Tuesday, March 28, 2017

நாலடியார் - மனம்வேறு செய்கையும் வேறு

நாலடியார் - மனம்வேறு செய்கையும் வேறு


நாளும் பல பேரை சந்திக்கிறோம். இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எப்படி அறிந்து கொள்வது ?

சில பேரை பார்த்தவுடன் பிடித்துப் போய் விடுகிறது. சிலரை பார்த்தாலே பிடிப்பதில்லை.

ஒருவரை நம்பி பணம் கொடுக்கலாமா ? நம்பி சில இரகசியங்களைச் சொல்லலாமா ?

ஏன், சில பேரை பார்த்து அவர்களுடன் பழகி காதல், திருமணம் என்று கூட போய் விடுகிறது. அப்படி திருமணம் செய்தவர்கள் பின்னாளில் யோசிப்பது உண்டு, எங்கே போயிற்று அந்த காதல் என்று. காதல் போய் வெறுப்பு நிறைந்த வாழ்க்கை , அவர்கள் எடுத்த முடிவை சிந்திக்க வைக்கும்.

யாரை நம்புவது ? யாரை நம்பாமல் இருப்பது ?

சிக்கல் தான். இதற்கு ஒரு தெளிவான விடை இல்லை. இருக்கவும் முடியாது.

மற்றவர்கள் மனதில் இருப்பதை நாம் ஒருநாளும் அறிந்து கொள்ள முடியாது என்கிறது நாலடியார்.


பாடல்

யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.


பொருள்

யாஅர் ஒருவர் = யார் ?

ஒருவர்தம் உள்ளத்தைத் = மற்றொருவரின்  உள்ளத்தை

தேருந் துணைமை யுடையவர் = தெரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர் ?

சாரல் = மலைச் சாரலில்

கனமணி = பெரிய மணிகள்

நின்றிமைக்கும் = நின்று ஒளி விடும்

நாட! = நாட்டை உடையவனே

கேள்; = கேள்

மக்கள் = மக்கள்

மனம்வேறு செய்கையும் வேறு = நினைப்பது ஒன்று , செய்வது மற்றொன்றாக இருக்கும்


நல்லது செய்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் அல்ல. ஊருக்கு நாலு நல்லது செய்து விட்டு  அதன் பின்னணியில் பல தீய செயல்களை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அது போல தீய செயல் செய்பவரின் மனத்திலும் சில நல்ல விஷயங்கள் இருக்கலாம்.

வழிப்பறி செய்துகொண்டிருந்த வாலமீகிக்குள் தான் பெரிய துறவி இருந்தார்.

சாத்திரம் அத்தனையும் கரைத்துக் குடித்த இராவணணுக்குள்தான் மாற்றான் மனைவியை  விரும்பும் தீய குணம் இருந்தது.

செயலை வைத்து ஒருவரை முழுவதும் எடை போட முடியாது. தீர ஆராய வேண்டும் என்கிறது நாலடியார்.

சரிதானே ?

 

Sunday, March 26, 2017

திருக்குறள் - பெண்ணின் காமம்

திருக்குறள் - பெண்ணின் காமம் 


பெண்ணிற்கு காமம் உண்டா ? அவளுக்கும் கூடலில் ஆசை இருக்குமா ? பெண்கள் அதை பெரிதாக வெளிப்படுத்துவது இல்லை. எனவே இந்த சந்தேகம் ஆண்கள் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது.

மனைவி மேல் சந்தேகம் , வருத்தம். "அவளுக்கு என் மேல் ஆசை இல்லை" என்ற முடிவுக்கு வந்து விடுகிறான். அந்த குழப்பத்தில் வேறு இடத்தில் அவன் மனம் செல்கிறது.

பெண் தன்னுடைய காமம் பற்றி வெளிப்படையாக பேசுவதோ அல்லது வேறு விதத்தில் வெளிப்படுத்துவதோ இல்லை.

பெண் கவிஞர்களோ, பெண் எழுத்தாளர்களோ கூட இதைப் பற்றி ஆழமாக எழுதுவது இல்லை.

வள்ளுவர் தெளிவு படுத்துகிறார்.

அந்தக் காலத்தில் ஒரு பெண் மேல் ஒரு ஆடவனுக்கு காதல் வந்த பின், அந்த பெண்ணின் பெற்றோர் அந்த காதலை எதிர்த்தால், அந்த பையன் மடல் ஊர்வான்.

மடல்  ஊர்தல் என்றால் என்ன ?

