Friday, August 18, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மன்னவன் ஆணை

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மன்னவன் ஆணை


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் , அவனுடைய மனைவி மற்றும் கை குழந்தையோடு மதுரை வரும் வழியில் உள்ள கானகத்தில் , மனைவியின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரும் வேளையில், அவர்கள் இளைப்பாறிய ஆல மரத்தில் முன்பு எப்போதோ சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் அசைந்து கீழே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது.

அதனால் அவள் இறந்து போனாள் . அப்போது , அந்தப் பக்கம் ஒரு வேடன் வந்தான். அவன் நிழலுக்கு அதே ஆல மரத்தின் கீழ் வந்து நின்றான்.

அப்போது ,  நீர் கொண்டு வரச் சென்ற வேதியனும் நீரோடு வருகிறான். 

ஒரு புறம் இறந்து கிடக்கும் மனைவி. இன்னொரு புறம், கையில் வில்லோடு நிற்கும் வேடன். 

மனைவியைப் பார்த்து கதறுகிறான். பிள்ளை ஒரு புறம் பாலுக்கு அழுகிறது. கற்பனை செய்து பாருங்கள். எவ்வளவு ஒரு சோகமான காட்சி என்று புரியும்.

கொஞ்சம் தேறி, யார் இந்த கொடுமையான காரியத்தை செய்திருப்பார்கள் என்று சுற்றும் முற்றும் பார்க்கிறான்.

அங்கே நின்ற வேடனைப் பார்க்கிறான். வில்லும் கையுமாக முரட்டுத் தனமாக இருக்கும் இந்த வேடன் தான் இவளை கொன்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான். அவனிருக்கும் இடத்தில் யார் இருந்தாலும் அப்படித் தான் நினைத்திருப்பார்கள் அல்லவா ?

"மன்னவன் ஆணை , வா நீதி மன்றத்திற்கு " என்று அவனை இழுத்துக் கொண்டு போகிறான்.

பாடல்


என்ன மதித்தே ஏடா வேடா என் ஏழை
தன்னை வதைத்தாய் நீயே என்னா அழல் கால் கண்
மின்னல் எயிற்றுக் குற்று என வல் வாய் விட்டு ஆர்த்து
மன்னவன் ஆணைப் பாசம் எறிந்து வலித்து ஏகும்.


பொருள்

என்ன மதித்தே = இவன் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து

ஏடா வேடா = ஏண்டா வேடனே

என் ஏழை தன்னை  =  பாவம்,என் மனைவியை

வதைத்தாய் நீயே = கொலை செய்தாய் நீயே

என்னா = என்று

அழல் = தீ. சிவந்த

கால் = காற்று. அனல் வீசும்.

கண் =கண்கள்

மின்னல் எயிற்றுக் = மின்னல் போல வெண்மையான பற்கள்

குற்று என = கூற்று என (கூற்றுவன் என்றால் எமன் )

வல் = வலிமையாக, ஓங்கி

வாய் விட்டு ஆர்த்து = வாய் விட்டு சொல்லி. ஆர்த்து என்ற வார்த்தையை பற்றி கீழே விரிவாகப் பார்ப்போம்

மன்னவன் ஆணைப் = மன்னன் மேல் ஆணை

பாசம் = கயிறை

எறிந்து =எறிந்து

வலித்து ஏகும் = இழுத்துக் கொண்டு போனான்


ஆர்த்து என்றால் கொடுத்து, நிறைவு செய்து, ஊட்டி, அனுபவிக்கச் செய்து  என்று பொருள்.

ஆர்த்த பிறவி என்பார் மணிவாசகர். நல் வினை, தீ வினை என்ற கயிற்றால் கட்டி பிறவி என்ற பெரும் கடலுள் உயிர்கள் செலுத்தப் படுகின்றன என்பதால் ஆர்த்த பிறவி.

நம் பாவங்களை போக்க நமக்கு தீர்த்தமாக தன்னைத் தானே ஊட்டுவதால் , "ஆர்த்தாடும் தீர்த்தன்"

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.

கதைக்கு வருவோம்.

டைரக்டர் cut சொல்லி, காட்சியை மாற்றுவதைப் போல, காட்சி மாறுகிறது.

காமிரா காட்டில் இருந்து அரண்மனைக்குப் போகிறது.

அங்கே என்ன நடக்கிறது. ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_18.html

Thursday, August 17, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - அயல் நின்றான் இளைப்பாற

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - அயல் நின்றான் இளைப்பாற


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் , அவனுடைய மனைவி மற்றும் கை குழந்தையோடு மதுரை வரும் வழியில் உள்ள கானகத்தில் , மனைவியின் தாகம் தீர்க்க நீர் கொண்டு வரும் வேளையில், அவர்கள் இளைப்பாறிய ஆல மரத்தில் முன்பு எப்போதோ சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் அசைந்து கீழே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது.

