Monday, February 12, 2018

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - ஐவாய் அரவம்

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - ஐவாய் அரவம் 


நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆசைகள் நம்மிடம் இருந்து எழுகின்றன. அவற்றை நாம் அடக்க வேண்டும். ஆசையை தவிர்க்க வேண்டும் என்று.

உண்மையில் அப்படியா நடக்கிறது ? நாம் பாட்டுக்கு சிவனேனு ஒரு ஓரத்தில் இருப்போம்.

டிவி இல் நல்ல கார் ஒன்றின் விளம்பரம் போகும். அடடா நமக்கு அந்த மாதிரி ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறோம். ஆசை எங்கிருந்து வந்தது ? டீ வி யில் இருந்து நமக்குள் வந்தது.

அந்த பொண்ணு கட்டி இருக்கிற புடவை மாதிரி, அந்த நகை மாதிரி, அந்த மாதிரி வீடு, அந்த மாதிரி உடல் அமைப்பு, என்று வெளி உலகம் நமக்குள் ஆசையை தூண்டுகின்றது. நம்மால் அவற்றை கட்டுப் படுத்த முடியுமா ? ஒவ்வொரு புலன்கள் வழியாகவும் , பாம்பு , அதன் புற்றினுள் நுழைவது மாதிரி சத்தம் இல்லாமல் நுழைந்து விடுகின்றன. நுழைந்த பாம்பு சும்மா இருக்குமா ? கடித்து விஷம் தலைக்கு ஏறி துன்பம் தரும் அல்லவா அது போல துன்பப் படுகிறேன் என்கிறார் மணிவாசகர். ஒரு தலை பாம்பு அல்ல, ஐந்து தலை பாம்பாம். ஐந்து புலன்கள் வழியாகவும் உள்ளே நுழைந்து விடுகின்றன என்கிறார்.

அந்த ஐந்து தலை நாகத்திடம் இருந்து என்னை காப்பாற்று. கை விட்டு விடாதே என்று கதறுகிறார். எனக்கு உன்னை வழிபாடு செய்யக் கூடத் தெரியாது என்கிறார்

பாடல்



பரம்பர னேநின் பழஅடி யாரொடும்
    என்படிறு
விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென்
    முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ
    வாயரவம்
பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப்
    பொதும்புறவே 

பொருள்


பரம்பரனே = பரம் என்றால் உயர்ந்த. பரம பதம். பரம்பரை. பரம் + பரம்பரனே. எல்லாவற்றிற்கு உயர்ந்தவனே

நின் = உன்னுடைய

பழஅடி யாரொடும் = பழைய அடியாரோடு கூட

என்படிறு = படிறு என்றால் குற்றம். என் குறையுள்ள, குற்றம் உள்ள பக்தியையும்

விரும்பும் = விரும்பி ஏற்றுக் கொள்ளும்

அரனே = பாம்பை அணிந்தவனே

விட் டிடுதிகண் டாய் = விட்டு விடாதே

முயற்கறையின் = முயலின் மேல் உள்ள கறை போல

அரும்பு = அரும்பு போன்ற பிறை நிலவையும்அ

அர  =  அரவம்

நேர்வைத் தணிந்தாய் = சமமாக பாவித்து அணிந்தாய்

 பிறவி = பிறவியில்

ஐவாயரவம் = ஐந்து வாயுள்ள அரவம்

பொரும்  - என்னோடு சண்டை செய்யும்

பெருமான் = பெருமானே

என் = என்னுடைய

மனம் = மனம்

அஞ்சி = அச்சம் கொண்டு

பொதும்புறவே = புகலிடம் தேடி அலைகிறதே


ஆசை, ஐந்து தலை நாகம் போல படம் எடுத்து வந்து ஆடுகிறது. பயமாக இருக்கிறது என்கிறார்.


உன்னை வேண்டினால் நீ ஏற்றுக் கொள்வாய். ஆனால், எனக்கோ எப்படி பக்தி செய்வது என்றே தெரியவில்லை.

இருந்தும், உன் பழைய அடியார்களின் பக்தியை நீ எப்படி ஏற்றுக் கொள்வாயோ அப்படியே என் பக்தியையும் ஏற்றுக் கொள் என்கிறார்.

நிலவில் கறை இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அது எப்படி இருக்கிறதாம் ? வெள்ளை வெளேர் என்று இருக்கும் முயலின் உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக  சில அழுக்குகள் இருக்குமே அது போல இருக்கிறதாம்.


என்ன சொல்ல வருகிறார்.

கறை உள்ள சந்திரனை உன் தலை மேல் வைத்துக் கொண்டிருக்கிறாய். குறைகளை மன்னித்து  ஏற்றுக் கொள்வது உன் இயல்பு. என் குறையையும் மன்னித்து ஏற்றுக் கொள் என்று சொல்கிறார்.


ஆசை , பாம்பைப் போல வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது.. ஆனால், நீதான்  பாம்பை கழுத்தில் சுத்தி வைத்திருக்கிறாயே. உனக்கு என்ன பயம். இந்த ஆசை என்ற பாம்பிடம் இருந்து என்னை காப்பாற்று என்கிறார்.

ஆசை வரும் போது பயப்பட வேண்டும்.

இது நம்மை பின்னாளில் என்னவெல்லாம் சிக்கலில் இழுத்து விடப் போகிறதோ என்று பதற வேண்டும்.

வீடு வேண்டும் என்று ஆசைப் பட்டால், எவ்வளவு துன்பங்களை சகிக்க வேண்டி இருக்கும் ?


ஆசையால் அழியாதவர் யார் இருக்கிறார்கள். ஆசை மனதில் எழும் போது , ஐந்து தலை நாகம் படம் எடுப்பதாக உணர்ந்தால் அந்த ஆசையை எப்படி கையாள வேண்டும் என்று நாம் அறிவோம்.

மணிவாசகம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_12.html






2 comments:

  1. தனக்குள் உள்ள கரையையும், சிவன் தலையில் உள்ள கறை உள்ள சந்திரனையும் ஒரு புறம், தனக்குள் உள்ள நாகத்தையும், சிவன் கழுத்தில் உள்ள நோக்கத்தையும் இன்னொரு புறம் என்று உட்கருத்தாக ஒப்பிடுவது அருமை. இந்த உயர்ந்த பாடலைத் தந்து விளக்கியதற்கு நன்றி.

    ReplyDelete