எந்த பெண்ணை காதலிக்கிறானோ, அந்த பெண்ணின் உருவத்தை ஒரு கொடியில் வரைந்து கொள்வான். இந்த காலம் போல போட்டோ எல்லாம் இல்லாத காலம்.

பனை மரத்தின் குருக்குகளை கொண்டு ஒரு குதிரை செய்து கொள்வான். அந்த குதிரை மேல் ஏறி அமர்ந்து கொண்டு , அந்த கொடியை கையில் பிடித்துக் கொள்வான். அந்த உள்ளில் உள்ள சிறு பையன்கள், அவனுடைய நண்பர்கள் எல்லாம் அந்த குதிரையை ஊருக்குள் இழுத்துக் கொண்டு செல்வார்கள்.

அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்து, ஊர் மக்கள்  , சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் பேசி, அவர்களை திருமணத்துக்கு  சம்மதிக்க வைப்பார்கள்.

இதற்கு மடல் ஊர்தல் என்று பெயர்.

காதலன் சொல்கிறான் "கடல் போல காமம் இருந்தும் மடல் ஏறாத பெண்ணனை விட பெருமையானது எது" என்கிறார்.

பாடல்

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணில் பெருந்தக்கது இல்.


பொருள்

கடல் அன்ன = கடல் போல

காமம் =காமம்

உழந்தும் = விருத்தியும்

மடல் ஏறாப் = மடல் ஏறாமல் இருக்கும்

பெண்ணில் = பெண்ணைவிட

பெருந்தக்கது இல் = பெருமை உடையது ஒன்றும் இல்லை



பெண்ணுக்கு காமம் உண்டு என்று சொல்லிவிட்டார் வள்ளுவர்.

அவ்வளவுதானா ?

இல்லை. குறளில் நுணுக்கமாக சில விஷயங்களை சொல்கிறார்.

கடல் அன்ன .....கடல் போன்ற காமம்.  பெண்ணின் காமம் மிகப் பெரியது. உலகில் மிகப்  பெரியது எது என்று பார்த்தார் வள்ளுவர். மலை போல பெரியது என்று சொல்லலாம். ஆனால், மூன்றில் இரண்டு பங்கு கடல் தான். எனவே, கடலைப் போல பெரியது என்றார். பெண்ணின் காமத்தின் முன்னால்  ஆணின் காமம் ரொம்ப சிறியதாகி விடுகிறது. கடலுக்கும், நிலத்துக்கும் உள்ள விகிதம்.

இரண்டாவது, நிலம் அங்கொன்றும் , இங்கொன்றுமாக இருக்கும். ஒன்று கொஞ்சம் பெரிதாக இருக்கும், இன்னொன்று ஒரு குட்டி தீவாக இருக்கும். கடல் அப்படி  அல்ல. தொடர்ந்து இருப்பது. இடை வெளி இல்லாமல் பரந்து பட்டது. ஆணின் காமம் வரும், போகும். சிறிது நேரம் இருக்கும், அப்புறம் காணாமல் போய் விடும். பெண்ணின் காமம் நிலைத்து நீண்டு கிடப்பது.

மூன்றாவது, கடலின் ஆழம் யார்க்கும் தெரியாது. மேலே பார்க்க எங்கும் சமமாக இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஆயிரம் மேடு பள்ளங்கள் இருக்கும். வெளியே  தெரியாது. பெண்ணின் காமமும் அப்படித்தான், வெளியே ஒன்றும் தெரியாது. ஆயிரம் இரகசியங்களை உள்ளடக்கியது அது.

நான்காவது, கடல் பௌர்ணமி போன்ற தினங்களில் பொங்கும். மற்ற நாட்களில்  அமைதியாக இருக்கும். அது போல பெண்ணின் காமம் தருணம் பார்த்து வெளிப்படும். மற்ற நேரங்களில் ஒன்றும் இல்லாதது போல இருக்கும்.

ஐந்தாவது, கடலுக்குள் முத்து இருக்கும், பவளம் இருக்கும், ஆயிரம் விலை மதிக்க முடியாத செல்வங்கள் இருக்கும். ஆனால், கடல் அதை எல்லாம் கொண்டு வந்து கரையில் கொட்டி விடுவது கிடையாது. அது போல பெண்ணும் தன் காமத்தை மறைந்து வைத்து இருக்கிறாள்.