அதனால் அவள் இறந்து போனாள் . அப்போது , அந்தப் பக்கம் ஒரு வேடன் வந்தான். அவன் நிழலுக்கு அதே ஆல மரத்தின் கீழ் வந்து நின்றான்.

பாடல்

அவ்வாறவ் வணங்கனையா ளுயிரிழந்தா ளவ்வேலைச்
செவ்வாளி யேறிட்ட சிலையுடையா னொருவேடன்
வெவ்வாளி யேறனையான் வெயிற்கொதுங்கு நிழறேடி
அவ்வால நிழலெய்தி யயனின்றா னிளைப்பாற.


சீர் பிரித்த பின்

அவ்வாறு அவ் அணங்கு அனையாள் உயிர் இழந்தாள் உவ் வேலைச் 
செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான் ஒரு வேடன் 
வெவ் வாளி ஏறு அனையான் வெயிற்கு ஒதுங்கும்  நிழல் தேடி 
அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன் இளைப் பாற.

பொருள்

அவ்வாறு = அவ்வாறு

அவ் = அந்த

அணங்கு அனையாள் = தெய்வ மகள் போன்ற பெண்

உயிர் இழந்தாள் = உயிர் இழந்தாள்

உவ் வேலைச் = அந்த நேரத்தில்

செவ் வாளி = செம்மையான, சிவந்த அம்பை

ஏறிட்ட = ஏற்றும்

சிலை = வில்லை

உடையான் = உடைய

ஒரு வேடன் = ஒரு வேடன்

வெவ் வாளி ஏறு = ஆளி என்றால் சிங்கம். கோபம் கொண்ட ஆண் சிங்கம்

அனையான் = போன்றவன்

வெயிற்கு = வெயிலுக்கு

ஒதுங்கும் = ஒதுங்கும்

நிழல் தேடி = நிழல் தேடி

அவ் = அந்த

ஆல = ஆல மரத்தின்

நிழல் எய்தி = நிழலை அடைந்து

அயல் நின்றன் = தள்ளி நின்றான்

இளைப் பாற = இளைப்பாற

வேடன் , அவன் பாட்டுக்கு வந்து நிழலுக்கு ஒதுங்கி நிற்கிறான். அவன் ஒரு புறம் நிற்க, மறு புறம், அந்த வேதியனின் மனைவி அம்பு தைத்து இறந்து கிடக்கிறாள். அவனுக்கு அது தெரியாது.

கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு புறம்  முரட்டு வேடன். மறு புறம் இறந்து கிடக்கும் ஒரு பெண். பக்கத்தில் ஒரு  குழந்தை.  வேதியன் , நீரோடு வருகிறான்.

சினிமா பார்ப்பது போல இருக்கிறது அல்லவா.

அப்படி ஒரு visual description .

செவ்வாளி . செம்மையான அம்பு அல்லது சிவந்த அம்பு.

இராமாயணத்தில், இராமன் எய்த அம்பை வாலி தன் வாலினால் பிடித்து இழுத்து  , அதில் யார் பெயர் எழுதி இருக்கிறது என்று பார்க்க நினைக்கிறான்.

இழுத்தும் விட்டான். அதில் இராமன் என்ற பெயர் எழுதி இருக்கிறது.

இராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரியக் கண்டான் என்பார் கம்பர்.

செம்மை சேர் நாமம் என்றால் செம்மையான நாமம் அல்லது வாலியின் இரத்தம் தோய்ந்த சிவந்த நாமம் என்றும் கொள்ளலாம்.  வாலி வதை என்பது ஒரு முடிவுறா சர்ச்சையாகவே இருந்து வருகிறது. அது சரி என்று சொல்பவர்கள் 'செம்மை நாமம்" என்பதை செம்மையான நாமம் என்றும், அது தவறு என்று சொல்பவர்கள் "செம்மை நாமம்" என்பதை இரத்தம் தோய்ந்த சிவந்த நாமம் என்று பொருள் சொல்வார்கள்.

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
    தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
    மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
    கண்களின் தெரியக்  கண்டான்.


அடுத்தது,

"உவ் வேலைச்  செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான்"

அது என்ன உவ் வேலை .

கொஞ்சம் இலக்கணம் படிக்கலாம்.


தமிழில் ஒரு பொருளை சுட்டிக் காட்டும் சொல்லுக்கு சுட்டு பெயர் என்று பெயர்.

அருகில் உள்ள பொருளை சுட்டிக் காட்டினால் அது அண்மைச் சுட்டு என்றும்.

தொலைவில் உள்ள பொருளை சுட்டிக் காட்டினால் அது சேய்மை சுட்டு என்றும் பெயர் பெரும்.

