

ஆட்டும் = ஆட்டும் 

கண்ணான் = கண்களை கொண்ட பரதன் 


கார் எனக் கடிது சென்றான்... கார் மேகம் போலச் சென்றான் பரதன். பரதன் கரிய செம்மல். அதுவும் இல்லாமல், பின்னால் மண்ணை தன்னுடைய கண்ணீரால் நீராட்டினான் என்று சொல்லும் போது கார் மேகம் மழை பொழிவது நமக்கு நினைவுக்கு வரும். 

வைகியபள்ளி கண்டான்.... வைகுதல் என்றால் இருத்தல். "உண் " என்றால் ஒன்று படுதல். சேர்ந்து இருந்தல் என்று பொருள். "அம் " விகுதி. 

வை + உண்  + தம் = வைகுண்டம்.  

ஒன்று பட்டு இருத்தல். 

அது இருக்கட்டும் ஒரு புறம்..

நமக்கு ஒரு துன்பம் வந்தால் நாம் எவ்வளவு துவண்டு போகிறோம்.

உடல் நோவு, பணக் கஷ்டம், பிள்ளைகள் படிப்பு என்று எவ்வளவோ கவலைப் படுகிறோம். ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு துன்பம் என்று அலுத்துக் கொள்கிறோம். 

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்....

சக்கரவர்த்தி திருமகன் இராமன், எல்லாம் இழந்து  காட்டில் வந்து பாறையின் மேல் புல்லை பரப்பி அதன் மேல் படுத்து உறங்கி இருக்கிறான். நம்மால் ஒரு நாள் மெத்தை இல்லாமல் படுக்க முடியுமா ? 

ஒரு நாள் வீடு வேலை செய்யும் பெண் வரவில்லை என்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. இராமனுக்கு அரண்மனையில் எவ்வளவு பணியாட்கள் இருந்திருப்பார்கள். காட்டில் ? 

துன்பம் வரும். அதுவும் வாழ்வில் ஒரு பகுதி.  அந்த அனுபவத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். இராமனின் துன்பத்தை விடவா நம் துன்பம் பெரியது ? 

எல்லாம் பழகிக் கொள்ள வேண்டியதுதான். 

கல்லின் மேல் இராமன் படுத்து இருந்தது மட்டும் அல்ல பரதனின் கவலைக்கு காரணம்.... பின் ?



Wednesday, February 1, 2017

இராமாயணம் - பரதன் குகன் - என் புகழ்கின்றது ஏழை எயினனேன்

இராமாயணம் - பரதன் குகன் -  என் புகழ்கின்றது ஏழை எயினனேன்


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வர பரதன் கங்கை அடைந்தான். முதலில் அவனை தவறாக நினைத்த குகன், பின் அவன் எண்ணம் அறிந்து, "ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ " என்று பரதனை போற்றுகிறேன்.

குகன்மேலும் தொடர்கிறான்

"வானில் பல நட்சத்திரங்கள், நிலா போன்ற ஒளி விடும் பொருள்கள்  இருக்கின்றன.ஆனாலும், சூரியன் அவற்றின் ஒளியை எல்லாம் மங்கச் செய்து தான் மட்டும் பிரகாசமாய் ஒளி விடுவது போல, பரதா , உன் புகழ் உன் முன்னவர்களின் புகழை எல்லாம் ஒளி மழுங்கச் செய்து விட்டது"

பாடல்

என் புகழ்கின்றது ஏழை
    எயினனேன்? இரவி என்பான்
தன் புகழ்க் கற்றை மற்றை
    ஒளிகளைத் தவிர்க்குமா போல, 
மன் புகழ் பெருமை நுங்கள்
    மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
    உயர் குணத்து உரவு தோளாய்!




பொருள் 

என் புகழ்கின்றது = என்ன சொல்லி புகழ்வேன்

ஏழை எயினனேன்? = ஏழை வேடன்

இரவி என்பான் = சூரியன் என்பவன்

தன் புகழ்க் கற்றை = தன் புகழ் கற்றை  (ஒளி கற்றை என்று கொள்க)

மற்றை = மற்ற நட்சத்திரம், நிலா போன்றவற்றின்

ஒளிகளைத் = ஒளிகளை

தவிர்க்குமா போல = மறைத்து விடுவதைப் போல

மன் புகழ் = நிலைத்து நிற்கும் புகழ்

பெருமை = பெருமை

நுங்கள் = உங்கள்

மரபினோர் = முன்னோர்கள்

புகழ்கள் எல்லாம் = அனைத்துப் புகழையும்

உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் = உன்னுடைய புகழாக ஆக்கிக் கொண்டாய்

உயர் குணத்து = உயர்ந்த குணத்து

உரவு தோளாய்! = வலிமையான தோள்களை கொண்டவனே

தன்னுடைய உயர்ந்த குணத்தால் மற்றவர்களின் புகழை எல்லாம் மழுங்கச் செய்து விட்டான் பரதன்.