உழந்தும் ...வருத்தம் தந்தும். காமம் அவளுக்கும் சங்கடம் தான். வருத்தம் இல்லாமல்  இல்லை. அவளையும் அது படுத்துகிறது என்கிறார் வள்ளுவர்.


சரி , பெண் அப்படி இருக்கிறாளே, அது சரிதானா ? வாய விட்டு சொன்னா என்ன ? என்று ஆண் தவிக்கிறான். ஆனால், அப்படி சொல்லாமல் இருப்பதுதான்  மிகப் பெரிய பெருமை என்கிறார் வள்ளுவர்.

அப்படி என்றால், ஒரு பெண் தன் காமத்தை தானே சொல்லுவது அல்லது வெளிப்படுத்துவது என்பது  சிறுமை என்கிறார்.

காமத்தை அடக்க முடியாதுதான். இருந்தும், அதையும் அடக்கி, ஏதோ ஒண்ணும் இல்லாதது போல  இருப்பதுதான் பெண்ணின் பெருமை என்கிறார்.

இன்னும் சொல்லப் போனால், அதை விட பெரிய பெருமை வேறு எதுவும் இல்லை என்று முடிக்கிறார்.

பெருந்தக்கது இல் என்கிறார். கடல் போல காமம் வந்து வருத்தினாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் பெண்மையை போல பெருமை உடையது எதுவும் இல்லை என்கிறார்.

பெண் காதலை, காமத்தை சொல்லவில்லையே என்று ஆண்கள் வருந்தக் கூடாது. அது அவளின் இயற்கை. அது அவளின் பெருமை. அவளை கொண்டாடுவோம்.


Saturday, March 25, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - கோபத்தை எப்படி கையாள்வது ?

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - கோபத்தை எப்படி கையாள்வது ?


நமக்குத் பிடித்தவர்கள், வேண்டியவர்கள் கோபம் கொண்டால் அதை எப்படி கையாள்வது ? அவர்கள் கோபம் , அவர்களுக்கு சரி என்று படும். அவர்களோடு விவாதம் செய்ய ஆரம்பித்தால் அவர்கள் கோபம் இன்னும் கூடும். தங்கள் கோபத்திற்கு ஞாயம் கற்பிப்பார்கள். அவர்கள் எப்படி சரி, மற்றவர்கள் எப்படி தவறு என்று குரல் மேலும் கூடும்.

சரி, அப்படியே விட்டு விடுவதா என்றால் அதுவும் சரி இல்லை.

சரி, அதுவும் வேண்டாம், பதிலுக்கு நாமும் கோபப் படலாமா என்றால் இரண்டு பக்கமும் கோபம் என்றால் ஒன்றும் சரி ஆகாது.

பின் என்னதான் செய்வது ?

கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ, உடன் வேலை செய்பவர்களோ கோபம் கொண்டால் என்ன செய்வது ?

என்ன செய்வது என்று நேரடியாகச் சொல்லாமல், இராமன் என்ன செய்தான் என்று கம்பன் காட்டுகிறான். அதிலிருந்து நாம் ஏதாவது பாடம் படித்துக் கொள்ளலாம் என்று.

இராமனைத் தேடி பரதன் கானகம் வருகிறான். இராமனைக் கண்டு , அரசை அவனிடம் மீனும் ஒப்படைக்க வேண்டும் என்பது பரதனின் எண்ணம்.

தூரத்தில் பரதன் சேனைகளோடு வருவதைக் கண்ட இலக்குவன் , தங்கள் மேல் பரதன் படை எடுத்து வருவதாக எண்ணிக் கொண்டு சண்டைக்கு தயாராகுகிறான்.

"இராமா, இந்த பரதனையும் அவன் படைகளையும் வென்று அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுகிறேன் பார் " என்று ஆற்றொணா கோபத்தோடு கிளம்புகிறான்.

நீண்ட வீர வசனம் பேசுகிறான். கோபத்தின் உச்சியில் நின்று எரிமலையாக வெடிக்கிறான்.

அப்போது இராமன், சாந்தமாகச் சொல்கிறான்

"இலக்குவா, இந்த ஈரேழ் உலகத்தையும் அழிப்பது என்று நீ முடிவு செய்துவிட்டால் அதை யாரால் நிறுத்த முடியும். இருந்தலும் , உனக்கு ஒன்று சொல்ல வேண்டும். கேட்பாயா ?"

என்று சொன்னான்.

பாடல்

“இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ,
“கலக்குவென்” என்பது கருதினால் அது,
விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ?-
புலக்கு உரித்து ஒரு பொருள், புகலக் கேட்டியால்.