அண்மை சுட்டு இகரத்தில் தொடங்கும்.

இது, இவை, இவர், இவள் என்று.

சேய்மைச் சுட்டு என்பது அகரத்தில் தொடங்கும்.

அது, அவை, அவர், அவள் என்று.

இரண்டுக்கும் நடுவில் இருப்பதை சுட்ட உகரத்தை பயன் படுத்தினார்கள்.

உது, உவை , உவர், உவள் என்று.

ஆனால், அது இப்போது நடை முறையில் இல்லை.


திருஞான சம்பந்தர், மூன்று வயது பிள்ளையாக இருக்கும் போது , அவருடைய தந்தையாருடன் கோவிலுக்குச் சென்றார். கோவிலுக்குப் போவதற்கு முன் , தந்தையார் அங்குள்ள திருக்குளத்தில் நீராடச் சென்றார். அவர் நீரில் மூழ்கியதும், தந்தையை காணமால் குழந்தையாக இருந்த ஞான சம்பந்தர் அழுதார். அவரின் அழு குரலை கேட்ட பார்வதி வந்து ஞானப் பாலை தந்தார்.

குளத்தில் மூழ்கி எழுந்து வந்த தந்தையார் ,  குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டு  , "யார் தந்தது " என்று கேட்டார்.

தோடுடைய செவியன் என்ற பாடலைப் பாடினார்.


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


அதில், இறுதியில் "பெம்மான் இவன் அன்றே" என்று சொல்லி முடிக்கிறார்.

இவன் என்றால் அண்மைச் சுட்டு. இறைவன் எங்கோ இல்லை. இதோ, இங்கே இருக்கிறான். அவனைத் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று கூறுகிறார்.

"அவன் அன்றே " என்று சொல்லி இருந்தால் , இறைவன் எங்கோ தொலைவில் இருக்கிறான் என்று பொருள் படும்.

அண்மைச் சுட்டின் ஆழம் புரிகிறதா ?


"அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன்"


முரட்டு வேடன்.  அழகான பெண் தனித்து நிற்கிறாள். அருகில் யாரும் இல்லை.

அவன் , அவள் அருகில் கூட போகவில்லை. "அயல் நின்றான்".

அது வேடனின் பண்பாடு என்றால் மற்றவர்களின் பண்பாடு எப்படி இருந்திருக்கும் என்று நாம் யோசித்துக் கொள்ளலாம்.


கதை சொல்லும் பாங்கு. கவி நயம். தத்துவம். கலாச்சாரம் என்று அனைத்தையும்  அள்ளித் தருவது திருவிளையாடற் புராணம்.

மேலும் படிப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_17.html

Wednesday, August 16, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொலைத்தலைய கூர்வாளி

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - கொலைத்தலைய கூர்வாளி 


திருப்பத்தூரில் இருந்து ஒரு வேதியன் தன் மனைவியோடும் , பச்சிளம் குழந்தையோடும் மதுரையில் உள்ள தன் மாமன் வீட்டுக்கு ஒரு காட்டின் வழியே வந்து கொண்டிருந்தான். அப்போது அவன் மனைவி தாகத்திற்கு நீர் கேட்டாள் . அவன் நீரை கொண்டு வரும் போது .....

என்பது வரை பார்த்தோம்.

அவன் நீரை கொண்டு வரும்போது அந்த மனைவி இருந்த ஆல மரத்தில் முன்பு யாரோ ஒரு வேடன் எய்த, சிக்கியிருந்த அம்பு காற்றில் மரத்தில் இருந்து கீழே இருந்த அந்த பெண்ணின் வயிற்றில் வந்து குத்தியது.....

மென்மையாக போய் கொண்டிருந்த கதையில் ஒரு திடீர் திருப்பம்.

கணவன் நீர் கொண்டு வரப் போனான். நீர் எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறான். அதற்குள், யாரோ எப்போதோ எய்த அம்பு ஒன்று மரத்தில் சிக்கி இருந்தது. அது ஒரு காற்று அடிக்க , மரத்தில் இருந்து நழுவி நேரே வந்து அந்த பெண்ணின் வயிற்றில் குத்தியது....

பாடல்


இலைத்தலைய பழுமரத்தின் மிசைமுன்னா ளெய்ததொரு
கொலைத்தலைய கூர்வாளி கோப்புண்டு கிடந்ததுகால்
அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த
வலைத்தலைய மானோக்கி வயிறுருவத் தைத்தன்றால்.