அரசை வேண்டாம் என்றான். அது என்னவோ அவனுக்கு உரிய அரசு அல்லதான். அதை திருப்பிக் கொடுத்தது பெரிய உயரிய குணமா ?

வேறு ஏதாவது குணம் இருக்கிறதா ?

பாப்போம்.






Monday, January 30, 2017

இராமாயணம் - பரதன் குகன் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ?

இராமாயணம் - பரதன் குகன் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ?


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வந்து அரசை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரதன் புறப்பட்டு வருகிறான். வந்த பரதனை முதலில் தவறாக எண்ணிய குகன் அவனின் நோக்கம் அறிந்து தன் தவறை அறிந்து மாற்றிக் கொள்கிறான்.

பரதனை நோக்கி குகன் கூறுகிறான் "தாயின் வரத்தினால் , தந்தை தந்த அரசை தீவினை என்று நினைத்து , அந்த அரசை மீண்டும் இராமனிடம் தர வந்திருக்கும் உன்னைப் பார்த்தால், ஆயிரம் இராமர் உனக்கு இணையாவார்களா , தெரியவில்லை "  என்றான்.

பாடல்

தாய் உரை கொண்டு, தாதை
    உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
    சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து,
    புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ்
    ஆவரோ? தெரியின் அம்மா

பொருள்

தாய் உரை கொண்டு = தாய் கொண்ட வரத்தினால்

தாதை  உதவிய = தந்தை தந்த

தரணி தன்னைத் = உலகம் தன்னை (அரசை)

தீ வினை என்ன = தீவினை என்று

நீத்துச் = விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கிப் = சிந்தனை தோய்ந்த முகத்துடன்

போயினை என்ற போழ்து = கானகம் வந்தாய் என்ற போது

புகழினோய்! = புகழை உடையவனே

தன்மை கண்டால் = உன்னுடைய தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் = ஆயிரம் இராமர்

நின் = உனக்கு

கேழ் = ஒப்பு, சமம்



கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங் கருணை, கேழ் இல் விழுப்பொருள் என்பார் மணிவாசகர். 

ஆவரோ? = ஆவர்களா

தெரியின் அம்மா = தெரியவில்லை அம்மா

ஆயிரம் இராமர் உனக்கு இணையாவார்களா என்று.

அப்படி என்ன பரதன் செய்து விட்டான்  ?


தனக்கு உரிமை இல்லாத ஒரு அரசை உரியவரிடம் தருவதற்கு வந்திருக்கிறான். அது ஒரு பெரிய பெருமையா ?

இராமன் தனக்கு உரிய அரசை விட்டுக் கொடுத்தான் . அவனை விட பரதன் எப்படி  உயர்ந்தவன் ?

இராமன் தானே விட்டு கொடுக்கவில்லை. தாய் பெற்ற வரத்தால் , தந்தை சொன்னதால் இராமன் பதவியை துறக்க நேர்ந்தது. இராமனுக்கு அது இரண்டுவிதமான கட்டளை...

ஒன்று தந்தையின் கட்டளை.

இன்னொன்று அரச கட்டளை.

மீற முடியாது.

ஆனால், பரதனின் நிலை அப்படி அல்ல.

தாய் கைகேயி பெற்ற வரம். தந்தை மற்றும் அரசன் ஒத்துக் கொண்டு தந்த அரசு. குல குரு, அமைச்சர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

பரதன் அரசை ஏற்றுக் கொண்டால் யாரும் அவனை குறை கூற முடியாது.

யார் என்ன சொன்னாலும், அது தவறு, அறம் அல்ல என்று பரதன் நினைத்தான்.

அவன் மனமும் செயலும் அறத்தின் வழி நின்றது.

அது , அதிகம் படிக்காத குகனுக்குக் கூட தெரிந்தது.

அடுத்தது காட்டும் பளிங்கு போல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்பது வள்ளுவம்.

பரதன் மனதில் இருந்தது அவன் முகத்தில் தெரிந்தது.

அதை அறிந்த குகன் "ஆயிரம் இராமர் உனக்கு இணையாக மாட்டார்கள்" என்றான்.