Sunday, September 11, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க - பாகம் 2

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க  - பாகம் 2


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் , அரக்கனாக இருந்தான். இராமனிடம் போரிட்டு, மாண்டு சாப விமோசனம் பெற்றான். அவன் விண்ணுலகம் போவதற்கு முன் சில சொல்லிச் செல்கிறான்.

அகத்தையும், புறத்தையும் கண்டு, எப்போதும் அருள் நோக்கோடு,  காற்று போல தன்னந் தனியாக சுற்றி  சுற்றி வந்து அறத்தை காக்கிறாய் என்கிறான் அடுத்தப் பாடலில்.


பாடல் 

புறம் காண அகம் காணப் பொது முகத்தின்
     அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்!
     இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு
     துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய,
     நீயேயோ கடவாய்தான்?

பொருள்

புறம் காண = வெளிப் புறத்தைக் காண

அகம் காணப் = உள் புறத்தைக் காண

பொது முகத்தின் = பொதுவாக

அருள் நோக்கம் = அருள் பார்வை

இறங்காத = தாழாத

தாமரைக் கண் = தாமரை போன்ற கண்களை உடைய

எம்பெருமாஅன்! = எங்கள் பெருமானே

இயம்புதியால்; = எங்களுக்குச் சொல்

அறம் காத்தற்கு, = அறத்தை காப்பதற்கு

உனக்கு = உனக்கு

ஒருவர் ஆரும் = வேறு ஒருவர் யாரும்

ஒரு துணை இன்றி = ஒரு துணையும் இன்றி

கறங்கு ஆகும் = காற்றுப் போல

எனத் திரிய = எங்கும் திரிந்து

நீயேயோ கடவாய்தான்? = நீ உன் கடமையைச் செய்கிறாய்


இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்

என்ற வரியில், ஏன் தாமரையை உதாரணமாகச் சொல்ல வேண்டும்  என்ற கேள்வியோடு போன blog  ஐ முடித்திருந்தோம்.

மல்லிகை, முல்லை போல தாமரைக்கு ஒரு மணம் கிடையாது. தாழம்பூ மாதிரி நீண்ட நாள் வாடாமலும் இருக்காது. பின் ஏன் தாமரை ?

ஒரு இனிமையான பாடலை கேட்கிறோம். சிறப்பான ஒரு இராகத்தில் அமைந்த  பாடல். நல்ல தாள இலயம் . கேட்டு சொக்கிப் போகிறோம். 

இராகம் என்பது என்ன ? காற்றுதான், ஒலி தான் இருந்தும் அதில் உள்ள  இராகத்தை எல்லோரும் அறிவது இல்லை. இசையின்  நுணுக்கம் தெரிந்தவர்கள் அதை அறிந்து இரசிப்பார்கள். எல்லோர் காதிலும் தான் விழுகிறது. நல்ல இசை அறிஞரின்  காதில் அதில் உள்ள இராகம், அதன் தாளம், சுருதி  எல்லாம் தெளிவாகக் கேட்கும். நமக்கு ஏதோ பாட்டு கேட்கும். 

திருஞான சம்பந்தர் சிறு பிள்ளை. அவர் பாடல் பாடும் போது தாளம் போடுவார். அவருக்கு கை வலிக்குமே என்று இறைவன் பொன்னால் ஆன ஒரு தாளத்தை கொடுத்தார். விண்கலத்தில் ஓசை வரும். பொன்னில் ஓசை வராது. பின் ஏன் பொற்தாளத்தை கொடுத்தார் ? 

பொன்னில் ஓசை வரும்.மிக நுட்பமான ஓசை. காதை கூர்மை படுத்தினால் அந்த ஓசை கேட்கும். 

தாமரை மலரில் ஒரு வாசம் உண்டு. எல்லோருக்கும் தெரியாது. மிக நுட்பமான வாசம் அது. புகையிலும், தூசியிலும்  கிடந்து பழக்கப் பட்ட நம் மூக்குக்கு அந்த வாசம் தெரியாது. 

புலன்களை கூர்மை படுத்த கூர்மை படுத்த பொருள்களின் நுட்பம் தெரியும். 

ஒலிக்கு பின்னால் உள்ள பாடல் தெரியும். பாடலுக்கு பின்னால் உள்ள   இராகம் தெரியும். இராகத்தை தழுவிய தாளம் தெரியும். இரண்டையும் இணைக்கும் ஸ்ருதி தெரியும். 

புலன்களை கூர்மை படுத்த , கூர்மை படுத்த இந்த உலகம், அதன்  பின்னால் உள்ள உண்மைகள் புரியும். 

  உலகம், அதில் உள்ள மக்கள் வரை புரிகிறது.  

அதற்கு பின்னால் உள்ளது என்ன ? உயிரா ? ஆத்மாவா ? இறைவனா ? 

அது நேரடியாகத் தெரியாது. பயிற்சி வேண்டும். புலன்கள் தெளிவு பெற வேண்டும். 

எப்போது மனதில் சலனம் இல்லையோ, அப்போது புலன்கள் தெளிவு பெறும் . 

தெளிவு பெற்ற புலன்கள் உண்மையைக் காணும். 

அடுத்த முறை தாமரை மலர் கிடைத்தால் , முகர்ந்து பாருங்கள். 

அதன் நுண்ணிய வாசம் புரியும். 

அட, இத்தனை நாள் என் கண் முன்னே இருந்தது. இந்த வாசனை  தெரியாமல் இருந்து விட்டேனே என்று ஆச்சரியப் படுவீர்கள். 

அப்படித்தான், பல உண்மைகள் கண் முன்னே கிடக்கிறது . நாம் சரியாக பார்ப்பது இல்லை. 

பாருங்கள். தெரியும். 

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/2.html


No comments:

Post a Comment