பொருள்

“இலக்குவ! = இலக்குவனே

உலகம் ஓர் ஏழும், ஏழும், = ஈரேழு உலகத்தையும்

நீ = நீ

“கலக்குவென்” என்பது கருதினால் = கலக்குவேன் என்று நினைத்து விட்டால்

அது விலக்குவது அரிது = அதை நிறுத்துவது என்பது கடினம்

 அது விளம்பல் வேண்டுமோ? = அது பற்றி சொல்லவே வேண்டாம்

புலக்கு = அறிவுக்கு

உரித்து ஒரு பொருள் = உரிய ஒரு பொருள்

புகலக் கேட்டியால் = சொல்கிறேன், கேட்பாயா

இலக்குவன் கோபத்தை இராமன் எப்படி மாற்றுகிறான் ?

முதலில், அவன் திறமையை, ஆற்றலை மதித்து பேசுகிறான். யாராவது கோபம் கொண்டு  பேசினால் , முதலில் அவர்களை மட்டம் தட்டி பேசக் கூடாது. "ஆமா , கிளிச்சீங்க , உங்கள பத்தி தெரியாதா " என்று ஆரம்பித்தால் வீம்புக்காகாவேணும் எதையாவது செய்து வைப்பார்கள். முதலில் கோபம் கொண்டவர்களை குளிர்விக்க வேண்டும்.

இராமன் சொல்கிறான், "நீ நெனச்சா பதினாலு உலகத்தையும் கலக்கிருவ" என்று சொன்னவுடன் இலக்குவனுக்கு கொஞ்சம் பெருமையும்  , தான் கொண்ட கோபம் வெட்டி கோபம் இல்லை, செயல் படுத்த முடியும் என்றும் தோன்றும்.

கோபம் கொண்டவர்களின் நல்ல குணங்களை முதலில் சொல்ல வேண்டும். "உங்களுக்கு கோபமே வராதே...என்ன ஆச்சு இன்னிக்கு " என்று ஆரம்பிக்க வேண்டும்.

அவர்கள் கொஞ்சம் கோபம் தணிந்தவுடன் மேற்கொண்டு சொல்ல வேண்டும்.


கோபத்திற்கு, கோபம் பதில் இல்லை.

சரி, நீ சொன்ன மாதிரியே இவனுகள ஒரு கலக்கு கலக்கிட்டு வர்றேன் அப்படினு கிளம்பிட்டா என்ன பண்றது.

அடுத்து இராமன் சொல்கிறான், "அறிவுக்கு உகந்த ஒன்றை சொல்கிறேன் கேட்பாயா " என்கிறான்.

கேட்க மாட்டேன் என்று சொன்னால், தனக்கு அறிவு இல்லை என்று ஆகிவிடும். கேட்டுத்தான் ஆக விடும். அப்படி ஒரு கேள்வியை போடுகிறான் இராமன்.

நமக்கு எப்படி அறிவு வளர்கிறது ?


படித்து , வாசித்து (கண்), ஆசிரியரும் மற்றவர்களும் சொல்வதைக் கேட்டு (காது), தொட்டு உணர்ந்து (தோல்), முகர்ந்து பார்த்து (மூக்கு), வாயில் போட்டு பார்த்து  (நாக்கு), சிந்தித்து (மனம்) என்ற இந்த ஆறு புலன்கள் வழியாக அறிவு நமக்குள் வருகிறது.

அறிவை வளர்ப்பது புலன்கள்.

புலக்கு என்றால் அறிவுக்கு என்று பொருள்.

கள்ள புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே என்பார் மணிவாசகர்.

ஏதோ அறிவு பூர்வமான விஷயம் சொல்லப் போகிறான் இராமன் என்று கேட்கத் தொடங்குகிறான் இலக்குவன்.

அவன் என்ன கேட்டான் என்று மேலும் பார்ப்போம். 

Thursday, March 23, 2017

தேவாரம் - இழையாரிடை மடவாளொடும் இனிது உறையும்

தேவாரம் - இழையாரிடை மடவாளொடும் இனிது உறையும் 


ஒன்று எதிர்காலத்தை பற்றி கனவு காண்கிறோம். அல்லது இறந்த காலத்தை எண்ணி அசை போடுகிறோம். நிகழ் காலத்தில் வாழ்வதே இல்லை. ஒவ்வொரு வினாடியும் கசிந்து கொண்டே போகிறது. வாழ்ந்ததையும் , வாழப் போவதையும் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர வாழ்வதே இல்லை.