பொருள்

இலைத்தலைய = இலைகள் நிறைந்த

பழுமரத்தின் = பழுத்த மரத்தில்

மிசை = அசைச் சொல்

முன்னா ளெய்ததொரு = முன்னாள் எய்த ஒரு

கொலைத்தலைய = கொலை செய்வதை தொழிலாக கொண்ட

கூர்வாளி = கூர்மையான அம்பு

கோப்புண்டு = சிக்கிக் கொண்டு

கிடந்தது = கிடந்தது

கால் = காற்று

அலைத்தலைய = அலைக்கவும் (அலை, அலைத்தல்)

வீழ்ந்தும்மை = கீழே வீழ்ந்து

வினையுலப்ப = வினை முடிய (உலப்புதல் = அழிதல், முடிதல்)

வாங்கிருந்த =ஆங்கிருந்த

வலைத்தலைய = வலையில் அகப்பட்ட

மானோக்கி  = மானின் நோக்கத்தை போல உள்ள அந்தப் பெண்ணின்

வயிறுருவத் = வயிறு உருவ , வயிற்றுனுள்

தைத்தன்றால் = குத்தியது (தைத்தல் = குத்துதல்)


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

மிசை என்றால் அசைச் சொல் என்று பார்த்தோம். 

அசைச் சொல் என்றால் என்ன ?

நாம் நினைப்பதை சொல்ல வார்த்தைகள் தேவை. வார்த்தைகளை கோர்த்து வாக்கியங்கள்   அமைத்து நம் எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம். 

பாடல் எழுதும் போது அதற்கென்று இலக்கணம் இருக்கிறது. அதற்கு யாப்பிலக்கணம் என்று  பெயர். யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். 

இந்த உடம்புக்கு யாக்கை என்று பெயர். ஏன் என்றால், இது  இரத்தம், எலும்பு, தோல், தசை இவற்றைக் கொண்டு கட்டப் பட்டது. 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.

என்பார் வள்ளுவர். (மருந்து என்று ஒன்று வேண்டாம் இந்த உடம்புக்கு, எப்போது என்றால்  உண்ட உணவு நன்றாக ஜீரணமாகி விட்டது அறிந்து உண்டால்) 


ஒரு கவிஞன் தான் நினைத்ததை கவிதையில் சொல்கிறான். சொல்லி முடித்தாயிற்று. ஆனால் கவிதையின் இலக்கணம் சரியாக அமைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு வார்த்தை போட வேண்டும். சரி ஏதாவது ஒரு வார்த்தை போடலாம் என்றால் அந்த வார்த்தையின் அர்த்தம் கவிதையின் அர்த்தத்தை சிதைத்து விடக் கூடாது. 

வார்த்தையும் வேண்டும், அதே சமயம் அது கவிதையின் அர்த்தத்தை சிதைத்தும் விடக் கூடாது என்கிற போது அர்த்தம் இல்லாத வார்த்தைகள் சில  இருக்கின்றன. அவற்றிற்கு அசை சொற்கள் என்று பெயர். கேண்மியா, சொன்மியா என்றவற்றில் மியா என்பது அசைச் சொல். கேள், சொல் என்பது மட்டும் தான் அர்த்தம். 

தலைய என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது இந்தப் பாடலில். தலைய என்பது குறிப்பு பெயரெச்சம். 

எச்சம் என்றால் மீதி. 

பெயரெச்சம் என்றால், பெயரை மீதியாக கொண்டது.

அது என்ன பெயரை மீதியாக கொண்டது ?

"வந்த " என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.  வந்த என்ற அந்த சொல்லுக்குப் பின் ஒரு பெயர்தான் வர முடியும். 

வந்த பையன், வந்த மாடு, வந்த பெண் என்று தான் இருக்க முடியும்.

வந்த என்ற சொல்லுக்கு பின்னால் ஒரு வினைச் சொல் வர முடியாது.

வந்த ஓடு, வந்த நட , வந்த சாப்பிடு என்று எழுத முடியாது. அதற்கு ஒரு அர்த்தம் இல்லை. 

வந்த என்பது பெயரெச்சம். 

இந்த பெயரெச்சம் தெரிநிலை, குறிப்பு என்று இரண்டு வகைப்படும்.

குறிப்பு பெயரெச்சம் என்றால் காலத்தையோ, செயலையோ வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பை மட்டும் வெளிப்படையாகச் சொல்வது. காலம் மற்றும் செயல் குறிப்பாக பெறப்படும். வெளிப்படையாக இருக்காது. 

நேத்து அந்த மேடையில் பாடிய பெண், அழகா இருந்தாள் என்று சொல்லும் போது ...

பாடிய என்ற பெயரெச்சம் இறந்த காலத்தை காட்டுகிறது. எனவே இது தெரிநிலை பெயரெச்சம். 

சில சமயம், காலம் வெளிப்படையாக தெரியாமல், குறிப்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

அழகிய என்பது பெயரெச்சம். அழகிய பெண், அழகிய புறா என்று பெயரைக் கொண்டு முடியும். ஆனால் அதன் காலம் தெரியாது. 

