Sunday, April 15, 2018

திருக்குறள் - அறம், வழி பார்த்து நிற்கும்

திருக்குறள் - அறம், வழி பார்த்து நிற்கும் 


பாடல்

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

பொருள்

கதம் = கோபம்

காத்துக் = தடுத்து நிறுத்தி

கற்றடங்கல் = கற்று அடங்குவான்

ஆற்றுவான் = அந்த வழியில் செல்பவன்

செவ்வி = சரியான நேரம் பார்த்து

அறம்பார்க்கும் = அறம் பார்த்துக் கொண்டிருக்கும்

ஆற்றின் நுழைந்து = வழியைப் பார்த்து நுழையும்

கதம் என்றால் கோபம் என்று எல்லோரும் பொருள் சொல்கிறார்கள். வள்ளுவர் பல இடங்களில் வெகுளி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார். பின் ஏன் இங்கே கதம் என்ற சொல்லை பயன் படுத்த வேண்டும் ?

கதம் என்ற சொல் எங்கிருந்து வந்தது ? கோபப் பட்டால் உடம்பு சூடாகும். கண் சிவக்கும்.

உடம்பு கத கதப்பாக இருக்கிறது என்று சொல்லுவார்கள் இல்லையா?

கோபம் வந்தால் மட்டும் அல்ல, காமம் வந்தாலும் உடல் கொதிக்கும்.  பொறாமை வந்தால்  "வயிறு எரியும்".  அன்பில் உடம்பு கொதிக்காது. காமத்தில் கொதிக்கும்.  நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் இந்தத் தீயை இவள் எங்கு பெற்றாள் என்பார் வள்ளுவர்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

என்னை விட பெரிய ஆள் யார் என்று ஆணவம் வரும்போது, உடல் கொதிக்கும். 

கோபம், காமம், பொறாமை என்ற பல காரணங்களால் உடல் சூடாகலாம். எனவே அவை அனைத்தையும் சேர்த்து "கதம் காத்து" என்றார்.  ஒரு குறளில் எத்தனை குணங்களை சொல்ல முடியும் ? எனவே அனைத்துக்கும் சேர்த்து ஒரே வார்த்தை "கதம்" என்று சொல்லி விட்டார்.  

அடுத்தது, "கற்று அடங்கி"

கல்வி கற்க கற்க அடக்கம் வர வேண்டும்.  அடக்கம் என்றால் மற்றவர்களை பார்த்து  உடல் வளைந்து, வாய் பொத்தி இருப்பது அல்ல. 

புலன்கள் அடங்க வேண்டும். எது சரி, எது தவறு , எது எந்த அளவு சரி என்று அறியும் அறிவு  வேண்டும்.

உணர்ச்சி மிகும் போது அறிவு வேலை செய்யாது.  அறிவு வேலை செய்யாவிட்டால் அவன் முட்டாள் தானே? புலனடக்கம் இல்லாவிட்டால் அறிவு இருந்தும் பயன் இல்லை. 

மேலும், 

நாம் நிரம்ப படித்து விட்டோம் என்ற ஆணவம் வரலாம். எனவே, "கற்று அடங்கல்" என்று கூறினார். 

"ஆற்றுவான்" வழியில் செல்பவன். ஆறு செல்வதற்கு யாரும் பாதை போட்டுக் கொடுப்பதில்லை. அது தன் இயல்பில் செல்கிறது. 

அது போல, இயல்பாக இருப்பவன். கோபம் வரும் , அதை அடக்க முயலுதல், அது மேலும்  சீறிக் கிளம்பும்...அது அல்ல இயல்பு. கோபமே வராமல் இருப்பது. வலிந்து  கட்டுப் படுத்தக் கூடாது. இயல்பாகவே அது அமைய வேண்டும். 

அப்படி இருப்பவன் வீட்டுக்கு வருவதற்கு அறக் கடவுள் நேரத்தையும், வழியையும் பார்த்துக் கொண்டு இருப்பாராம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/04/blog-post_27.html



2 comments:

  1. பெரிய கோவில்களில் நாம்தான் கடவுளை பார்க்க குறுக்கு வழியில் வரிசையில் முண்டியடித்து கொண்டோ,டிக்கட்டு வாங்கியோ அல்லது சிபாரிசிலோ நுழைய பார்ப்போம். ஆனால் அறக்கடவுளோ கோபத்தை கட்டுபடுத்தி கற்றதால் அடக்கத்தை குணமாக கொண்டிருப்பவன் வாழ்க்கையை சிறப்பாக்க ஏதாவது வழியை தேடி கொண்டிருப்பான் என்பது இக்குணங்களின் பெருமையை காட்டுகிறது.

    ReplyDelete
  2. கதம் என்ற சொல்லின் விரிந்த பொருளைச் சொன்னது அருமை. நன்றி.

    ReplyDelete