உங்களைச் சுற்றி பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு துடிப்புடன் இருக்கிறது. டிவி, கைபேசி இவற்றை மூடி வையுங்கள். வாழ்வு என்பது என்ன என்று தெரியும்.

கணவன், மனைவி, பிள்ளைகள், மழை, மரம், மேகம், அனைத்தையும் பாருங்கள்.

அது ஒரு பெரிய காடு. அடர்ந்த காடு. மரம் செடி கொடிகள் ஏகமாக வளர்ந்து கிடக்கிறது. பல வன விலங்குகள் அங்கே இருக்கும்.

அந்த காட்டில் ஒரு மலை. அந்த மலையில் ஒரு கொடிய சிங்கம் இருக்கிறது. வளைந்த கூர்மையான நகங்கள். சிவந்த கண்கள். அந்த சிங்கம் குகையில் படுத்து இருக்கிறது.

மழை மேகமாக இருக்கிறது. மழை வரும் போல இருக்கிறது. வானம் இருண்டு தூரத்தில் எங்கோ இடி இடிக்கிறது. அந்த இடி சத்தத்தை கேட்ட சிங்கம் எதோ யானை தான் பிளிறிக் கொண்டு வருகிறதோ என்று எண்ணிக் கொண்டு பிடரி மயிர் சிலிர்க்க எழுகிறது.

அந்த காட்டின் இன்னொரு பக்கத்தில் பெரிய ஆல மரம். அந்த ஆல மரத்தின் கீழ் ஒரு முனிவர் தவம் புரிகிறார். அவரின் இனிய அழகிய மனைவி உள்ளே ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

அந்த கானகம் இருக்கும் இடம் திரு முதுகுன்றம் என்ற இடம். அங்கே போவோமா என்கிறார் திரு ஞான சம்பந்தர்.

பாடல்


தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

சீர் பிரித்தபின்

தழையார் வட வியவீதனில் தவமே புரி சைவன்
இழையார் இடை மடவாளொடும் இனிதாக உறை இடமாம் 
மழை வானிடை முழவ எழில்  வளை வாளுகி எரி கண் 
முழை வாளரி குமிறும் உயர்  முது குன்று அடைவோமே 

பொருள்

தழையார் = தழைகள் (இலைகள்) நிறைந்த

வட  வியவீதனில் = ஆல மர நிழலில்

தவமே = தவம்

புரி = புரிகின்ற

சைவன் = சைவன் (சிவன்)

இழையார் =  நூல் இழை போன்ற

இடை = இடையைக் கொண்ட

மடவாளொடும் = பெண்ணான உமா தேவியோடு

இனிதாக = இன்பமாக

உறை இடமாம் = இருக்கின்ற இடமாம்

மழை வானிடை முழவ = மழை வானத்தில் இடி ஒலிஎழுப்ப

எழில் = அழகான

வளை  = வளைந்த

வாளுகி = நகங்களுடன்

எரி கண் = தீ போன்ற சிவந்த கண்களுடன்

முழை = குகையில்

வாளரி= சிங்கம்

குமிறும் = கர்ச்சிக்கும்

உயர்  = உயர்ந்த

முது குன்று  = முதுகுன்று என்ற இடத்தை

அடைவோமே = செல்வோமே


முதுகுன்றம் என்ற கோவிலுக்குப் போவோம் என்று சொல்லவில்லை. அங்குள்ள இயற்கை. அந்த காடு, மலை, மழை மேகம், சிங்கம் என்று இயற்கையை பற்றி சொல்கிறார் திருஞானசம்பந்தர்.

அது சரி, இந்த முதுகுன்றம் என்ற இடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? நம்ம விருத்தாச்சலம் தான் அந்த இடம். (விருதா என்றால் வயதான; அசலம் என்றால் மலை. வயதான மலை. முது குன்றம். 
வேதாச்சலம். அருணாச்சலம் இதை பற்றியெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்) 


Wednesday, March 22, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - கறுவு காதலால்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - கறுவு காதலால் 


சினம் அன்பை முறிக்கும். உறவைக் கெடுக்கும். உண்மை எது என்று அறியவிடாமல் தடுக்கும். புத்தி தடுமாறச் செய்யும். தவறான முடிவுகளை எடுக்கச் செய்யும். தானே ஏதோ கற்பனை பண்ணிக் கொண்டு தவிக்கும். தூக்கம் போக்கும். உடல் நலத்தைக் கெடுக்கும்.