இலக்கணம் போதுமா ?


"அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த"

உலப்ப என்றால் முடிதல். இறுதி என்று பொருள். 

இறைவன் திருவருள் முடிவில்லா ஆனந்தத்தைத் தரும் என்பார் மணிவாசகர். 

உலப்பிலா ஆனந்தமாய தேனினை சொரிந்து என்பது திருவாசகம் 


பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
    பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
    உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
    செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 


தமிழ், எங்கோ ஆரம்பித்து, எங்கோ இழுத்துக் கொண்டு போகிறது. 

வாசியுங்கள். அத்தனையும் தேன் . அள்ளிப் பருகுங்கள்.


http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_16.html

Monday, August 14, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - வான் தடவும் ஆல மரம்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - வான் தடவும் ஆல மரம் 


திருப்பத்தூரில் இருந்து மதுரையில் இருக்கும் தன் மாமன் வீட்டுக்கு ஒரு வேதியன் தன் மனைவியோடும், பச்சிளம் குழந்தையோடும் வந்து கொண்டிருந்தான் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

வரும் வழியில் பெரிய காடு. அந்த காட்டை கடந்து மதுரைக்கு வர வேண்டும்.

வருகின்ற வழியில் , அவனுடைய மனைவிக்கு தாகம் எடுத்தது. கணவனிடம் நீர் கொண்டு வரும்படி கேட்டாள் . அவனும், தன்னுடைய மனைவியையும், பிள்ளையையும் ஒரு பெரிய ஆல மரத்தின் நிழலில் அமரச் செய்துவிட்டு, நீர் தேடித் போனான்.

நீரை எடுத்துக் கொண்டு வரும் போது .....

பாடல்

வருவானுண் ணீர்வேட்டு வருவாளை வழிநிற்கும்
பெருவானந் தடவுமொரு பேராலி னீழலின்கீழ்
ஒருவாத பசுங்குழவி யுடனிருத்தி நீர்தேடித்
தருவான்போய் மீண்டுமனை யிருக்குமிடந் தலைப்படுமுன்.

பொருள்

வருவான் = வரும் போது

உண்ணீர்வேட்டு = உண்ணுகின்ற நீரை தாகத்திற்காக வேண்டி

வருவாளை = உடன் வருகின்ற அவளை (மனைவியை)

வழிநிற்கும் = வழியில் நிற்கும்

பெருவானந் தடவுமொரு = பெரு வானம் தடவும் ஒரு

பேராலி னீழலின்கீழ் = பெரிய ஆலின் (ஆல மரத்தின்) கீழ்

ஒருவாத = விட்டுப் பிரியாத

பசுங்குழவி = பச்சிளம் குழந்தையை

யுடனிருத்தி = அவளோடு உடன் இருக்கும் படி செய்து

நீர்தேடித் = நீரைத் தேடி

தருவான்போய்  = தருவதற்காக போய்

மீண்டு = திரும்பி வந்து

மனை = மனைவி

யிருக்குமிடந் தலைப்படுமுன் =இருக்கும் இடத்தை நோக்கி வருவதற்கு முன்


ஒருவாத பசுங்கிளவி = விட்டுப் பிரியாத பச்சிளம் குழந்தை. அம்மாவின் இடுப்பிலேயே இருக்கும்.

ஒருவாதக் கோலத்து ஒருவா என்பார் வள்ளலார்



திருவாத வூரெம் பெருமான் 
          பொருட்டன்று தென்னன்முன்னே 
வெருவாத வைதிகப் பாய்பரி 
          மேற்கொண்டு மேவிநின்ற 
ஒருவாத கோலத் தொருவாஅக் 
          கோலத்தை உள்குளிர்ந்தே 
கருவாத நீங்கிடக் காட்டுகண் 
          டாய்என் கனவினிலே. 

"உண்ணு நீர் வேட்டு வருவாளை" = தாகத்தோடு வந்து கொண்டு இருக்கிறாள். பாவம். பச்சிளம் குழந்தை. அதை வேறு தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருப்பாள். பேருந்தா , காரா ? நடந்துதான் வர வேண்டும். காடு வேறு. சரியான சாலை இருக்காது.  எடை வேறு. பச்சிளம் குழந்தை என்பதால் பிரசவம் ஆகி கொஞ்சம் காலம் தான் ஆகி இருக்கும். வலியும் களைப்பும் இருக்கும் அல்லவா ? தாகம் எடுக்கிறது.  பாவம்.

அவளை , பெரிய ஆல மரத்தின் கீழ் அமரச் செய்துவிட்டு நீர் கொண்டு வர சென்றான்.  அது வானத்தை தடவிப் பார்க்கும் ஆல மரமாம்.  அவ்வளவு பெரிய ஆலமரம்.


தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறான்.

அதற்குள் ....

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_14.html

Friday, August 11, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய கதை - திருப்பத்தூர்

திருவிளையாடற் புராணம்  - பழி அஞ்சிய கதை - திருப்பத்தூர் 



திருவிளையாடற் புராணம் இன்றைக்கு சற்றேறக் குறைய 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட நூல். ஆனால், அதில் வரும் கதைகள் , அதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முற்பட்டது.

அப்படி ஒரு பழமையான மதுரையை நினைத்துக் கொள்ளுங்கள்.

கார் கிடையாது, மின்சாரம் கிடையாது, தார் ரோடு கிடையாது, செல் போன் கிடையாது, புகை இல்லை, சப்தம் இல்லை, மக்கள் தொகை மிக மிக குறைவு.  எங்கும் நெருக்கடி இல்லை. இயற்கை எழில் எங்கும் தங்கி இருந்த காலம்.

மதுரை மட்டும் அல்ல, எல்லா ஊரும் அப்படித்தான் இருந்திருக்கும்.

அப்படி இருக்கும் போது , ஒரு நாள், ஒரு அழகிய வேதியன் , தன் மனைவியை அழைத்துக் கொண்டு பச்சிழம் பிள்ளையோடு திருப்பத்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

திருப்பத்தூருக்கும் மதுரைக்கும் நடுவில் ஒரு காடு. நம்ப முடிகிறதா ?

மதுரையின் பரப்பு அவ்வளவுதான். ஊரை விட்டு கொஞ்ச தூரம் போனவுடன் காடு வந்து விடும்.

அந்த காட்டின் வழியே திருப்பத்தூரில் இருந்து மதுரை வருகிறான்....

பாடல்

செய்யேந்து திருப்புத்தூர் நின்றுமொரு செழுமறையோன்
பையேந்து மரவல்குன் மனைவியொடும் பானல்வாய்க்
கையேந்து குழவியொடுங் கடம்புகுந்து மாதுலன்பால்
மையேந்து பொழின்மதுரை நகர்நோக்கி வருகின்றான்.


பொருள்


செய்யேந்து = செழுமையான வயல்கள் நிறைந்த

திருப்புத்தூர் = திருப்பத்தூர்

நின்று = அங்கிருந்து

ஒரு = ஒரு

செழுமறையோன் = செழுமையான மறைகளை ஓதிய ஒரு வேதியன்

பையேந்தும் அரவு அல்குல் = படம் எடுத்து பாடும் பாம்பின் முகப்பை போன்ற அல்குலை உடைய

தன்  = தன்னுடைய

மனைவியொடும் =மனைவியோடும்

பானல்வாய்க் = பால் + நல் + வாய் = பால் வடியும் அழகான வாயை உடைய

கையேந்து குழவியொடுங் = கையில் ஏந்தும் குழந்தையோடும்

கடம்புகுந்து = கானகம் புகுந்து

மாதுலன்பால் = மாமன் வீட்டை நோக்கி

மையேந்து = கருமை ஏந்தி

பொழின்மதுரை = பொழியும் மேகங்கள் கொண்ட பொழில் நிறைந்த மதுரை

நகர்நோக்கி வருகின்றான் = நகர் நோக்கி வருகின்றான்

வரும்போது என்ன நிகழ்ந்தது ?

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - திறல் நோக்கி மகிழ் வேந்தன்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சிய படலம் - திறல் நோக்கி மகிழ் வேந்தன் 



வாழ்க்கைக்கு சுவை சேர்ப்பது கலை.

கலை என்று சொல்லும் போது  இயல்,இசை, நாடகம்,  இலக்கியம் என்று அனைத்தும் அதில் அடங்கும்.

கலை இல்லாத வாழ்க்கை மிகவும் சோகமானது.

வாழ்க்கை என்பது என்ன ?

ஏதோ ஒன்றை நோக்கி பயணப் படுவது, அதை அடைவது, அடைந்த பின் சிறிது நாள் மகிழ்வாக இருப்பது, பின் அது சலித்துப் போய் விடும், பின் வேறொன்றை நாடுவது.

திருப்தி என்ற ஒன்றை அடையவே முடியாது. ஒன்றில் திருப்தி அடைந்தால் , இன்னொன்று வந்து நிற்கும்.

இப்படி நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், கொஞ்சம் சுவை சேர்ப்பது இசை, இலக்கியம் போன்றவை.

இலக்கியங்கள் மனதை வருடிக் கொடுப்பவை, தலை கோதி விடுபவை, தாலாட்டி தூங்க வைப்பவை,  அழுந்திக் கிடக்கும் உணர்ச்சிகளை யாரையும் காயப் படுத்தாமல் வெளிக் கொண்டு வந்து மனதுக்கு அமைதி தருபவை .....

