Thursday, March 15, 2018

திருக்குறள் - நீண்ட நாள் வாழ

திருக்குறள் - நீண்ட நாள் வாழ 


நோய் இல்லாமல் வாழ்வது சரி. நோய் இல்லாமல் குறைந்த வயதில் இறந்து போனால் ? நோய் இன்றியும் இருக்க வேண்டும். நீண்ட ஆயுளோடும் இருக்க வேண்டும் அல்லவா ?

நீண்ட ஆயுளுக்கு என்ன வழி ?

அதற்கும் உணவுதான் காரணம் என்கிறார் தெய்வப் புலவர்.

பாடல்

அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு 
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

பொருள்

அற்றால்  = முன்பு உண்ட உணவு முழுமையாக சீரணம் ஆனபின்

அளவறிந்து =அளவு அறிந்து

உண்க = சாப்பிடுக

அஃது = அது

உடம்பு = உடம்பு

பெற்றான் = பெற்றவன்

நெடிதுய்க்கும் = நீண்ட நாள் வாழும்

ஆறு = வழி .


முதலில் உண்ட உணவு நன்றாக சீரணம் ஆனதை அறிந்து கொண்டு, அளவோடு சாப்பிட்டால்  நீண்ட நாள் வாழலாம். 

பட்டம் விடுகிறோம். திடீரென்று நூல் "அறுந்து" போகிறது. பட்டம் கை விட்டுப் போகிறது. 

அறுதல் என்றால் தொடர்பு விட்டுப் போதல். முன்பு உண்ட உணவுக்கும் நமக்கும்  உள்ள தொடர்பு விட்டுப் போக வேண்டும். அது உடம்பை விட்டு நீங்க வேண்டும். அது வரை அடுத்த உணவை தொடக் கூடாது. 

நாம் ஏதோ கணக்கு வைத்திருக்கிறோம் - ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்று.  மனித வரலாற்றை பின் நோக்கிப் பார்த்தால் தெரியும், வெகு நீண்ட காலமாக ,  ஒரு வேளை உண்டால், அடுத்த வேளை உணவு எப்போது என்று ஒரு உத்தரவாதமும் கிடையாது. 

விவசாயம் என்பது வந்த பின், உணவு உற்பத்தி அதிகமான பின், உணவு சேமிக்கும் முறை  வளர்ந்த பின் தான் இந்த மூன்று வேளை உணவு என்பது வந்தது.  நம் உடல் மூன்று வேளை உணவு இல்லாமல் தானாகவே சமாளிக்கும். அது அப்படித்தான் படைக்கப் பட்டிருக்கிறது. மூன்று வேளை உணவு என்பது  நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. 

நன்றாக சாப்பிட வேண்டும். நன்றாக வேலை செய்ய வேண்டும். உண்ட உணவு சீரணம் ஆகி, உடலை விட்டு வெளியேறிய பின், அடுத்த உணவு சாப்பிட வேண்டும். 

இது நடக்கிற காரியமா என்றால் கோடிக்கணக்கான ஆண்டுகள் அப்படித்தான்  நடந்து வந்தது. நாம் அதை மாற்றி விட்டு, அப்படி முடியுமா என்று சந்தேகம் கொள்கிறோம். 

உடலை விட்டு முன் உண்ட உணவு வெளியேறிய பின், 

"அளவு அறிந்து "

உண்ண வேண்டும். 

இது தான் முக்கியமானது. 

என்ன அளவு ? இரன்டு தோசை, மூன்று இட்லி என்ற அளவா ?

இல்லை. 

நம்மால் எவ்வளவு சீரணம் செய்ய முடியும் என்ற அளவு. 

சீரணம் என்பது பல காரணிகளை கொண்டது. 

- வயது 
- தட்ப வெப்ப நிலை 
- உடல் உழைப்பு 
- உணவின் தன்மை 
- மன நிலை 

என்று இவற்றைப் பொறுத்தது. 

சிறு வயதில் எதை உண்டாலும் சட்டென்று சீரணம் ஆகும். வயதாக வயதாக  சீரண  சக்தி குறையும். அப்போது உணவை குறைக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் போது 10 பூரி தின்பேன் என்று 60 வயதிலும் அதே 10 பூரி  தின்னக் கூடாது. 

உடல் உழைப்பு. சிலருக்கு வேலையே உடல் உழைப்பு சார்ந்திருக்கும். மூட்டை தூக்குவது, மரம் வெட்டுவது, தொழிற்சாலையில் நாளெல்லாம் அங்கும் இங்கும்  நடப்பது என்று. அவர்களுக்கு உணவு அதிகம் வேண்டும். சிலர், இருந்த இடத்திலேயே இருந்து வேலை செய்வார்கள். அவர்களுக்கு உணவு  கொஞ்சம் போதும். 


சில உணவு சீக்கிரம் சீரணம் ஆகும். சில உணவு நேரம் பிடிக்கும். 

இப்படி பல கோணங்களில் ஆராய்ந்து, அளவோடு உண்ண வேண்டும். 

கல்யாண வீட்டில் தடபுடலான விருந்து என்று ஒரு கட்டு கட்டக் கூடாது. 

அளவு அறிந்து உண்ண வேண்டும். 

வருடம் பூராவுமா கல்யாணம் வருகிறது. எப்போதோ ஒன்று வருகிறது. இன்று ஒரு நாள்  கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஒன்றும் குடி முழுகி போய் விடாது என்று சாப்பிடுவது. 

அப்புறம், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று மத சம்பந்தப் பட்ட  பண்டிகைகள் வரும். 

பிறந்த நாள், திருமண நாள் என்று முக்கிய தினங்கள் வரும். 

வேலை செய்யும் இடத்தில் பார்ட்டி இருக்கும். 

இப்படி ஏதோ ஒரு காரணத்தால் அளவுக்கு அதிகமாக உண்பது வாடிக்கையாகிப் போகிறது. 


ஒரு நாள் தானே என்று 100 kg மூட்டையை தூக்க முடியுமா ? எலும்பும், தசையும் கூட ஒரு அளவுதான் வேலை செய்யும். அப்படி இருக்கும் போது மென்மையான வயிறு அளவுக்கு அதிகமாக  எப்படி வேலை செய்யும்?



அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும். 

அப்படி அளவு அறிந்து உண்டால் 

"நெடிதுய்க்கும் ஆறு"

நீண்ட நாள் வாழும் வழி என்கிறார். ஆறு என்றால் வழி.  

யாருக்குத்தான் அற்ப ஆயுளில் போக ஆசை இருக்கும். எல்லோருக்கும் நீண்ட நாள் வாழ ஆசைதான்.  

இந்த மனித உடல் என்பது அற்புதமான ஒன்று. கிடைப்பதற்கு அரியது. கிடைத்த உடலை போற்றி நீண்ட நாள் வாழும் வழியை காண வேண்டும். 

உணவு என்பது நோயை எதிர்க்கும் வழி மட்டும் அல்ல, ஆயுளையும் நீட்டும். 

"அரிது அரிது மானிடராதல் அரிது" என்றால் ஒளவை பாட்டி. 

"உடல் வளர்த்தார் உயிர் வளர்த்தாரே" என்பார் திருமூலர். 

உடலினை உறுதி செய் என்பான் பாரதி. 

"அளவு அறிந்து உண்க " என்று கட்டளையாகச் சொல்கிறார் வள்ளுவர். 

வள்ளுவர் சொல்லை மீறலாமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_15.html




No comments:

Post a Comment