கோபத்தை தவிர்க்க வேண்டும்.

கோபத்தில் ஏதேதோ செய்து விட்டு, சொல்லி விட்டு வாழ் நாள் எல்லாம் வருந்துபவர் பலர்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்.


என்பார் வள்ளுவர்.

சினம் என்பது தன்னை கொண்டவனை மட்டும் அல்ல, அவன் இனத்தையே சுடும் என்கிறார்.

இராமனைக் காண பரதன் வருகிறான். வரும் வழியில் பரத்துவாஜ முனிவரைக் காண்கிறான். அவர் எல்லோருக்கும் விருந்து அளிக்கிறார். எல்லோரும் நன்றாக உண்டார்கள் - பரதனைத் தவிர.

பின் அங்கிருந்து கிளம்பி இராமன் இருக்கும் இடம் நோக்கி செல்கிறார்கள்.

பரதனும் அவன் படைகளும் தூரத்தில் வருவதைக் கண்ட இலக்குவன், "ஆஹா, நாட்டை எடுத்துக் கொண்டது மட்டும் அல்ல, இராமனை கொல்லவும் இந்த பரதன் படையோடு வருகிறானே " என்று கோபம் கொள்கிறான்.


பாடல்

‘பரதன், இப் படை கொடு,
    பார் கொண்டான், மறம்
கருதி, உள் கிடந்தது ஓர்
    கறுவு காதலால்,
விரதம் உற்று இருந்தவன்
    மேல், வந்தான்; இது
சரதம், மற்று இலது ‘எனத் ‘
    தழங்கு சீற்றத்தான்.

பொருள்


‘பரதன் = பரதன்

இப் படை கொடு = இந்த படைகளோடு

பார் கொண்டான் = உலகையே கொண்டவன். பார் கொண்ட பரதன் இந்த படையோடு வந்தான் என்று வாசிக்க வேண்டும் 

மறம் கருதி = போர் செய்யக் கருதி

உள் கிடந்தது ஓர் = மனதின் உள்ளே கிடந்த ஒரு

கறுவு = கோபம், மன வைராக்கியம்

கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத் என்பார் அருணகிரிநாதர்

கறுவு மிக்கு ஆவியை கலக்கும் அக் காலன் ஒத்து என்பது திருப்புகழ். நம் ஆவியை எப்படா கொண்டு போகலாம் என்று கறுவிக் கொண்டே இருப்பானாம் அந்த காலன்.

காதலால் = பேராசையால்

விரதம் உற்று இருந்தவன் = தவ விரதம் ஏற்று இருக்கும் இராமனை

மேல், வந்தான்; = சண்டை போட வந்திருக்கிறான்

இது சரதம் = இது உண்மை

மற்று இலது = வேறு எதுவும் இல்லை

எனத் தழங்கு சீற்றத்தான் = என்று முழக்கும் சீற்றம் கொண்ட இலக்குவன்


விசாரிக்கவில்லை. என்ன ஏது என்று தெரியாது. கண்டவுடன் கோபம் கொள்கிறான் இலக்குவன். 

பரதனை தவறாக நினைக்கிறான். 

கோபம் கண்ணை மறைக்கிறது. 

இலக்குவனுக்கே இந்த நிலை என்றால், நாம் எந்த மூலை .

வந்த கோபத்தில் என்னவெல்லாம் பேசுகிறான் தெரியுமா ?


Sunday, March 19, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எனக்கு அடுப்பது இயம்பிலை

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எனக்கு அடுப்பது இயம்பிலை


தவறு ஏன் நிகழ்கிறது ?

எது சரி, எது தவறு என்று தெரியாததனால் தவறு நிகழ்கிறது. சிறு வயதில் புகை பிடிப்பது சரியா தவறா என்று தெரியாமல் , அதனால் வரும் பின் விளைவுகள் தெரியாமல் புகை பிடிக்கத் தொடங்கியோர் பலர்.

சில  சமயம்,தவறென்று தெரியும், செய்யக் கூடாது என்று தெரியும், இருந்தும் அதனால் வரும் சந்தோஷம், இன்பம், இவற்றினால் உந்தப் பட்டு தவறு நிகழ்ந்து விடுகிறது.

