Tuesday, February 13, 2018

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவழுந்தூர்


குழந்தை முதன் முதலாக எழுந்து நடை பயிலும் போது, தத்தி தடுமாறும். அருகில் தந்தை நிற்பார். இருந்தும் பிடிக்க மாட்டார். பிள்ளை தவிக்கும்.  அப்பா எங்கேயோ ரொம்ப தள்ளி இருப்பது போலத் தோன்றும். நான் இவ்வளவு துன்பப்         பிள்ளை சில சமயம் கீழே கூட விழும். கீழே விழுந்து தலை அடி போகிறது என்றால் தாவி வந்து தடுத்து விடுவார். குழந்தை நினைக்கும் , இந்த அப்பா இருந்து என்ன பிரயோஜனம், நான் இவ்வளவு துன்பப் படும்போது உதவி செய்யாமல் கல்லுளி மங்கன் மாதிரி நிற்கிறாரே. அவருக்கு என் மேல் பாசமே இல்லையா என்று?

தந்தைக்குத் தெரியும். குழந்தை தடுமாறுகிறது. தள்ளாடுகிறது என்று. எப்போதும் குழந்தையின் கையை பிடித்துக் கொண்டே இருந்தால் , ஒரு காலும் பிள்ளை சுயமாக நடக்காது. தன் காலில் ஒரு போதும் அது நிற்காது. தானே எழுந்து, தத்தி தடுமாறி விழுந்து எழுந்தரித்தால் , பின் அது தானே நடக்க ஆரம்பிக்கும். ஓடும், தாவும். விளையாடும்.

முதலில் அந்த கீழே விழுந்து சின்ன சின்ன அடி பட்டால்தான் , பின்னாளில் தைரியமாக , சொந்த காலில் நிற்க முடியும்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், நாம் துன்பப் படும் போது இறைவன் எங்கோ இருப்பது போலத் தோன்றும். இருந்தாலும், கடைசியில் நமக்கு பக்கத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் என்று தோன்றும்.

பாடல்

அடியாராய்வாழ்மி னறிவிலாப்பேய்காள
செடியார்வினையனைத்துந்தீரு - முடிவிற்
செழுந்தூரத்தன்னெனினுஞ்செங்கண்மாலெங்க
ளழுந்தூரத்தன்னணியனாம்.


சீர் பிரித்த பின் 

அடியாராய் வாழ்மின் அறிவில்லா பேய்காள் 
செட்டியார் வினை அனைத்தும் தீரும் - முடிவில் 
செழுந் தூரத்தன் எனினும் செங்கண் மால் எங்கள் 
எழுந்தூரத்து அணியனாம் 

பொருள் 

அடியாராய் = அடியவராய் 

வாழ்மின் = வாழுங்கள் 

அறிவில்லா =  அறிவில்லா 

பேய்காள் = பேய் போன்றவர்களே 
செடியார் = செடி போன்ற 

வினை அனைத்தும் தீரும் = செய்த வினைகள் அனைத்தும் தீரும் 

முடிவில் = இறுதியில் 
செழுந் தூரத்தன்  = ரொம்ப தூரத்தில் 

எனினும் = இருந்தாலும் 

செங்கண் மால் = சிவந்த கண்களை உடைய திருமால் 

எங்கள் = எங்கள் 

எழுந்தூரத்து = திருவழுந்தூர்  (தேரழுந்தூர்)  என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கும் அவன் 

அணியனாம் = அருகில் இருப்பவனாம் 

அவன் எங்கேயோ இல்லை. நமக்கு மிக அருகிலேயே இருக்கிறான். நாம் தான் , இருக்கும் இடத்தை விட்டு விட்டு  எங்கெல்லாமோ தேடி அலைகிறோம்.

 வினைகள் உங்களைப் படுத்துகிறதா ? வாழ்க்கை உங்களை வாட்டுகிறதா ? கவலைப் படாதீர்கள். எங்கேயோ இருப்பது போலத் தோன்றும் திருமால், எங்கேயோ, பாற்கடலில், வைகுந்தத்தில் இல்லை, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கிறான்.  என்கிறான். 

இந்த தேரழுந்தூர் எங்கே இருக்கிறது ? அதன் பெயர் காரணம் என்ன? அதன் மற்ற சிறப்புகள் என்ன ?

நாளை பார்ப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_13.html

No comments:

Post a Comment