நல்ல இலக்கியம் , மனதோடு ஒட்டிக் கொள்ளும்.  எப்படி வாசனை திரவியத்தை மேலே பூசிக் கொண்டால் நாளெல்லாம் மணம் தந்து கொண்டே இருக்குமோ, அது போல , நல்ல பாடல்களை படித்தால், அந்த நாளெல்லாம் அந்த சுக உணர்வு வந்து கொண்டே இருக்கும்.

அப்படி ஒரு பாடல்


பாண்டிய மன்னனின் குமாரன் , படித்துக் கொண்டிருக்கிறான்.

பாடல்

கலை பயின்று பரி நெடும் தேர் கரி பயின்று பல   கைவாள் 
சிலை பயின்று வருகுமரர் திறல் நோக்கி மகிழ்  வேந்தன் 
அலை பயின்ற கடலாடை நில மகளை அடல் அணி தோள் 
மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்.

பொருள்


கலை பயின்று  = ஆடல், பாடல், இசை என்ற பல்வேறு கலைகளை பயின்று

பரி = குதிரை

நெடும் தேர் = நீண்ட தூரம் செல்லும் தேர்

கரி = யானை

பயின்று = என்று குதிரை ஏற்றம், யானை ஏற்றம், தேர் ஓட்டம் போன்றவற்றை பயின்று

பல   = பல் வேறுவிதமான

கைவாள் = வாள் வித்தை

சிலை பயின்று = வில் மற்றும் அம்பு செலுத்த பயின்று

வருகுமரர் = வளர்ந்து வரும் குமாரன்

திறல் நோக்கி = திறமையை பார்த்து

மகிழ்  வேந்தன் = மகிழ்ந்திருக்கும் வேந்தன்

அலை பயின்ற = அலை வீசும்

கடலாடை = கடலை ஆடையாக கொண்ட

நில மகளை = நில மகளை

அடல் = போர்

அணி தோள் = அணிந்த தோள்  (வெற்றி வாகை சூடிய தோள்கள்)

மலை பயின்று = மலையின் மேல் நடை பயின்று

குளிர் தூங்க = குளிர்ந்த தென்றல் தூங்க வைக்க

மகிழ்வித்து வாழும் நாள் =அந்த நில மகளை மகிழ்வித்து வாழ்கின்ற அந்த நாளில்


ஒரு பெண் சேலை உடுத்தி இருந்தாள் ,  சேலையின் முந்தானை, சேலையின் ஓரங்கள் காற்றில் லேசாக  அசைவதை காணலாம்.

நில மகள், கடலை சேலையாக உடுத்தி இருக்கிறாள். கடலின் அலைகள் அந்த  சேலையின் முந்தானை, ஓரம் (பல்லு ). அலை அடிப்பது சேலையின் ஓரங்கள் அசைவதைப் போல இருக்கிறது.

ஒரு ஆணின் ஆண்மை எங்கே இருக்கிறது என்றால் ,  மனைவியை சந்தோஷமாக வைத்துக்  கொள்வதில்.

இங்கே நிலமகளை அடைந்த அந்த பாண்டிய மன்னன், அவளை நன்றாக  வைத்துக் கொள்கிறான். அவன் சுகமாக உறங்குகிறாள்.


"மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்"

தூக்கத்தில் கூட மகிழ்ந்து தூங்குகிறாள்.

மனைவி அவ்வளவு சந்தோஷமாக இருந்தால் , அந்த வீடு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

சொர்கம் தேடி வேறு எங்கும் போக வேண்டாம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_11.html

Thursday, August 10, 2017

திருவிளையாடல் புராணம் - பழிக்கு அஞ்சிய படலம்

திருவிளையாடல் புராணம் - பழிக்கு அஞ்சிய படலம் 


நமக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தால், ஐயோ எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்று வருந்துகிறோம். நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் , எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று அலுத்துக் கொள்கிறோம்.

இப்படி நமக்கு நடக்க என்ன காரணம் என்று சிந்திக்கிறோம். ஒரு வேளை போன பிறவியில் செய்த பாவமோ என்று சந்தேகப் படுகிறோம்.

வாழ்வில் நடப்பவை எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அதன் காரணமாக , நம் துன்பத்துக்கு என்ன காரணம் என்று சிந்திக்கிறோம். அந்த காரணத்தை விலக்கி விட்டால், சந்தோஷம் வந்து விடும் என்று நினைக்கிறோம்.

நமக்கு வந்த அந்தத் துன்பம் இல்லாதவன் எத்தனை பேர் இருக்கிறான் ? அவனெல்லாம் மகிழ்ச்சியாகவா இருக்கிறான் ? அப்புறம் நாம் மட்டும் காரணம் தேடி ஏன் அலைகிறோம் ?