எனவே வாழ்வில் தவறு செய்யாமல் இருக்க வேண்டும்  என்றால்,அற வழியில் நடக்க வேண்டும் என்றால் எது சரி , எது தவறு என்று  .தெரிய வேண்டும்.  தெரிந்த பின் அதில் இருந்து துளியும் விலகாமல் நடக்க வேண்டும். எவ்வளவு ஆதாயம் வந்தாலும் தவறான ஒன்றை செய்து விடக் கூடாது.

இராமனைத் தேடி கானகம் வருகிறான்  பரதன். வந்த இடத்தில் பரத்துவாஜ முனிவரை  காண்கிறான்.  முனிவர் கேட்கிறார் "என்ன பரதா , முடி சூட்டிக் கொள்ளவில்லையா " என்று.

கொதித்துப் போகிறான் பரதன்.

"முனிவனே நீ எனக்கு நல்லது சொல்லவில்லை. உன் தவ நெறிக்கு ஏற்ற மொழியும் நீ பேசவில்லை "

என்று முனிவரோடு கோபம் கொள்கிறான் பரதன்.

பாடல்

சினக் கொடுந் திறல் சீற்ற வெந் தீயினான்,
மனக் கடுப்பினன், மா தவத்து ஓங்கலை,
‘“எனக்கு அடுத்தது இயம்பிலை  நீ” என்றான்;
‘உனக்கு அடுப்பது அன்றால், உரவோய்!’ என்றான்

பொருள்

சினக் = கோபத்தால்

கொடுந் = கொடுமையான

திறல் = வலிமையுடன்

சீற்ற = சீறிக் கிளம்பும்

வெந் தீயினான் = தீபோல கிளம்பி (கோபம் தீ போல கிளம்பியது)

மனக் கடுப்பினன் = மனம் கொதித்து

மா தவத்து  = பெரிய தவத்தினால்

ஓங்கலை = உயர்ந்தவனே

‘“எனக்கு அடுத்தது இயம்பிலை  நீ” என்றான்; = எனக்கு உகந்ததை சொல்லவில்லை நீ என்றான்

‘உனக்கு = உனக்கு

அடுப்பது = ஏற்புடையது

அன்றால் = அல்லாதவற்றை

உரவோய்!’ என்றான் = வலிமையானவனே. இங்கு உயர்ந்தவனே என்று கொள்ளலாம். உரவு என்ற அடிச்சொல்லில் இருந்து வந்தது தான் உரம்.


என்னே நீ முடிசூட்டிக் கொள்ளவியல்லையா என்று பரதனிடம் கேட்டவுடன், அவன் அந்த முனிவரைப் பார்த்துச் சொல்கிறான் "நீ எனக்கு தேவையானதையும் சொல்லவில்லை,  உனக்கு ஏற்புடையதையும் சொல்ல வில்லை " என்று.

தான் முடிசூடுவது தவறென்று அவனுக்குத் தெரிகிறது. அந்தத் தவறை யார் செய்யச் சொன்னாலும் அவன் செய்யத் தயாராக  இல்லை.

தயரதன் சொன்னான்.

கைகேயி சொன்னாள்.

அமைச்சர் சுமந்திரன் சொன்னான்.

குலகுரு வசிட்டர் சொன்னார்.

இப்போது பரத்துவாஜ முனிவர் சொல்கிறார்.

ம்ம்ஹும் ...பரதன் ஒரு இம்மி கூட அசையவில்லை.

அதுதான் பரதன். அறநெறியில் வாழ்வதற்கு ஒரு உதாரணம் என்றால் அது பரதன்தான்.

Friday, March 17, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - முன்னுரை

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - முன்னுரை 


கங்கை கரை கடந்து, பரதன் இராமனைத் தேடி வருகிறான். பரதன் படையோடு வருவதை தூரத்தில் கண்ட இலக்குவன் கோபம்  கொள்கிறான்.பரதன் தங்கள் மேல் படை எடுத்து  வந்து விட்டான் என்று தவறாக எண்ணி சண்டைக்கு தயாராகுகிறான். பின் பரதன் வருகிறான். பரதன் இராமனை அரசை மீண்டும் ஏற்றுக்  கொள்ளும்படி கூறுகிறான். அவர்களுக்குள் வாதம் நடக்கிறது. இறுதியில் பரதன் இராமனின் பாதுகைகளை பெற்றுச் செல்கிறான்.

தெரிந்த கதைதான்.

இந்த திருவடி சூட்டுப் படலம் இராமாயணம் என்ற மகுடத்தில் ஒளி  ஒரு உயர்ந்த வைரம் போல ஜொலிக்கிறது. அவ்வளவு இனிமையான பாடல்கள். உணர்ச்சிகளின் தொகுப்பு.

உணர்வுகள் மனித வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அறிவு எவ்வளவு முக்கியமோ, உணர்ச்சிகளும் அவ்வளவு முக்கியம். ஆங்கிலத்தில் emotional intelligence என்று கூறுவார்கள்.

நம்முடைய உணர்ச்சிகள் என்ன, அவை சரியா ,  தவறா,அவற்றை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரிய வேண்டும்.

அநேக வீடுகளில் கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள் இவர்களுடைய வரும் சிக்கல்களுக்கு காரணம் அன்பை சரியாக வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பது தான்.

அன்பு  இருக்கிறது.காதல் இருக்கிறது.  ஆனால் அதை சரியாக வெளிப்படுத்துவது  இல்லை.

கண் கலக்கினால் பலகீனம் என்று ஒரு எண்ணம் நம்மிடம் இருக்கிறது. அப்படி சொல்லியே ஆண் பிள்ளைகளை வளர்க்கிறோம். "என்ன இது பொம்பளைப் பிள்ளை மாதிரி அழுது கொண்டு " என்று ஆண் பிள்ளைகளை கேலி  செய்கிறோம்.

ஆண் பிள்ளைகள் அழாமல் அடக்கிக் கொள்ள பழகிக் கொள்கிறார்கள்.

அன்பு, காதல், பக்தி எல்லாம் கண்ணீரில் தான் வெளிப்  படும்.

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்கிறார்  வள்ளுவர்.

அன்பு மிகும் போது கண்ணீர் வரும்.

காதலாகி கசிந்து கணீர் மல்கி என்பார் ஞானசம்பந்தர்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

என்பது அவர் வாக்கு.

கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி என்பார் மணிவாசகர்



மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் றலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே

என்பது திருவாசகம்.

கண்ணீர் என்பது  அன்பின், காதலின்,கருணையின், பக்தியின் வெளிப்பாடு. அழ முடியாத ஆண் மகனால் எப்படி காதலிக்க முடியும் ? அவன் காதலும் உள்ளேயே இறுகிப் போய் விடுகிறது.

மனம் இளக வேண்டும். நெகிழ வேண்டும். அன்பு வெளிப்பட வேண்டும். அன்பு வெளிப்பட்டால் உறவுகள் பலப்படும். குடும்பம் சந்தோஷமாக  இருக்கும். சமுதாயமும், நாடும் அமைதியாக இருக்கும். சண்டை சச்சரவுகள் குறையும். இயற்கையின் மேல் பரிவு பிறக்கும். மண்ணில் சொர்கம்  தோன்றும்.


மிக பலம் பொருந்திய , அறிவாற்றல் மிக்க இராமன் அழுகிறான். புலம்புகிறான். மயங்கி விழுகிறான். ஆண் அழுவது தவறல்ல என்று கம்பன்  காட்டுகிறான்.அரசு போனபோது  அழவில்லை.கானகம் போ என்று சொன்ன போது அழவில்லை.  ஆனால், இங்கே அழுகிறான் இராமன். எல்லோர் முன்னிலையிலும்.


உணர்ச்சிக்கு குவியல் ஒரு புறம் என்றால், அறிவார்ந்த சர்ச்சை இன்னொரு புறம், அறம் பற்றிய சிந்தனை இன்னொரு புறம், அண்ணன் தம்பி பாசம் இன்னொரு புறம்,  ஒன்றுக்கு ஒன்று முரணான ஆனால் அனைத்தும் சரியான வாதம்  என்றாலும் எதை தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலுக்கு விடை காணும் முறை இன்னொரு புறம் என்று இந்த படலம் மனித வாழ்வின் அத்தனை கோணங்களையும்  படம் பிடிக்கிறது.

எது வென்றது ?

அறிவா ? உணர்வா ? அறமா ? என்று தெரியவில்லை. இந்தப் படலத்தை படித்து  முடிக்கும் போது , இது போன்ற சர்ச்சைகள் தேவையில்லாமல் போய் விடுகிறது.

வாழ்க்கை என்பது  ஒரு கட்டுக்குள் அடங்காத ஒன்று. வரையறுக்க முடியாத ஒன்று. அது அதுபாட்டுக்குப் போகிறது. வாழ்வது ஒன்றுதான் நிகழ்கிறது.

அற்புதமான படலம்.


வாருங்கள் . அத்தனையையும்  சுவைப்போம்.

திருவடி சூட்டுப் படலம்.