விதி, கர்மா, பாவம் , புண்ணியம் என்று நாமே நினைத்துக் கொண்டு , சம்பந்தம் இல்லாத விஷயங்களை ஒன்றோடு ஒன்று முடிச்சு போட்டுக் கொண்டு வாழ்கிறோம்.

இது சரிதானா என்ற கேள்வியை திருவிளையாடல் புராணத்தில் உள்ள பழிக்கு அஞ்சிய படலம் விளக்குகிறது.


பாடல்

ஈறிலான் செழிய னன்புக் கெளியவ னாகி மன்றுள்
மாறியா டியகூத் தென்சொல் வரம்பின தாமே கங்கை
ஆறுசேர் சடையான் றானோ ரரும்பழி யஞ்சித் தென்னன்
தேறலா மனத்தைத் தேற்றுந் திருவிளை யாடல் சொல்வாம்.



சீர் பிரித்த பின்

ஈறு இலான் செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள் 
மாறி ஆடிய கூத்து என்சொல் வரம்பினது ஆமே கங்கை 
ஆறுசேர் சடையான் தான் ஓர் அரும் பழிக்கு அஞ்சித் தென்னன் 
தேறலா மனத்தைத் தேற்றும் திருவிளை ஆடல் சொல்வாம்.


பொருள்

ஈறு இலான் = இறுதி என்று ஒன்று இல்லாதவன்

செழியன் = பாண்டிய நெடுஞ்செழியனின்

அன்புக்கு எளியவன் ஆகி = அன்புக்கு எளியவன் ஆகி

மன்றுள் = மன்றத்தில்

மாறி = கால் மாறி

ஆடிய = ஆடிய

கூத்து  = கூத்து

என்சொல் வரம்பினது ஆமே = என்னுடைய சொல்லின் (பாட்டின்) வரம்புக்குள் வரும்

கங்கை ஆறுசேர் சடையான் தான் = கங்கை ஆற்றை சடையில் கொண்ட அவன்

 ஓர் = ஒரு

அரும் = பெரிய

பழிக்கு அஞ்சித்  = பழிக்கு அஞ்சி

தென்னன் = பாண்டியன்

தேறலா மனத்தைத் = தெளிவில்லாத மனத்தை

தேற்றும்  = தேற்றுவித்த

திருவிளை ஆடல் சொல்வாம் = திருவிளையாடல் பற்றி சொல்வோம்


கால் மாறி ஆடிய கூத்து = அது என்ன கால் மாறி ஆடியது ? எல்லா ஊரிலும், நடராஜர் வலது கால் ஊன்றி , இடது காலை தூக்கி நின்றபடி ஆடும் கோலத்தில் இருப்பார். ஒரு முறை , பாண்டிய மன்னன் ஒருவன், நடன கலை பயின்ற பின் , கோவிலுக்குப் போனான். அங்கே நடராஜர் வலது கால் ஊன்றி , இடது காலை தூக்கி நின்ற கோலத்தைப் பார்த்தான்.

அவன், நடராஜரிடம் வேண்டினான் "நடனம் படிப்பதே மிக கடினமாக இருக்கிறது. நீயோ காலம் காலமாக வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி ஆடிக் கொண்டு இருக்கிறாய். உனக்கு கால் வலிக்காதா ? எனக்காக , காலை மாத்தி ஆடக் கூடாதா ? உன் வலது காலுக்கு கொஞ்சம் இளைப்பாறுதல் கிடைக்கும்  அல்லவா " என்று வேண்டினான்.

பாண்டியனின் அன்பை எண்ணி, நடராஜர், மதுரையில் மட்டும் இடது காலை ஊன்றி  வலது காலை தூக்கி ஆடிய கோலத்தில் காட்சி தருவார்.

பக்தர்களின் பக்திக்கு எளியவனாக வருவான்.


"செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள் மாறி ஆடிய கூத்து "

"ஏழை பங்காளனை பாடுதுங்காண் அம்மானாய் " என்பார் மணிவாசகர்.


அவன் "ஈறு இல்லாதவன்"  முடிவே இல்லாதவன். பாண்டியனின் அன்புக்கு எளியவனாக வந்தது போல,  என் பாட்டுக்குள்ளும் வருவான் என்கிறார்.


"ஈறு இல்லாதவன்" - முடிவு இல்லாதவன்.

"ஈறு இல்லாதவன் ஈசன் ஒருவனே " என்பார் திருநாவுக்கரசர்

 "நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
 ஆறு கோடி நாராயண - ரங்ஙனே
 ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
 ஈறி லாதவன் ஈசன் ஒருவனே."


மேலும் சிந்திப்போம்.

தொடர்ந்து படியுங்கள். இது ஒரு தொடர் கதை மாதிரி.

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post.html